27) மழை பெய்த ஓரிரவின் விடிகாலையும்; விமான ஜன்னலோரமும்!!

ழை விட்டொழிந்து
இலையில் நீர் சொட்டுமொரு காலை..

வானொலியின் சப்தத்தில்
மழையிடித்த வீடுகளின் விவரமறியும்
தலைப்புச் செய்திக்கானப் பரபரப்பு…

சரிந்த கூரைப் பிரித்து
மூங்கில் நகற்றி – உள்ளே
அகப்பட்டுக் கிடக்கும் ஆடுகளை விடுவித்து
தழையொடித்துப் போட்ட ஆடுகளின் பசிநேரம்..

மழை நனைத்த ஆட்டுப்புழுக்கைகளின்
மரங்களோடு கலந்த மண்வாசம்..
அதைக் கழுவி விடுகையில்
பாட்டி திட்டிக் கொண்டிருந்த அழகியத் தமிழின்
அதிக கெட்ட வார்த்தைகள்..

வாசல் கொடியின்
சிதறியிருக்கும் மல்லிகையும்
வேப்பம்பூக்களும்
புளியம்பழமும் முருங்கைப் பிஞ்சும் ஒடிந்த கிளைகளும்..

வேலியின் ஓரமெல்லாம் வளர்ந்திருந்த
ஒதியமரங்களின் விழுந்த கிளை வெட்டி
வாசலில் அடுக்கிவிட்டுக் குடித்த
ஒரு சொம்புத் தண்ணீர்..

மழைவாசம் பரவியிருந்த
தெருவில் நடந்து
நலம் விசாரித்து வந்த அந்த
பழைய வீடுகள்; மனிதர்கள்…

நனைந்த வீட்டின்
மழை யொழுகிய சந்துகளில் பீறிட்ட
கற்றைக் கற்றைச் சூரிய வெளிச்சம்..

நனைந்தத் தரையின்
சகதி விலகி நிற்கையில்
கூட்டமாக முட்டிமோதிக் கொண்டு ஓடிவந்த
மாடுகளின் கால் குளம்பிலிருந்துத் தெறித்து
முகத்தில் அடித்த மழைத் தேங்கிய நீர்..

எல்லாவற்றிர்க்கும் மேலாக –
ஓடிப்போய் அமர்ந்த கொல்லைப்புறமெல்லாம்
மழைநீர் நிரம்பியிருக்க –
கனத்த வயிற்றைப் பிடித்துக் கொண்டு
இடம் தேடித் திரிந்த –
மழைப் பெய்த இரவின் விடிகாலைப் பொழுதுகள்..

இப்படி எல்லாமே நான் அமர்ந்திருந்த விமானத்தின்
ஜன்னல் வழியே தெரியும் மழையில் நனைந்த
நினைவுகளாய் ஈரப்பட்டுக் கொண்டிருக்க –

சொட்டிவழியும் என் கண்ணீரையும் சேர்த்துத் தூக்கிக் கொண்டு
மேலே எழுகிறது விமானம் – ஒரு
காய்ந்த தேசம் நோக்கிப் போக!!
————————————————————-
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

26) இனியேனும்; எதையேனும் செய்.. (2012)

வா..
சிப்பி திற
முத்து எடு
உப்புக் குளி
முக்கி கடலில் மூழ்கு
உலகின் நீளத்தை நீருக்குள் தேடு
வானத்தின் உயரம் மிதித்து மிதித்து ஆழத்தை அள
அந்திவான பொழுதின் மௌனத்தில் ஞானம் பெருக்கு
எங்கெங்கோ தேடி அலையும் பாடத்தை வீட்டில் படி
எல்லாம் நடக்கும்; எதையேனும் செய்..

முதிர்கன்னிகள் பாவம் வரதட்சணை யொழி
விதவை’ கொடுமை; பொட்டும் பூவும் வை; பேராசை யழி
பெற்றோர் இல்லையெனினும் அவர் பெரியோரெனில் வணங்கு
பசி என்று நின்றால் பிழைக்க வழியை அமை
ஏழ்மையில் தவித்தால் எறும்பின் அளவேனும் உதவு
இயலாமையில் உயிரும் கொடு;
நினைத்தால் எதுவும் முடியும், எதையேனும் செய்..

உதவியோரை உயிருள்ளவரை நினை
நன்றியில் பிறப்பைக் காண்பி
உறவென்று ஒவ்வொரு உயிரையும் மதி
மனதை அன்பால் நிறை
அண்டம் முழுதும் உன் மனதை செலுத்து
அடிமைத்தனம் அறு
தீண்டாமையை பார்வையிலிருந்தும் விலக்கு
எல்லோருக்கும் எல்லாமும் வேண்டுமென புரி
விட்டுக் கொடு மனதை விசாலமாய் வை
எதையும் பிறர் நன்மைக்கென்று செய்
முயற்சித்தால் எல்லாம் முடியும்; எதற்கும் தயங்காதே’ எதையேனும் செய்..

நல்லதை எதுவென்று உணர்
பின் நல்லதையே எண்ணத்தில் நிறை
நல்லதைப் பற்றியே பேசு
நல்லதற்கே உன் அத்தனை நடத்தையையும் பழக்கு
நல்லோரிடத்தில் இருப்போரும் நல்லவராவர்
தீமை உலகை அழிக்கும், நன்மை தீமையிலும் நமை காக்கும்
எனில் நல்லோராக –

கொள்ளை விடு
கொலை குற்றமெனில்’ சிறு உயிரையும் மதி
பசிக்கு மட்டுமே உணவை உண்
பசி பொறு; வயிற்றை அளந்து வை
வார்த்தைக்கும் வரையறை தேடு
பேசுவதில் புரிதலும் புரிந்ததை பகிரவும் செய்
பலத்தை அவசியத்திற்கு மட்டுமேக் கொள்
வீரம் எதுவென உணர்’
தைரியம் உயிர்விடும் வரை கொள்
எதிரி உனக்குள்ளே அற்றுப் போக நட
யாரையும் மன்னி
மனிதன் மன்னிக்கத் தக்கவன்
உயிர்கள் மன்னிக்கவும் காக்கவும் தக்கது புரி
யாராகவும் பாவணைக் கொள்ள மறு
நீ நீயாக வாழ் உன் நாக்கை உணர்வை நம்பு
உடலின் தேவை மனதின் தேவை எதுவெதுவென அறி
எங்கும் எதிலும் மனிதன் நீக்கமற நிறைந்தவன் –
நிறையத் தக்கவன் –
அது எப்படி என்று உனக்குள் தேடிக் கண்டுபிடி;

உலகத்தை உன் எண்ணத்தோடு சேர்
காற்று மழை வானம் மண் நெருப்போடு நீயும் மனதால் சேர்ந்துகொள்
முடியும்

முடியும் என நினைத்தால் எல்லாம் முடியும்
முயற்சி செய்
நம்பு
தியானி
மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே நினை

ஒன்றை செய்துமுடியும் வரை –
சிந்திப்பது வேறினை வெறு;

உன்னால் எல்லாம் முடியும்; எதையேனும் செய்…
————————————————————————————-
வித்யாசாகர்

வாழ்த்துக்கள்: இனி வரும் காலம் எல்லோருக்கும் நன்மையைப் பயக்கட்டும். 2012 சிறந்து விளங்கட்டும்!!

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

25) கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளை கனவுகள்..

ரு பழங்கிணற்றின் அடியில் உடையும்
நீர்க்குமிழியென
உடைகிறது என்
ஒவ்வொரு ‘தேசத்தின் கனவுகளும்..’

கார்த்திகை தீபத்தன்று பனைப் பூ முடிந்து
சிறுவர்கள் சுழற்றும்
மாவலியிலிருந்து உதிரும்
நெருப்புமீன்களாக பறந்து பறந்து
வெளிச்சமிழந்து மண்ணில் புகுகிறது – என்னந்தக்
கனவுகளும் ஆசைகளும்..

எட்டி கிளை நுனி பிடித்திழுத்து
பறித்துக் கொள்ளும் இலைகளாகவும்
உதிர்ந்து காலுக்கடியில் மிதிபடும்
மலர்களின் கண்ணீர் தொய்ந்த வாசமாகவும்
எம் கனவுகள் இத் துரோக மண்ணில்
காய்ந்துப் போவதின்னும் எவ்வுயிர் பிரிந்து மிஞ்சும்
கடைசி பொழுது வரைக்குமோ.. அறியோம்; அறியோம்;

இறக்கை முறித்து –
உயிர் உதிர்த்து –
உடல் முடைந்த பின்னலாக
காலத்தின் கண்களில் விரிக்கப்பட்ட எம்
கனவுகளின் ஒற்றை அர்த்தம்
ஒரு தமிழினத்தின்
ஒற்றை விடுதலை மட்டுமென புரியும் நாளில்
எம் கனவுகளுக்காய் முளைக்கும்
மொத்த சிறகுகளையும் எப்படி
முறித்துவிடுமிவ்வுலகு…?

நசுக்கப்பட தலைகளும்
வெட்டப்பட்ட கைகளும்
வெடித்துச் சிதறிய மார்பும்
மனதின் கருமை பூசிக் கொண்ட நிர்வாணமும்
தனக்கான கேள்விகளை
சுமந்துக் கொண்டுதானே மண்ணில்
ரத்தத்தால் நனைக்கப் பட்டிருக்கிறது?

இப்போதது தேசத்தின்
விடியலை நோக்கி –
நாங்கள் விட்ட உயிரின் ஈரத்தில் துளிர்க்கும்
எம் தமிழீழ பிறப்பின் இறக்கைகளாக
மேலிடப்பட்ட பிணக் குவியல்களை விளக்கிக் கொண்டு
பிறக்கின்றன..தான்,

இருந்தும் –
அவ்வப்பொழுது கைகோர்த்துக் கொள்ளும்
தமிழரின் நிரந்தரமற்ற ஒற்றுமையுணர்வில்
எந்த பாம்பும் பல்லியும் பயந்து –
தன் வாலை சுழற்றிக் கொள்வதில்லையே; எங்கள் முன்

மாறாக –
அது எம் முகத்தின் மீதேறி
தலை வரை கால்தூக்கிவைத்து மிதித்து – எம்
சுதந்திரத்தை இம்சிக்க இம்சிக்க –
ரத்தம் வழியும் முகத்தில்
எம் விடுதலையின் கனவு
அந்த பழங்கிணற்றின் அடியில் உடையும்
நீர்குமிழியென உடைந்துதான் போகிறது…,

இதலாம் கடந்தும்
அக்கனவு உடையா விடியலொன்று
மீண்டும் எம் ஈழ திசையில் பூக்கும்..

அந்த பூப்பின் வாசத்தில்
தமிழின விடுதலையின் குரல் – பெரும்
சப்தமாக ஒருநாள் உலகெங்கும் கேட்கும்..

கருப்பழிந்துப் போனதொரு விடுதலையின்
வெளிச்சம் நிறைந்த காற்றொன்று எங்களின் –
வெள்ளைக் கனவுகளின் மீது –
தின்மமாய் பட்டுச் செல்லும்..

ஒரு இனத்தின் விடியல்
அன்று எங்களுக்காய் விடியும்!!
——————————————————————————————————
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நிறைவுற்றது – கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –9)

இதற்கு முன்..

“என் நம்பிக்கை இன்று என்னை வென்று விட்டது, நான் அதனிடம் இச்சமுதயத்தால் தோற்றுப் போனேன் தோழர்களே!! விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா?

றுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும்? நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது?

போகட்டும், ஆனாலும் என்கதை வேறு, நான் இந்த விருதை ஒரு ஆபரணமாக கேட்கவில்லை, ஆடம்பரத்திற்காகவோ புகழ் வரும் என்றெண்ணியோ இத்தனை வருடம் காத்திருக்கவில்லை. என்னை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு அங்கீகாரமாகக் கேட்டேன். அதோ அவன் பிரபல்யமானவன் அவன் எழுத்தைப் போட்டால் புத்தகம் நன்றாக ஓடுமென்று நீங்கள் நம்பும் நம்பிக்கையாகக் கேட்டேன். அது கிடைக்க எனக்கு நாற்பத்தாறு வருடம் ஆனது.

என் முடிகள் நரைத்து விட்டன. நடை தளர்ந்து உடல் கெட்டு சிரிக்க கூட மனமின்றி இறுகி போய்விட்டேன். என் மனைவி கூட வயதாகி விட்டாள். என் குழந்தை வளர்ந்து தன் வாழ்தலுக்குள் கரைந்துபோய்விட்டாள். ஊருலுகம் என்னை கேளிக்கையாய் பேசுகிறது. கிறுக்கன் என்று முகத்திற்கு பின் பேசுகிறது. வக்கற்றவனான் நான், புத்தகம் புத்தகம் என்று அலைகிறேனாம், எதற்காக அலைந்தேன் என்று யாருமே சிந்திக்கவில்லையே? இனி இந்த விருதின் பெருமைமட்டும் வந்து எனக்கு என்ன செய்யும், இந்த கடைசி காலத்தில்? எந்த கட்டமைப்பு பொறுப்பு இந்த குற்றத்திற்கு???

ஆனால் இந்த கேள்விகளுக்காக மட்டுமல்ல நானிந்த விருதை கேட்டு நின்றது” என்று சொல்லிக்கொண்டே தன் கையிலிருந்த அந்த விருதை தூக்கி மக்களிடம் காட்டினார். மீண்டும் சட்டைப் பையிலிருந்த அலைபேசி அடிக்கத் துவங்கியது. மனைவி பேசியது, நான் அழைத்தால் உடனே எடுத்து பேசுங்கள் என்று சொன்னதெல்லாம் இப்போது அவரின் கவனத்தில் இருக்க நியாயமில்லை. அவர் பேசுவதை நிறுத்தவேயில்லை.

“வேறு இதற்காக இப்படி ஒரு அங்கீகாரம் வேண்டுமென்று இத்தனை வருடம் காத்திருந்தேன்?

உங்களை உருவாக்க, என் கீழுள்ளவர்களையெல்லாம் ஒருபடி எனக்கு மேலே கொண்டுவர, என் நம்பிக்கையை என் உலக மக்களுக்குக் கொடுக்க, என் இளைஞர்களை எதையும் சாதிக்கும் வல்லவர்களாக திடமான திறமான இளைஞர்களாக உருவாக்க, அத்தகைய என் எண்ணங்களை உங்களிடம் கொண்டுசேர்க்க; எனக்கு இந்த விருதும் இந்த இடமும் இதன் அங்கீகாரமும் தேவைப் பட்டது.

இந்த இடத்தில் வந்து நிற்கத் தக்க அளவிற்கே, எதுவாக நினைக்கிறார்களோ என் இளைஞர்கள் அதுவாக அவர்களால் ஆகமுடியுமென்று நேரெதிர் உதாரணம் காட்டி அவர்களை நம்பவைக்கத் தகுமளவிற்கு இந்த விருது தேவை பட்டது தோழர்களே.

இதோ என் மனைவி எனக்காக காத்துக் கிடக்கிறாள்” சட்டைப் பையில் கைவைத்துக் காட்டினார். “எத்தனை மணிநேரமாய் என் சட்டைப் பையினுள் அவளின் அழைப்பு துடித்துக் கொண்டுள்ளது, பாவம், அவளுக்கு கடைசிகாலம், அவளும் இங்கு வந்திருந்தால் ஆனந்தப் பட்டிருக்கலாம், வர முடியாமல் படுத்திருக்கிறாள். அவளை விட்டு இவ்வேளை நான் வந்துகூட இருக்கக் கூடாது.  ஆனால், வெறும் விருதிற்காக எழுதியவனாக இருந்தால் இவ்விருதை வாங்காமல் விட்டிருப்பேன்.

நான் உங்களுக்காக எழுதியவனாயிற்றே, பின் வராமல் இருந்திருந்தால் இத்தனையை உங்களிடம் சொல்லக் காத்திருந்த என் நம்பிக்கை வீன்போயிராதா? அதான், அதனால்தான் வந்தேன். என் எழுத்தை என் நம்பிக்கையை உங்களிடம் சேர்க்கவேண்டி இத்தனை தூரம் வந்தேன். சேர்த்துவிட்டேன். இனி நம்பிக்கையோடு புறப்படுகிறேன். எல்லோருக்கும் வணக்கம்” என்று சொல்லி அவர் நிறுத்த மக்கள் கண்ணீரும் நனைந்த மனதுமாய் எழுந்து நின்று சோவென கைதட்டியது.

அதிலும், இத்தனை பேச இதுவரை யாரையுமே அனுமதிக்காத அரங்கம் அவரை அனுமதித்தது. எதையோ இழந்தது போல், கொடுக்கத் தக்கதை காலம் தாழ்த்தி கொடுத்தது போல் தனக்குத்தானே வருந்தியது.

தன் வருத்தத்தை மீண்டும் மீண்டும் கைதட்டலாய் காண்பித்தது. எல்லோரும் எழுந்து நின்று கைதட்ட விருது வழங்க வந்த ஜனாதிபதியும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்.

ஜானகிராமன் எல்லோருக்கும் வணக்கத்தையும் அதிகம் நேரமேடுத்தமைக்கு மன்னிப்பையும் கோரிவிட்டு அவசரமாக மேடையிலிருந்து கீழிறங்கி மேடையின் பின்புற அறைக்கு பதற்றத்தோடு ஓடிப் போனார்.

—-

எல்லோரும் என்னவோ ஏதோ என்று பதறி எழுந்து வர “என் மனைவிக்கு முடியாமல் இருந்தது, என்னாயிற்றோத் தெரியவில்லை, ஒரே ஒரு நிமிடம் நேரம் கொடுங்கள், உயிர்போகும் தருணமாகக் கூட அது இருக்கலாம் பேசிவிட்டு வருகிறேன்” என்று கேட்டுக் கொண்டு மேடையிலிருந்து கீழிறங்கியவாறு ஒதுங்கிய பின்புற அறைநோக்கி நடந்தார்.

எழுந்து நின்றவர்கள் மேடைக் கடந்து வரத் துவங்க. எல்லோரையும் அமருமாறும், அடுத்து விருது பெற உள்ளவர்களுக்கு விருது கொடுக்கப் படுமென்றும், விழா இனியும் இனிதே தொடருமென்றும் அறிவிப்பு வர சிலர் நின்றும் சிலர் அமரவும் செய்தனர்.

ஜானகிராமன் சற்று நடுக்கத்தோடு ஒரு ஓரம் போய் நின்று சட்டைப்பையில் வைத்திருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தார். முகமெல்லாம் வியர்க்கத் துவங்கியது. ஐயோ என்ன ஆயிற்றோ எனும் பயம் உடம்பெல்லாம் பரவியது. மனைவிக்கு ஏதேனும் ஆயிருக்குமோ என்று பயந்தார். ‘ஐயோ கடவுளே நான் அழைத்தால் உடனே பேசுங்கள் என்றாளே’ இப்போது தான் அது அவருக்கு கவனமே வந்தது. கைநடுங்க அலைபேசியின் பொத்தான்களை அழுத்திப் பார்கிறார்.

வாணி என்று அவரின் மகளுடைய பெயரில் நிறைய விடுபட்ட அழைப்புகள் பதிவாகியிருந்தன. அதை கண்டதும் கண்கள் கலங்கி கண்ணீர் வழிய ஆரம்பித்தது ஜானகிரமனுக்கு. அவள் தான் சொன்னாளே, ஒருமுறை யழைத்தாலே பேசுங்கள் என்றாளே, நான்தானே தவறிழைத்துவிட்டேன், பாவி நான்.. என்ன ஆனாளோ இறைவா..” என்று தலையில் கைவைத்து அப்படியே சுவற்றில் சாய்ந்துக் கொண்டார்.

பதைபதைப்பு கூடியது. உயிர் நின்றுவிடுவது போல மேலெல்லாம் மனதோடு சேர்ந்து வலித்தது. வேறு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒருவேளை அழைத்து என்னானது என்றாவது கேட்டுவிடலாமா என்று  தோன்றியது, அவள் இருக்கிறாள் என்ற ஒரு வார்த்தையை கேட்டால் போதும் மனம் ஓய்ந்து போகும்’ என்று எண்ணினார்.

சிலநேரம் மரணம் போன்ற நிகழ்வுகளை தனதாயினும் நெருங்கிய பிறருடையதாயினும் உள்மனம் உள்வாங்கிக் கொள்கிறது. அங்கனம் தெரிந்துக் கொண்டாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தனக்குள் தானே வருத்தப் படவும், மனது அதுவாக கத்தியழவும் ஆரம்பித்து விடுகிறது.

ஜானகிராமனுக்கு அந்த உணர்வு அதிகரிக்க அதிகரிக்க அவளின் ஜானகியின் பிரிவை உணர ஆரம்பித்தார். இனியும் தாமதப் படுத்த வேண்டாமென்று மனதை திடப் படுத்திக் கொண்டு தன் மருமகனுக்கு அழைத்தார். எதிர்முனையில் எடுப்பாரே இல்லை.

மீண்டும் மீண்டும் அவசர அவசரமாக அழைத்தார். பதபதைத்தார். ஓரிருவர் விழாக் குழுவினர்வந்து என்னானது என்னானது பதராதீர்கள். ஒன்றும் ஆகாது என்று ஆறுதல் படுத்தினார்கள்.

இங்ஙனம் யாருமே எடுத்துப் பேசவில்லையே என் மனைவிக்கு என்னானதோ என்று சொல்லியவர்  கத்தியழ அவர்கள் அவருடைய மருமகனின் அழைப்பு எண் வாங்கி கூப்பிட்டுப் பார்த்தார்கள்.

எதிர்முனையில் அலைபேசி அணைக்கப் பட்டிருந்தது. அவர்கள் வருத்தத்தோடு விவரம் தெரிவித்துவிட்டு, ஒன்றும் ஆயிருக்காது, வாருங்கள் அமருங்கள், எல்லோரும் கலவரமாகிறார்கள், விழா முடிந்ததும் பேசிக் கொள்வோம் என்றார்கள்.

ஜானகிராமன் அவர்களை ஒரு துச்சமாக பார்த்தார். என் உயிரே என்னைவிட்டு பிருந்துவிடுமோ என்று நான் துடிக்கிறேன், விழாவைப் பற்றி எப்படி நான் எண்ண? உங்களை சொல்லி வருந்தவும் நான் தயாரில்லை. என்னை விட்டுவிடுங்கள், நான் போய்விடுவேன், என்னைப் பற்றி வருத்தம் வேண்டாம் நீங்கள் விழா நடத்துங்கள். இது நூறு பேர் அமர்ந்திருக்கும் அவர்களின் மரியாதைக்குரிய மேடை. எத்தனையோ பேரின் வாழ்வாதாரம், பெரும் அங்கீகாரம் நீங்கள் நடத்துங்கள், நான் போகிறேனென்று கூறிவிட்டு அங்கிருந்து விடைகொள்வதாகக் கேட்டுக்கொண்டு மேடையின் ஓரமாக இறங்கி வளாகம் நோக்கி நடந்தார்.

சிலர் அவரை பார்த்ததும் எழுந்து ஓடிவந்தார்கள். கையை பிடித்து குலுக்கினார்கள். இதில் கையெழுத்துப் போட்டுக் கொடுங்களென்று புத்தகங்களை நீட்டி கேட்டார்கள். தொலைகாட்சிக் காரர்கள் ஓடிப் போய் நேர்காணலுக்கு நேரம் கேட்டனர், பத்திரிகையாளர்கள் விரைந்துவந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு ஒரு பேட்டி கொடுங்களேன் என்றனர்.

எல்லாம் கண்ணீரில நனைந்துப் போன காகிதம் போல் கிழிந்து’ இரைந்த அவரின் கனவுகளென வந்து இடையில் விழுந்தது.

விளக்கில் முட்டிமுட்டி தரையில் விழும் விட்டில் பூச்சுகளைப் போல் அவருதடு சிரிக்க எத்தனித்து எத்தனித்து அழுகையை தழுவியது.

அதைப் புரியாத மக்கள் கூட்டத்திடமிருந்து அதைப் புரிந்த விழாக் குழுவினர் ஓடிவந்து தடுத்து, அவரின் ஒரு கையில் விருதைக் கொடுத்து,  இன்னொரு கையில் காசோலையை உள்ளே வைத்துள்ளதாகச் சொல்லி ஒரு பையையும் கொடுத்து, போகுமிடம் சொன்னால் அங்கே  கொண்டுவந்து விட்டுவிடுவதாகவும் கேட்டுக் கொண்டார்கள். எல்லோரையும் ஜானகிராமன் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு “என்னை விட்டுவிடுங்கள் போதும்” என்று கேட்டவாறே வெளியே வந்தார்.

அந்த இடத்தை விட்டு கொஞ்ச தூரம் தன் கண்போன போக்கிற்கு நடந்தார். மனைவி கடைசியாக சொன்னதும், இத்தனை காலம் அவளோடு வாழ்ந்ததும் அவள் பேசியதும் என எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவில் வந்து உறுத்தியது. அவளின் தியாகங்கள் ஒவ்வொன்றாய் வந்து கன்னத்தில் அறைந்து அறைந்து என்னை தனியே விட்டுவிட்டாயே என்று கேள்வி கேட்டது.

கேள்விகளின் சிந்தனையில் உடைந்து போன மனதின் உயிர் அனிச்சையாய் அனிச்சையாய் வலுகுறைய ஆரம்பிக்க “ஐயோ என்னாயிற்றோ என்னாயிற்றோ என் ஜானகிக்கு” என்ற பதட்டத்தில் கையிலிருந்த விருதினை கக்கத்தில் வைத்துக் கொண்டு, சட்டைப்பையிலிருந்து கைப்பேசி எடுத்து மருமகனுக்கே மீண்டும் அழைத்துப் பார்க்க எண்ணி ஒரு ஓரம் நின்று அழைக்க, வெகு வேகமாய் பேருந்தொன்று  அவரை இடித்துவிடுவதுபோல் வந்து அவரை உரசிப் போக, அதன் காற்றில் ஆடி அவர் ஒதுங்க, காற்றும் மணலும் முகத்தில் வாரியடித்து ஏதோ ஒரு தனைமீறிய பயத்தை வாரி அவரின் முகமெங்கும் பூசியது.

ஒதுங்கி நின்று அலைபேசியில் எண்கள் அழுத்தி மருமகனை அழைப்பதற்குள் காலன் கைகடிக்கும் இடமாக மின்சக்தி வேறு குறைந்துபோய்விட்ட எச்சரிக்கை ஒலியை ஒலித்துவிட்டு  அணைந்தேப் போனது.

வானமே இருண்டு தலையில் விழுவது போலெண்ணினார் ஜானகிரமன். ஐயோ என்ன செய்வதோயென்று நோடிந்துபோய், வேறு வழியின்றி கொஞ்சம் தூரம் நடந்து ஒரு யாருமில்லா தெருவின் ஓரத்தில் ஏறி அங்கிருந்த ஒரு மின்விளக்குக் கம்பத்தின் கீழே அமர்ந்துக் கொண்டார்.

ஒரு கையில் விருதும், இன்னொரு கையில் அந்த காசோலைப் பையும் இருந்தது. கடவுளே எப்படியாவது என் ஜானகியை நான் போய்சேரும் வரை உயிரோடு வைத்திருபாயா என்று எண்ணுகையில் அழைப் பீறிட்டு வர, அதையும் அடக்கிக் கொண்டு “இப்போதான் இவ்வளவு பணம் இருக்கே போனதும் எப்படியாவது பெரிய மருத்துவமனையில சேர்த்து வைத்தியம் பார்த்துவிடுவேனே, அதுவரை அவளை உயிரோடு வைத்திறேன்” என்று வாய்விட்டு அழமுடியாமல் இதயம் வெடிக்க கனத்து நின்றார்.

சற்றுநேரத்தில் வெறுமனே அலைபேசியை மீண்டும் இயக்கிப் பார்க்க, அது எப்படியோ ஒட்டியுல்ல சொச்ச மின்சக்தியில் உயிர் பெற்று தன் கடைசிப் புள்ளி மின்சார அளவைக் காட்ட, இப்போ என்ன செய்யலாம்…., மருமகனைத் தவிர வேறு வழியில்லை, வேறு யார் எண்ணுமேத் தெரியாதே, இப்படி செய்தாலென்ன, ஏதேனும் ஒரு இருக்கும் எண்ணிற்கு அழைத்து கேட்கலாமே என்று எண்ணி எங்களை தேடிப் பார்ப்பதற்குள் சென்னையிலிருந்து ஒரு அழைப்பு வந்தது..

உயிரே வந்ததாக துடித்துபோய் –

யம்மா…………………….” என்றார். வாய்விட்டு கதறினார் ஜானகிராமன். விருது கொடுத்துட்டாங்கம்மா” என்றார்.

“சரிங்கப்பா”

“நான் கிளம்பிட்டேன்மா”

“சரிங்கப்பா”

“நாளைவிட்டு நாளைமறுநாள் வந்து சேர்ந்திடுவேன்மா” என்றார் அவருக்கு மனைவி எப்படி இருக்கிறாள் என்று கேட்க பயமாக இருந்தது.

“சரிங்கப்பா”

“நிறைய பணம் கொடுத்து இருக்காங்கம்மா, இந்த பணத்துல நம்ம  அம்மாவ……………………..” அவரால் பேச முடியவில்லை. அழுதார். தேம்பினார்..

“அப்பா………”

“…..”

“அப்பா………”

“தாங்க முடியலைம்மா”

“இல்லைப்பா…”

“வந்து சேருவனான்னு பயமா இருக்கும்மா”

“ஐயோ அப்பா அப்பா அப்பா…….”

“மன்னிச்சிடும்மா, உனக்கு இவ்வளோ பெரிய பாரத்தை கொடுத்துட்டேனே..”

“என்னப்பா நீங்க … என்ன தாங்கி என்னால என்னப்பா செய்யமுடிந்தது, பெண்ணா பிறந்த குற்றத்துக்கு உங்களின் வலிகண்டு அழத் தானே முடிந்தது, இப்போ அதையும் தாண்டி எல்லாத்தையும் இழந்துட்டேனேப்பா..”

“ஏம்மா.., என்னம்மா சொல்ற???”

“அம்மாப்பா”

“என்னம்மா… என்னம்மா ஆச்சு அம்மாவுக்கு”

“அம்மா பாவம்பா துடிதுடிச்சிட்டங்கப்பா”

“மருத்துவமனைக்குப் போனீங்களா”

“ம்ம்ம்ம்……….போனோம்பா”

“பணத்துக்கு என்ன பண்ணீங்கமா”

“தாலியை வெச்சேம்பா, வைக்கலை வித்தேன்”

“ஐயோ, மாப்பிளைக்கு தெரியாதா? அவரில்லையா கூட?”

“இல்லைப்பா அவர் வரதுக்குள்ள..”

“வரதுக்குள்ள???”

“தாலி விட எனக்கு அம்மாதாம்பா வேணும்” அவள் கத்தி கத்தி அழுதாள்.

“என்னாச்சு வாணி அம்மாவுக்கு”

“இல்லைப்பா..”

“என்னாச்சும்மா அவளுக்கு”

“கேட்காதிங்கப்பா”

“ஏம்மா சொல்லும்மா என்னமா ஆச்சு?????????”

“இல்லைப்பா.. “

“என்ன????!!!!!!!!!!!!”

“அம்மா இல்லைப்பா”

“…………….”

“அம்மா இல்லைப்பா இனி…”

“……………”

“அம்மா போயிட்டாங்கப்பா…”

“…………..”

விருது தரையில் உருண்டோடியது. கையிலிருந்த அலைபேசி கீழே விழுந்து அதிலிருந்து அப்பா அப்பா என்று அவள் கதறுவது மட்டும் கேட்டது. ஜானகிராமன் அந்த மின்கம்பத்திலிருந்து சரிந்து கீழே விழுந்தார்..

மேலே காகங்கள் சுற்றி சுற்றி வட்டமிட்டுப் பறந்தன. மழை ஜோவென்று கொட்டியது…

-—————–+++——————+++——————–
..முற்றும்..

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –8)

இதற்கு முன்..

“அறுபத்தாறு வயதில் ஒரு விருது பெரிய்ய்ய்ய விருது. இந்த விருதுக்காக நான் காத்திருந்த வருடங்கள் நாற்பத்தியாறு வருடங்கள். என் மனைவியை காதலித்தபோது அவர்பெயரையும் என் பெயரோடு இணைத்து வெறும் ராமனான நான் ‘ஜானகிராமனாகி’ முதன்முதலாய் “ஓயாத அலைகள்” எனும் தலைப்பில் கதை எழுதியபோது எனக்கு வயது இருபது. ஆனா இதுல விசேசம் என்ன தெரியுமா? இந்த விருது எனக்கு கிடைக்குமென்று என் பதின்மூன்று வயதிலேயே எனக்கு தெரிந்திருந்தது.

ம்.., அப்பவே நினைவு தெரிந்த போதே பெரிய ஆளுன்னு நினைப்பெனக்கு. என் நண்பன் சொல்லுவான் பெரிய மயிருடா நீன்னு சொல்லுவான், எனக்கு மனசுல தோணும் ஆமாண்டா நான் பெரிய மயிருதான்‘னு தோணும். ஏன்னா அப்படி ஒரு நம்பிக்கை எனக்கு என் மேல, இந்த வாழ்க்கை மேல.

முடியாதுன்னு நான் எதையுமே சொல்லமாட்டேன். வானத்தை தொட முடியுமான்னா முடியும்பேன். உலகத்தை தூக்க முடியுமான்னா தூக்கி ஒரு சுண்டுவிரல்ல நிறுத்தட்டுமா’ம்பேன். அப்படி ஒரு அசாத்திய நம்பிக்கை வேணும். அது எனக்கு இருந்தது. அது என்னை தீயா வளர்த்துச்சி. விவேகானந்தர் சொல்வாரு “எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆவாய்ன்னு’ அதை கேள்விப் படும் முன்னரே, எதுவாக நினைக்கிறனோ அதுவாக ஆவேன்னு நான் கனவு கண்டிருக்கிறேன். இது இப்படி தான்னு உணர்ந்திருக்கிறேன். நாம என்ன ஆவனும்றதை உண்மையில் நாமதான் தீர்மானிக்கிறோம். தீர்மானிக்கணும்” அழுந்த சொல்லி விட்டு அமைதியாக வளாகத்தையே பார்த்தார்.

“என் நண்பன் தான் எனக்கு முதல் நேசமானவன், அதேநேரம் என் முதல் எதிக்கும் சமமானவன் அவன்தான். என் சில நல்லவைகளுக்கு கூட இருந்தும், நிறைய இடத்தில் என்னைக் கெடுத்தவனும் அவன்தான். ஆனால், எங்கிருந்தாலும் யாருடன் இருந்தாலும் நாம் தான் நம்மை பக்குவமா வைத்துக் கொள்ளனும், நம் நல்லதை நோக்கி சிந்திப்பது நாமாகத் தான் இருக்கணும். நான் சிந்திப்பேன், யாருடன் சேர்ந்தாலும் எங்கே போனாலும் என் நடத்தை பற்றி சிந்திப்பேன். இப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஒழுக்கம் குறித்த ஒரு வரையறையினை எப்பொழுதும் வைத்திருப்பேன். அதை உடைப்பதே அவனுக்கு நோக்கமாக இருக்கும். நேரா எழுந்து வருவான் “நீ ஆம்பளையா இருந்தா இதை தாண்டி காட்டுடா பார்க்கலாம்னு சொல்லிட்டு ஒரு கட்டையை தூக்கி அவன் தலைக்கு மேல வெச்சிட்டுப் போவான். என்னால் அப்படி சாதாரணமா போயிடமுடியாது. அதை தாண்டுவதில் மட்டுமே எனது கவனமிருக்கும்.

எனக்கு அங்கே என்னை ஆம்மபலைன்னு நிரூபிக்கிறது எண்ணமில்லை, இது முடியாதா? முயற்சித்தா இதை தாண்டிக் காட்ட முடியாதான்னு ஒரு வேகம் வரும், அதுக்காக அதை தாண்டும்வரை சாப்பிடாமலோ தூங்காமலோ இருக்கமாட்டேன். தாண்டி தாண்டி பார்ப்பேன் முடியிற வரை முயற்சி செய்வேன், சாப்பிடலானாலும் பரவாயில்லை தூங்குற நேரமாயிடுச்சா தூங்க போய்டுவேன். லட்சியத்தை கவனமா தான் வெல்லனும். அதை வெல்லும் உறுதி உள்ளளவுக்கு நம்மை நாம் சக்தி படுத்திக்கணும். நம்மை நாம எப்பவும் பலம்மா வைத்துக் கொள்ளனும்..” பேசிக்கொண்டே வளாகத்தை சுற்றிப் பார்க்கிறார். வளாகம் கட்டுண்டு போனதுபோல் காது கொடுத்து அமர்ந்திருந்தது. ஜானகிராமன் மீண்டும் தொடர்ந்தார்..

“ஆனாப்பாருங்க அன்றைக்கு இரவு முழுக்க எனக்கு அதை எப்படி தாண்டுவதுன்னு தான் எண்ணமிருக்கும். மறுநாள் விடிந்ததும் அந்த கட்டையை தூக்கி என் தலைக்குமேல இரண்டுமடங்கு வைத்துவிட்டு தாண்டிப் பார்ப்பேன். தாண்டி தாண்டி சாந்திரம் வானம் மூடும் முன் அந்த உசரத்தைத் தொடுவேன். அதை தொடுறேன் பாருங்க அப்பதான் அந்த நண்பன் மேல எனக்கு மரியாதை வரும். ஏன்னா மறைமுகமா நம் வெற்றிக்கு நண்பர்களும் காரணாமா இருக்கிறார்கள். எனவே நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் மிக முக்கியம் என்பதை இளைஞர்கள் புரிந்துக் கொள்ளவேண்டும்” விருது வழங்கும் விழா நேரடி ஒளிபரப்பாக தொலைகாட்சியில் காண்பிக்கப்பட்டது. எல்லோரும் அவரின் வார்த்தைக்குள் சிக்கி அழுத்தமாக அமர்ந்திருந்தனர்.

“முக்கியமா நம்மோடுள்ள நண்பர்கள் தான் அந்த பருவத்துல நமக்கு உலகமாவே தெரியறாங்க, அதனால நீங்கல்லாம் நல்ல நண்பர்களை, உங்களின் திறனை பலத்தை வெளிப்படுத்தும், உங்களை ஊக்குவிக்கும் நண்பர்களை, தன்னைச் சுற்றி இருப்பதுபோல் அமைத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு நட்பென்பது நம்மை ஊக்கப் படுத்தாவிட்டாலும் பரவாயில்லை, நிச்சயமாக நம்மை மட்டப்படுத்துவதாக இருக்கக் கூடாது. நண்பர்களுக்கும் துரோகிகளுக்கும் நிறைய இடைவெளியுள்ளது அதை கண்டுணர்ந்து நம் நண்பர்களை மட்டும் நாம் அடையாளம் தெரிந்து அவர்களிடத்தில் நட்பையும் மதிப்பையும் அன்பையும் பெருக்கிக் கொள்ளவேண்டும்.

ஆனால் அவன் எனக்கு அப்படியில்லை, அவனுக்கு எண்ணம் என்னை ஊக்குவிப்பதில் இல்லை மட்டப் படுத்துவதிலோ அல்லது என்னைக் கேளிக்கையாக்கி பிறரை சிரிக்கவைத்து அவன் தன்னை புத்திசாளியாகக் காட்டிக்கொள்வதிலோ தானிருந்தது.

அதையெல்லாம் கடந்து வந்தும் இச்சமுதாயம் குறித்து நிறைய சிந்திப்பேன், சமுதாய சீர்கேட்டை தட்டிக் கேட்கவேண்டுமென்று முனைவேன். அதற்கென்னை தயார்படுத்திக் கொள்ளும் முயற்சியாக உடற்பயிற்சி மற்றும் தற்காப்புக் கலைகளைப் பயிலத் துவங்கினேன். அப்போதெல்லாம் அவனும் என் உடனிருப்பான். பயிற்சியின் பொருட்டு நான் இரண்டு மூன்று செங்கற்களை அடுக்கி உடைக்க முயற்சிக்கும் வேலையில் இன்னும் இரண்டினை எடுத்து அதன்மீது வைத்துவிட்டு இப்போது உன்னால் உடைக்கமுடியுமா, எங்கே உடைத்துக்காட்டு என்பான். மேலே ஒருபடி சென்று கேளிக்கையாய் ஏதேனும் செய்து சிரிக்கவும் செய்வான்.

அதை உடைக்காமல் நான் விட்டதேயில்லை. அதன்மீது இன்னொரு கல் சேர்த்துவைத்து அதையும் உடைத்துக் காட்டுவேன். பிற்காலத்தில் நிறைய செயல்களை நான் முடியும் என்று ஏற்று சவாலிற்கு தயாராக நிற்க இதுபோன்ற தருணங்கள் எனக்குள் அடியுரமாகப் பதிந்து என் மனதிற்குள் பலமாகயிருந்தது. எதை செய்ய நினைத்தாலும் நிச்சயம் நம்மால் செய்யமுடியும் என்ற நம்பிக்கையை அதிகமாய் எனக்குள் இதுபோன்ற  தருணங்களே வளர்த்துத் தந்தது.

அதோடு, அவனோடு நான் நின்றுவிடவில்லை. என்னை வளர்த்தவர்கள்.. அதுபோல் ஊரெல்லாம் உலகின் தெருவெல்லாம் நின்றிருந்தார்கள்…

வீட்டில் அப்போதெல்லாம் கடுமையான வறுமை இருந்தது. ஒருவேளை சோற்றை கூட இரண்டுமூன்று நாளுக்கு தண்ணீர் ஊற்றிவைத்து நாலணா பூண்டு ஊருகாயோடு பழயசாதமாக சாப்பிடுவோம். சிலநாட்கள் அந்த ஊறுகாய் கூட இருக்காது. இன்னும் சில நாட்கள் அந்த பழையசாதமும் மிஞ்சாது. பட்டினியில் காய்ந்த வையிறுகளால் மறக்கப்பட்ட நாட்கள் எத்தனை எத்தனையோ..

வேறு வழியின்றி படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு போயிருக்கலாம், ஆனால் வேலை செய்துக் கொண்டே படித்தாலென்ன என்று நான் இரவில் வேலை செய்துக்கொண்டு பகலில் படித்து வந்தேன்.

எங்களின் வீடு அப்போது மணலி எனும் பேரூரை சார்ந்திருந்தது. அங்கெல்லாம் பற்றவைப்பாளர் என்றால் அப்போது ஒரு பெரிய மதிப்பிருந்தது. அந்த தொழிலை கற்றுக் கொண்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்றார்கள், சம்பாதிச்சா வீட்டின் துயரம் தீருமென்று புரிந்துக் கொண்டேன். அம்மாவின் கண்ணீரைத் துடைக்க என் கண்ணில் நெருப்பெரிய ஆரம்பித்தது.

மதிய வேலையில் உணவுண்ண போகமாட்டேன், என் ஆசான் செய்வது போலவே நானும் இரண்டு துண்டு இரும்பை எடுத்து பற்றவைத்துப் பார்ப்பேன். கண்கள் இரண்டும் தீயாய் எரியும். எறிந்த கண்களில் உருளைக் கிழங்கோ வாழைப்பழத் தோளோ கட்டிக் கொண்டு படுப்பேன், மீண்டும் மறுநாள் பற்றவைப்பு நடக்கும், மீண்டும் கண்கள் எரியும், போகும் வரும் பாதை கூட சரியாக தெரியாது. இருந்தும் இடைவிடாது முயற்சித்து பயிற்சி எடுத்து எடுத்து ஒருவழியாக கைதேர்ந்த வெல்டர் ஆனேன். அதாவது பற்றவைப்பாளன் ஆனேன்..

பற்றவைப்பு பணி என்றால் என்ன, அதிலுள்ள நுணுக்கங்கள் என்னென்ன, எதை அதில் வென்றால் பெரிய ஆளாக அதில் இருக்கலாம் என்று அத்தொழிலின் எல்லாம் முனையிலும் பார்த்தேன். சூழ்சுமம் புரியத் துவங்க பெரியதொரு ஆளென்று அதில் பேரெடுத்தேன். அதைக் கண்டும் பொறாமைப் பட்டது உலகம்.

‘என்னடா கிழிச்ச நீ வெல்டரென்றால் பெரிய ஆளுன்னு நினைப்பா? வெல்டரென்றால் முட்டாளென்று தெரியாதா உனக்கு? என்றார்கள். கோபம் பொத்துக்கொண்டு வந்தது, கோபத்தை அடக்கிக் கொண்டேன், வேறென்ன செய்யவேண்டும் என்றேன். என்ன செய்வாய், உன்னால் என்ன செய்ய முடியும் ‘வெல்டர் என்றால் இப்படித் தான், காலத்திற்கும் இப்படித் தான் சிந்திக்கவே தெரியாத அறிவிலியாக இருக்க வேண்டும், அரைத்ததைத் தான் அரைக்கவேண்டும் என்றார்கள்.

வார்த்தைகளின் சூட்டை இதயத்தில் போட்டுக் கொண்டேன். எனக்கு மேல் வேறென்ன என்று பார்த்தேன், இதே துறையில் இன்னும் வேறென்ன செய்யலாமென்று எல்லோரிடமும் விசாரித்தேன், என் நடை அடுத்து இன்ஸ்பெக்டராக மாறியது. கனவு கண்காணிப்பாளனாவதில் பூத்தது.

பகலில் கண்காணிப்பாளனுக்காகப் படித்துக் கொண்டே இரவில் வேலை செய்தேன். ஒவ்வொரு இரும்பின் இணைப்பையும் பற்றவைத்தப் பின் அதை ஒரு கண்காணிப்பாளனாகவே பார்ப்பேன். என் நோக்கம் மெல்ல மெல்ல நகர்ந்து வெற்றிகண்டு அதற்கான படிப்பும் முடிந்தது. எனைப் பார்த்து என்னோடு இருந்தவர்கள் எல்லாம் படிக்க ஆரம்பித்தார்கள். நான் பற்றவைப்பாளன் ஆனபோது என் தொழிலை வேறு பத்து பேருக்கேனும் கற்றுக் கொடுத்திருப்பேன். அந்த பத்திலிருந்து அது நூறு பேருக்கேனும் அத்தொழில் பரவியிருக்கும்.

அதுபோல் நான் படிக்க ஆரம்பித்தபோது என்னோடிருந்த பத்து பேரும் படிக்க ஆரம்பித்தனர். எனக்கு கீழேயிருந்த நூறு பேரும் படிக்க இசைந்தார்கள். இன்று நூறைக் கடந்த எத்தனையோ பேர் சாதாரண வேலையிலிருந்து படித்த வேலைக்கு மாறி வந்துள்ளனர். நம் வெற்றியை நாம் அப்படி பிறரோடு சேர்த்து அமைத்துக் கொள்ளவேண்டும். நம் வெற்றி கூட அப்படி பிறர கண்ணை உருத்தாமல் வாய்க்கவேண்டும்.  நம்மோடுள்ளவர்களை நம்மைவிட மேலாக வளர்ப்பது நம்மை வளர்த்துக்க் கொள்வதற்கே சமம்.

பின் மெல்ல படித்து படித்து மேலே வர வர ஒரு கட்டத்தில் கண்காணிப்பாளனாக வேலையும் கிடைத்தது. அங்கு போனால் பொறியாளனின் கைபொம்மைதான் கண்காணிப்பாளன் என்றனர். அதாவது ஒரு இன்ஜினியருக்கு கீழ்படிந்து தான் இன்ஸ்பெக்டர் எல்லாம் இருக்கனும் என்று எழுதாத சட்டம் ஒன்றினை வைத்தார்கள். அங்கே ஒரு பொறியாளன் சொல்வதே மறுப்பில்லா தீர்ப்பானது. ஏதேனும் சரி என்றாலும் அவன் தவறு என்று சொன்னால் அது தவறு தான், காரணம் அவன் தான் பொறியாளன் நீயல்ல என்றார்கள். அதும் அந்த பொறியாளன் வேற்று இனமாக இருந்தால் அதன் அழுத்தமும் துரோகமும் அளவிட முடியாத அளவிற்கு நீடித்தது.

பொறுக்கமுடியாமல், அடிமைத்தனம் மறுத்து திமிரும் இனமானம் உள்ளே சுடர்விட்டு எரிய, சிலிர்த்துக் கொண்டது உணர்வுகள் மீண்டும். வானமே எல்லையென்று எண்ணம் கொண்டேன். உழைக்கும் ஒவ்வொரு துளி வியர்வையும் நாம் நம் வாழ்வின் நன்மைக்கு வேண்டி முன்னதாக இடும் முன்பணம் போன்று என்று உணர்ந்துக் கொண்டேன். இரவும் பகலும் வேலையும் படிப்புமாய் அலைந்து அலைந்து திரிந்ததில் பொறியாளனாகி பின் அதிலும் முதிர்ச்சி பெற்று மேலாளராகக் கூட ஆகமுடிந்தது என்னால். லட்ச லட்சமாய் சம்பாதிக்க முடிந்தது. அத்தனையையும் முடியும் என்று செய்து காட்டியபின், என்னோடு சேர்த்து பலரை என் உயரத்திற்கு மாற்றிவிட்ட பின் அந்த வேலையையும் விட்டுவந்தேன். எழுத்தொன்றே உயிரென்று லட்சியம் பூண்டேன்..

காரணம் என் நோக்கம் வெறும் பணம் அல்ல. என் லட்சியமென்பது வெல்வதில் மட்டுமேயிருந்தது. என் வெற்றியை வழியென பிறருக்கும் காட்டுவதிலேயே இருந்தது. நினைத்தால் முடியுமென்பதை என் மக்களுக்கு போதித்து, என் இளைஞர்களுக்குப் போதித்து, என் ஏழ்மைக் குடிகளின் வறுமையை போக்குவதில் மட்டுமேயிருந்தது.

அதற்கென போராடிய வாழ்வினிடையே எனக்கு உதவிய இன்னொரு ஆயுதம் தான் இந்த எழுதுகோல்” தன் சட்டைப்பையில் கைவைத்துக் காட்டினார். அப்போது சட்டைப்பையிலிருந்த அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. எடுத்துப் பேச எண்ணுவதற்குள் இணைப்பு துண்டித்துப் போக, அதை அப்படியே சட்டைப்பையில் போட்டுக் கொண்டு தொடர்கிறார்..

“ஆம் தோழர்களே, எதையோ சாதிப்பேன் எதையோ சாதிப்பேன் என்றெண்ணிய எனக்கு ஞானாவாக்காக உள்ளே பதிவானது என் எழுத்து தான். எழுத எழுத எழுத்து என்னுள் பிரவாகமாகப் பரவியது. எழுத்தினால் என் அருகில் இருப்போர் மாறக் கண்டேன். எழுத்தினால் இச்சமூகத்தின் சீர்கேட்டை சுட்டிக்காட்ட முடிவதைக் கண்டேன். எழுத்தின் இடுக்களில் ஒரு காலத்தின் வாழ்தலின் பதிவிருப்பதைக் கண்டேன். எழுத்தினால் உலகைப் புரட்டிப் போடமுடியுமென்று நம்பினேன். என் அடுத்த லட்சியம் எழுத்தானது. எழுத்தின் இறுதி என் வாழ்வானது. வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் இந்த விருது பதிவு செய்யுமென்று அன்று நம்பினேன்”

சொல்லிவிட்டு அங்குமினும் பார்த்தார்..

“சொன்னால் நம்ப மாட்டீர்கள் தெருவில் நடக்கையில் என்னைச் சுற்றி யாருமே இல்லாத போதும் நான் எண்ணிக் கொள்வேன் ‘என்னைச் சுற்றி மனிதர் நிற்கிறார்கள், ‘அவர்கள் என்னை பெரிய எழுத்தாளனாகப் பார்க்கிறார்கள். அதோ போறான் பார் அவன் அந்த பெரிய விருதை வாங்கியவன் என்று பேசிக் கொள்கிறார்கள் என்று எனக்குள்ளேயே எண்ணிக்கொள்வேன்.

ஆனால் தோழர்களே, என் லட்சியம் அந்த விருதை பெறுவது அல்ல. அந்த விருதை பெரும் அளவிற்கு என்னை உயர்த்திக்கொள்வது” மக்கள் கூடம் மொழிகடந்து சோ.. வென கைதட்டியது.

“அந்த என் லட்சியக் கோட்டினை நான் அடைய இதுவரை எழுதியது நூற்றிற்கும் மேலான புத்தகங்கள். நூறு புத்தகங்கள் எழுதியவனை என் வீட்டின் நான்கு தெரு தள்ளியவனுக்குக் கூட தெரியாது. கேட்டால் அவன் ஏதோ எழுதுறானாம் என்பார்கள் சிலர்.

எத்தனை உயர்வான வேலையை விட்டுவந்தேன் தெரியுமா, எவ்வளவு பெரிய சம்பாதியத்தை ஒதுக்கி விட்டு வந்தேன் தெரியுமா? ஏன் வந்தேன், எழுத்தின் மீது வைத்த நம்பிக்கை. எழுத்தினால் நான் இங்கு வந்து நிற்க முடியுமென்று நான் கொண்ட நம்பிக்கை. இங்கு வந்துவிட்டால் என் உணர்வுகள் மதிக்கப் படும், மதிக்கப் பட்ட உணர்வுகளால் என் கீழுள்ளோரை என்னளவிற்கேனும் உயர்த்திக் கொண்டுவர முடியாதா என்றொரு ஏக்கம்.

ஆனால் என் சமுதாயம் அப்படியில்லை. சுயநலம் புழுத்துக் கிடந்தது என் சமுதாயத்தில். அடுத்தவன் செத்தாலும் ஒதுங்கிப் போனது என் சமுதாயம். தன் காலில் சேறு படுமெனில் அடுத்தவன் முகத்திலும் சேற்றை வாறிப் பூச கங்கணம் கட்டிக் கொண்டு வறுத்தமின்றி திரிந்தனர் என் தலைமுறையினர்.

அதைக் காணும்போதெல்லாம் துடித்தேன், தவித்தேன்.., இப்படி இருக்கிறதே என் இளைஞர் சமுதாயம் என்று வேதனைப் பட்டேன். என்று திருந்துமிந்த மனிதர் கூட்டம் என்று அழுதேன். அழைவர அழைவர அதை ஒவ்வொன்றையும் மிக அருகில் சென்று பார்த்து வலிக்க வலிக்க எழுதினேன்.

ஆனால் கொடுமை பாருங்கள் எழுதுவதை படிக்கவும் இம்மக்கள் தயாரில்லை. இனமாகக் கொடுத்தால் கூட வாங்கி தூரம் எறிந்தனர். எறிந்ததையும், ஏறியாததை எறியும் முன்னரும் சென்று பொறுக்கிக் கொண்டு தெரு தெருவாய் அலைந்தேன். என் புத்தகங்களை சுமந்துக் கொண்டு போய் விற்கமுடிந்த இடத்திலெல்லாம் நானே விற்றேன்.

காலையில் ரயிலிலேறி சென்னை கோட்டை நிறுத்தத்தில் இறங்கும் வரை ஒவ்வொரு இடைநிறுத்தமாக இறங்கி ஏறி இறங்கி ஏறி யாரேனும் வாங்குவார்களா என்று தேடி தேடி அலைவேன். வாங்கிப் பார்ப்பார்கள் திரும்பிக் கொடுத்துவிடுவார்கள். சிலர் புத்தகமா படிக்கிறதில்லைங்க என்பார்கள்.

சரி படிப்பவர்கள் இப்படித் தானே, எங்கேனும் பதிப்பகங்களில் விற்க முயல்வோம் என்று எண்ணி ஒவ்வொரு பதிப்பகமாக ஏறி இறங்குவேன் ‘கவிதையா வேண்டாங்க என்பார்கள், கவிதை போட்டால் யாருங்க வாங்குறா என்பார்கள், பத்திரிகையில எல்லாம் எழுதி இருக்கீங்களா என்று கேள்வி கேட்பார்கள், நூறு புத்தகம் எழுதி என்ன பிரயோஜனம் பேப்பர்ல பேர் வந்திருக்கா? டீவில பேட்டி குடுத்திருக்கீங்களா என்பார்கள். போட்டுட்டு போங்க ஆறுமாசம் கழித்து வாங்க வித்தா பணம் தறோமென்று அலட்சியப் படுத்துவார்கள். எங்கோ ஒருசிலரின் அனுதாபம் என் முகம் கண்டு வழியும், ஏதேனும் வைப்பு வந்தால் தெரியப்படுத்துறேன் விலாசம் கொடுத்துட்டு போங்கன்னு வங்கி வைப்பாங்க.

விதியென்று எண்ணி விலாசமோ புத்தகமோ கேட்பதை எதையேனும் கொடுத்துவிட்டு, இருப்பதை கொண்டுப்போனவாறே தலையில் சுமந்துக் கொண்டு வீடு நோக்கி வருவேன். நான் எழுதியதை நான் மட்டுமே சுமக்க வேண்டுமோ என்று வருத்தம் உள்ளே விஷமாக பரவி வலிக்கும். ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருந்தது என் உலகம் எனை ஒருநாள் திரும்பிப் பார்க்குமென்று. ஒருநாள் என் படைப்புக்களை எல்லோரும் படிப்பார்கள் என்று.

என் மக்களுக்கு எட்டும்வரைதான் வேதனை எல்லாம், எட்டிவிட்டால் விட்டவரில்லை என் இனத்தாரென்று நம்பினேன். என்றாலும், இவைகளுக்கு மத்தியிலும் என்னை வளர்த்த நண்பர்களும் உண்டு. யாரோ ஒரு நண்பன் படிப்பான், படித்துவிட்டு கைவலிக்கும் வரைப்போட்டு கைகுலுக்குவான், அவன் என் மீது காட்டும் மதிப்பு என்னை என் நம்பிக்கையின் உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தும்.

அதோடு, அவர்கள் கொண்டுபோய் வேறெங்கேனும் காட்டுவார்கள், அவர்கள் படித்துவிட்டு தொலைபேசியில் அழைத்து நல்லா எழுதியிருக்கீங்களே என்பார்கள். கொஞ்சம் விழுந்த தலை நிமிரும். அக்கம் பக்கமிருந்து யாரேனும் வந்து இனாமாக கொடுத்தால் வாங்கி படித்துவிட்டு பயங்கரமா எழுதியிருக்கியே என்பார்கள். யாரையேனும் நாமாக கட்டாயப் படுத்தி படிக்கக் கொடுத்துவிட்டால் அதை படித்து முடித்ததும் அடுத்த படைப்பை தானாக வந்து வாங்கிபோய் படிப்பார்கள். ஆக, அங்கெல்லாம் என் எழுத்திற்கான அடியுரம் பதியத் துவங்கியது. என் எழுத்தின் மீதான உயர்ந்த நம்பிக்கை வந்தது.

ஆனால், என் நம்பிக்கை இன்று என்னை வென்று விட்டது, நான் அதனிடம் இச்சமுதயத்தால் தோற்றுப் போனேன் தோழர்களே!! விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா?

-—————–+++——————+++——————–
தொடரும்..

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்