காதலால் கருகி கசிந்துருகி.. (வினோதினி)

ன் முகம் தீய்ந்த தீயில்
அமிலங்கள்
நெஞ்சில் சுரக்கின்றன
வாழ்நாளின் பக்கங்கள்
கண்ணீரில் கடக்கின்றன;

சமூகத்தின் குற்றத்தில்
காதலும் கைதானதே –
தான் தைத்த நாகரிகச் சட்டையை
தன் கையால்
கிழித்துப் போட்டதே;

கண்ணில் தூசெனில்
துடிக்கும் கரங்களிரண்டில்
கசங்கிப் போய் வீழ்ந்தவளே
இன்று காணாமல் போனதேன்…?

காலத்தின் தீர்ப்பில்
கலையும் மைவாங்கி
வாழ்க்கையை திருத்த எண்ணி
உன் குரலை சாட்சி வைத்தவள்
உயிரையா விட்டுப் போவாய்..?

வினோதினி என்றும்
வித்யா என்றும்
உயிர்கள்
சொட்டு சொட்டாய்
சொட்டு சொட்டாய்
கொப்பளித்து கொப்பளித்து வடிந்த ரத்தத்தில்
காதல்’ அமிலத்தினும் காரமனதே, வாழ்க்கை
பெண்ணைப் பெற்றவர்க்குச் சாபமானதே;

ஒரு சமூகத்தையே துடிக்கவைத்த ரணத்தை
உடம்பெல்லாம் தாங்கி
உயிர்வலிக்க வலிக்க
நீ முனங்கிய முனகல்களில்
எரித்தவனின் கையை விட
அவனை அப்படிவளர்த்த இச் சமுகத்தின் கைகளுக்கே
அதிகம் வலித்திருக்கக் கூடும்..

இனி யாருக்கு வலித்து
யாருக்கென்ன லாபம்
நீ போனவள் போனவளில்லையா?

எரிந்தவள்
சாம்பல் தானில்லையா.. ?

ஆனால்
பெண்ணைப் பெற்றவளுக்கு
அடி வயிற்றில் எரியும் நெருப்பொன்று உண்டு
தோள்மீது தாங்கியவனுக்கு
மார்மீது சுடும் தீயொன்று உண்டு
அது இனி எல்லோருள்ளும் சுடர்விட்டு எரியும்
காட்டுத் தீயேனப் பரவி
அவனைப் போன்றோரை தேடித் தேடிக் கொல்லும்
அவர்களின் மரணத்தில் –
இனி உனைப்போன்ற வினோதினிகளும் வித்யாக்களும்
காப்பாற்றப் படலாம்..
————————————————————————
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

40, எனக்கான இடத்தில் நான் நானாக இருத்தல்..

1
ன்னைச் சுற்றி எதிரிகளும்
அதிகம் நிற்கின்றனர்;
உலகின் யதார்த்தம் என்றெண்ணி
அவர்களையும் கடந்துச் செல்கிறேன்,

நல்லதை விட
கெட்டது கேட்காமலயே நடந்துவிடுகிறது;
உண்மை கெட்டதையும் கடந்துவிடுமென்று
அதையும் மறக்கிறேன்,

என்னைச் சரியென்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் முன்பே
தவறென்று முன்நிற்கிறது உலகம்;
தவறுக்கு எங்கேனும் நான் காரணமாகியிருப்பேனென்று
எனைமட்டுமே தண்டிக்கிறேன் நான்,

உலகின் அசைவுகளில் எல்லாவற்றிற்கும்
அததற்கான நியாயங்கள் அதற்கானதாகவே இருக்கிறது
எனக்கான நியாயங்கள் மட்டும்
யாரோ கைமூடிக்கொண்டு நிற்க; உள்ளே
குற்றத்தின் சுவடுபோல் மறைந்தே கிடக்கிறது;

அதனாலென்ன –
ஒருநாள் அது வெளியேத் தெரியும்போது
மறைத்தவர்களின் குற்றமும் அகப்பட்டிருக்கும்
நானும் வெளிப்பட்டிருக்கக் கூடும்..
————————————————————————————————-

2
ன்றும் அந்த நிறுத்தத்தில் நிற்கும்
பேருந்து இன்று நிற்கவில்லை,

இத்தனைநாள் விடியலில் திறக்கும் கடை
இன்று திறந்திருக்கவில்லை,

எப்போதுமே நெரிசலின்றி போகும் தெருவில்
இன்று அத்தனைக் கூட்டமிருந்தது,

நான் கடைக்குப் போனபோதுதான் வரிசை
தெருக்கோடிவரை நீள்கிறது,

வீடு வரை வந்து வாழையிலை விற்கும் பாட்டிக்கு
இன்றுப் பார்த்து காய்ச்சலாம்,

இத்தனைநாள் மழை பெய்திடாத வானம்
இன்றுப் பிய்த்துக்கொண்டு கொட்டியது..,

என்றும் பட்டென வெடித்திடாத
அண்ணாச்சிக் கடைப் பட்டாசு
இன்று மழைப்பெய்த ஈரத்தின்போதும் படாரென
கையிலேயே வெடித்துவிட்டது..

வலியில் துடித்துக் கொண்டுபோய்
மருத்துவமனையில் அவசரமென்று நின்றால்
ஊமைப்பேயென பேசாமலே நின்றுச் சுட்டது அவள் பார்வையும்
அவள் தந்த டோக்கனின் நெடுந்தூர வரிசை எண்ணும்..,

எல்லாம் கொடுமை..
எல்லாமே எனக்கு எதிராகவேதானா
நடக்கும்?

இருந்தும் இவைகளையெல்லாம் நான்
விதியென்று எண்ணிக்கொள்ளவில்லை
காலம் அதுவாகக் கடந்துகொண்டேயிருக்கிறது..
நான்; நானாகயிருக்கவே முயன்றுக்கொண்டுள்ளேன்!!
————————————————————————————————-

3
னக்கென்று
பெரிய்ய்ய…. ஆசைகளெல்லாமில்லை
அதற்கென்று நான்
ஆசையை முற்றிலும் மறுப்பவனுமல்ல,

கடவுளென்றால் ஒரு
அணிச்சையான ஈர்ப்புண்டு,
அதற்காக அவனை ஒரு கோவிலிற்குள் அடைப்பவனோ
இல்லைப் பிறர் நம்பிக்கையை மறுப்பவனோ கூட அல்ல,

கேட்பவருக்கு திரும்பக் கிடைப்பதை
எண்ணாமலேயே
கொடுக்க விருப்பமுண்டு;
ஆனால் கேட்டவருக்கெல்லாம் கொடுத்ததோ
அல்லது கேட்போருக்கெல்லாம்
கொடுக்கமுடிவதுமோவுமல்ல,

பொய்யும் மெய்யும்
தெள்ளத் தெரிவதுண்டு
அதனால் மெய்வழி நிமிர்ந்து நடக்கவோ
பொய்வழி வளைந்துக் கொள்ளவோக் கூட
முடிவதில்லை,

உயிர்களுக்கு நோகுமோ
இலை பறித்தால் வலிக்குமோ
என மனசஞ்சுவதுண்டு;
ஆனால் மனங்கள் மிதிபடாமல் நடக்கும் பாதையின்
வலியும் பொறுக்குதில்லை,

மனிதரென்றால் ஒரு பெரிய மரியாதையுண்டு
பயமுண்டு
பார்க்கையில் கூடும் மதிப்பும்
ரசிப்பும் கூட உண்டு
பாசமும் பண்புமுள்ளே வேகமாய் எழுவதுண்டு
மன்னிப்புமுண்டு;
அதற்காக நான் அத்தனை உயரத்திற்கு எற்றவனுமல்ல,

ஆக நானென்பது இங்கே யார்?

நல்லது கெட்டது இரண்டையும்
நேராக சந்திக்கநேர்கையில்
சந்தித்ததன் நல்வினையாக மட்டுமே
வாழ நினைப்பவன் அல்லது
உலகக் கூறுகளால் அவ்வாறு வாழ தோற்பவன்..
———————————————————————————————–

4
ழை வருது துணி எடு
மழை வருது மன்னுமூட்டையை மூடு
மழைவருது குழந்தைகளே உள்ள போ..

மழை வருது நனையாதே
குரல்கள் மழையை எதிர்த்து வலுத்துக் கொண்டேயிருந்தன;

அந்த குப்பைவண்டியில்
குப்பையள்ள வந்த அந்த மூன்று பேர்
இந்நேரம் எங்கு ஒதுங்கி
எப்படி நின்றிருப்பார்களோ என்றெண்ணி
நான் மழையிலேயே நிற்கிறேன்!!
——————————————————————————–
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காதல் தேரினில் அந்தக் காரிகை போகிறாள்..

1
ந்த தெருமுனை
திரும்பும் போதெல்லாம்
உன் நினைவு வரும்;

நீயுமங்கே நின்றிருப்பாய்
நானுனை திரும்பிக்கூட பார்க்காமல்
போவேன்,
நீயும் பார்க்கமாட்டாய்;

நாம் பார்க்காவிட்டலென்ன
காதல் நம் தெருவெல்லாம் பூத்திருக்கும்..
————————————————————–

2
கா
ற்றடிக்கும்
கண்களை நீ சிமிட்டும்
நினைவு வரும்..

நிலா காயும்
நீ தெருவில் வந்துநிற்க
பூக்கள் சிரிக்கும்..

மேகம் நகரும்..
உன் தாவணி காற்றில் பறக்க
பட்டாம்பூச்சிகள் பறந்தோடி வரும்..

நீயெனைக் கொஞ்சம் நினைப்பாய்
நானுன் நினைவுகளில்
மழையெனப் பெய்து கிடப்பேன்!
————————————————————–

3
கா
ற்றாடி விடும் கூட்டமென்றால்
உனக்கு நிறைய பிடிக்கும்
அறுந்த காத்தாடிகளின் பின்னே நீ
ஓடுவாய்,
நானுமுன் பின்னாலேயே ஓடிவருவேன்

காற்றாடி ஓரிடத்தில்
உன் கைக்குள் அகப்படும்
நீ அதையெடுத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்புவாய்
நீ போகும்வரை நான்
தூர நின்று உனையே பார்ப்பேன்,
காற்றாடி காற்றிலும் உன் கைக்கிடையிலும்
இங்குமங்குமாய் ஆடும்
கசங்கும்
காற்றாடி போலவே
உன் பார்வையில் படாமல் – நானும்
இதயம் கசங்கிப் போவேன்..

காற்றாடி பற்றியோ இதயம் பற்றியோ
நீ கவலைப்படுவதேயில்லை;

உனக்காக –
நிறைய காற்றாடியினைப் போல
நிறைய இதயங்களும்
ஆங்காங்கே அறுபட்டுக் கிடக்கிறது..
————————————————————–

4
நீ
யும் நானும்
ஒருவரையொருவர்
கைகோர்த்துக் கொண்டு தெருவில் நடப்போம்
நம் பேச்சிலும் நடையிலும்
சிரிப்பிலும் துளி கூட
காதல் கலந்திருக்கவில்லை
பாட்டில் படத்தில் கதைகளில் நிறைய
காதலிருந்தது
பார்ப்போரெல்லோரும் நம்மை காதலிப்பதாய்ச் சொன்னார்கள்
காதல் –
நம் சிரிப்பில் பேச்சில் நடத்தையில்
துளி கூட ஒட்டவில்லை,

நட்பு கைவீசிக்கொண்டே நம்
வாழ்வின் தூரம்வரை வந்தது..
————————————————————–

5
னக்கும் எனக்கும் அப்படியொரு
ஈர்ப்பிருக்கும்

உன் சிரிப்பினில் ரசம்

பார்வையில் கனிவு

பேச்சினிலினிமை

உன்னோடிருக்கும் நாட்களின்
தருணசுகமே சுகம்..

ஆனால் இதெல்லாம் எங்கு
எனைக்
காதலிக்கத் தூண்டுமா என்று அஞ்சி
உனைவிட்டு தூரமேயிருந்து
உன்னிடம் பேசுவேன் –

நீ அதையெல்லாம் உடைத்தெறிந்து
காதலென்னடா காதல்
நட்பாயிருப்போம் வா
நாட்களை அன்பில் விழுங்குவோம் வா
நாளுக்கு நாள் –
வெற்றியின் உச்சியை உழைத்துத் தொடுவோம்
வாவென்றுச் சொல்லி
என் தோள்மீது சாய்ந்துகொண்டாய்,

நானுன் தோழனாக மட்டுமே உனைத்
தாங்கிக்கொள்ள –
காதலைக் காற்றினில் தொலைத்துக் கொண்டிருந்தேன்!!
————————————————————–
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத் தமிழோசையின் இன்பத் தமிழ் இசைவிழாவும்; சில விருதுகளும்..

நம்மபாட்டு மாணிக்கம்

ரவுநிலா குளிருதிர்த்து காதுமடல் திறந்து அந்த அரங்கத்தை நோக்கி அமர்ந்திருந்தது. அறைநிறைந்த தமிழதன் வெளிச்சத்தில் அடர்ந்த ஓரிருள் விலக காரிருள் சூழ்கொண்டு இடையெரியும் விளக்குகளால் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. இருட்டின் காதுகளில் கவியரங்கச் சிந்தனைகள் குடைந்துக் கொண்டிருக்க, பாட்டரங்கமும் கைதட்டும் ஓசையின் ஆர்ப்பரிப்பும் அரேபிய மண்ணின் நீண்ட பாலைவனத்தில் இன்னும் நெடுநாட்களுக்கு அழியாதவண்ணந்தனில் ஒட்டிக்கொண்டுவிட்டதை அந்த அரங்கமும், அந்த விழாவை எடுத்த தமிழோசை மாமன்றமும் அத்தனை கவனித்திடவில்லைதான்.

குழந்தைகளின் ஆட்டமும் பாட்டும், கவிஞர்களின் சீரிய சிந்தனைக்கொத்த கவிதைகளும், மேடையில் சிதறிய வார்த்தைச் சில்லுகளில் மிளிரும் தமிழின் அழகும், ஆர்ப்பாட்டத்தின் மகிழ்ச்சியை கைதட்டி மட்டுமே வெளிப்படுத்திக் கொண்ட ரசிக உள்ளங்களின் அநாகரிக கூச்சலில்லா அமைதியும், தலைவர் ஆற்றிய காந்தியத் தன்மை நிறைந்த நல்லுரையும், முத்து தெறித்தாற்போல் கொத்து கொத்தாக வந்து கைகோர்த்துக் கொண்ட செயலாளரின் வரவேற்பும், நிகழ்ச்சி அலுத்துப் போகாமல் நிகழ்ச்சிக்கு வந்தோரை ஈர்ப்புடன் வைத்திருந்த ஐயா அலாவுதீன் அவர்களின் எளியநடையிலான தொகுப்புரையும் தமிழரின் கலைத் தன்மையின் சிறப்பையும் நமது ஒற்றுமையினால் கிடைக்கப்பெறும் நீண்ட நிறைவையும் பறைசாற்றி முடிவுற்றது அந்த இன்பத் தமிழ் இசைவிழா.

சொல்லருவி திரு. பட்டுக்கோட்டை ராசப்பா அவர்களின் “தாமதமேன் தமிழினமே” எனும் உரைவீச்சும், “பைந்தமிழ்ச் சுவடுகள்” எனும் தலைப்பில் கவியரங்கமுமென இடம் மீறி எங்கெங்கோ பேச்சின் தடம் நகர, இடையே வீரம் பற்றி ஈழத்து இளைஞர் ஒருவர் கவிதை படிக்க வருகையில் ஈழம் பற்றியும் வீரம் பற்றியும் சொல்லருவி பட்டுக்கோட்டை ராசப்பா அவர்கள் கவிதை நயத்திலேயே எடுத்துச்சொல்லி அவரையழைக்க, அவர் தனது கவிதையின் ஊடாகக் கேட்ட ஒவ்வொரு கேள்வியின் கனமும் நெஞ்சை மிக தைத்தது.

இயலாமையின் அடர்த்தியான உணர்வு பொருந்தியவனாக அமர்ந்திருக்கையில் ஐயா ராசப்பா அவர்கள் உரைவீச்சின் நிறைவாக முடிக்கும்போது, 1857-இல் நமது முதலாம் இந்திய சுதந்திர யுத்தத்தின் போது ஒரே வருடத்திற்குள் வீரம் பொருந்திய மங்கள்பாண்டேயிலிருந்து, நானா சாகேப், தாந்தியா தோபே, ஜான்சிராணி லட்சுமி பாய் வரைஎண்ணற்ற மாவீரர்கள் இறந்துப் போனார்கள் என்றாலும், அதன்பின் தொண்ணூறு வருடம் கழித்து நமது சுதந்திரத்தை நாம் பெற்றோம் என்பது உண்மை. அதுபோல இன்னும் எத்தனை வருடம் கழிந்தாலும் நமக்கான நீதி நம்மையே வந்துச் சேரும் என்றார். ஈழம் என்றொரு தனிநாடு அமையும் என்றார். அரங்கம் முழுதும் வலிக்க வலிக்க தனது கைகளைத் தட்டிக் கொள்ள, எனக்கும் ‘அது சரிதான், இப்படிப்பட்ட மக்களிருக்கையில், உலகளாவிய தமிழுறவுகளின் விடுதலைக் குறித்த அக்கறை இந்தளவிற்கு எல்லோருக்குமிருக்கையில் நிச்சயம் தர்மம் வெல்லுமென்றே எண்ணி உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது.

ஈரம், காதல், ஈதல், வீரம் எனும் நான்கு தலைப்புகளில் கவிதாயனி திருமதி. அமுதா கோபால், கவிஞர்கள் திரு. சாதிக் பாட்சா, திரு. உ.கு.சி, திரு. கணேசன் போன்றோர் தனது சீரிய கருத்துக்களை முன்வைத்து ஆழ்ந்த சிந்தனையின் அமைதியில் எல்லோரையும் ஆழ்த்த, என் சக படைப்பாளி பேச இருக்கையில் எனக்கு நெருப்பில் நிற்கும் கணமென இத்தருணங்கள் நகர்கிறது எனவே மீண்டுமொரு முறை குவைத் வருகையில் இன்னும் நிறையவே பேசுவேன் இப்போதைக்கு விடைகொடுங்கள் என்று கேட்டுக்கொண்டு தன் தமிழ்ச்சுவையின் பெருஞ்சுவை அடங்க ராசப்பா ஐயா அவர்கள் அமர்ந்தார்.

ஆக, கவியரங்கம் தான் இந்த விழாவின் உச்சம் என்று எண்ணியிருக்க பாட்டரங்கம் துவங்கியது, காதுகளில் தேனூர, கேட்கையில் உணர்வுகளஅதிர, காலத்திற்கும் நிலைப்பது பழைய பாடல்களா புதிய பாடல்களா நாட்டுப்புறப் பாட்டுகளா என்றதொரு வாதத்தோடு பாடகர்கள் திரு. ராமகிருஷ்ணன், திரு. நம்மபாட்டு மாணிக்கம், திருமதி ராணிமோகன், திரு. கணேசன், திரு. கங்கேஷ், திருமதி. லலிதாமணி, போன்றோர் களமிறங்கினர்.

“ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தைப் போல
தூளி கட்டி ஆட
தொட்டில் கட்டித் தூங்க
ஆத்துல மீன் பிடிக்க
அப்பனுக்கு தலை துவட்ட
பார்த்தாலே சேர்த்தணைக்கத் தோணும்; நான்
செத்தாலும் என்னைப் பொத்த வேணும்..”  எனும் தாயின் வலி நிறைந்த பாடலின் கனத்தோடு ராமகிருழ்ணன் நாட்டுப்புற பாட்டு தான் காலத்திற்கும் நிலைக்கும் என்றுப் பாடியமர, அவ்வையாருடைய ஆத்திச்சூடி பாடலை அத்தனை தரமன்றி புதுப்பாட்டில் இணைக்கும் அவலம் போன்றில்லாது என்றும் நிலைப்பது பழைய பாடல்கள் தான், அதுதான் என்றும் இம்மண்ணில் நிலைக்குமென்று பாடகி திருமதி ராணிமோகன் சொல்லியமர, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்; அம்மாவை வாங்கமுடியுமா போன்ற அன்பினைப் போற்றும் பல பாடல்கள் புதுப்பாடலில்தான் நிலைத்திருக்கிறது எனவே என்றும் புதுப்பாட்டுதான் நிலைக்குமென்று வலியுறுத்தி பாடகர் திரு கங்கேஷ் அமர, இல்லைஇல்லை .. காதல் பாடல்களுக்கு இடையேயும் சமூகச் சிந்தனையை பற்றிப் பேசும் நிறைய நாட்டுப்புற பாடல்கள் இருக்கிறது, அவைகள் தான் நிலைக்குமென்று மீண்டும் நம்மபாட்டு மாணிக்கம் சொல்ல வர, எதிர்வாதமாக எழுந்து “அடி ஆத்தாடி இள மனசொன்னு ரக்கைகட்டிப் பறக்குது சரிதானா…” என்று தனது தேனினுமினிய குரலில் காதலொழுக திரு. கணேஷ் பாடத் துவங்கி வரிசையாக பல நினைவிலிருந்து மறக்காத இனிய பாடல்களைப் பாடி எப்போதும் எல்லோரின் மனதிற்குள்ளும் நிலைத்திருப்பது இதுபோன்ற பழைய பாடகள்தானென்று அழுத்தமாக சொல்லியமர,

“காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கைதொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா…” என்றதுதான் தாமதம், அரங்கம் முழுதும் தலைதிருப்பி பாடகி லலிதா மணி சொல்வதே சரியென்பது போல் பார்த்தது. ஆக.. இக்கட்டான ஒரு சூழலில் திறமையான ஆறு பேருக்கு மத்தியில் எப்படி நான் தீர்ப்புச் சொல்வதென தன் உணர்வுகளை பெருந்தன்மையோடு மன்றத்தின் முன்வைத்து, ஆச்சர்யத்தை அந்த படைப்பாளிகளுக்குப் பரிசாகத் தந்த பாட்டரங்கத்தின் நடுவர் ஐயா கலக்கல் காங்கேயனுக்கு தெரிய வாய்ப்பில்லைதான் அப்போது மணி இரவு பதினொன்றை தாண்டியிருந்ததென்று.

என்றாலும், எத்தனையோ மேடை கண்டவராயிற்றே’ இதுபோலவே தன் ஆரம்பக் காலத்தில் பாடி பாடி அசத்தியவராயிற்றே’ அடங்கிப் போவாரா? போகவில்லை. மாறாக சாமார்த்திய தீர்ப்பினை வழங்கினார். நாட்டுப்புற பாட்டென்பது மண்ணிலிருந்து வெட்டியெடுக்கும் தங்கத்தைப் போன்றது. அங்கிருந்து தான் அத்தனைப் பாடல்களும் நம் காதுகளுக்குள் தன் உணர்வுகளைப் புகுத்தி தனது ஆட்சியை செலுத்தத் துவங்கின. என்றாலும் சுத்த தங்கம் மட்டுமே, ஆபரணமாகிடாதில்லையா ? கட்டித் தங்கம் மட்டுமே நிலைப்புத் தன்மையை ஏற்படுத்துமா? கலப்படம் செய்தால் தானே காதுக்கு கம்மலும், கேட்பதற்கு இனிய பாடல்களும் காலத்திற்கு ஏற்றவாறு கிடைக்கும். எனவே கலப்படமில்லா உணர்வுகளின் வெளிப்பாடாக வந்த நம் மண் சார்ந்தப் பாடலான நாட்டுப்புறப் பாட்டுகளை அங்கேயே விடுவோம், அது நம் தாய்க்கீடு. என்று சொல்ல எல்லோரும் கூடி சோ….வென கைதட்டினர்.

இப்போது புதுப்பாட்டா அல்லது பழைய பாடல்களா என்று எடுத்துக் கொண்டால், புதுப்பாடல்கள் மிகையாக கவரும், ஏனெனில் கால மாறுதல்களுக்கு உட்பட்டு அப்போதைய ரசனையை இளைஞர்களின் உணர்வுகளை எட்டக்கூடியது புதுப்பாட்டுகள் தான். என்றாலும், அவைகள் கவர்ந்துவிடுவதைப் போல நெஞ்சில் என்றும் நிலைத்திருப்பதில்லை. அதே பழைய பாடல்கள் நமை புரட்டிப் போடுகிறது. இந்த காலத்திலிருந்து நமைக் கொண்டுபோய் அந்த காலத்தில் சேர்க்கிறது. உணர்வுகளால் புரட்டிப் போட்டு உயிரின் ஆழத்தில் என்றைக்குமாய் நினைவில் எட்டிநிற்கிறது. இன்றும் கேட்க நிலைக்கிறது, அவைகளை அதிகம் பேரால் மறக்கமுடிவதில்லை, எனவே காலத்திற்கும் இருப்பது அனைத்துப் பாடல்களுமே என்றாலும்; அதிகம் இன்றும் கேட்க நிலைத்திருப்பது நம் பழைய பாடல்கள் தான் என்று சொல்லி இன்பத் தமிழ் இசைவிழாவை இதோடு நிறைவுசெய்கிறேன் என்று சொல்ல அரங்கம் அதிர கைதட்டல் ஓசையும் மனசு நிறைய விழாவின் வெற்றி நிறைவும் துல்லியமாக மனதை நிரம்படித்தது. துவக்கத்தின் வெற்றி கவியரங்கத் தலைமை ஐயா திரு. பட்டுக்கோட்டை ராசப்பா அவர்களுக்குச் சொந்தமெனில், நிறைவின் நற்புகழ் ஐயா திரு. கலக்கல் காங்கேயன் அவர்களைச் சார்ந்துக் கொண்டது.

இப்படி பாட்டென்றும் கவிதையென்றும் குழந்தைகள் ஆடிய நடனமென்றும் விருதுகளால் நிறைந்த படைப்பாளிகளென்றும் விழாவின் சிறப்பாக பல விஷயங்கள் இருப்பினும், எனைக் கவர்ந்தது அந்த முச்சான்றோர் அரங்கம். அதென்ன முச்சான்றோர் அரங்கம் என்று நன்றாக கவனிக்கையில் தான் தெரிந்தது, அது தமிழ் தாத்தா உ.வே.சா நினைவாகவும், சதாவதானி செய்கு தம்பி பாவலர் நினைவாகவும், மொழிஞாயிறு தேவநேயப் பாவலர் நினைவாகவும் மும்மத ஒற்றுமையை உணர்த்தும் விதத்தில் அமைக்கப்பட்ட அரங்கமென்று.

என்னதான் சாதியென்றும் மதமென்றும் நாம் நம் உணர்வுகளை தனித்தனியே பிரித்துக்கொண்டாலும், நாளாக ஆக நமக்குள் பல காலப்போக்கின் பாகுபாடுகளை வாழ்வின் முறைப்படி நமக்குள் ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் அதயெல்லாம் களைந்து ஒரு இனமென்னும் கோட்டிலிருந்து பிற மனங்கள் வாடாத மனிதத் தன்மையை நிலைக்கச் செய்வதிலும் உறுதியாகவேயுள்ளோமெனும் நிம்மதியோடு அங்கிருந்து புறப்பட்டோம்..

விழாவின் முதற்புள்ளியாகத் துவங்கிய மாளவிகாவின் பரதநாட்டியமும், அருவிக் கவிஞர் திரு. ஆனந்தரவியின் எழுச்சிமிகு தனிக்கவிதையும், பெண்ணிற்கெதிரே நடக்கும் வன்கொடுமையைக் கண்டித்த திரு. அன்பழகனின் கண்டனக் கவிதையும், கண்ணீரைக் கவிதையாக்கிய திரு. யாகூப் அலியின் மீனவர்களின் வலியுணர்வு பற்றியக் கவிதையும், திரு. சுப்ரமணியனின் அறிமுகக் கவிதையும், மூத்த படைப்பாளி திரு. சம்சுதீன் அவர்களின் பங்களிப்பும், மரபுப் பெருங்கவி திரு. பட்டுக்கோட்டை சத்யாவின் நறுமுகையே பாடலும், பாடகர் திரு. லுக்மான் மற்றும் படிக்கும் மாணவர்களின் மெல்லிசைப் பாடல்களுமென விழாவின் ஐந்தாறு மணிநேரத்தை மனம் அசைபோட்டுக் கொண்டேயிருந்தது..

கவிஞர் திரு. முபாரக்கின் புதிய கவிதைத் தொகுப்பான “நீர் துளிகள்” எல்லோரின் கரவொலியோடும் வெளியிடப்பட்டு, “தேன் தமிழ்ச் சுரங்கம்” என ஐயா பட்டுக்கோட்டை ராசப்பா அவர்களுக்கும், “பண்ணிசைப் பாவலர்” என்று ஐயா கலக்கல் காங்கேயன் அவர்களுக்கும் விருது தந்து கௌரவித்த மேடை எனக்கும் “பன்னூல் பாவலர்” என்று விருதளித்து மரியாதை செய்ய மேடைக்கழைக்க அதை என் மனைவி செல்லம்மா ஏற்றுக்கொள்ள ஏற்புரையின் மகிழ்வோடு இறங்கியதன் நினைவில் நால்வரும் நடையைத் துவங்கினோம்..

மேடையேறி விருதினைப் பெற்றுக்கொண்டதன் நன்றியுணர்வு பொங்கி அன்புப் பார்வையில் வழிய; தனியாக நேரம் கிடைத்தால் ஓடிவந்து கட்டிப்பிடித்து ஒரு முத்தமிட்டுவிடத் துடித்த மனைவி செல்லம்மாவின் உணர்வதிர்வின் ததும்பலோடு குழந்தைகளின் உறங்கா தூக்கத்து மிச்சங்களையும் தூக்கிக்கொண்டு குளிர் நடுங்கும் வெளி யிறங்கி அதே பழைய வாழ்க்கையோடு பயணிக்கத் துவங்கினோம்..

மீண்டும் மீண்டும் இதுபோன்ற விழாக்களும் நிகழ்ச்சிகளும் நடக்கட்டும், நமது உணர்வுகளின் ஓட்டைகளை அவைகளும் உடன்சேர்ந்து அடைக்கட்டும், காலம் தாங்கிய நம் மண்ணிற்குரிய விடியலின் அவசரம் பொதிந்ததொரு தருணத்தை தனது தலைமேல் மட்டுமே தூக்கிக் கொண்டு ஓடும் அக்கறை நம் அனைவருக்குள்ளும் வந்துசேரட்டும் என்றெல்லாம் எண்ணிக்கொண்டு நாங்களும் சாலையில் பூச்செரியும் வாகன வெளிச்சங்களோடு கலந்து வீடுநோக்கிப் போகலானோம்..

என்னதான் நம் வாழ்க்கை குவைத் மண்ணிலேயே இப்படி வருடங்களாய் புதைந்துக்கொண்டிருந்தாலும் தமிழர் இம்மண்ணில் இப்படியும் தன் கலையுணர்வு குன்றாது வாழ்ந்தனர் எனும் நினைவை இவ்விழாவோடு சேர்த்து இதுவரை நடந்த விழாக்களும் இனி வரும் பெரிய விழாக்களும் தனது சுவடுகளை வரலாற்று நினைவிலிருத்து அகற்றாது பத்திரமாக வைத்துக் கொள்ளுமென்பது திண்ணம்..

நிறைவில், முச்சான்றோர்களின் அரங்கில் இன்பத் தமிழ் இசைவிழா எடுத்து எனையும் கௌரவித்து எனது எழுத்திற்கும் மரியாதை செய்த “குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின்” தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும், இத்தகு விழாக்கள் எடுக்க காரணமாக விளங்கும் டிவிஎஸ் நிறுவனம் மற்றும் அல் அவ்தா தச்சுப்பட்டறைப் போன்ற இதர பல கொடையாளர்களுக்கும் இத்தருணத்தின் மனம் நிறைந்த நன்றிகளைப் பகிர்ந்துகொண்டு, என் எழுத்தோடு இணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கமும் சொல்லி நிறைவுசெய்கிறேன்….

அனைவருக்குமெனது நன்றியும் கைகூப்பிய வணக்கமும்..
—————————————————————————————————————————————–
வித்யாசாகர்

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

ஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்!!

சுதந்திரம் என்று சொன்னாலே
உள்ளே இதயம் படபடக்குமொரு பயம்;

ஏன்?

அதன் ஒவ்வொரு எழுத்திற்கும்
எம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும்
காலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின்
வலிபற்றிய பயமுமது;

நிற்க முறைத்தலும்
பார்க்க அடித்தலும்
எதிர்த்துப் பேச உயிர்துறத்தலுமென
நீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில்
வாங்கியச் சுதந்திரம் – இன்று எம் தேசத்தின்
ஒற்றைதின சிரிப்புசப்தமாகக் கேட்டாலும்
இன்னுமன்றைய வலிக்கான கண்ணீர்
ஓய்ந்தபாடில்லையென்பது வருத்தமில்லையா ?

சேற்றிலிருந்து எடுத்த காலை மீண்டும்
மனிதசாணத்தில் வைத்துக்கொண்டதைப் போல
வெள்ளையனை வெளியேற்றிய கையோடு
ஒற்றுமையை மண்ணில் புதைத்தோம்
வீட்டிற்குள்ளும் விடுதலையைத் தொலைத்தோம்
வேறுபல வரலாற்றைப் படித்து நம்மை நாமறியவும் மறந்தோம்;

அலுவலிலிருந்து அரசியலமைப்புவரை
இன்றும் வலிக்கிறது அடிமைத்தனம்,
எதிர்த்துக் கேட்க வரும்தீவிரவாதப் பட்டத்தில்
பயந்து முடங்கிக் கொள்கிறது – அன்று
வாளெடுத்துச் சுழற்றிய நம்
பச்சைத் தமிழரின் வீரம்..

பகைவரை அடையாளம் காணத் துணியாத
அறிவில்
பகல்வேசக் காரர்கள் பதவியேற்று
நல்லோராய்த் திகழும் நாலுபேரின் முகத்தில்
கரிபூசும் அவலத்தில் மகிழவில்லை மனசு – நாம் பெற்ற
குடியரசையெண்ணி..

ஒருபக்கம் சாயும் தராசின்
சமபலத்தை
பணக்கட்டுகள் தாங்கிப்பிடிக்கும் அவலம் மாற
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நாம்
கண்ணுள்ள
குருடராய் வாழ்வோமோ(?)

ஓரிடம் வெளிச்சமும் வேறிடம் இருட்டுமாக
இருக்குமொரு பரப்பில்
கேட்க நாதியற்று சாகும்
பல உயிர்களின் இழப்பில்
எங்கிருந்து நிலைக்கிறதந்த
சமத்துவத்தின் தோற்கா வெற்றி?

நீருக்குச் சண்டை
மின் நெருப்புக்குப் போட்டி
யாருக்கு என்ன ஆனாலும் ஆகவிட்டுச் சேர்க்கும்
சொத்துக் கணக்கை வெறுக்கும்
மக்கள் பற்றியெல்லாம் ஒரு சிந்தையுமில்லாது வெல்லுமொரு
அரசியல் கூட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்
எம் சமகாலக் கூட்டம், சிந்திய ரத்தத்தின் வலியை மட்டுமே
மிச்சப்படுத்தி
கைக்கு குச்சிமிட்டாய் கொடுத்து கொடி ஏற்றுகையில்
விடுதலைக்காக உயிர்விட்ட தியாக நெஞ்சங்கள்
மீண்டுமொரு முறை சாகக் கேட்டு
நமைச் சபிக்குமோயெனும் பயமெனக்கு..

எம் பெண்கள் வீசிய வாளில் சொட்டிய
ரத்தமும்
இளம்பிஞ்சுகள் அறுபட்ட கழுத்தில் கசிந்த வீரமும்
என் தாத்தாக்கள் தடியெடுத்து நடந்த
சுதந்திரக் காற்று நோக்கியப் பயணமும்
இன்னும் முடிவுற்றிடாததொரு ஏக்கமெனக்கு..

கொதிக்கும் உலையின் அடிநெருப்பாகவே
அன்று சுதந்திரம் இருந்தது, உணர்வுகளை
மிதிக்கும் கால்களின் தலை நசுக்கி
விடுதலை யாசித்தபோது
அஹிம்சை அன்று ஆயுதமாக முளைத்தது,

இன்று அகிம்சையின் வழித்தடங்களையும்
விற்கத் துணிந்த
வியாபார உத்தியின் மனோபாவத்தில்
நம் அத்தனை போராட்ட உணர்வும்
அடிப்பட்டே கிடக்கிறது..

விடுதலைக்காக
தகித்த அன்றைய வேள்வியிலிருந்து
துளிர்த்த எம் போராட்டத்தின் விதைகள்
வெறும்
துண்டாடப்பட்டுக் கிடக்கின்றன..

சிந்திய ரத்தம் அத்தனைக்கும் அர்த்தம்
சுதந்திரம் சுதந்திரமொன்றே என்று
வெள்ளையன் அன்று நீட்டியத் துப்பாக்கிக்கெல்லாம்
மார்பு காட்டிய வேகத்தை
வெறும் கொடி மட்டும் ஏற்றி மறக்கிறோம்;

விரைத்து திமிர்ந்த மார்பில்
அடிவாங்கி அடிவாங்கிச் சொன்ன வந்தேமாதரமின்று
திரும்பிநின்று நமைப் பார்த்துச் சிரிக்கையிலும்
கையுயர்த்தி தனதுதேசம் தனதுதேசமென்றே நம்பி இன்றும்
வந்தேமாதரமென்றே முழங்குமொரு இனம்
கேட்பாரன்றி சுட்டு வீழ்த்தப் பட்டதின் நினைவில்
வலிக்கிறதுதான் நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதான
அந்த எண்ணம்;

சுதந்திரமெனில் என்ன?

கட்டப்பட்ட வெள்ளையக் கைகளின்
கட்டுகளைத் தகர்த்து வெளியேற்றி
தன் மண்ணில் தான் நடைபோடுவது எனில்;
நடக்கையில் தடுக்கும் மாற்றுக் கை எதுவாயினும்
மீண்டும் தகர்க்குமந்த கோபம்
உணர்வு சுட பொங்கியெழ வேண்டாமா?

என் கண்முன்னே எனைச் சார்ந்தோரை
அடிக்கும் கைகளை முறிக்கா என் தேசத்தின்
விலங்கு உடைபடும் நாள்
என் விடுதலை நாளெனில்,
அதற்கென சுமக்கும் உணர்வுகளில் ஜெயிக்குமொரு தினம்
என் குடியரசை நானும் –
முழுமையாக பெருமொரு நாளாகுமோ?

அடிமைத் தீ சுட்டுயெரித்த
இடமெங்கும் தாகம் தாகம்
சுதந்திர தாகமென்று தவித்த அந்த நாட்களின் வலிநீளும்
ஒரு மண்ணின் மைந்தர்களென்று
நமை நாம் நினைக்கையில்
ஒன்றுசேர்ந்துப் பெற்ற சுதந்திரமின்று
வேறு கைகளில் மட்டுமிருக்கும் வேதனையை
ஆற்றமுடியவில்லைதான்..

என்றாலும் –
இன்று சிலிர்க்கும் அழகின் காற்றுவெளியில்
இடைநிறுத்தாத கொடிகள் அசையும் தருணத்தில்
கண்ணீரின் ஈரம் காயாவிட்டாலும்
எம் வீரத் தியாகிகளை நினைவுகூறும்
நன்றிசெலுத்தும் நன்னாளின் மகிழ்வாக
பட்டொளி வீசிப் பறக்குமந்த தேசியக்கொடிக்கு
என் தாயகமண்ணின் முழு விடுதலையை மனதில் சுமந்த
வீர வணக்கமும்
தீரா கனவுகளின் மிச்ச வலியும்..
———————————————————-
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்