3) வெறும்பய பெத்தவளே..

புத்தகத்தில் குட்டிப்போடும்
மயிலிறகு தந்தவளே..,
ஒரு பருக்கை மீறாம
உண்ணச் சோறு போட்டவளே..,

பத்தோ அஞ்சோ சேமிச்சு
பலகாரம் செஞ்சவளே,
பழையப் புடவை தொட்டில்கட்டி
வானமெட்ட சொன்னவளே..

மழைப்பேஞ்சி நனையாம
எனைமறைச்சி நின்னவளே..,
எங்கிருக்க சொல்லேண்டி
வெறும்பயலப் பெத்தவளே..?

நீ அடிச்ச அடி
திட்டினத் திட்டு
எல்லாமே அன்று வலிச்சதடி,
இன்று அடிப்பியான்னு
அழுது நிக்கிறேன்
மறுக்காம வாடியம்மா..

தூங்கினா கனவு வரும்
தூங்க உன் மடி வேணும்
கனவில் நீ வருவாய்னு
சுடுகாட்டில் படுத்திருக்கேன்
உன்பாதைப் பாத்திருக்கேன்
உயிர்மூச்சு தந்தவளே – ஒருவாட்டி வாயேம்மா..

உனக்கென்ன நாலு புள்ள
ஒன்னில்லைன்னா ஒன்னு அழும்
என்னபெத்த நீயொருத்தி
இல்லாம நா(ன்) எதுக்கு ?
என்னையுந்தான் கூட்டிப்போடி,

கண்ணீரில் கரையாம
உன்கூட பிணமா – படுத்திருப்பேன்,
மூச்சடுக்கி மண்ணுக்குள்ள
நீயிருந்தா உயிர்த்திருப்பேன்,
என்னம்மா இல்லாம –
எனக்கெதுக்கு உயிர்மூச்சு (?)
நீ விட்ட இடம்
தொட்ட மரம் – எனைப்போல தனியாச்சு,
பெத்தபுள்ள ஆசைக்கூட
கேட்காம குறைஞ்சாச்சு,
எனை பெத்தவளே வாயேண்டி
வரும்வரை நான் வெறும்பேச்சு..
————————————————
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

2) பாவம் பொடிபட மனிதம் புரிபடும்!!

டும் எறும்பு நசுங்கிப்போகும்
தின்ற மீனின் உடம்புநோகும்
வெட்டும் சதையில் பாவம் வடியும்
அது வாழ்வெங்கும் கூட வரும்;

பார்க்கச் சிரிக்கும் பெண்ணும் பாரம்
சிரிக்க ஏங்கும் ஆணும் பாரம்
உறவு புரியா மனதிற்குள்ளே
ஆயிரம் பூதம் கனமே சேரும்;

திட்ட கூட மனசு சாகும்
வார்த்தை அடியில் இதயம் கிழியும்
மனித எண்ண ஓட்டையில் – வாழ்க்கை
மரணமாக அடைந்துப்போகும்;

முடிச்சவிழ்க்கா சிக்கல் நேரும்
அவிழ்க்கும் தருணம் அறுந்தும்போகும்
உடைந்தப்பின்னே ஒட்டவைக்க – சில தருணமோ
இதயமோ வாய்ப்பின்றியே பிரிந்துநோகும்;

கொட்டித் தீர்க்கா எண்ணம் கொடிது
வெட்டும் வாளாய் வளரும் பெரிது
சுட்டும் விரல்கள் அசையும் பொழுதுள்
அது அறுக்கும் இலக்கு பிறப்பின் நெடிது;

கட்டில்கால்களாய் விதி மெலிந்திருக்கும்
உண்மையும் மனிதமும் தாங்கிப்பொறுக்கும்
பொய்யினால் சுடும் சொல்லில்
கட்டிலும் காலமும் உடைந்தே நொறுங்கும்;

வெடிக்க வெடிக்க தகரும் மலைதான்
சறுக்கச் சறுக்க நாம் இடறும் நிலைதான்
சிரித்து மகிழ்ந்து சிரிப்பைப் பகிர்வின்
நிலைக்கும்மகிழ்வில் நீளும் வாழ்க்கை,

மனிதம் புரிந்தால் நாலும் வாழ்க்கை!!
———————————————–
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1) சிவந்துவடியும் பச்சைரத்தம்..

யிருறுக்கும் நாளமெங்கும்
உயிராகும் பச்சைரத்தம்,
உள்நாக்கு பயத்தி லிழுக்க – உடல்
கொதிக்கும் பச்சைரத்தம்;

உடல்தாண்டி வெளிதேடி – காற்றில்
உறையும் பச்சைரத்தம்,
கண்டுகண்டு நாள்முழுதும்
உயிரருக்கும் பச்சைரத்தம்;

மீனறுத்த வாசனையை – உள்ளே
முள்போல் தைக்கும் பச்சைரத்தம்,
ஆடறுத்துப் போனதலையை – கெஞ்சி
என்னுள் கேட்கிறது பச்சைரத்தம்;

பெற்றத் தாய் மடிவழிய – என்மேனி
பசபசத்து நனைந்திருந்தப் பச்சைரத்தம், இன்று
மொத்தத் தாய் வயிறெரிய கேட்காமல்
வடிகிறதே ஈரப் பச்சைரத்தம்;

கண்ணெல்லாம் பூத்துப்போய் அவளுள்
மல்லிகையாய் மணத்திருந்தப் பச்சைரத்தம்,
மன தொன்றிற்குள் அடங்காமல் – ஆடிய ஆட்டமாய்
வழியுதடா  பச்சைரத்தம்;

சொத்தைப்பல் வலிபோல
பகைவலிக்க நோகிறது பச்சைரத்தம்,
நான் பாடையிலேப் போகையிலே – அவன் சிரித்தால்
என் சாம்பலிலும் நாறுமேடா என் பச்சைரத்தம்;

அச்சச்சோ உணரவில்லை பொக்கிஷம்தான்
பச்சைரத்தம்;
வாழும்போதே உணர்ந்துக்கொள் மனிதா – உனை
வரலாற்றிலும் வாழவைக்கும் பச்சைரத்தம்!!
————————————————————–
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்..(3)

(குவைத்-3-மரணம்)

கோடி கோடி பணமிருந்தாலும் கூரையுரசி மேகம் நடந்தாலும் காலை வாறும் காலன் வந்து வா என்றழைக்கையில் போவென்று மறுக்கமுடியா மனித இனம் நாம். பிறகெந்த நம்பிக்கையை தோளில் சுமந்துகொண்டு விமானமேறினோமோ நாங்களெல்லாம்(?) தெரியவில்லை. மரணம் நெருங்கிவிட்ட சிலருக்குத் தான் மரணித்தல் பற்றியதொரு உயிர்பயத்தையும் நன்கறிய முடிகிறது. அதிலும் தான் இறப்பதைக்காட்டிலும் வேதனை உடனிருப்பவர் இறந்துவிடுவது. வீட்டிலிருக்கும் அம்மா ஒருநாள் இல்லையென்றாலே அந்த வீடு கலையிழந்துப் போகையில் காலத்திற்கும் அந்தம்மாவை விட்டுப் பிரிதலென்பது மரணத்தைக் காட்டிலும் மிகக் கொடூரமானது.

பிறப்பும் இறப்பும் பற்றி அறியாதார் யாருண்டு? பிறக்கையிலேயே மரணத்தையும் உடனெழுதிக் கொண்டுவந்தவர்கள் தானே நாமெல்லோரும்? மரணம் ஒவொரு வீட்டிலும் அழுது முடிப்பதாகவோ அல்லது மெல்ல மறப்பதாகவோ இருந்தாலும் உள்ளிருந்து குத்தும் வலி மீளாத் துயரத்தை தீராது வைத்திருப்பதுதான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்திருகாது. ஆனால் எங்கோ சென்று யாரோடோ வாழ்ந்து எனக்கு வந்தால் என்னாகுமோ என்று எண்ணி பயமுறும்வண்ணம் உடனிருப்பவர் மரணித்து தனது கட்டிலுக்கு மேலிருக்கும் கட்டிலிலோ அல்லது பக்கத்து அறையிலோ கிடப்பதென்பது வாழ்க்கையை ஒற்றை நொடியில் திண்றுகொள்ளக் கூடியதல்லவா?

வெளிநாடுகளுக்கு ஒப்பந்தப் பணியாளர்களாக வரும் பட்சத்தில்; யாருடைய பிரச்சனையிலும் தலையிடமாட்டேன், என்னால் எந்த கூட்டு சதியோ பழிக்கு ஆளாவதோ பிறரோடு சேர்ந்து நிறுவனத்தை எதிர்ப்பதோ எல்லாம் இருக்காது என்று எழுதிக் கொடுத்துவிட்டே தாய்நாட்டிலிருந்து வெறும் சதையாகவும் துடிக்கும் நரம்பாகவும் விடைபெற்றுவருகிறோம். மீறியும் முறுக்கெடுக்கும் தன்மானமானது ஊரில் கட்டிவிட்டுவந்தப் பணத்தையும் மறந்து சிலநேரம் வெளியெட்டிப் பார்த்துவிட, போட்ட துணிமாறாமலே விமானமேறி ஊர்வந்த கதைகளும் ஏராளமுண்டு.

ஆக நூறு ஆட்டிற்கு மத்தியில் அங்ஙனம் வெட்டப்படும் ஒரு ஆட்டின் தலை காட்டிய பயம் மீதிய மொத்த ஆட்டையும் அவர்கள் எண்ணியவாறே அடக்கி ஆளத்தக்கத்தான் எங்களின் அடிமைத்தன நிலை வெகுவாக அமைந்துவிடுகிறது.

எனவே எது நடப்பினும் சற்று பின்நகரும் கால்களோடுதான் எங்களின் அதிகபட்ச பணம் நோக்கியப் பயணம் அமைவதுண்டு, அவ்வேளைகளில் கண்முன்னே நடக்கும் கொல்லை, கொலை, அடிதடி, ஏற்றயிறக்கம், மொழிசார் பாரபட்சம் போன்றதல்லாது எங்கேனும் நடந்துவிடும் சில துர்மரணமென எதிலும் எங்களின் கால்கள் உணர்வாக முன்நிற்க முடியுமேத் தவிர முழுதாகப் போய்நின்று நியாயம் கேட்டு பேசிவிடவெல்லாம் முடிவதில்லை.

ஒருமுறை எப்போதுமே குடித்துத் திரிந்த ஒருவன் குடிப்பதை நிறுத்திவிட்டமையால் இறந்தான். அவனை உடனிருந்தோர் காப்பாற்ற முடிந்தும் காப்பாற்றாது விட்டனரெனில் அவர்களெல்லாம் உணர்வோடு வாழ்ந்துதான் என்ன பயன்?

பொதுவாக குவைத் நாட்டைப் பொருத்தவரை மது அருந்துதல் என்பது கண்டிக்கத்தக்கதொரு குற்றத்திற்கு உட்பட்டதாகும். சட்டவரம்பு படி மது அருந்த அனுமதியற்று இருப்பினும் குடிப்போர் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளமுடியாமல் சட்டத்திற்கு புறம்பாக அவர்களே மறைமுகமாக காய்ச்சி குடிக்கவும் விற்கவும் செய்கின்றனர். சிலர் சட்டத்திற்கு புறம்பாக விற்போரிடத்தில் அதிகவிலைக்கு வெளிநாட்டு சாராயத்தை குடிக்கின்றனர். சிலர் முகச் சவரம் செய்தப்பின் தடவப் பயன்படுத்தும் ஜாக்சன் எனும் அதிகபட்ச ஆல்கஹால் கலந்த திரவத்தோடு குளிர்பானங்களை கலந்து குடித்து வெகுவிரைவில் பார்வையை இழப்பதும் ஈரல் வெடிப்பதும் பையித்தியம் பிடித்து அலைவதுமாகக் கூட உள்ளனர். காவல்துறைக்கோ அரசுசார் உயரதிகாரிகளுக்கோ முழுவதுமாகக்கூடத் தெரியாமல் இப்படியொரு உயிர்கொல்லும் நஞ்சினை தினந்தோறும் குடிப்போரும் பாலைவனப் பகுதிவாழ் குடியிருப்புகளில் அதிகமாகவே உள்ளனர்.

ஆனால் இதெயெல்லாம் இன்று குவைத்தின் அரசிடமோ காவல்துறையிடமோ முறையாகத் தெரிவிப்போமேயானால் அதை முழுதாக மறுக்குமளவிலும், சொன்னதற்காக நமைக் கூட முன்வந்து தண்டிக்கும் தீவிரத்திற்குமே தனது சோதனையை முடுக்கிவிட்டுக் கொண்டுள்ளது குவைத் அரசு. ஆயினும் அவர்கள் அறிந்தும் அறியாமலும் குடிப்பவர்கள் குடித்துக் கொண்டும் இறப்பவர்கள் இறந்துகொண்டுமே இருக்கின்றனர் என்பதே சோகம்.

ஆக அங்ஙனம் அந்த தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்த ஒருவன் பெரிதாக தான் பாதிக்கப்பட்டுவிட்டதை அறிந்து குடிப்பதை நிறுத்திவிட்டு ஒரு பத்து பதினைந்து தினத்தில் ஊர்சென்றுவிடலாம் என்று முடிவுசெய்கிறான். நான்கைந்து நாளில் கைகால் நடுங்கி தனியாக பேசி பிதற்றும் நிலைக்கு தள்ளப்பட மருத்துவரை அணுகினால் உன்னுடைய ஈரல் கடுமையாக பாதித்துவிட்டது, மூளைக் கோளாறு ஏற்பட்டுவிட்டது இனி ஒன்றும் செய்யயியலாது நீ ஊர்போய் முறையாகப் பார்த்துக்கொள் என்றுசொல்லி கைவிரித்து விடுகிறார்.

தற்காலிகமாக உட்கொள்ளத்தக்க சில மருந்தினை வாங்கிக்கொண்டு ஓரிரண்டு நாட்களுள் ஊருக்குப் புறப்பட தன்னை தயார் செய்கிறான் அவன். உடல்நிலை மேலும் மோசமாகிப்போக உடனிருக்கும் அறைவாசிகளுக்குச் சொல்ல அவர்கள் அதற்கு முன் அவன் குடித்துவிட்டு செய்த தகாத செயல்களால் அவனை உதாசீனப் படுத்தி வெளியே போவென்றுச் சொல்லி வெறுத்தொதுக்கி விடுகின்றனர்.

வேறு வழியின்றி கிடைக்கும் மருந்துகளை தின்றுவிட்டு ஊர்போக பயணச் சீட்டு கடவுச் சீட்டெல்லாம் பெற்றுக்கொண்டு அவன் விமான நிலையம் செல்கிறான், அங்கே அவன் நிதானமாக இல்லாததைக் கண்டு விமான நிறுவனத்தின் பணியாளரால் அவன் குடிதிருப்பதாக எண்ணி நிருத்தப்படுகிறான். தான் குடிக்கவில்லை உடல்நலம் மோசமாக உள்ளது உடனே ஊருக்குப் போகவேண்டும் என்று கெஞ்சி அவன் வாதாடுகிறான். அப்படியெனில் முதலில் போய் உனது மருத்துவம் பார்த்த இடத்திலிருந்து உனது உடல்நிலவரம் குறித்த ஒரு கடிதத்தை பெற்று வா,, அதின்றி உனை அனுமதிக்க இயலாது என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

வேறு வழியின்றி வீட்டிற்கு வந்து பெட்டியை வீசிவிட்டு கட்டிலில் சரிகிறான், வலி தாளாமல் பிதற்றுகிறான். கட்டிளின்மேல் இங்குமங்குமாய் புரளுகிறான். அருகில் படுத்திருந்த அறைவாசிக்கு அவனுடைய சப்தம் தூக்கத்தை கெடுப்பதாக இருந்தமையால் எழுந்து மின்விளக்கிட்டு பார்க்கிறான், அவனின் நிலை சற்று மோசமாக இருப்பது தெரியவருகிறது. என்றாலும் இந்நேரத்தில் இவன் எங்கு குடித்துவிட்டு எப்படி வந்தானோ யாருக்குத் தெரியுமென்று எண்ணிக்கொண்டு தனது அலைபேசியில் ரிக்கார்டிங் பொத்தானை அழுத்தி அவனுக்கு அருகில் வைத்துவிட்டு அவன் படுத்து உறங்கி விடுகிறான்.

நள்ளிரவில் அவனுக்கு திடீரென உயிர்போகும் வலி வருகிறது. துடிக்கிறான், தண்ணீர் வேண்டி அழுகிறான், எழுந்துப் போய் ஒரு குவளை நீர்மோந்துக் குடிக்க இசையாத உடல் மெல்ல மெல்லத் துடித்து தனது மூச்சை நிறுத்திக் கொள்கிறது.

மறுநாள் அண்ணா இங்ஙனம் ஒருவன் இறந்துவிட்டான் இப்படி இப்படி ஆனது என்கிறார்கள். நிறுவனத்தில் சென்று கேட்டால் அவனுக்கு ஆர்ட் அட்டாக் வந்துவிட்டது, அவனை தெரிந்தோர் யாரும் வராததால் பிணத்தை மருத்துவமணையில் வைத்துள்ளோம் என்கிறார்கள். அங்கே ஒரு எகிப்திய நாட்டை சேர்ந்த ஒரு அலுவல் அதிகாரி இருக்கிறான், அவனை நாங்கள் இன்னாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டு நேரில் சென்று தொடர்பு கொள்கிறோம். அவனுடைய மனைவியை அழைத்து அவரோடு தொலைபேசி வழியே பேசத் தருகிறோம். அவர் மனம் தாளாது நிருவனத்திலிருந்து எல்லோரிடமும் தன்னால் இயன்ற தொகையை வசூலித்துத் தருகிறார்.

பல அவசர வேலைகளுக்கு மத்தியில் இவனை இன்னாரென்று பேசி பணத்தை பெற்று அவனுடைய மனைவியிடம் சேர்த்துவிடும் முயற்சியில் மட்டும் அங்குசென்ற எனக்கு நடந்த விவரங்களையெல்லாம் கேள்வியுற்றப்பின் அவனை சட்டென்று பிணமென்று உச்சரித்துவிட இயலவில்லை, உடலை எப்போது அனுப்புவீர்கள் என்றேன், போய் பெட்டி செய்யுங்கள், தூதரகத்தில் பேசுங்கள், கோப்புகள் எல்லாம் தயாரானதும் நாங்களே உங்களை அழைக்கிறோம் என்கிறார்கள். உடன் வேலை செய்தோர் எல்லோரும் ஆளுக்கொரு வேலையாக முயற்சித்து ஒரு வழியாக உடலை அனுப்பவும் பணத்தை பெற்றுத்தரவும் ஏற்பாடு செய்தாகிவிடுகிறது.

அவனைப் பற்றி சொல்லி என்னிடம் உதவி கேட்ட அந்த தம்பி வந்து அண்ணா இதுதான் அந்த ரிக்கார்டிங் கேட்டு பாருங்கள், ‘உயிர்போகும் முன் அவன் என்னென்ன பேசியிருக்கிறான் கேளுங்கள்’ என்றுசொல்லி கொடுக்கிறான். வாங்கி கேட்டேன், இதுவரை அவனின் முகத்தை நான் பார்த்திருக்கவில்லை, முதன்முதலாக அவனுடையக் குரலை கேட்கிறேன், உடம்பெல்லாம் பதறுகிறது. அருகில் அடுத்துத் தூங்கிய படுபாவி மீது சாபம் எழுகிறது. யாருக்கு இங்கே எண்ண நிலையோ யாரை யார் குறை சொல்வதோ என்று மனதால் விதியை நொந்துக் கொண்டு, அந்த உதவி கேட்டு வந்த தம்பியை தெய்வம் மாதிரி வணங்கப் பார்க்கிறேன். அவனுக்கு ஒரு பெண்குழந்தை இருப்பதாக சொன்னான். இவனுடைய மரணத்தால் கிடைக்கும் பணம் அவன்பட்ட கடனை அடைக்க உதவும் என்று சொன்னான். ஊரில் அழைத்துப் பேசினோம், மனைவி கதறி அழுகிறாள். அலைபேசியை துண்டித்துவிட்டு அவன் கடைசியாய் பேசியதை யாருக்கும் காட்டாதே என்றேன். அது இன்னும் எனது அலைபேசிக்குள் ஒரு உலகாய துயரத்தை அடைத்துக்கொண்டு கிடக்கிறது.

இங்கே வேலை மட்டுமல்ல தலையெழுத்து திரிந்துவிட்ட சிலருக்கு மரணம் கூட மலிவு தான். இங்கே வந்து நூறு பேர் சம்பாதித்து வளர்ந்ததை சாதித்ததைப் பார்த்திருக்கிறோம், அதலாம் வாங்கிய சம்பளப் பணத்தைப் போலவே மனதிலிருந்து தானாகக் கரைந்துப் போகும். ஆனால் யாரோ ஒன்றிரண்டு பேர் இறந்ததைக் கண்டிருக்கிறோம். அது தீராதக் கடனைப் போலவே நெஞ்சுள்லிருந்து உயிரை அறுத்துக்கொண்டே வருகிறது..
—————————————————————————————– தொடரும்..
வித்யாசாகர்

Posted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (குவைத்-2)

னிமை தின்றதன் மிச்சங்கள் நாங்களென்று எங்களை நாங்களே சொல்லிக்கொள்வது சற்று வேடிக்கையாகத் தானிருக்கும். ஆனால் உண்மையில் தனிமைநெருப்பு தகித்து வெறும் தொலைகாட்சி கைகாட்டும் பக்கமெலாம் எங்களை நாங்கள் திருப்பிக்கொண்டதற்கு ஏக்கத்தில் வெடித்துப்போகாத எங்களின் இதயங்களும் காரணமென்றால் யாருக்கு அதை நம்பப்பிடிக்கும்(?). திசை ஏதோ சென்று, முகம் அறியா அறையில் நான்கு பேரோடோ எட்டுப் பேரோடோ ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டக் கட்டிலில் படுத்துக்கொண்டு குழந்தைப் புகைப்படத்தையும் மனைவி புகைப்படத்தையும் அம்மாவின் புகைப்படத்தையும் பார்த்துப் பார்த்து அழுதுக் கொண்டிருக்கும் மனதின் ரணம் இதயத்தை தனியாக எடுத்து’ பிழிய வலிக்கையில் வலிப்பதற்கு ஈடென்று வீட்டைவிட்டுப் பிரிந்து வாழ்வோருக்குத்தானே தெரியும்.

ஒருவன் இந்தியில் பேசி தமிழ்வாலா என்று கிண்டல் செய்வான், இன்னொருவன் மலையாளம் பேசியே உடன் நின்றுக் கொல்வான். யார் எதை பேசுகிறார்கள் யாரைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று எதுவுமே புரியாது என்னவோ தலையெழுத்து வந்துவிட்டோம் என்று வாழும் நாட்கள் கத்தியின் மீது நடப்பதைக் காட்டிலும் கொடூரமானது.

அதில் வேறு காவிரி நீரா’ பெரியாறு அணையா’ கருணாநிதி தோல்வியா’ ஜெயலலிதா வெற்றியா’ வைகோ கொடி பிடித்தாரா எல்லாவற்றிற்கும் எங்களிடம் பதிலை எதிர்பார்க்கும் சகோதரத்துவ மாநிலங்களையெல்லாம் உடன் சேர்த்துக்கொண்டுதான், ஜனகனமன கேட்கையில் ஜெயஹிந்த் சொல்லிக் கொள்கிறோம். ஹிந்தி தெரியவில்லை அதற்கொரு பேச்சு, இந்தி தெரிந்து இந்தி தெரியாத தமிழரோடு தங்கவேண்டிவந்தால் அதற்குமொரு பேச்சு என’ அப்பப்பா, வெளிநாடுகளில் பணம் சம்பாதிப்பது சுலபம், மனிதர்களை வெல்வதும், தனிமையை உதறிவிட்டு பிறரோடு கலந்துப்போகப் பழக்கிக்கொள்வதும் இன்னொரு பெரிய சவால்தான்.

ஆனால் அடிபட்டுக் கொள்ளும் பனம்பழம் இனிப்பதைப் போல, வேற்றுமைகளை உடைத்துக் கொண்டு கைகோர்த்துக்கொண்டப்பின் எங்களிடமொரு இரும்பு பலம் வந்து யானையைப் போல தோளில் அமர்ந்துக் கொள்வதுண்டு. ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது, இந்தியாவிலிருந்து பக்கத்துவீட்டுக்கார அண்ணன் பேசுகிறார், அம்மாவிற்கு உடல்நலக் கேடு’ உயிர்போகும் தருணம்’ உடனே வாவென்று சொல்லி எதிர்முனை துண்டிக்கப்படுகிறது.

பெண்கள் வயதுக்குவருகையில் சுண்டியிழுத்த அடிவயிற்று வலியைப் போல பயம்கவ்வி தலையிலடித்துக் கொண்டு கீழே அமர்கிறேன் நான். எனது அறையில் இரு மலையாளி ஒரு பெங்காளி ஒரு தெலுங்கர் மூன்று வடநாட்டவர் ஒரு தமிழர் இருக்கிறார். நாளை வெள்ளிக்கிழமை வேறு, குவைத் நாட்டில் வெள்ளிகிழமையன்று பொதுவிடுமுறை என்பதால் நிறுவனத்திலிருந்து கடவுசீட்டை பெறுவதற்கே வெள்ளிவிட்டு சனிக்கிழமை ஆகிபோகும், வேறென்ன செய்வதென்று புரியாமல் மீண்டும் நான் கதறிக்கொண்டே வீட்டிற்கு அழைக்க நினைப்பதற்குள் தங்கை அழைத்து அண்ணா அண்ணா என்று கதறுகிறாள், உடனே வா என்கிறாள்.

நினைத்தால் பேருந்து ஏறி ஊர்போய்ச் சேர இதென்ன நமது தேசமா? அந்நிய மண்ணில் அடிவயிறு சூட்டில் வலிக்க வலிக்க உழைக்கும் எங்களைப் போன்ற பணம் தேடி வந்தோருக்கு நினைத்தால் நாடுசெல்லும் பணியில் நானில்லை என்று எனது தங்கையிடம் சொல்ல எனக்கு நா எழவில்லை.

வெளிநாட்டில் உழைப்போருக்கு சாபங்கள் இப்படி பின்னாலேயே துரத்திக் கொண்டு வருவது என்பது காட்டுத்தீ வந்து நமை கருவறுப்பதற்குச் சமம். ஊரில் ஒரு ஆபத்து என்றால் உடனே உயிர்போவது வெளிநாட்டில் வசிப்போருக்குத் தானென்று வெளிநாட்டில் உழைப்பவர்கள் அறிவார்கள். பெண்பிள்ளையைப் பெற்றால் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதைப்போலத் தான் வெளிநாட்டிற்கு வேலை தேடி செல்வோரும் ‘ஆயி என் குடும்பத்தை காப்பத்துன்னு’ மனதுள் தீச்சட்டி தூக்கிக்கொண்டு தான் போகின்றனர்.

எப்படியோ எனது அறையில் வசித்த பெங்காளி அவனுக்குத் தெரிந்த அலுவல் அதிகாரியிடம் பேசி கடவுசீட்டை வாங்கிவர, மலையாலியில் ஒருவர் நான் வரேன் அண்ணா நீ வான்னு தனது வங்கியிலிருந்த பணத்தை எடுத்து எனக்கு விமானச் சீட்டு பெற்றுக்கொடுக்க வடநாட்டைச் சேர்ந்த பஞ்சாபி எனது துணிமணிகளை எடுத்துக் கட்டி வண்டியில் ஏற்றி கூட இருந்த மற்ற தோழர்களிடமிருந்து பணத்தை வசூலித்து இந்தா என்றுத் தந்து எல்லோருமாய் நின்று போய்வா என்று வழியனுப்பி வைக்கையில்; நானும் என்னோடிருந்த இன்னொரு தமிழரும் அவர்களை கையெடுத்து கும்பிட்டுவிட்டு விமான நிலையம் நோக்கிப் பயணித்தோம்.

வாழ்க்கை என்பது வேறென்ன; இப்படி இதென்று நமை முடிவுசெய்ய விடாமலே துரத்தி துரத்தி பல திசைக்கு நமை அலைகழித்து புதிய பல பாடங்களைப் புகட்டி கூடுமிடமெல்லாம் அன்பைப் பகிரவும், இயன்றப் போதெல்லாம் எல்லோருக்கும் உதவவும் நமைப் பக்குவப்படுத்தி, யாரிடத்துமே பிரிவினைப் பாராது, இன்னபிற உயிர்களை வருத்தாது, உயர்ந்த மனிதத்தோடு வாழ்ந்து, இந்த கட்டை எரிந்துப்போகையில்; எரிபவன் வாழ்ந்தான் என்று பிறரை உணரவைப்பது தானே?

நாங்கள் இப்படித் தான், பணம் சம்பாதிப்பது போதுமானதாக இல்லாதுபோகலாம், ஆனால் வாழ்க்கையை அதுவாகப்படிக்க பல முற்புதர் மீது தனியாக நடந்து கடப்போம். கால் வலிக்குமெனில் எங்களின் வீடுகளை நினைத்துக்கொள்வோம், முள் குத்திய இடத்திலெல்லாம் குடும்பத்தின் கண்ணீரை தடவி மீண்டும் நடைபோடுவோம். எங்களின் பாவத்தையெல்லாம் யாருடைய தலையிலும் வைக்காது நாங்களே சுமப்போம்.

தூக்கம் கெடும், உடல் சோர்ந்து விழும், காடு பெரிதாக நீண்டு கனக்கும், நதி நிரம்பி ஓடும், அடர்ந்து இருட்டு கவ்விக்கொள்ளும், திசையெதுவென்றுக்கூட தெரியாது எங்களுக்கு. ஆனால் ஓடுகிறோம், ஓடி நிற்குமிடம் வீடென்பது மட்டுமே எங்களுக்கு நினைவில்..
———————————————————————————————————————————
வித்யாசாகர்

Posted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. | பின்னூட்டமொன்றை இடுக