12. தங்களின் அகவயம் குடும்பப் பாசத்தையும் அன்பையும் சார்ந்து இயங்குவதாகக் கவிதைகளின் வழியே அறிய முடிகிறது. அயல்நாட்டில் வேலை செய்வதின் பாதிப்பு என்று எடுத்துக்கொள்ளலாமா?
முள்மேல் படுத்திருப்பவனுக்கு உடல்வலி இல்லாமலா இருக்கும்? பிரிவின் கொடுமையை அணுவணுவாய் தாயிலிருந்து அனுபவித்து, தந்தை தமக்கை தங்கையென்று தொடர்ந்து, அண்ணன் தம்பி நண்பர்களிடமும் முடியாமல், மனைவி குழந்தைகள் சுற்றமென ஊரின் உறவுகளின் மொத்த அன்பையும் அரவணைப்பையும் சந்தோசங்களையும் வாழ்வின் நன்மைதீமைகளையும் கடிதங்களின் வழியேவும்’ மின்னஞ்சல்களின் ஊடாகவும்’ தொலைபேசியழைப்பின் மூலமும்’ திரைப்படங்களைக்கொண்டும் பார்த்து ஏங்கி தவித்து தலையணை நனைந்த ஈரத்தில் வாழ்க்கையை அனுபவித்துக்கொள்ளும் பலரில் நானும் ஒருவனாக வாழ்ந்து வருகையில் அதன் ஏக்க முட்கள் இதயத்தைத் தைக்காமல் இருக்காது; அது வேறு..
வெறும் அது மட்டுமே காரணமென்றும் சொல்வதற்கில்லை. காரணம் எனது எழுத்துகள் வெறும் மனதின் நிறைவேறா ஆசைக்கு பதிலாகப் பொங்கும் ஈர உணர்வுகக்ளைக் கொட்டித் தீர்க்கும் வடிகால்தனைத் தேடி வந்தவையல்ல, பிறரின் நல்வாழ்விற்கு வழிகாட்ட தவம் கிடப்பவை.
அங்ஙனம் ஒருவருக்கு நல்ல வழிகாட்ட முற்படுவதெனில்; முதலில் அவருக்கு உயிர்களிடத்தில் பொதுவான அன்பு செய்தலைப் போதித்து விடுதல் என்பது ஞானத்தைக் கொடுக்க ஒரு துளியிலிருந்து ஆரம்பித்துவிட்டதற்குச் சமமாக; உணர்வுகளை சமன்செய்து எண்ணங்களை நல்வழியில் தூண்டி வெற்றியின் வழியில் பயணிக்க ஒவ்வொரு மனிதரையும் பண்படுத்துகிறது அன்பென்னும் பெருமந்திரம்..
அதோடு நில்லாமல், பரிசுத்தமான அன்பு என்பது தன்னலம் மறந்து பிறர்னலத்தின்கண் சிந்திக்கவள்ளது. இன்றைய அரும்பெருங் கொடுமைகள் நிகழ்வதற்கான அத்தனைக் காரணமுமே சுயநலத்துள் புழுத்துக் கிடந்து வந்தவைகள் தான். தனக்கே கிடைக்கவேண்டும், தான் வாழவேண்டும், தனக்கானதை மட்டுமே பாதுகாக்க வேண்டும், தனக்கென்றே போராட வேண்டும், தன்னாசை பெரிது, தன்னால் மட்டுமே எதுவும் முடியும், தனக்கே உரியது அது, தன் வயிற்றைத் தான் முதலில் நிரப்பவேண்டும், தன் ஜாதி பெரிதாக நிற்றல் வேண்டும், தன் குடும்பம் தனது ஊர் தனது நாடு என அத்தனையிலும் தனது எனும் நான் என் தான் முதலில் இருக்கிறது. அதை அகற்றவேண்டும் எனில் பிறரைப் பற்றியும் நினைக்கவேண்டும் எனில் பிறர் மீதும் பிற உயிர்களின் மீதும் அன்பு செய்தல்வேண்டும். அன்பினால் இவ்வுலகமே வெல்லக் கிடைக்கும் என்பது எனது இதயம் பதிந்த நம்பிக்கை. பதிந்தப் பெருமை எனது தாயன்பையும் தந்தையின் நன்னடத்தையையுமேச் சேரும்..,
————————————————————————
வித்யாசாகர்