புதிய கொடியில் கிழியும் மனது..

1
டா
ஸ்மாக்
புகையிலை
பான் குட்கா
வெண்சுருட்டு
நீதியற்ற கொலை
நிற்காத கொள்ளை
தீராத லஞ்சமென
இத்தனைக்கு மத்தியில் ஏற்றப்படும் கொடி
வீழ்ச்சியின் சாட்சி!!
——————————————————————

2
ஜா
திவெறி
மதச் சண்டை
நாத்திகம் ஆத்திகம்
மேலோர் கீழோர்
சுயநல அரசியல்
இணக்கமின்மை
…..
இல்லை இல்லை ..
இன்னுமிங்கே நான் மிருகங்களுக்கு
அடிமை தான்..
——————————————————————

3
ச்சில் துடைக்கும்
பொறுக்கும் கைகளில்
கொடி குத்தி விடாதீர்கள்
ஊசி மட்டுமே
குத்திக் கொண்டுள்ளது
நெடுங்காலமாய்..
——————————————————————

4
சியாறட்டும்
பசியாறட்டும்
பணம் படைத்தோரே
இன்றைக்கு மட்டும் மிட்டாய் தந்துவிட்டு
நாளைக்கு பட்டினி எதற்கு?

அவர்களை விட்டு விடுங்கள்
அவர்கள் பசியாறட்டும்!!
——————————————————————

5
நா
ன் மட்டும் சிரித்தால்
பைத்தியம் எனில்
எனக்கு மட்டும் கிடைக்கும்
வரமும் சாபம்தான்..,

இது குதர்க்கமில்லை..

சிந்தியுங்கள்
இன்றேனும்
எல்லோருக்குமாய் சிந்தியுங்கள்
நாளை பறக்கயிருக்கும் நமது தேசக்கொடி
எல்லோரின் மகிழ்ச்சியிலும் பளிச்சிடட்டும்..
——————————————————————
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கொஞ்சம் நில்லுங்கள்; கொடி பறக்கட்டும்..

வீடு வாசல்
விடுதலை எல்லாம் வேறு,
ரத்தவாடை மறக்கும் மனதுள்
சற்று தேசக்காற்று நிறையட்டுமே;

குண்டுபட்ட மார்புகளில்
வழிந்த ரத்தத்தின் ஒரு துளி
உன்னோடோ என்னோடோ நிற்குமெனில்
நம் மதிப்பை எண்ணிச் சிரிக்கட்டுமே;

ஏற்றும் கொடியின்
வண்ணத்தில்
எம் விடுதலையின் ஏக்கம் தெரியவொரு
சாத்தியநெருப்பு மூளட்டுமே;

சலசலக்கும் உணர்வுக்குள்
நரம்பு வெடிக்கும் ரணம் புகாத
பேத முட்டைகள் சாதியோடும்
மதத்தொடும் சாக்கடையுள் வீழட்டுமே;

மண்ணில் புதைந்த விதையேற்று
சந்ததி சேரும் கைகளுக்குள்
எல்லோருக்குமான விடுதலையே
நாளை ஏற்றயிறக்கமின்றி கிடைக்கட்டுமே;

நம் இனிவரும் நாளை சமைக்கையிலே
அங்கே எதிர்வரும் யாவர் விடுதலைக்கும்
எதிர்ப்பில்லா மனத்தை எவ்வுலகும்
எவர்க்குறித்தும் என்றெண்ணி ஏற்கட்டுமே;

பறக்கும் கொடி பரபரக்க
இனிக்கும் மிட்டாய் நெஞ்சினிக்க
சிரிக்கும் மனது மனிதத்தால் பூச்சொறிக்க
சமாதானம் சமாதனாமெங்கும்
சத்தியத்தோடு நிலவட்டுமே..

வாழ்வோருக்கு வாழ்த்தும்
விதைந்தோருக்கு வீரவணக்கமும்..
——————————————————————
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஆசைன்னா ஆசை; அப்படியொரு ஆசை..

சை நிரந்தரமானவை
அழிவதில்லை;

வாழ்வின் மேடு பள்ளங்களில்
ஏறியிறங்கியும்
அதற்கான இடத்தை
அதுவாகவே தேடிக்கொண்டுமிருக்கிறது ஆசை;

சிகரெட் சுடும் உதட்டிலும்
மது குடிக்கும் போதையிலும்
மலிவாக மணக்கும் வியர்வையிலும்
அற்பமாக நிலைக்கிறது ஆசை;

கடன்வட்டி கனத்தில்
ஏதோ நடந்திராத ஏக்கத்தின் வலியில்
திறந்தக் கதவின் திருட்டில்
மூடியக் கதவின் இருட்டுள்
முள்போல குத்துகிறது ஆசை;

பெண்ணின் பார்வை
உடல்எரிக்கும் காமம்
உயிர்தொடும் காதலென
எல்லையற்றப் பரப்பில்
முடிவின்றி விரிகிறது ஆசை;

கட்டில் செய்து
கட்டிலில் படுத்து
கட்டிலில் இறந்தபின்னும்கூட
மனிதனுக்கு பூபோட்டு
மேளமடித்து
எரிக்கவும் சந்தனம் கேட்கிறது ஆசை;

மரணத்தில் செரிக்காமல்
பிணத்தோடு எரியாமல்
ஒன்றை மேலாக்கி
மற்றொன்றைக் கீழாக்கி
முன்னிற்றலில் மேலோங்கி
மேலோங்கி
மேலோங்கி
கீழேயேக் கிடக்கிறது ஆசை;

இறக்கம் கேட்டு
மனிதம் தேடி
பஞ்சமொழிய மனதுள்
கெஞ்சி,
மனதை லஞ்சத்தால் குடித்து
இனாமிற்கு தன்மானத்தை விற்று
ஓட்டுச்சாவடியுள் வீணாய்
பதவிகேட்டு அலையுது ஆசை;

பிணமடித்துத் தின்கையில்
நாக்கில்சொட்டும் ரத்தத்தைப் போல
ஆங்காங்கே
நர பல் கடித்து
நீ நானென
நாம் போட்டுக்கொள்ளும்
சுயநலச் சண்டைகளுக்குள்
ஆசையும் சொட்டிக்கொண்டேயிருக்கிறது;

ஆசையை
அறுத்துக் கொள்வதேயில்லை நாம்
அதற்குள் நின்றுவிடுகிறது மூச்சு!!
———————————————-
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இனிக்கும் கரும்பும்; கண்ணீர் கரிக்கும் பொங்கலும்!!

வ்வொரு விறகாய் சுள்ளி பொருக்கி
ஓராயிரம் கனவை சமைத்து
ஓயாக்  கண்ணீரிலும் உள்ளம் சிரிக்கும் பொங்கல்;
ஒரு துண்டு கரும்பு நறுக்கி  – வீடெங்கும் எறும்பூர
ஒரு பானை வெண்சோற்றில்
வீடெல்லாம் இனிக்கும் பொங்கல்!

உழுத நிலம் பெருமை கொள்ள
உழைத்த மாடு மஞ்சள்  பூட்டி
ஊரெல்லாமெம் வீரத்தை ஆண்டாண்டாய் விதைத்தப் பொங்கல்;
மீண்டும் மீண்டும் மனிதம் துளிர்க்க
மறம் தந்த மண்ணிற்கும்
மாண்பு செறிக்க படைத்தப் பொங்கல்

சிரிக்கும் உழவர் நிலம் வணங்கி
நிற்கா மழையை கேட்டப் பொங்கல்,
நெடு வயலுக்கு படையலிட்டப் பொங்கல்; நாளை
வரவிருக்கும் தலைமுறைக்கு – நம் நினைவை கரும்பிலிட்டு
இன்றைக்குவரை
இனிக்கவைக்கும் பொங்கல்!

வீடு மெழுகி வெள்ளை பூசி
காடு தோட்டம் கழுனி கூட்டி
மனிதச் சுவடுபதியும் வரப்பு செதுக்கி
வாழ்வெல்லாம் வருடந்தோறும் இனிக்கும் பொங்கல்;
தமிழரின் நெடுங்கால மரபை மீண்டும்
மீண்டும் நமக்கே நினைவூட்டும்  பொங்கல்!

வீடு மாறி, நாடு கடந்தும்
தோட்டம் பற்றிய ஈரத்தை,
மண்  மாடு பற்றிய அக்கறையை,
உழவர் குறித்தச் சிந்தனையை உறுத்த வரும் பொங்கல்,
சற்று சிரிக்கும் சிரிப்பினூடே’ அவர்களின் ஒரு சொட்டுக்
கண்ணீரைவிட்டுநமை நனைத்துப்போகும் பொங்கல்!!
——————————————————————-
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் – 15)

காலத்தின்பின் கடக்கும் அத்தனை உயிர்களும்; வாழ்க!!

கையச்சு முறுக்குப் போல உடைகிறது மனசு. நகக்கீறல்களைப் போல மறையாமல் ஒட்டிக்கொண்ட தழும்புகளாக மனதுள் ஒட்டிக்கொள்கிறது வார்த்தைகள். வாழ்வின் மூச்சு நிற்கும்வரை மறக்காமல் வலிக்கிறது நமது ஒவ்வொரு சூடானச் சொல்லும். நாளையைப் பற்றி எந்த அக்கரையுமே கோபத்திற்குக் கிடையாது என்றால் யாரைப் பற்றிய எந்த நினைப்பும் கோபத்தில் பேசும் பேச்சுக்கும் இருந்துவிடுவதில்லை. முள்குத்தி முள்குத்தி மேலும் மேலும் ஒரேயிடத்தில் ரணப்படுத்தி மனதை வலிக்கச் செய்யும் பேச்சைப் பேசுவோர் நிற்குமிடத்தில் தான் வாழ்க்கையும் நமது பிறப்பும் அந்த கடக்கும் நிமிடங்களும் இழிவுபடுத்தப் படுகிறது.

பேசுதல் என்பது உயிர்த்தல் என்பதாகும். காற்று வெளிப்பட சப்தம் பிறக்கும் இடத்தில் கத்திகளைத் தீட்டாதீர்கள். நமது ஒவ்வொரு சொல்லும் ஒரு ஆயுதம். நம்முடைய பேச்சு அத்தனையும் உருவாக்கத்தின் முன்னெடுப்பு. நாம் புரட்டிப் போடவேண்டிய ஒரு சமூகத்தின் கடமை நமது பேச்சில் கலந்துரையாடலில் உணர்வின் வெளிப்பாட்டில் தான் உள்ளது.

அதை வெறும் கோபத்திற்கு உட்புகுத்தி வாழ்வை சாபாமாக்கிக் கொள்ளல் முட்டால்தனமில்லையா? பேசுவோர் மனசு வலிக்குமென்றால் நிறுத்தாமல் பேசுவது கொலையில்லையா? கொத்தும் பாம்பின் விசத்தை பேச்சில் வைத்திருப்பவர்கள் மனிதத்திற்கு எதிரானவர்களில்லையா?

அழுதேப் பிறக்கும் மனிதன் சற்று சிரித்து வாழட்டுமே.., சிரிக்கப் பேசுங்களேன்; சற்று நிதானித்து, சிந்தனைக்குப் புரியப் பின் பேசுங்களேன். கோபம் எனைதாண்டி எப்படி வரும் (?) வராது என்று எண்ணிக்கொள்ளுங்கள்; வராது. பிறரை எப்படி நான் வார்த்தையினால் நோகடிப்பேன், ம்ம்ம் முடியாது, அப்படி மாட்டேன் என்று எண்ணிக்கொள்ளுங்கள், பேசமாட்டீர்கள். பிறகு பேசும் பேச்சினால் பாருங்கள் யார் மனசும் நோகாது. எந்தக் கல்லெறிந்தும் யார் மண்டையையும் உடைக்காது. ஆனால் அப்போதைய உங்களின் பேச்சிற்கு அத்தனை மதிப்பிருக்கும்.

எங்கிருந்து வருகிறது எல்லாம்; நமக்குள்ளிருந்துதானே? யார் செய்கிறார் எல்லாவற்றையும் நாம் தானே? பிறகு நம்மை சரிசெய்ய நாம் நினைத்தால் தானே நமது பேச்சும் சீராகும். சீராகப் பேசுகையில் குழப்பம் இராது. வாதம் எழாது. வம்பு வராது. வம்பில்லையேல் அங்கே கோபமெங்கே வர?

வந்தாலும் நிதானியுங்கள். கோபத்தை அடக்குங்கள். சட்டென கோபத்தை கைவிட முயலுங்கள். எந்தத் தருணத்தையும் உங்களுக்கு வசமாக்குங்கள். ஆகும். இரண்டுமுறை அப்படி முயற்சித்து நிதானித்துப் பேசிப்பாருங்கள், சுற்றம் நம்மை பொறுமைசாலி என்றுப் பேசத்துவங்கிவிடும்.

எல்லாவற்றையுமே; நமக்கான அத்தனை நடப்புக்களையும் அசைவுகளையும் ஏற்படுத்தும் முதல் புள்ளி என்பது நம்மிடமே இருக்கிறது. நமக்கான அத்தனை இழப்பிற்கும் வலிக்கும் நன்றாக யோசித்தால் நடுத்தரமாகத் தீர்மானித்தால் தெரியும் நாம் தான் முதல் காரணமென்று. எனவே எதையும் திருத்தமாக செய்வதெனில்கூட நம்மால் செய்யமுடியும்.

ஆனால் அதற்கு முதலில் நீங்கள் தயாராகுங்கள். பேசுங்கள்; மனம் விட்டுப் பேசுங்கள்; மலரின் இதழ்கள் விரிவதை சட்டெனக் காட்டிக்கொள்ளாத இயற்கை எப்படி நம்முன் மணக்கிறதோ அப்படி மணக்கத் தக்கவர்கள்தான் நாமும். அந்த மணம் நமது பேச்சில் நடப்பில் வாழ்க்கையில் வெளிப்படல் வேண்டும். நம் அருகாமை மனிதர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க நாம் வாழலாமெனில் வாழ்வோமே.

சிரித்துச் சிரித்துப் பேசிப்பாருங்களேன், அன்பால் மனதை வருடிப்பாருங்களேன். தாய் டேய் என்றுதானே அழைக்கிறாள், இங்கே வாடி என்று தானே சப்தம் போடுகிறாள், வலிக்கவா செய்கிறது? அன்பிருக்குமிடத்தில் வார்த்தை கூர்மழுங்கிப் போகலையா?

உண்மை புரிந்தோர் பேசுகையில் வரும் சொற்களுக்கு கை கால் முளைப்பதில்லை. மனதுள் வேர்விடும் சொற்கள் அத்தனை ஆழமானவை. ஒரு சக்தியை மாற்றி ஆக்கப்பூர்வாமாக ஆக்கும் சக்தி பேச்சன்றி வேறில்லை. பாடப்பாட கதவு திறக்குமெனில் பேசப்பேச அன்பொழுகினால் மனக்கதவென்ன மூடியாக் கொள்ளும்?

அடித்தால் திருப்பியடிக்கும் வேகத்தைவிட, பேசுகையில் பொறுத்துக்கொள்ளும் மௌனம் கனமானது. பொறுத்துப் பாருங்கள். நிதானித்துப் பாருங்கள். நிதானித்துப் பழகுங்கள். பொறுமையாகயிருந்து பழகுங்கள். பிறகு பேசுங்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பிருப்பதை பின் உணர்வீர்கள். நல்லவனின் கோபம் நாலும் செய்யுமென்பதை அப்போதறிவீர்கள்.

ஆனால் கோபப் படாதீர்கள் என்பதற்கு அர்த்தம் கோழையாய் இருங்கள் என்பதல்ல, வீரம் வெளிப்படும் தருணத்தை அளந்துக்கொள்வதற்குத்தான் கோபத்தை தவிர்க்கவேண்டியுள்ளது. யாரைப் பேசுகிறோம் என்றுப் புரிந்துக்கொள்வதற்குத்தான் கோபத்தை தவிர்க்கவேண்டியுள்ளது. என்னப் பேசலாமென்பதை தெரிந்துப் பேசுவதற்கும், சொல்ல வருவதை யாருக்கும் வலிக்காமல் சொல்வதற்கும் கோபம் கலக்காமல் பேசிப்பழக வேண்டும்.

வலி வரும் போகும்; பேசினால் வரும் வலி மட்டும் தான் போவதில்லை, காலத்திற்கும் வலிக்கிறது. எனவே பார்த்துப் பேசுங்கள். உங்கள் பேச்சினால் ஒரு மலர் புதிதாகப் பூக்காது ஆனால் வாடும். நீங்கள் பேசி ஒரு குழந்தை தானாகப் பிறக்காது ஆனால் பேசி ஒரு உயிரைக் கொல்ல இயலும். பேச்சு ஒரு ஆயுதம். வெட்டும் கத்தி மாதிரி; அதை கோபத்தை நறுக்க மட்டுமே கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

பேச்சு வெறும் வெளிப்படும் காற்றல்ல சப்தம் மட்டுமல்ல மின்சாரம் போன்றது; படாரென பிறரை தொட்டுவிடும், எனவே அதை மனதைத்தொட மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள். பேச்சு ஒரு ரசனை, பேச்சு மனதிற்கு இதம்; அதில் காதலை அன்பைப் பூப்பித்துக் கொள்ளுங்கள்.

பேச்சு என்பது வலிமை; பலம்; அதை நிறைய நிறைய எல்லோருக்கும் கொடுக்கமுயலுங்கள். பேச்சு ஒரு வரம்; சாபமல்ல என்பதை பேசிப் பேசி புரியவையுங்கள். நம் பேச்சின் சொற்களின் உணர்வின் அசைவுகள் நன்னடத்தையை மட்டும் வளர்க்கட்டும். அதற்கான நம்பிக்கை எங்கும் பரவட்டும். பேச்சில் ஒரு குழந்தை சிரிக்கிறது. குழந்தை சிரிக்கப் பேசுகிறோம். அப்படி எல்லோரிடத்தும் பேசுவோம். எங்கும் மனிதப் பூக்கள் மலரட்டும்.. வாழ்க்கை யாவருக்கும் ஆனந்தத்தோடே வசப்படட்டும்.. முட்களில்லா சொற்களால் மூடும் இதயக் கதவுகள் இனி அன்பினால் திறக்கட்டும்.. அடுத்தவர் என்று நினைக்காத நெருக்கத்தை நமக்குள் நாமெல்லோருமே ஆக்கிக்கொள்வோம்.. நம்மைத் தொட்டுச் செல்லும் காற்று நம்மிடமிருந்து நமது நல்லவைகளை மட்டுமே கொண்டுச்செல்லட்டுமே.. அதனால் காலம் இனியதாக மாறட்டுமே..

வாழ்க; காலத்தின்பின் கடக்கும் அத்தனை உயிர்களும்!!

வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்