கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 4)

இதற்கு முன்..

ருந்துக் கடையின் வரிசையில் ஆட்கள் குறைய கையை அன்னாந்து நீட்டி மருந்துக் கடைக்காரரை அழைத்தார் ஜானகிராமன்.

‘இங்ஙனம் நெடுநாளாய் அவளுக்கு நெஞ்சுவலி வந்துப் போகிறதென்றும், உடம்பெல்லாம் சோர்ந்துப் போகிறதென்றும், கைகால் உடம்பிலெல்லாம் அங்காங்கே அடிக்கடி கட்டிப்போல வருகிறதென்றும், கண்பார்வை கூட மங்கிப் போகிறதாமென்றும் சொல்லி மருந்து கேட்க –

“கிழங்கு சோளம் எண்ணெய் பொருட்கள் கொடுக்க வேண்டாம், உப்பு இனிப்பு புளிப்பு கொடுக்கவேண்டாம். வயதானவர் என்பதால் ரத்த அழுத்தமோ நீரிழிவு நோயோ இருக்கலாம், அதனால் இதயத்தில் கொழுப்படைக்கும் வாய்ப்புமுண்டு. அதனால்தான் நெஞ்சிவலிகூட வந்திருக்கவேண்டும். சிலநேரம் இதுபோன்ற கட்டம் உயிருக்கே ஆபத்தான ஒரு நிலையையும் ஏற்படுத்தி விடலாம். முழுதாக மருந்து வாங்குமளவு உங்களிடம் பணமுமில்லை’ எனவே தற்காலிகமாக ஓரிரு வேலைக்கு மட்டும் போதிய மாத்திரைகளை தருகிறேன் முடிந்தவரை சீக்கிரம் மருத்துவரிடம் கொண்டுபோய் காட்டி பரிசோதித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அவர் மருந்தும் மீத பணமும் கொடுத்துவிட்டு, அரிசி உணவு, கிழங்குவகை, எண்ணெயில் தாளித்த பொறித்த பலகாரங்களெல்லாம் தரவேண்டாமென்று சொல்ல, துக்கம் ஜானகிராமனுக்கு தொண்டைவரை அடைத்தது.

வாழ்நாள் முழுவதும் தன் உடனிருப்பதை மட்டுமே வாழ்வென்று எண்ணி வாழ்ந்தவள். அவள் போனால் எனக்கென்ன இங்கு வேலையென்று நினைக்கையில் மனசு உடைந்து போனது. ஏதோ இப்படியெல்லாம் இருக்குமோயென்றொரு எண்ணம் அவருக்கும் நெடுநாளாய் இருந்தது. சென்ற மாதம் கூட அரசு மருத்துவமனைக்குக் கூட்டிப் போய் வந்திருந்தார். அவர்கள் இத்தனை விவரமாக எடுத்துச் சொல்லவில்லை, நிறைய சோதனை செய்ய வேண்டும் பணம் ஏற்பாடு செய்துக்கொண்டு வாருங்கள் என்றார்கள்.

அரசு மருத்துவமனைக்கு பணமெதற்கு என்று கேட்டால் பதிலும் வராது. வைத்தியமும் நடக்காது. அதோடு அங்கே போகமுடியாமல் இருந்த நேரம்தான் இன்று இப்படியாகிப்போக இங்கு வந்திருந்தார்.

இங்கே மருந்துக் கடைக்காரர்வேறு பட்டதுமேலே படுவதுபோல் இப்படிச் சொல்லிவிட, அவரால் அதைத் தாங்கவே முடியவில்லை. மனது கசிந்துருகி கண்ணீர் வழிகிறது. அதற்குள் மருந்துக் கடைக்காரர் சற்று குனிந்து அவர் தோள் தொட்டு ‘பெரியவரே வருத்தப் படாதீங்க, மருத்துவம் பார்த்தால் எல்லாம் சரியாகும்’ மீதி சில்லறையைக் கொடுங்க ஒரு ரொட்டி பொட்டலம் தரேனென்றுக் கேட்க, கையிலிருந்த எல்லாவற்றையும் கண்ணீரோடு நனைத்துத் தருகிறார்.

அதை வங்கி கல்லாவில் போட்டுக்கொண்டு கருணையோடு கூட ஒரு ரொட்டிப் பொட்டலத்தையும் சேர்த்து அதோடு மருந்தையும் அந்த மருந்துக் கடைக்காரர் கொடுக்க, ஒன்று போதுமென்று வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு, கையிலிருந்த துண்டினால் கண்களைத் துடைத்தவாறு வாழ்வின் பாரங்களை மனத்திலும், போதாக்குறைக்கு புத்தகமாகவும் சுமந்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி வருகிறார் ஜானகிராமன்.

வரும் வழியில் எதிரே ஸ்கூட்டரில் மருமகப்பிள்ளை தன்னை கடந்துப் போவதைப் பார்க்கிறார். இவர் ஏன் இப்புறம் வரவேண்டும் மகள் வந்திருப்பாளோ என்று மனது சற்று பதட்டமடைய, அதற்கிடையில் அவரைக் கத்தி அழைத்துவிடவும் முடியாமல்’ அவர் போனவழியேப் பார்த்துநிற்க, மாப்பிள்ளை வண்டியை சற்று வேகமாக முறுக்கி தெருவின் கடைசிக்கு சென்றுவிட’ கண்ணுக்கெட்டும் தூரம்வரை பார்த்துக் கொண்டே நிற்கிறார் ஜானகிராமன். என்னானதோ ஏதானதோ எனுமொரு மகள் பற்றிய பதட்டமும் சேர்ந்து அவரைத் தொற்றிக் கொள்ள விரசாக நடந்து வீட்டை நோக்கிப் போக எத்தனிக்கிறார்.

பேரூராட்சி கடந்து, தான் வசிக்குமந்த ஒதுக்குபுறமான வீட்டை அடைவதற்குள் லேசாக இருட்டிவேறு போயிருந்தது. வியர்த்து உடம்பு சோர்வுநிலையை அடைந்தது. எனினும், வேறு வழியின்றி வேகவேகமாக நடக்கிறார். அவசர அவசரமாக நடந்து வீடு வந்து வாசலை அடைய’ உள்ளிருந்து மகள் வாணி ஓடிவந்து அப்பாயெனக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகிறாள். ஜான்கிராமனுக்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று பதட்டம் பற்றிக் கொண்டது. கைகாலெல்லாம் ஆடிப் போய்விட்டார். கீழே விழுந்துப் போவேனோ என்றொரு பயத்தில் மகளின் தோளை இறுகப் பற்றிக் கொண்டு எட்டி உள்ளேப் பார்த்தார்’ உள்ளே மனைவி படுத்துக் கொண்டு இவர் வருவதைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவரை அங்ஙனம் பார்த்தப்பிறகுதான், உயிர் மீண்டு அவருக்கே திரும்பிவந்த ஒரு ஓய்வு மனதை எட்டியது. பதற்றம் வழிந்தக் கண்களை துடைத்துக் கொண்டு தன் தாயைப் பார்ப்பதுபோல் அவளை ஏக்கமாகப் பார்த்தார். மனதிற்குள் என்னைவிட்டுப் போய்டாதடி என் ஆத்தான்னு ஒரு வலி பரவ’ மகள் அவரை ஆசுவாசப் படுத்தி உள்ளே அழைத்துவந்தாள். அவரின் உணர்வு அவளுக்குப் புரியாமலாயிருக்கும், உடல்வலியோடு அவரைப்பற்றிய மனவலியும் அவள் கண்களின் ஓரம் கண்ணீராக கரைந்து வழிந்துக் கொண்டிருந்தது.

மனைவியின் நிலைப் பற்றி மருந்துக் கடைக்காரன் சொன்னதை எண்ணி உள்ளே குமுறிக் கொண்டிருந்தாலும் மகளிடமோ மனைவியிடமோ இப்படி இருக்குமாமேயென்று சொல்லும் மனநிலையிலோ தைரியத்திலோ அவரில்லை. அதைக் கேட்கும் பக்குவத்தில் அவர்களுமில்லை. இதுவரைப் பார்க்கையில் ஏதோ உடம்புதானே சரியில்லை என்று தெரிந்த தன் மனைவி, இப்போது காண்கையில் பெரிய மரணப் படுக்கையில் இருக்கும் நோயாளியைப் போல் தெரிந்தாள் அவருக்கு.

வாசலின்மீது பாதியாய் தாழ்ந்திருந்த கூரையை பிடித்து நின்றிருந்த மகள் தன்னை வாசலில் கண்டதும் ஓடிவந்து கட்டிக்கொண்டு அழுததும் மனைவிக்குத் தான் ஏதோ கெட்டது நடந்துவிட்டதோயென்று பதறிப் போனார் ஜானகிராமன்.

மெல்ல தலைநகரத்தி மீண்டும் உள்ளே எட்டிப் பார்த்தார். மனைவியின் திறந்த விழிகள் அவரை வலியோடு வரவேற்க’ சற்று கண்களைத் துடைத்துக்கொண்டு நிதானித்துப் பார்க்க உள்ளிருந்து தெரிந்த இருட்டிற்கு மத்தியில் அவரின் அசைவும் தெரியவர, ஒரு பெருமூச்சினை இழுத்துவிட்டுக் கொண்டார். என்றாலும், மனதளவில் முழுதாய் உடைந்தே இருந்ததால் மகள் அழுததைக் கண்டு மேலும் மடயுடைந்துப் போக வாய்ப் பொத்தியழுதார் ஜானகிராமன். மனைவி தனது வலியையும் மீறி தன் கணவர் அழுவதை காண சகியாமல், காலில் கைவைத்து தாங்கி எழுந்து நிற்க முயற்சிக்க, ஓடிப் போய் தாங்கிப் பிடித்து வேண்டாம் படுத்துக் கொள்ளம்மா எனச் சொல்லி அவரைப் படுக்கவைத்துவிட்டு தானும், அவருக்கருகில் அமர்ந்துக் கொண்டார்.

என்னதான் மனசு கலங்கிப் போயிருந்தாலும் வீட்டிற்கு வந்த மகளை என்ன ஏதென்றுக் கூட கேட்கவில்லையே என்று திடீரென ஒரு எண்ணம் வர, “எப்போமா வந்த” என்றார்.

“இப்போதாம்பா, கொஞ்சம் நேரம் முன்பு, நான் வந்து அமர்ந்தேன் நீங்களும் வந்தீர்கள்”

“அம்மாவைப் பார்த்தியா, இப்படியாயிட்டாளே, எப்படி இருக்காப் பாரேன்” அழை மீண்டும் தொண்டையை உடைத்துக் கொண்டு வந்தது. கண்கள் சிவக்க கைத்துண்டு வைத்து பொத்திக் கொள்ள..

“பார்தேன்பா. ஏன்பா நானிருக்கிறேன் தானே? இன்னும் நான் சாகவில்லைதானே? நான் உயிரோடு இன்னும் உங்கள் மகளாக இருக்கிறேன் தானே? எனக்கு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதாப்பா, நான் வந்தாவது இரண்டு நாள் தங்கி அம்மாவைப் பார்த்துக் கொள்ளமாட்டேனா? வேண்டவேவேண்டாமென்று ஒதுக்க எண்ணுகிறீர்களா? இது என் கடமை இல்லையாப்பா, அம்மாவையும் உங்களையும் இந்த கோளத்துல….” அவளால் அதற்குமேல் பேச இயலவில்லை, வார்த்தை உடைந்துபோனது. ஜானகிராமன் அவளை தன் தோள்மீது சாய்த்துக் கொண்டு –

“உன்னை எப்படி மா நான், நாங்களே டீயும் பண்ணும் தின்று, கிழங்கும் சோளமும் தின்று பொழுதை ஓட்டுறோம்” என்று நிறுத்திவிட்டு அவளைப் பார்க்க – அவளுக்கு அவரைப் புரிந்துப் போனது.

வாணிக்கு அப்பாவின் நிஜமுகம் தெரியும். தன் ஏழ்மையை, இயலாமையை மகள்மேல் திணிக்க அப்பா விரும்பமாட்டாரென்றுத் தெரியும். அதோடு, கிடைக்கும் ஒன்றோ இரண்டோ ரூபாயில் காலத்தை கழிக்கும் இவர்களால் தன்னை தொடர்புக்கொள்ள எந்த வழியிலும் முடியாதென்பதும் அவளுக்குப் புரியவந்தது. அதற்குள் மனைவி ஜானகி முன்வந்து அதலாம் தனக்கொன்றும் இல்லை நான் நன்றாகத் தான் இருக்கிறேன் யாரும் என்னை எண்ணி வருத்தப் படாதீர்கள், பாருங்கள் எனக்கு எல்லாம் சரியாகிப் போனது. அப்பாதான் மருந்து வாங்கிவந்துவிட்டாரே வாணி, பிறகு ஏன் கலங்குகிறாய்’ என்று பேசி தன் நோயும் அதன் விளைவுகளும் தெரியாமல் அவர்களைத் தேற்ற முயன்றாள்.

விளைவுகள் அத்தனையும் அறிந்த ஜானகியின் ராமனுக்கே அவளின் இந்த பேச்சும் கூட வலித்தது.

எரியும் விண்முட்டும் நெருப்பென்றாலும் ஒரு கட்டத்தில் அணைந்துதானே தீரவேண்டும்? வற்றாக் கண்ணீரின் வருத்தமென்றாலும் என்றேனும் உயிர் சுட்டாகவேனும் நிற்குமில்லையா? கொட்டும் அடைமழையென்றாலும் ஓய்ந்து மண் காயாமலாப் போகும்..? அப்படி தற்போதைக்கு ஓய்ந்துப் போனது அவர்களின் கண்ணீரும்.

சற்று நேரதிற்கு மாறிமாறி அழுது, பின் வேறு விஷயங்கள் பேசி, சுற்றத்தார் நலம் விசாரித்து, தண்ணீர் குடித்து, உணவு ஆக்கிப் பரிமாறி பேசிக் கொண்டே காலத்தை நகர்த்தினார்கள். காற்று அவர்களைப்பற்றிய கவலையினைச் சுமந்துக் கொண்டு வெகுசோகமாக வீசிக் கொண்டிருந்தது….

—————–+++——————+++——————–
தொடரும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுகதை and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 4)

  1. வித்யாசாகர் சொல்கிறார்:

    பிரேமலதா எழிலரசு எழுதியது:-
    மன அழுத்தங்களையும், வேதனைகளையும் பகிர்ந்த எழுத்துக்கள். வாசகர்கள் மனசை தொட்டுவிட்டால் அதுதானே பெரிய விருது? மற்றதெல்லாம் காகிதக் குப்பைகளே அன்பு வித்யா..
    ————————————————————————————
    மகிழ்ந்தேன். ஆரம்பகட்ட படைப்பாளிகள் பத்திரிகைகளையும் பதிப்பகங்களையும் நெருங்கியப் பின்தானே வாசகரை அடையமுடிகிறது.., அந்த வாசகரைத் தொடுவதற்கான சாவியாகவேனும் விருதுகளும் தேவைப்படுகிறது. படைப்புக்கள் உலகப் பார்வையை எட்டிவிட நமக்குமுன் நம் அடையாளம் முந்திக் கொள்வதை உணர்வுப்பூர்வமாக சந்திக்கையில் விருதிற்கான ஒரு ஏக்கம் உள்ளே முளைத்துவிடுகிறது என்பதை பத்துவருடத்திற்கு படைப்புக்களை அனுப்பி அதிலிருந்து ஒரேயொரு நான்குவரிக் கவிதை வெளியான போது உணர்ந்துக் கொண்டேன். மீதிய நிராகரிக்கப்பட்ட படைப்புக்களே இன்றைய எனக்கான ஒரு வாசக வட்டத்தைக் கொடுத்துள்ளது என்று எண்ணும்போது’ அந்த விடுபட்டுப்போன இதயங்கலெல்லாம்’ கிடைக்காத விருதுகளாய் உள்ளேக் கனக்கத் தானேச் செய்கின்றன..

    Like

  2. Umah thevi சொல்கிறார்:

    மனம் கனக்கிறது படிக்கும் பொழுது. ஒரு எழுத்தாளரின் வேதனை உணரப்படுகிறது.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      எனக்கென்று என்ன குறை உமா. இறை அருளால் ஒரே நாளில் ஐந்து விருதுகள் கிடைத்தன. ஆனால், இப்படி வெளியில் தெரியாமல் எத்தனை எத்தனை படைப்பாளிகள் தனது வானளவு பறக்கத் தக்க சிறகுகளை தனக்குள்ளேயே முடக்கிவைத்திருக்கின்றனர். அவர்களுக்கான அங்கிகாரம் கனவு எல்லாம் யாரிடத்தில் களவு போனதோ பரமனே அறிவான்…

      Like

  3. பிங்குபாக்: கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 5) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்

  4. nathnaveln சொல்கிறார்:

    மனசு கலங்குகிறது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s