4)
கோபம் ஒருவகை விஷம். கோபத்தின் ஒவ்வொரு துளியும் விஷம். உயிர்கொல்லும் நஞ்சு. ஒரு பரம்பரையின் காடழிக்கும் கத்தியைப் போலது. அது ஒரு தீயும். மனதெரிக்கும் தீ. எடுத்து வீசினால் வார்த்தைகளையும் சேர்த்து வாரிக்கொண்டு ஒரு குடும்பத்தையே கொளுத்திவிடும் தீ. ஆனால் தீ ஒரு ஆயுதம். தீயினால் வீடு வெளிச்சம் பெரும். விளக்கினுள் ஜோதியாகும் தீ. அதுபோல் கத்தியும் ஒரு ஆயுதம். கத்தியை வைத்து நஞ்சையறுக்கலாம். கொடிய மரத்தை வெட்டலாம். மரத்தை செதுக்கி சிலை வடிக்கலாம். கோபமும் ஆயுதமே. கோபத்தைப் பயன்படுத்தி நியாயத்தை மீட்டுங்கள். தர்மத்தை நிலைநிறுத்தவேண்டி கோபம் கொள்ளுங்கள். கோபத்தினால் மனிதரைக் கொல்லாதீர்கள். உறவை கோபத்தினூடாக வெறுக்காதீர்கள். மனிதர் அற்று போனால் வாழ்க்கை சாபமாகும். உடன் யாருமிருக்க விரும்பாத் தனிமை கொடியது. கோபத்தினும் பெரிய நஞ்சு அது..
5)
கடன், பிரிவு, ஏக்கம், இயலாமை, தோல்வி, துக்கமென என்னதான் ஆயிரம் பிரச்சனைக்கான கரங்கள் வந்து நம் முகத்தில் குத்தினாலும், அவைகளையெல்லாம் தாங்கிக்கொண்டு சிரிக்குமொரு மனசையும் நாம் வைத்துக் கொண்டிராமலில்லை.
அப்படி வைத்துள்ளீர்கள் எனில், மனிதரைக் கண்டதும் மனிதர் அன்பொழுக சிரித்துப் பாருங்கள். சிரிப்பு; அதிலும் அன்பொழுகும் சிரிப்பு நமக்குத் தெரியாமலேயே நமக்கு நிறைய தரும். குறைந்தபட்சம் வரும் துன்பங்களைக் கண்டு உடைந்துப் போகாதிருக்கவேனும் துணிவு தரும்..
சிரிக்கப் பழகுங்கள் உறவுகளே; நிறைவோடு சிரிக்க எனது வாழ்த்துக்களும்..
வித்யாசாகர்