வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 18

சமூக ஓட்டைகளை சிந்தனையால் மூடுவோம்..

லகில் உயிர்கள் தோன்றி கோடானக் கோடி வருட அளவைக் கடந்து அமர்ந்துகொண்டும், வெறும் தற்போது நமக்கு அறியக் கிடைத்துள்ள இந்த ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளை மட்டுமே அதிகமாக கையிலெடுத்துக்கொண்டு, இன்றைய வாழ்க்கையை அளவிட்டுக்கொண்டு, நாளைய வாழ்விற்கான தீர்மானங்களை தேடிக்கொண்டு, முடிச்சவிழ்க்காமலே பல சிக்கல்களின் பிடியில் கை வேறாகவும் கால் வேறாகவும் கோர்க்கப்பட்டுள்ள நாமின்று நமது மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளியே விடக்கூட இன்னொருவரின் பாடம் அவசியப்படும் நிலைக்குத் தள்ளிவிடப்பட்டு, அசையும் கொடியாகவும்’ மணக்கும் மலராகவும்’ இனிக்கும் பழமாகவும்’ இருந்த நம்மை; வெறுக்கும் பொருளாக மாற்றிக் கொண்டும், நமைப் பெற்றத் தாயாக எதிர்நிற்கும் இயற்கையை, நமக்கான நீர் நிலம் காற்று வானம் நெருப்பெனும் இயற்கையை வதைத்து வதைத்து மனித இனமே இன்று அழிவின் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறதே இது வருத்தப்படத்தக்கதொரு தருணமில்லையா..?

நம்பிக்கையை வலுக்கச் செய்து, அறிவியலை செயபாட்டுமுறை வழியே புகுத்தி, பிறரை நல்லதொரு பாதைக்கு மாற்றி, உனை நீ வணங்கு என்று இரு கை குவித்துக் காட்டிய மூதாதையருக்கு’ நாமே சென்று மாலை போட்டு மஞ்சள் படைத்து தனது நன்றியை’ மெச்சுதலை’ மனது நிறைந்த மதிப்பை கூட்டி கூட்டி கூட்டி கூட்டிக்கொண்டே வந்து’ எல்லோரையுமே இன்று ஏட்டிக்குப் போட்டியான கடவுள்களாக்கிவிட்டு, எனக்கென்ன என நாம் வாழும் வாழ்க்கை எத்தனை சரியானது..?

இன்று பார்த்தால் எத்தனை சாமி, எவ்வளவு கோவில்கள், என்னென்னப் பூஜை; எல்லாம் ஏதோ பக்தி கடந்து சுயநலத்தில் பெருகிப்போனதாகவே பார்க்கக் கிடைக்கிறதேயொழிய பக்தியால் மட்டுமே கோவிலுக்கு வருவதாக எல்லோரையும் பார்க்கையில் தெரியவில்லை. அதில்வேறு, கோவில்தோறும் பிச்சைக்காரர்களும் சூழ்ந்திருப்பதைக்கூட நம்மால் தடுத்திட இயலவில்லை. அவர்களின் பசியை தாண்டியும் எப்படி தெய்வம் உள்ளேமட்டுமே இருக்கிறதென்று அங்கே பாலை ஊற்றி வருகிறோம்..?

அதற்காக தெய்வமோ கோவிலோ அல்ல இங்கே குற்றம், தெய்வநம்பிக்கைக்கு பாலூற்றிவிட்டு வாழும் மனிதருக்கு வாழ்க்கயை கொடுக்காமல் இருப்பது நாம் சூழ்ந்து வாழும் நமது சமூகமெனும் கட்டமைப்பின் மீதான குற்றமன்றி வேறென்ன..?

எல்லாவற்றையும் விடக் கொடுமை, கடவுளை வழிபட கோவிலோடு’ வீட்டு அல்லது உள்ளத்தோடு நின்றோமா என்றால் அதுவும் இல்லையே. சுயநலம் பெருகப்பெருக கடவுள் எனதாகவும் உனதாகவும், கோவில்கள் என்னுடையதென்றும் உன்னுடையதென்றும், பிறகு என் எனும் அக்கறை தானெனும் செருக்காக மாற மாற கடவுள் கைமாறி’ பெரியப் பெரிய  கதைகளும் வரலாறுமாய் நமக்குள் வலிக்க வலிக்கத் தானே எல்லோரும் உயிரோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

ஓரிடத்தில் தவறு இருக்கிறது எனில் அதை சரிசெய்தல் கடமையில்லையா..? ஆமெனில் நமைச் சுற்றி நடக்கும் எண்ணற்றத் தவறுகளுக்கு நாமும் பொறுப்பில்லையா? அவன் கடவுள்’ இவன் கடவுள்’ நான் பெரியவன்’ நீ சிறியவன்’ உன் சாமி என் சாமி’ இது பெரிது அது பெரிதென்று இதுவரை பிரிந்துப்போனதென எல்லாமே உணர்தலை முறையாக உணராததாலும், அறிதலை சரியாக அறியாததாலும், புரிதலை தெளிந்துப் புரிந்துகொள்ளாததும், கேள்வியை பிறரின் கருத்தென்று மதிக்காமல் மண்ணில் புதைத்துப்போட்டதுமாய் ஆன காலக்குற்றங்கள் நாம் வந்தப் பாதையெங்கும் நீண்டுக்கொண்டே போனதால்தானல்லவா.. ?

இதற்கொரு முற்றுப்புள்ளியை வைப்பது எவ்வாறு? இதலாம் எவ்வாறு சரியாகும்?

சிந்தியுங்கள். எல்லோரும் சிந்தியுங்கள். நாம் வாழும் இடம் நமக்கானது. நமக்கான அத்தனைப் பேருக்குமானது. இடையே கிழிக்கப்பட்டக் கோடுகளெல்லாம் இனி இல்லாமல் போகட்டும். பிரிவு எனுமொன்றில் மேல்கீழ் நிகழுமெனில் அதை அவ்விடமே கைவிடும் மனிதம் ஓங்கிய நிலையை அடைவோம். மனதின் விரிசல்களை ஒற்றுமையாலும் அன்பாலும் நிரப்பி எதிர்காலத்தில் ஏற்றத்தாழ்வென்பதையே இல்லாமல்செய்யுமொரு நல்மனித சமுதாயத்தை அமைப்போம்.

ஒரு நாய்க்கு சோறு வைத்தால் கூட அது பாதியை தின்றுவிட்டு வயிறு நிரம்பியதும் மீதியை விட்டுத்தான் செல்கிறது. அடுத்த வேலைக்கென எடுத்து வைத்துக்கொள்ளவில்லை. அதற்காக நாம் அப்படி இருக்கமுடியாதுதான். நமது வாழ்க்கை; குடும்பம் உறவு என பிறர்பால் சார்ந்த  சங்கிலிமுறை வாழ்க்கை என்பதால், தனது சுற்றத்திற்கான சுயநலம் சோற்றில்கூட பெருகவே செய்கிறது. எனினும் அதிலிருந்து கொஞ்சத்தை, ஒரு பிடியை ஒதுக்கி இல்லார்க்குக் கொடுக்க முயற்சிப்போம். முதலில் மனதை பிறருக்கென திறப்போம். எல்லாம் நம் சொந்தம், நமைச் சுற்றியுள்ள மனிதர்கள் தானே? நமக்கிருக்கும் பசி, அவர்களுக்கும் இருக்காதா? நமக்குப் போகும் மானம் அவர்களுக்கும் போகாதா?

போகும். ஒரு ஆணிற்குப் போகாவிட்டாலும், பெண்ணிற்குப் போகும் சுற்றத்தைதான் இதுவரை நாம் கட்டமைத்து வைத்துள்ளோம். அது மாறும் வரைக்கும் வலிதான். அதிலும் வறுமையில் தெரியும் உடம்பு பெரிய வலியை தரவல்லது. அதை அன்பாலும் பெரிய மனது கொண்டும் மூடஎண்ணினால், நமது கோவிலும் தெய்வமும் இருக்கும் கோபுரத்திற்கு வெளியே நாலு பிச்சைக் காரர்கள் பட்டினியோடு இருப்பதை எதிர்காலங்களிலேனும் தடுக்க இயலும்.

நாம் நினைத்தால் எது நடக்காது ? நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் நாம்தான் தீர்மாணிக்கிறோம். நமக்கான வீடு, உடை இன்னப்பிற போலவே, நமக்கான அத்தனையும்கூட நம்மால் தான் நடக்கிறது. எனவே எனக்கருகில் இருப்பவரிடம் மாற்றத்தை எதிர்ப்பார்க்கும் மனதை நாமெல்லோருமே விட்டுவிட்டு’ எனக்குள்ளான மாற்றம் என்ன, என்னாலான நல்லவை நடக்க நானென்னச் செய்யவேண்டும் என்பதையே முதலில் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க முனைந்தால், எளியோர் நல்வாழ்வு குறித்தும், இல்லார் பசி பற்றியும், இருப்போர் எடுத்துக்கொடுக்கும் குணம் பற்றியும் ஆலோசித்தால், நம் மகாத்மா அன்று நடுங்கும் குளிரில், அந்த முதுமை வயதில் அவிழ்த்துப்போட்டு நடந்த சட்டைக்கான நீதி இந்த நாம்வாழும் காலத்திலேனும் கிடைத்துவிட சாத்தியமேற்படலாம்..

வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

22, தெய்வம் தெரிய மனிதம் தொழு..

புண் போல மனசு முள்போல எண்ணம்
எல்லோருக்குமே குத்தும் வாழ்க்கை,
இங்கே யார்மேல் வருந்தி
யாருக்கென்னப் பயன்.. ?

ஒரு சொட்டு உண்மை
சிறுதுளி கருணை
உருகாத மனசுருக; உள்ளேப்
பேரன்பு ஊறாதோ…?

கோபத்தை முட்களுள் தொலைக்கும்
நினைக்க மனசு துடிக்கும்
மன்னிப்பில் எல்லாம் மறக்கும்
மனசெங்கும் வாராதோ… ?

அன்பிற்கே அணங்கும் உடம்பு
அடுத்தவற்கழவே கண்ணீர்
கொடுக்க உயிர்
கொஞ்சும் தீண்டலில் கொடுவாள் உடையாதோ…?

கைத்தடிபோல் பெரியோர்
ஊனியெழ பாடம்
விளங்கிக்கொள்ள வலி
வாழ்க்கை’ திருத்தத்தைத் தாராதோ…?

திட்டம் விடு இயல்பு உணர்
திருப்பி அடித்தாலும்
திருத்த யோசி
திருந்தா உள்ளமும் வலிக்காதோ…?

நல்லது செய்
கெட்டதைத் தவிர்
கல்லுக்கும் புல்லுக்கும்கூட
மனதைத் திற; சமயம் சொல்படி கேளாதோ…?

மொத்தத்தில் – சுயநலம் விடு
மனிதம் கொள்
மனமாசு அறு
மறுபக்கமிருக்கும் தெய்வம்; தோல்வியை மற!!
————————————————————
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 17

படித்தலும் படைத்தலும் எவருக்கும் பொது.. 

பொருளாதாரத்தில் வீழ்ந்தபோது இருந்ததைக் காட்டிலும் அது வளர்ந்தப்பொழுதில் எழுகிற போராட்டங்களே மனிதத்தைக் கொன்று மாடிவீடுகளைக் காப்பற்ற மட்டும் முந்திக்கொண்டு முன்நிற்கிறது. படிப்பு அறிவை வளர்க்க, அறியத்தர என்பதையும்தாண்டி பணத்தைக் குவிக்க பாதையை திசைதிருப்ப என்பதற்கான மூலதனமாகிப்போனது நமது வேகத்தின் விளைவோ என்னவோ, ஆனாலிது வளர்ச்சியின் குறையன்றி வேறில்லை.

மேல்படிப்பு படித்தவன் மேல், கீழ்வகுப்பில் கல்வி கற்றோர் சிறியவர் எனும் மனப்போக்கு எப்படி பணம் கொடுத்துவாங்கியச் சீட்டின் கணத்திலிருந்து வந்து தலையில் அமர்ந்துக்கொண்டதோ? தெரியவில்லை.

எங்கோ குணம் கெட்டுப்போய் எந்திரமாய் படிப்பதும் வளர்வதும் குடிப்பதும் குட்டிசுவராகிப்போய் வெறும் உயிர்த்திருக்கப் போராடுவதை மட்டுமே வெற்றி என்றுக் கொண்டாடிக்கொள்ளும் வேதனைக்குரிய மனநிலைக்கு ஆளாவதும், அதன்பின் வசூலிக்கும் பணக்கட்டுகளின் மீதேறி சுத்த சான்றிதழ் சுமக்கும் பிணங்களாக நின்றுகொண்டு நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவநென்று கர்ஜித்துக்கொள்வதும், கழனி உழுது களை எடுத்தவரை’ கல்லடுக்கி வீடு கட்டித் தந்தோரை’ நெஞ்சு நனைய நாற்றத்துள் இறங்கி நம் அறியாமையின் அடைப்பெடுத்து கூலி கேட்டு நிற்போரை’ சொல் கோர்த்து இசை கூட்டித் தந்தோரை‘ நமக்காய் உழைததோரையெல்லாம் பார்த்து அவர்களைக் கீழானவரென்று எண்ணுவதை எப்படித்தான் படிப்பினால் வந்த நற்பண்பென்றுக் கொள்வதோ?

திறமையை வளர்த்துக்கொண்டு திசை நோக்கியப் பக்கமெல்லாம் உறவைப் பெருக்கி உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனும் ஏற்றத்தாழ்வு மனப்போக்கு அற்று நாலுபேர் சிரிக்கும் வாழ்விற்கு நடுத்தரமாய் இசைந்துநிற்பதில் உள்ள நிம்மதியை’ நான் படித்தவன் என்பதால் நான் இழந்துவிடுவேனெனில்’ அது நான் இறந்துவிடுகிறேன் என்பதற்குச் சமமில்லையா?

ஒரு படிப்பென்பது தனது ஒழுக்கத்திலிருந்து துவங்குமெனில் நிச்சயம் அது பிறரின் கண்ணீரை துடைப்பதாகவே இருக்குமேயொழிய தனக்கு சீட்டு வாங்க தன் அப்பாவிடம் நாற்ப்பது லட்ச்சத்தையோ ஐம்பது லட்ச்சத்தையோ லஞ்சமாகக் கொடுக்க கையேந்தி நிற்கத் துணியாது.

பொருளியல் படிப்பதும், மருத்துவம் பார்ப்பதும், மேலாளர் ஆவதும் உடனிருப்போருக்கு ஒரு கை சோறு கொடுத்து பிறரின் பட்டினியைப் போக்குவதுமாகவே இருக்குமேயானால் சேற்றில் ஊனியக் கைகளும், சிம்மாடு சுமந்த தலையும் என்றோ ஏற்றத்தாழ்வுகளையும் அழுக்கோடு கழுவிப் போட்டுவிட்டிருக்கும்.. கிழிந்த கால்சட்டையும் ரவிக்கையும் இல்லாததொரு நடுத்தர வளர்ச்சியை என்றோ நமது மண் எல்லோருக்கும் பொதுவாய்க் கண்டிருக்கும்..

இப்போதும் ஒன்றும் குறையில்லை. பொது அக்கறையும் பிறர் குறித்த சிந்தனையும் தனது சுற்றத்திற்கு உதவும் மனப்பான்மையும் தற்போது இளைஞர்களிடத்தில் இயல்பாய் பெருகிவருவதை நம்மால் உணரவும் முடிகிறது. அத்தகைய மனநிலையை எல்லோருக்கும் பொதுவாய் எல்லோருமாய் நாம் பெருக்கிக்கொள்ளல் வேண்டும். அருகில் இருப்பவருக்கு பசிக்கும் எனில் தனக்கு துடிக்குமொரு துடிப்பே மனிதத்தைக் கொண்டது.

அத்தகைய மனிதத்தை உணர்வெங்கும் தேக்கிவைத்துக் கொண்டால், என்னதான் படித்தாலும் பெரிய ஆளானாலும் பிறர் பற்றிய அக்கறையும் அடுத்தவர் நலனுக்காக உதவும் மனப்போக்கும் தானாகவே வரும். அங்ஙனம் பிறர் பற்றிய அக்கறையைக் கொண்டுவிட்டால் எவர் பற்றியும் குறைசொல்லவோ குற்றமாக நினைக்கவோ தோணாது. பிறரை குறையாகப் பார்க்கும்போதும், குற்றப்படுத்தி எண்ணும்போதுமே அங்கே அன்னியம் பிறந்துவிடுகிறது.

எனவே யாரின் குற்றத்தையும் மன்னித்து, குறையை இயல்பென்று ஏற்று, அது தன்னால் மாறத்தக்கது என்பதைப் புரிந்து, எல்லோரின் நலனுக்கென்றும் வாழும் வாழ்க்கையை எல்லோரும் உசிதப்படுத்திக் கொண்டால், பிறரிடம் அன்னியம் பார்ப்பதற்கு மாறாக எல்லோருக்கும் உதவ நினைக்கும் மனசு படிப்பிலும் தொழிலிலும் கூட முன்வந்துவிடும்.

இருப்போர் இல்லாருக்கு உதவ, இல்லார் இருப்போரின் நன்றியை வேறு எளியோருக்குக் காட்ட, ஒருவருக்கு ஒருவரென உதவப்போய் கடைசியிலொரு சமதர்ம தேசம் எல்லோருக்கும் பொதுவாய் பிறந்துவிடும். அங்கே படிப்பும் பொருளும் வாழ்வும் லஞ்சம் கேட்டு நிற்காது. இருப்பதை கொடுப்பது இயல்பென்று புரியவந்த தேசத்தில் பசி இருக்கும் பட்டினி இருக்காது. தோழமையும் அன்பும் இருக்கும் பகையும் புரட்டுமிருக்காது.

நல்லதொரு தேசத்திற்கான விதையையும், நல்லதொரு வீட்டிற்கான விளக்கையும் நாமே வைத்திருக்கிறோம். நாம் சரியாக வாழ வாழ நம் வீடும், வீடுகளால் நாடுமென எல்லோரும் நலமாகவே வாழலாம். எல்லோரின் நலத்திலிருந்தும் வரும் முன்னேற்றம் மெல்லப் பெருகி நன்னிலம் சமைத்து, நன்னிலம் விரிந்தெங்கும் நன்மை பரப்ப, பின் அதன் இயல்பாகவே எங்கும் அமைதியும் ஆனந்தமும் பெருகி எல்லையில்லா புவியெங்கும் சுபீட்சம் நிறையும்.

வித்யாசாகர்

இந்தப்புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கி பேபால் மூலம் பணம் செலுத்தினால், உடனடியாக பி.டி.எப் காப்பியோ அல்லது அஞ்சல் வழியாகவோ படைப்புக்களை பெறலாம்.

பிடிஎப் வாங்க – ரூ – 50

அச்சுப்பிரதி அஞ்சல் வழியே வாங்க – 100 மற்றும் அஞ்சல் செலவு ஒன்றிலிருந்து இரண்டு புத்தகத்திற்கு வரை ரூ 15 paypal மூலம் செலுத்தி பெற்றுக் கொள்ளவும்..

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

21, பிள்ளை மனம் பித்து..

1
ன் சட்டையும் என் சட்டையும்
ஒரு கொடியில்தான்
போடப்பட்டிருக்கிறது;

அம்மாவும்
அப்பாவும் தான்
உனக்கும் எனக்கும்
வேறு வேறாக இருக்கிறார்கள்..
————————————————————–

2
னக்கொரு தட்டில் சோறும்
எனக்கொரு தட்டில் சோறும்
இடுகிறார்கள்;

உனக்கிரு முட்டையும்
எனக்கொன்றுமாய்
வைக்கிறார்கள்;

இனிப்போ பழங்களோ
தருகையில் –
உனக்கு மூன்று நான்கு என்றால்தான்
எனக்கு இரண்டோ மூன்றோ
கிடைக்கும்;

நல்லவேளை –
கால்சட்டையையும்
சட்டையையும் உனக்கு
ஒன்றைத்தான் அவர்களால்
போடமுடிந்தது,

இல்லையேல்
எனக்கு ஒரு கால்சட்டையும்
சட்டையுமில்லாமலே என்
காலம் போயிருக்கும்..
————————————————————–

3
ள்ளிப்படிப்பில்
முந்திப் படித்தாலும்
நான் உள்ளூர்தாண்டிப் போனதில்லை;

கேட்டால்
அவன்தான் அவ்வளவுதூரம்
போய் மேல்படிப்புப் படிக்கிறானே
நீயாவது இங்கேயே இரேன்
என்பார்கள்;

எனக்கு அத்தனைப் பெரிய
வருத்தமெல்லாம் எழாது,
என் நண்பர்கள்தான்
கிண்டலடிப்பார்கள்,

அவன் பாரு அப்படியொரு
கல்லூரியில் சேர்ந்து முதுநிலை வகுப்பில்
பொறியியல் படிக்கிறான், இவன் என்னமோ
குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுறான்
என்பார்கள்.

நானென்ன செய்வது
தம்பியின் தப்பென்றால்
அவனைத் திட்டிவிடலாம்,
இது பெற்றோர் வைத்த
ஒரு கண் வெண்ணையும்
மறு கண் சுண்ணாம்புமில்லையா..?

அமிலம் வீசுவது அம்மா அப்பா ஆச்சே
அதனால் தான் வழித்துமட்டுமேப் போடுகிறேன்
உடல்சதை
இதயத்திலிருந்தும் அறுகிறது..
————————————————————–
வித்யாசாகர்

Posted in கவிதைகள், பறந்துப்போ வெள்ளைப்புறா.. | 1 பின்னூட்டம்

எண்ணமெனும் ஆலமரம்..

நீருள் புகும்
ஒளியைப் போல
மனதுள் புகும் எண்ணங்களே.. எண்ணங்களே..

உலர்ந்த
நீரின்மையிலும்
இருந்துவிடும் வண்ணங்களாய் – மனதுள்
ஆழத்தங்கி விடும் –
எண்ணற்ற எண்ணங்களே.. எண்ணங்களே..

மேலழுக்கைத் துடைப்பதற்குள்
உள்கோடி வேர்விட்டு
வாழுங்காலத்து பசுமையை யுதிர்க்கும்
இயல்பொழியா எண்ணங்களே.. எண்ணங்களே..

இருக்கும் வாழ்க்கையது
ஒன்றே ஒன்று – அதில்
ஆசை கோபம் வெறுப்பைச் சேர்த்து
பாதியை மாய்க்கும் எண்ணங்களே.. எண்ணங்களே..

சுட்டப்புண்ணின் தடம்போல
விட்ட உடலின் மிச்சத்தையும்
இரத்தம் ஊறும் முன்னேமுந்தி
சீவனோடு சேரும் எண்ணங்களே.. எண்ணங்களே..

நான் சிவமாய் ஆகும்
காலமெப்போ..?

மனம் அமைதியில்
ஆழ்ந்திருக்கும் காலமெப்போ..?

உள்ளேநின்று உன்னைப்பார்த்து
என்னையறியும் தருணமெப்போ..?

எண்ணங்களே.. எண்ணங்களே..
மெல்ல இனி
மறைந்துப்போங்கள்..

உங்களையும் கடந்து நான்
போக –
எண்ணிமுடியா தூரமுண்டு..

இருக்கும்  வாழ்க்கை
இவ் வொன்றைத்தான்
வாழ ஆசை கோடியுண்டு..

எண்ணநெருப்பில் மூளும்
முடியமுடியா போதை
மரணம்வரை மாளாதுண்டு..

பிறவி அறிந்து
பெற்றதில் வாழ போதிய ஞானம்
பெறயியலா பல எண்ணங்களே.. எண்ணங்களே..

நடந்துப்போக நடந்துப்போக
கிடைத்ததுபோல் தூரம் நீளும்.,
நீளுவது நீளட்டும் –

இப்போதெனக்கு விடைகொடுங்கள்
மெல்ல உள்புகுந்து
முழுதுமாய் உற்றுநோக்கி
முழுதீரத்தை மீதிறக்கி
எப்பொழுதிற்குமா யுங்களை விட்டுவிடுகிறேன்
மெல்ல சென்றுவிடுங்கள் மெல்ல விட்டுவிடுகிறேன்..
———————————————————————
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்