வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (1)

வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்..
(குவைத்)

சாதாரண மனிதரின் கனவுகளுக்கும் கைகால் முளைக்கவைத்து வாழ்க்கையை வண்ணமாக்கிவிட்ட உலகநாடுகளுக்கு மத்தியில் தன்னை முதலிடத்திலேயே வைத்திருக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளுள் குவைத்தும் முதலான ஒரு நாடு என்றால்; அங்கே வந்து தனது வாழ்க்கையை விதைத்துக் கொண்டோரால் அதை மறுக்கமுடிவதில்லைதான்..

கலர் டிவியில் ஆரம்பித்த வண்ணமயமான கனவு வெளிநாட்டுக் கனவு. பிடிச்சோற்றில் போதை கலக்கும் சாராயத்தின் ஒவ்வொரு மூடியின் மணத்தையும் கால்மேல் கால்போட்டுக்கொண்டு நுகர்ந்துப்பார்த்த அதிகாரக் கனவு அது. பசி என்பதைக் மறந்து’ பணம் பணம் என்றே ஓடி’ இரத்தத்தை வியர்வையாய் சிந்திக்கொண்டிருக்கும் வலி தாளாப் பயணம் எங்களின் வெளிநாட்டுப் பயணம்..

அம்மா தாலியை அடகுவைத்து, அக்காவுக்குப் புதிய தாலிவாங்கி, தங்கைக்கு வரன் பார்த்து, இன்னும் தாலிக்குப் பின்னான சேதியெல்லாம் சேரச்சேர தனது வாழ்க்கையை உதிரும் முடிகளோடு உதிர்த்துக் கொண்ட வலியது.

.வீடூ கட்ட ஆசை, வீடு வாங்க ஆசை, மனைவாங்க ஆசை, பொருள் சேர்க்க ஆசை, ஆசை ஆசையென்று வயதுகளை அடுக்கி அடுக்கி வருடத்தை வெளிநாடுகளில் தொலைத்து விட்டு வறண்ட ஏக்கத்தில் கிடைத்த பாசத்தின் மிச்சத்தில் கடமையாகவே தனது திருமணத்தை நடத்திக்கொண்ட, நனைந்த பல தலையணையின் ஈரமது..

தொலைபேசி கண்ணீரில் நனைந்து, கடிதங்கள் நினைவுகளில் ஊறி, காற்றெங்கும் பரவிய ஏக்கத்தின் உச்சத்தில்; இதயம் நிறையாத பாசத்தின் மிச்சத்தில்; தீரா மனப்புண் துன்பமாகவே போகிறது; எங்களின் ஊர்விட்டுப் போதலின் துன்பம்..

இதலாம் கடந்தும் நாங்கள் வெல்லும் இடமொன்று உண்டு, அதுதான் நாங்கள் ஊர்போகும் விடுமுறைக் காலம்.

அம்மாவுக்கு இனிப்பு பிடிக்கும், அப்பாவுக்கு தோள்துண்டு வாங்கணும், அக்காதங்கைக்கு புடவையும்’ குழந்தைகளுக்கு துணிமணியும், தின்பண்டமும் கூடுதலாக கணினியும் தொலைக்காட்சியுமென இரண்டுவருடத்திற்கு முன் கண்ட கனவுகளெல்லாம் நடந்தேறிவரும் தருணமது. கூரை மாறி’ வீடு இரண்டடுக்கு ஏறி’ வாசலில் சென்று நிற்கையில் அம்மா தங்கை அண்ணி எல்லோரின் முகத்திலும் நாங்கள் சிந்திய வியர்வை மினுமினுப்பாக மின்னும், புன்னகை பூச்சொரியும்.

அம்மா ஆரத்தி கலக்கி அழுதவாறே என்னருகில் வந்து எம்புள்ள வந்துட்டானா என்று விசும்பி விசும்பி அழுதவாறே ஆரத்தி சுத்துவாள், கன்னத்தில் சாரையாக கண்ணீர் வழியும் என்னம்மா என்று கட்டிப்பிடித்துக் கொள்ளத் துடிக்கும் நிமிடங்களில் நாங்கள் வாழ்க்கையை வெகுவாய் வென்றெடுப்போம்..

அப்பா ஓடிவந்து கன்னத்தைத் தாங்கி என் ராசா என்று உச்சிமுகர்ந்து, ‘உள்ளே வாயா..’ என்று அழைத்து மார்போடு அணைத்துக்கொள்வார், தங்கை ஓடிவந்து அண்ணா என்று தாயைக் கண்ட கன்றினைப் போல எகுறி என்மேலே விழுவாள், அக்கா கன்னத்தில் முத்தமிடுவாள், அண்ணிக்கு தரும் நெற்றி முத்தம் அன்பைப் பகிரும், தம்பிகள் ஓடிவந்து நீ விடுன்னா என்று எனது கையிலிருக்கும் சுமைகளை வாங்கி அவர்கள் சுமப்பார்கள், அண்ணன் எனை இழுத்து தன் மாரோடு அணைத்துக் கொள்வார். ஆக, அங்கேதான் விமானமேறத் துடிக்கும் கால்கள் வேகமாய் மீண்டும் முளைத்துகொள்ளும், வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம் தேடி மனசு அலையும்.. குவைத் போன்ற தேசத்தின் வசந்த வாசல்கள் எங்களுக்காகவும் திறக்கும்..

ஆனால் அங்கே நாங்கள் பட்ட அவஸ்தையும் அடைந்த துயரும் வாழ்ந்த வாழ்க்கையும் சொல்லிமாளாக் கதைகளைக் கொண்டவை. நடந்த தெருக்கள் ஒவ்வொன்றும் எங்களின் வாழ்க்கையை தேய்த்தவை. உரசி உரசி வடிவம் கண்ட அந்த எங்களின் கனவுகளும் அந்தக் கனவுகளை நனைத்தக் கண்ணீரும் நெஞ்சைத் தொடுபவை. நீலக்கடல் மோதும் அலைபோன்று நாங்கள் வாழ்ந்த மண்ணின் வாசனையும் வலிகளும் மாறிமாறி வந்துப்போகும் கதையினி’ எங்களை விதைக்கப்பட்ட நிலத்தின் வழி இங்கே எழுத்தாகத் தொடரும்..
———————————————————————————————————
வித்யாசாகர்

Posted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. | Tagged | 1 பின்னூட்டம்

உழைப்பு வாழ்தலின் கடன்..

வியர்வையால் சமைத்த உலகமிது
வெற்றியால் முத்தமிட வாருங்கள் தோழர்களே..

முயற்சியால் நிமிர்ந்த முதுகுகள் இவை
வளர்ச்சிக்குப் பின்னிருக்கும் வலி மறக்காதீர் உறவுகளே..

எதிர்த்ததால் புதைக்கப்பட்ட உயிர்களுள் முளைத்தத்
துளிர்கள் உழைப்பாளிகள் உழைப்பாளிகள் மட்டுமே..

உலகின் மூலைமுடுக்கெங்கும் இரக்கமின்றி
குடித்த ரத்தம் உழைத்தோரின் ரத்தம் ரத்தமே..

அறியாமையை நங்கூரமாக்கி உழைத்தோரின்
ஆசையினுள் செலுத்திய –
அதிகாரக் கப்பல்கள் எத்தனை எத்தனையோ..

அரசு அடித்தால் அடிவாங்கி
ஆணை பணித்தாள் பணிந்துப்போய்
இட்ட இடத்திலெல்லாம் தலைமுட்டி முட்டி செத்த
சர்வாதிகாரத்து சாட்டைக்குள் சிக்கிய தலைகள்
எனது ஏழையின் தலைகளே..

சாதித் தகராறா உழைப்பாளிகளைக் கொல்
மதுதடுப்புப் போராட்டமா உழைப்பவன் முன்நிற்பான்
ஓங்கி அடி..

சாலை அமைத்தல்
ஓலைப் பின்னுதல்
சாக்கடை அள்ளுதல்
தங்கச் சுரங்கம் போதல்
அணுமின் உலையில் சாதல் என அத்தனைக்கும்

இறையாகும் எனதுழைப்பாளி வர்க்கத்திற்கு
எதிர்வினை தேடுகிறேன்;

மினுக்கும் தங்கத்திலும்
பசிக்கும் வயிற்றின் ஈரத்திலும்
படிக்கும் புத்தக வாசனையிலும்
மறைக்கும் மானத்தின் சேலையிலும் பல ஏழை
உழைப்பாளியின் எழுதப்படாத வரலாறு இருப்பதை
கண்மூடிப் பார்க்கிறேன்;

இரத்தம் சொட்டல்
வியர்வையில் பூமி நனைதல்
உழைத்தல் உழைத்தல் என எல்லாம்
இனியும் நடக்கும்
நடக்கட்டும்;

நமது காலடிகள் அவர்களை நசுக்காது
பதியப்படுமெனில்
காலத்துள்
வாழ்ந்தவர்கள் பட்டியலில் நம் பெயரும் பதிந்துப்போகும்!
———————————————————
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்..

வள் எனை கர்ப்பத்தில் சுமக்கையில் இருந்த
அவளுடைய ஆசைகளாகவே
அவளை நான் பார்க்கிறேன்;

அவள் கனவுகளை எனக்காகச் சுமந்தவள்
வலிக்கும்போதேல்லாம் எனக்காகத் தாங்கிக் கொண்டவள்
வயிற்றைத் தொட்டுத் தொட்டு எனைப் பார்த்த
அவளுடைய கைகள் பூஜையரையைவிட மேலான
எனது பெரிய மனதுள் பத்திர நினைவாகவே வைக்கப்பட்டுள்ளது.

அம்மா; எனது மூச்சிக்கு சப்தம் இருக்குமெனில்
எனது உயிருக்கு நிறம் இருக்குமெனில்
எனது வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்குமெனில் அதத்தனையும்
அம்மா; அம்மா மட்டுமே..

இன்று எனக்கு வலித்தாலும்
இன்று நான் அழுதாலும்
என்னோடு சேர்ந்து அழுவது
அம்மாவாகவே இருக்கிறாள் எப்போதைக்கும்..

அவள் கொடுத்த சோற்றின்
அவள் கொடுத்தப் பாலின்
அவள் தந்த மூச்சின் அறையெங்கும் அவளையே தேடுகிறது மனசு..

அம்மா எங்கே அம்மா எங்கே
என்று ஏங்குகிறது மனசு..

அம்மா இல்லையே என்று கசங்கி
அழுகிறது மனசு..

அம்மா இல்லாத நானும்
இருந்தும் இல்லாதவன் தான்..

உண்மையில் எனக்கு
அம்மா காலத்திற்கும் வேண்டுமாய் இருந்தாள்,
அவளில்லாத இரவுபகல் அவளோடு தீரவேண்டுமாய் இருந்தது,
தீராத நாட்களோடு வதைபடுகிறேன்
அம்மாவைத் தேடும் கண்கள் சிவக்கச் சிவக்க அழுகிறேன்

அம்மா நேற்று கனவில் வந்தாள்
அழாதே என்றாள்
நானிருக்குமிடத்தில் அவளும் இருப்பாளாம்
தொட்டுப் பார் என்றாள்
அம்மாவைத் தொட்டுப் பார்க்கிறேன்
உடல் சிலிர்க்கிறது,
அவள் தனது வயிற்றுள் எனைத் தொட்டுப் பார்த்த
அதே தொடுதல்
அதே அம்மாவின் வாசம்
அதே ஈர்ப்பு உடலெங்கும் பரவி ‘நானிருக்கேண்டா தங்கம்’
என்றாள் அம்மா,
இரவின் கனத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு
அம்மா அம்மா என்று கதறுகிறேன்..

இரவுகள் இன்னும் நீண்டு நிற்கிறது
வாழ்க்கை இப்படித் தான் இருப்பதோடும்
இல்லாததோடும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது..

நான் விடிந்ததும் கண்விழிக்கிறேன்
எப்போதும் போல புறப்படுகிறேன்
மதிய உணவையும் எடுத்துக்கொண்டு ஓடி
பேருந்திலேற அதே ஜன்னளோர இருக்கைக் கிடைக்கிறது
அமர்ந்துக் கொண்டு வழியெங்கும் தேடுகிறேன்
கண்ணீர் வழிந்து காற்றோடு அலைகிறது
அம்மா நினைவினுள் இருந்துக் கொண்டேயிருக்கிறாள்..
—————————————————————–
வித்யாசாகர்

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ஓட்டிடுவீர் மக்களே வேண்டுவோர் முகத்திலே காரி உமிழ்வீர்..

யிர் அறுபடயிருக்கும்
கடைசி நிமிடத்தைப் போல
வலி பொறுக்கும் தருணமிது;

இலவசம் இலவசமென்றுச் சொல்லி
அடிவயிற்றில் எவனெவனோயிட்ட நெருப்பைவாறி
கருத்த நாற்காலிகளை தேடிக் கொளுத்தும் நாளிது;

கொஞ்சம் கொஞ்சம் என்று லஞ்சத்தால்
வயிறு வளர்த்து, வெறும் வார்த்தையினால்
சபதங்களையளக்கும் கோழைகளை கழுத்தறுக்கும் நாளிது;

இவன் வந்தால் சரி-யெனில் சரி
இல்லை அவள் வந்தால் சரி-யெனில் சரி
எவன் வந்தாலும் சரியில்லை யெனில் –

(NOTA)நோட்டோவில் வாக்களித்து நம்
பாட்டளிகளுள் ஒருவருக்கு சாமரம் வீசி
வரவேற்க நமக்குக் கிடைத்த நாளிது;

ஒரு நோட்டா அவர்களை என்ன செய்துவிடுமென்று
அவர்கள் எக்காலமிடட்டும்
நாம் நூறையும் வாறி நோட்டாவிலிடுவோம்;

சாராயக் கடையை மூடு’
இலவசத்தை நிறுத்து’
அநீதிகளை அரசே தடு’ என்று வேண்டும் நாம்

நமக்கானத் தலைவனை
கம்பீரகமாக கண்டுக்கொள்ளும்
உன்னத நாளிது;

செருப்பால் அடித்தால் திருப்பி அடி
சேலையை வளித்தால் காரி உமிழ்; கையை உடை;
திருடனோ, காவலாலியோ தவறெனில் கன்னம் பழுக்க வை;

– அதன் நியாத்தை பேசும் அரசொன்றை
எந்த சாதி மத பேதத்திற்குள்ளும் முடங்கிவிடாது
இன ஒற்றுமையைத் தழைக்கச்செய்ய
ஒட்டிடுவீர் மக்களே ஒட்டிடுவீர்…

மிகச் சுதந்திரமாகச் சிந்தித்து
நமது மண்ணின் பெருமையை
ஆண்டப் பல அரிய தமிழரசர்களை மனதிலேந்திக்கொண்டு
உங்களின் முழு சிந்தனையோடு மட்டுமே வாக்களிப்பீர்;

நம் தீர்ப்பு நமைக் காப்பற்தாக
நமது மண்ணை
நமக்கான அடுத்தத் தலைமுறையை இன்னும்
கம்பீரமாக நாம் வளர்த்தெடுக்க –

சரியானவர்களைத் தேர்ந்தெடுங்கள்; உரிமையோடு
அனைவரும் வாக்களியுங்கள்!!
————————————————————————-
வித்யாசாகர்

NOTA – Not All The Above

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உடல் பெரிது உள்ளமும் பெரிது உயிர் சிறிது..

முகப்பூச்சு தடவு
வாசனைதிரவியம் வாரியிடு
வண்ண வண்ண ஆடைகள் நெய்துடுத்து
வரும் காலன் வராதவரை எப்படிவேண்டுமோ ஆடு;

பொய்சொல்
பொறாமை கொள்
புகழுக்கு அலைந்து எல்லாம் செய்
உடம்பென்னும் கோவில் அசுத்தமாக ஆடு;

புகையிலை உண்
புட்டியில் வாழ்
போதையில் புத்தியை அறு
பாதைகாட்டும் உடம்பு பழுதாகும்வரை ஆடு;

பெண்ணிற்கு ஏங்கு
பாரபட்சம் பார்
ஏற்றத் தாழ்வில் எள்ளி நகை
உடம்பின் ரசாத்தால் மனதை நஞ்சாக்கு;

அரசியல் ஆதாயம் செய்
அடுத்தவர் சொத்திற்கு ஆசைப்படு
விட்டது கிடைக்காவிட்டால் ஒரு கண்ணை எடு
ஆண்டோர் நற்போக்கை மாற்றி அமை
உடம்பை உடம்பிற்கு எதிரியாக்கு;

இடையே ஒரு சின்ன காய்ச்சல் வரும்
தலைவலிக்க உலகம் மறக்கும்
வயிறுவலி வாழ்க்கையைக் கொல்லும்
கைகால் கொஞ்சம் உடைந்தாலும் காண்பதெல்லாம்
முடமாய்த் தெரியும்-

கட்டை சாய்ந்தால் அத்தனையும் சாயும்
உடம்பென்னும் கோயில் உள்ளவரைதான் எல்லாம்
உயிர் போவதெனில் சட்டென விட்டுப் போகும்
உடல் தேவையெனில் உயிரையும் பிடித்துநிறுத்தும்

உடலைக் காத்து கொள்; உயிர் வேண்டுமெனில்!!
——————————————————
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்