அது நாங்கள் வாழ்ந்த வீடு.. ஈழத்து வீடு!!

ங்கள் வீட்டை
அன்று நாங்கள் வெடிசப்தமில்லா
தருணத்தில் தான் கட்டினோம்..

இன்று அந்த வீடும்
வீடு முழுக்க வெடித்த குண்டுகளின் சப்தமும்
சல்லடை சல்லடையாக சாய்ந்துவிழுந்த சுவர்களின் மீது
காய்ந்த ரத்தமுமே இருக்கிறது..

நாங்கள் அந்த வீட்டை நினைத்து நினைத்து
அழுகிறோம்
அந்த வீட்டிற்கான அடையாளமாக இன்று
எங்களின் கண்ணீர் மட்டுமே மிச்சம்..

ஒருவேளை அந்த வீட்டின் உடைந்த சுவரும்
சுவற்றின் ரத்தமூறிய மண்ணும் நாளை
வேறொரு இனத்தின் வீடாக மாறலாம்

மாறியபின் எங்களை வென்றதாக
அந்த இனத்தின் மக்களும் குழந்தைகளும்
பேசிக்கொள்ளலாம் –

ஆனால் அந்த வீட்டின் உயிர்ப்பில்
ஒரு கனவுண்டு
நாங்கள் கண்ட கனவின் வலியூறியதன் வடு
அந்த வீட்டின் மண்ணோடு மண்ணாக கலந்துண்டு

அப்படிக் கலந்த
எங்களின் உயிர்பிசைந்த வீடுகளங்கே
அம்மண்ணில் நிறைய இருக்கின்றன –

அவ்வீடுகளால்
அம்மண்ணிலிருந்து மீண்டும் முளைவிடும் எமது சுதந்திரம்
எமது சுதந்திரத்தைக் கொண்டாட
அன்று அந்த வீடு மீண்டும் எங்களுக்குச் சொந்தமாகும்..

அந்த வீட்டின் சுவர்களுக்கு மீண்டும்
தமிழ்பேசுமெங்கள் குரல் கேட்கும்..

அந்த தெரு வழியே போகும் ஜனங்கள்
மீண்டும் நாங்கள் வந்துவிட்டதைக் கண்டு
சிரித்துக் கொள்வார்கள்
மயிர்க்கால் சிலிர்க்க பூரித்துப் போவார்கள்..

அதுவரை
அந்த வீட்டில் அடைபட்டிருக்கும்; எங்களின் சிரிப்பொலியும்,
நாங்கள் கத்தி கதறி ஓலமிட்ட குரல்களும்,
ஒரு மூத்தக் குடியின் விடுதலை வேட்கையும்!!
——————————————————-
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தீ நாக்கில் கருகும் ஈழத்துக் கனவுகள்..

யிர் உயிர் உயிரென்று
சொல்லிக்கொண்டிருக்கும்போதே
உதிர்கின்றன எம் உயிர்கள்..

தானாடாவிட்டாலும் தசையாடும் வர்கத்தின்
உயிர்வாடிப் போகிற தொப்புள்கொடி உறவுகளெல்லாம்
ஒவ்வொன்றாய் அறுகிறது..

மனதிற்குள் சுமக்கும் உறவில்லை
உயிர் உணர்வு முழுதும்
ஒரு இனமென்று கலந்த தமிழ்ரத்தமது’ சுடுகாற்றில் உறைகிறது..

சொட்டச் சொட்ட வலிக்கும்
கணம் கடப்பதற்குள்
ஆறாய் பெருக்கெடுக்கிறது மீண்டும் அதே தீராக் கண்ணீர்..

ஒரு இலை காற்றில் காம்பறுந்து விழுவதற்கீடாக
வெந்தும் நைந்தும் வெகு சொல்பமாய்
வேகிறது எங்களின் இதயங்கள் கேட்பாரற்று..

நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளியிலும்
கேள்விகள் கோடி கனத்திருக்க, கிடைக்காத நியாயத்தில்
காலத்திற்குமாய் உதிரத்தில் நனைகிறது எங்கள் பூமி..

பச்சைமண்வாசம்போல் எங்களின்
உடல்கருகும் நெடி வீசியும்
அடைத்தேக் கிடக்கின்றன திறக்கப்படவேண்டிய நீதியின் கதவுகள்..

ஊருக்குத் தெரிந்தும்
உலகிற்குத் தெரிந்தும்
இன்னும் –
யாருக்குத்தெரிந்து அவன் இழைக்கவேண்டிய அநீதிகள் மிச்சமுள்ளதோ(?)!

காலம் ஒருநாள் அவனைக் கேள்வி கேட்கும்
அவனின் சட்டைபிடிக்கும்
மண்ணில் சாயும் அவனின் –
தந்திரப் போக்குகளை வென்று எங்களின் விடுதலை துளிர்க்கும்..

எல்லாம் சரிதான்,
எல்லாம் நடக்கும்,
எம் மாவீரர்கள் என்னாவார்கள்???

அதுவரை தீ நாக்கில் கருகும் கனவுகளென இன்னும்
எத்தனைப் பேரை இப்படி
தின்று செறிக்குமோ இக் காலம் ?
——————————————————————–
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குழந்தைகளின் கையில் கடவுளின் பொம்மைகள்.. (அணிந்துரை)

லகின் தலைகீழ் விகிதாச்சாரங்களை நேர்படுத்தும் வித்துகளே குழந்தைகள். வாழ்வின் பல மாற்றங்களை குடும்பத்தின் வேரில் ஊடுருவி ஒரு வானெட்டும் தீப்பந்தவெளிச்சத்தை அவ்வேரின் நுனியிலிருந்து பிடுங்கி உலக இருட்டைப் போக்க காண்பிக்குமொரு நெருப்புவிருட்சத்தின் தீப்பொறியை ஒவ்வொரு குழந்தைகளும் ஏந்திக் கொண்டேப் பிறக்கின்றன. அந்த குழந்தைகளின் மகத்துவத்தை கவிதைகளாக்க முயன்றிருக்கிறார் இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவென்றி நா. சுரேஷ் குமார்.

கவலை மறக்கும் வித்தை, காற்றில் கையலசிவிட்டு கடவுளைத் தொட்டதாய் வாய்பூத்து மலரும் விளையாட்டு, கண்முன் காணும் கடவுளுக்கும் கையிலிருக்கும் பொம்மைக்கும் ஒரே மதிப்பைத் தரும் சமன்பாடு, விரும்பியதை விசமாயினும் உடனே தின்றுவிடும் சுயசுதந்திர மனப்போக்கு, கண்ணில் நீர்பூத்தாற்போல் பூரிப்பு பொங்கிவரும் மகிழ்ச்சிக்கான தருணங்களின் ஆளுமையென அத்தனையையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளதொரு தெய்வீக கொடையான குழந்தைகளின் ஆடல்பாடல்களையும் அதிசயக் குறும்புகளையும் உள்வாங்கிக் கொண்டு, அக்குழந்தைகள் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதாகவே பாவித்து அசையாப் பொருள்களினிடத்தும் அளவலாவிக்கொள்ளும் அத்தனை ரசனைமிகு தருணங்களையும் எழுத்துக்களாக்கி கவிதைகளுக்குள் கோர்க்க முனைந்திருக்கிறார் கவிஞர் நா. சுரேஷ்குமார்.

பொதுவாகவே குழந்தைகள் மரத்தினிடம் பேசுவது, பொம்மைகளிடம் பேசுவது, காக்கா குருவிகளைக் கூட விரட்டி விளையாடுவது, கைமீதுவந்து அமருமொரு ஈயைக் கூட முதன்முறைப் பார்க்கையில் உடனே விரட்டிவிடாமல் அதை என்னவென்று பார்த்துவிட்டு பின் பிடிக்க எத்தனிப்பதென அவர்கள் செய்யும் அத்தனை செயல்பாடுகளுக்குள்ளும் தனது காமிரா கண்களைப் புகுத்தியிருக்கிறார்.

குழந்தைகளின் செய்கைகளில்
ளிந்திருக்கின்றன
எழுதப்படாத கவிதைகள்” எனும் வரிகள் என்னைச் சற்று புரட்டியேப் போட்டது. காரணம் அதே மனநிலையில் நான் தேடியபோதெல்லாம் எனக்குக் கவிதையைக் கொடுத்ததாலேயே என்னொரு ‘குழந்தைகளின் உணர்வுசார்ந்த கவிதைத் தொகுப்பிற்கு ‘ஞானமடா நீயெனக்கு’ என்று தலைப்பிட்டுள்ளேன். அதுஒத்த கவிஞரின் இச்சிந்தனை ‘அவர்களின் வளர்ந்துவிட்ட நிலையிலுள்ள அடுத்தகட்ட நகர்வையும் எழுத்தாக்கிக்கொள்ள அவசியப்படுத்தும் தூண்டுதலை எனக்கு ஏற்படுத்துகிறது.

ஒரு குழந்தைக்கு விளையாட சொப்புகளில்லா சமயம் நாமே கூட அவர்களின் விளையாட்டுப் பொருள்களாய் ஆகிவிடுகிறோம். குழந்தை தன் மீதேறி மீசைப் பிடித்து இழுப்பது, கண்களில் விரல் நுனியிட்டு நோண்டுவது, உதட்டைப் பிடித்துக் கிள்ளுவதென நம் வலிகளின் மறுபக்கம் தாவி தனது பொம்மையிடம் விளையாடும் மனப்பாங்கை இத்தொகுப்பின் கவிதைகள் ஆங்காங்கே வெளிப்படுத்துகின்றன.

உதாரணத்திற்கு –

பொம்மையாய் மாறினேன்
எதிர் இருக்கையில்
குழந்தை”

“தன்அண்ணனின் ஆடைகளை அணிந்து
சோளக்காட்டு பொம்மையாய் நின்றது
குழந்தை”

“தூங்கிப்போனது குழந்தை
அழத் தயராகிவிட்டன
பொம்மைகள்”

“தூங்கவில்லை பொம்மை
கதைசொல்லத் துவங்கியது
குழந்தை”

இப்படி பொம்மைகளுக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளியை கவிதைகளால் நிரப்பிக் கொண்டிருக்கும் இப்படைப்பு மெல்ல கரையொதுங்கி என் உறவுகளான ஈழதேசத்து குழந்தைகளைத் தேடுகையில், கண் பெயர்த்து கண்ணில் வைப்பதுபோன்று, இடம் பெயர்ந்து இடமாக வாழும் ‘ஒரு தாயின் மண் விடுதலைக்கான வேதனைக்குள் அடைபடுகிறது பாருங்கள், அவ்வுணர்வே கவிதையின் உச்சம்.

இதோ அந்த மூன்று வரியில் எப்படி உள்நின்று ஒரு படைப்பாளி பேசுகிறான் என்பதையிங்கே காணலாம் –

இடுப்பில் குழந்தை
நகரும் இருப்பிடம்
வேதனையில் ஈழத்தாய்

இத்தகு குறுகிய வார்த்தைகளுக்குள் ஒரு இனத்தின் இத்தனைவருட சோகமும் ‘தீரா ரணமென புதைந்துகொண்டது படைப்பாளிக்கே தெரியாத படைப்பின் ஆழஉணர்வுபோல் எண்ணுகிறேன்.

அடுத்து அங்கிருந்து எழுத்தாணியின் முனையாக மனசு நகர்ந்து வேறிடம் பார்க்கிறது. பார்க்குமிடத்தில் தாய் முகம் தெரிகிறது, பிள்ளை துப்பாக்கியில் எல்லோரையும் சுட்டு விளையாடுகிறாள், அவள் சுடச் சுட துப்பாக்கி முனையிலிருந்து சிந்துகிறது கவிஞனின் பார்வை முழுதும் கவிதைகளாக இப்படி –

சுட்டது குழந்தை
வலிக்கவில்லை தாய்க்கு
பொம்மைத்துப்பாக்கி”

“புயல்மழையில் விளையாட்டு
கரைசேருமா கப்பல்
கவலையுடன் குழந்தை”

‘’குளிரில் நடுங்கின பொம்மைகள்
ஸ்வெட்டர் அணிவித்து விட்டது
குழந்தை” ஆஹா!! எத்தகைய மனப்பாங்கிது?!! புறாவிற்கு சதையறுத்துத் தந்த சிபியின் தாராளமன அடையாளமில்லையாயிது? ஒரு குழந்தையாய் பிறக்கையில் உண்மையிலேயே அது தனது உயிரில்லா பொம்மைக்குக் கூட வலிக்குமோ எனும் கருணைநிறைந்த நுட்ப மனதோடுதான் பிறக்கிறது என்பதன் வெளிப்படில்லையா? பின் நாம் கற்றுதரும் பேச்சும் செயலும் வாழ்தலுமே அக்குழந்தையை மாற்றத் தக்கது எனில்; இச்சமுதாயம் இப்படி சுயநலக்கிடங்கில் வீழ்ந்துக்கிடக்க நாமும் ஏதோவொரு வழியில் நிச்சயமாகக் காரணமாகியிருக்கிறோமெனும் தனைநோக்கியதொரு குற்றவுணர்வு படர்வதை மறுப்பதற்கில்லை.

பொம்மைகள் உலகத்தில்
தலைவனென்று யாருமில்லை
குழந்தைகளும் பொம்மைகளே”

“குழந்தைகளின் பார்வைகளில்
பொம்மைகளாய்த் தெரியவில்லை
பொம்மைகள்”

கப்பல்கள் தயார்
குழந்தைகள் எதிர்பார்க்கின்றன
மழையை”

ச்ச!! இது தான் ஒரு கவிதை ஏற்படுத்த வேண்டிய தாக்கமென்று கருதுகிறேன். கையளவு சர்க்கரை, இரண்டு ஏலக்காய், கொஞ்சம் மாவு, சொச்சத்திற்கு தேவையான உபரிகள்சேர சர்க்கரையின் இனிப்புச்சுவை; பலகாரத்தின் சுவையாகிவிடுவதைப் போல, மூன்று வரிகள்’ அதற்குள் ஐந்தாறு வார்த்தைகள்’ இடையே வானமும் பூமியுமாய் இனிப்பு போல காரம் போல உணர்வு கொப்பளிக்கும் ஒரு மனசு இங்குமங்குமாய் விரியுமிடத்தே கவிதை வெல்கிறது. கவிஞனும் வெல்கிறான்.

தன் கையிலிருந்த காகிதம் கப்பலானதும் மழைக்கு கையேந்தும் மனசு தான், வயிற்றில் பசி என்றதும் கண்களில் கண்ணீர் உதிர்த்த மனசு தான், காடு கனக்கும் பொருள்கள் சூழ்ந்திருந்தும் தூக்கம் இமையை நிறைக்க உடனே தூங்கிப்போன மனசுதான்; வளர்ந்ததும் தனக்கான அத்தனைத் தேவைகளைப் போல பிறருக்கான தேவைகளையும் நாம்கூட தீர்க்கக் கடமைப்பட்டுள்ளோம் எனும் சமதர்மத்தையும் மறந்துப் போகிறது’ என்பதையெல்லாம் உணரவைக்கும் வைர வரிகளுக்குச் சொந்தமானவனே சொல்லில் மனசுபூக்க, மஞ்சளாய் சிவப்பாய் கருவண்ணங்களாய் நிறைய, வெள்ளைத் தாளெல்லாம் கவிதையாய் கவிதையாய் கவிதையாய் நிறைகிறான்.

இங்கும் அப்படி சின்ன சின்ன வார்த்தைகளுக்குள் சிக்கி பெரியதொரு உணர்வோடு தவிக்கும் சிந்தித்தலை நமக்கு இப்புத்தகத்து கவிதைகள் நிறையவே தருகின்றன.

மிட்டாய் வாங்கியது குழந்தை
நாக்கில் எச்சில் ஊறியது
பொம்மைகளுக்கு என்று பார்ப்பது, பொம்மையை உயிரோட்டத்தோடு பார்ப்பதொரு குழந்தையின் மனோநிலை. ஐயோ மழைப் பெய்கிறதே என தாயொருத்தி பிள்ளையை சேலைக்குள் மூடுகிறாள், அப்படியா, நனைதல் தகாதா’ என்று யோசித்த மறுகணமே குழந்தை தனது பொம்மையையும் மார்புக்குள் அடைத்துக் கொள்ளும் தாய்மை பிரதிபலிக்கும் பல சில்லுகளைப்போன்ற சிந்தனைத் தீப்பொறிகளை இப்புத்தகத்தின் வெளியெங்கும் கனமாக அடைத்திருக்கிறார் கவிஞர்.

அதுபோல், கடைசியாய், தீக் கங்கு அடங்காத ஒரு கரித்துண்டின் வெப்பந் தகிக்கும் இவ்வரிகளோடு, வரிகளின் ஆழத்து எண்ணங்களோடு நிறுத்துகிறேன். அந்த எண்ணத் தீமூட்டும் வரிகளைப் பாருங்கள் –

“மதவெறியைத் தூண்டும்
கோயில்கள் வேண்டாம்
குழந்தைகள் போது(ம்)மெனும் வலி, ரணத்தின் ஆழம் என்னவென்று அறியவேண்டுமெனில், குழந்தைப் பேறுக்காகக் காத்திருக்கும் தாய்களைக் கேளுங்கள், அவர்களின் மாதந்தோறும் சிந்தும் கண்ணீரின் துளியெடுத்து சோதனையில் சேருங்கள், குழந்தை குழந்தை என்றே ஏங்கும் தாய்மையின் கனத்தை தாளாமல் தாங்குங்கள் புரியும். பின், ‘மதவெறியைத் தூண்டும் கோயில்கள்’ என்று முடிவேற்றுக் கொண்ட நம் புரிதல் முரண்பட்டுப் போனதன் நோதல் போல்; வாழ்தல் தடம் மாறியதன் வார்த்தைகளினி உயிரற்று வீழ்தலும் நேரும்.

ஆக, இப்படி, ஒரு வெற்று மனசாக கவிதைபடிக்க வந்தஎனை ஊர் கடந்து நாடு கடந்து உலக தெருக்கள் தாண்டி உயிர்களின் வேரினில் ஊடுருவும் பாதைக்கு நகர்த்திய இப்படைப்பின் ஆசிரியர் திரு. முனைவென்றி நா.சுரேஷ்குமார் அவர்களுக்கு என் நன்றிகள்.

மேலும், நிழல் கண்டு நின்றுவிடும் எண்ணத்திலிருந்து அகன்று, ஊருலகின் தாகம் தீர்க்க பாயும் நதியென, தமிழுள்ளங்களின் இதயக் கரைவரை படைப்புக்களாக நீண்டு நிற்கும் பேறுமிக்க அரிய படைப்பாளனாய்த் திகழ, எழுத்தும் எழுத்துசார் எண்ணங்களுமாய் ‘வாழ்தல் வெற்றியோடு அமைய’ இப்படைப்பின் வழிநின்று வாழ்த்தி பெருமிதத்தோடு நிறைகிறேன்.

அனைவருக்குமென் பணிவான வணக்கங்கள்!!

வித்யாசாகர்

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

15, நம் மனங்களை மயக்கும் வசீகர ‘சுந்தர பாண்டியன்’ திரை விமர்சனம்

ட்பின் ஆழம் புரியும். காதல் பரவசமாய் சிறகடிக்கும். கிராமம் பசேலென கண்களில் ஒட்டிக் கொள்ளும். உயர்ந்த மனிதர்களின் முகத்தை இதுவென்றுக் காட்டும். பெற்றோரான தாய் தந்தைக்குக் கூட “கடவுளே நல்ல பையனா விரும்பினான்னா மகளை அவனுக்கேக் கட்டிவைக்கலாமே” என காதலுக்கு சிபாரிசுசெய்து கடவுளையும் வேண்டச்சொல்லும். தப்பு பண்றவந்தான் மனுஷன்; அதை மன்னிக்கறவனும் மனுசனாயிருக்கனும்னு ஒரு பாடம் மனதிற்குள் பதிவாகும். உறவுகள் கூடி சிரிக்கிறது தான் குடும்பம், அக்கம்பக்கத்தார் சூழ அரவணைத்து வாழ்வதுதான் வாழ்க்கைன்னு இப்படத்தின் பாத்திரத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பார்க்கையில் ஒரு சாத்வீக குணம் யதார்த்தமாக உள்ளூறும். ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லி குறையினைப் பெரிதாக எடுத்துக்காட்டி அடித்துக்கொண்டு வெட்டிமாளுவதை விட சம்மந்தப் பட்டோர் கூடி பேசி சரிதவறுகளை அலசிப் பார்த்துக்கொண்டால், நியாயத்தராசினை நான்குக் கைகொண்டு தூக்கிப் பிடித்துவிட்டால் வரயிருந்த இழப்புகள் விட்டு நீங்கி வெற்றியைத் தரும் வாய்ப்பாக மாறிப் போகுமென உலகைப் புரட்டிப் போடுமொரு அறிவுரையை காதல் தீயிட்டுக் கொளுத்தி இளைஞர்களின் கண்களில் வீசுகிறார். காதலின் ரசத்தைக் காட்டி அதன் இருட்டைப் போக்குமொரு வெளிச்சத்தில் வசனங்களைத் தீட்டி பசுமை குறையாத வெளியெங்கும் வீசும் காற்றுப் போன்று மனதெங்கும் படரும் நல்லுணர்வுகளை இள ரத்த வெப்பத்தில் சுடும் காதலினுள் தோய்த்து திரைச்சுருளெங்கும் வண்ணவண்ணமாக அடைத்திருக்கிறார் இந்த “சுந்தர பாண்டியனின்” இயக்குனர் திரு. எஸ். ஆர். பிரபாகரன். அந்த வண்ண வண்ணங்களில் மிளிர்கிறது இயக்குனர் சசியின் லட்சிமிமேனனின் சூரியின் இன்னும் நாயக நாயகியின் குடும்பமாக நண்பர்களாக வந்துப் போகும் அனைவரின் நடிப்பும்.

சிரிக்கவைக்கும் வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, உணர்ச்சிவசப்பட வைக்கும் திருப்பங்கள், ஆமென்று ஒவ்வொரு பாத்திரங்களையும் ஏற்றுக்கொள்ள வைக்கும் நடிப்பு, மனம் துள்ளும் பாடல்களின் வரிகள் காட்சிகள் ஒளிப்பதிவென மீண்டும் நல்லதொரு திரைப்படத்தில் கரைந்துப் போகப் போகின்றன நம் இளநெஞ்சங்களெல்லாம்.

அத்தகைய மிக அழகான காட்சிப் பதிவு, திகட்டாத உணர்வினை காட்சிகளோடு ஒன்றிப்போன மனசாகப் பார்த்து நரம்பின் அசைவெங்கும் அதிரவைக்கும் ரசனைமிகுந்த பின்னணி இசை, லாவகமாக ஒரு இளைஞன் செய்யக்கூடிய கதாநாயக வித்தைகள், இத்தனைக் கோபம் வந்தால் இந்த இடத்தில் நானும் இப்படியேனும் சண்டைப் போடுவேனென ஏற்றுக் கொள்ளத்தக்க போலித் தனம் கூடுதலில்லா சண்டைக் காட்சிகள், நம்மூர் கிராமத்துக் குறும்புதனில் சொட்டும் இனிப்பும் குசும்புமாக கலந்த நட்பு வட்டத்தோடு நகைச்சுவை படமெங்கும் படர்ந்த, ‘அகன்ற மார்பினன் சுந்தப் பாண்டியனின் தீரம்’ அழகிய சசியின் புன்னகைப் பார்வையில் வெளிப்படும் மிக நல்ல காதல் திரைப்படம்.

மனைவிக்கு வலிவந்ததும் இங்கும் அங்குமென ஓடும் கால்களோடு மனதும் ஓட, பெற்றெடுத்த பிள்ளையை வாங்கி உயிர்நுகரும் வாஞ்சையோடு முத்தமிட்டு’ விழுந்தால் பயந்து’ எழுந்தால் தோள்தந்து’ சரிந்தால் இதயத்தில் தாங்கும்’ எந்த அப்பனுக்கு தன் மகளையும் மகனையும் பிடிக்காமல் போகும்?

தவறெனில் கோபப்படும் தாய் தந்தைகளின் ஒவ்வொரு அனல் வார்த்தைக்குப் பின்னும் பிள்ளைகளின் நலன் நோக்கிக் கதறுமொரு சப்தம்தான் உண்டென எத்தனைப் பிள்ளைகளுக்குப் புரிகிறது? அது புரியும் பிள்ளைகளுக்கு அப்பாக்கள் இப்படித் தான் பெரிய மனதினர்களாக இருப்பார்களென ஒரு மாதிரியை இந்தப் படத்தின் மூலம், நாயகன் நாயகியாக நடித்திருக்கும் இரு பாத்திரங்களின் தகப்பனார்களின்மூலம் காட்டுகிறார் இயக்குனர்.

எப்பொழுதும் திட்டிக் கொண்டிருக்கும் அப்பா அவளின் ஒவ்வொரு சந்தோச நகர்வுகளையும் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, முடிவில் ‘சரிம்மா நீ விரும்பியவனையே கட்டிக்கோ போ’ன்னு சொல்லும் போது அந்த மகளின் சந்தோசத்தின் அளவு ‘கடலின் இரு கரைகளை எட்டித் தொட கைவிரித்து இன்னும் ஏழு கடலைத் தேடுமளவிற்கும், கூடுதலாகப் பெரிது’ என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள லட்சுமி மேனனின் நடிப்பும் அழுகையும் அவளுடைய அப்பாவின் அரவணைத்துக் கொள்ளும் நெருக்கமும் மனதை ஒரு நல்லுணர்வில் ஆழ்த்துகிறது.

வேறென்ன இருக்கு மனசுல, வெறும் கர்வமும் சுயநலமும் பேராசையும் மேலதானே அப்பிக் கிடக்குது, அதை சட்டுன்னு உதறி விட்டுட்டா நீ நானு இந்த ஊரு உலகம் எல்லோருமே நல்லவங்க தானே?ன்னு ஒரு கேள்வியை உள்ளுக்குள்ளே மிக நாசுக்காக எழுப்புகிறது இப்படத்தின் நிறைய காட்சிகள்.

அப்படி  ஒரு காட்சியில், “மகனுக்கு பிடித்துப் போச்சு, அவனுக்கு பிடித்த நல்ல வாழ்க்கை அமையனும், அப்பாவே வந்து வீடு ஏறி ரொம்ப நேர்த்தியா கம்பீரமா மிடுக்கு குறையாம பண்பு மிளிரப் பேசி இப்படிப் பட்ட என் பைய்யனுக்கு உன் பொண்ணக் கொடுங்களேன்னு கேட்கிறார். அதைக்கண்டு அந்த நாயகி காதலில் அடக்கிவைத்திருந்த தனது ஆழ்கடல் மனதை எடுத்து வெளியே உணர்வாக வலிமையோடு வெளிப்படுத்துகிறாள். அவளின் தந்தைக்கு பேச நாவெழவில்லை, தன் வீரத்தை கோபத்தை எல்லாம் பாசத்திற்குள் அடக்கிக் கொண்டு கண்கள் சிவக்க நின்று பார்க்கிறார். அடுத்தடுத்தாற்போல் நாயகனின் தந்தை மிக திறமாக அங்கே தனது ஆளுமையைத் திரையிடுகிறார். உண்மையிலேயே அந்த காட்சி மிக நல்ல காட்சி. அதுபோல மிக நல்ல இயக்கத் திறமைன்னு மெச்சத் தக்க மத்தாப்புகள் இக்காட்சிகளைப் போன்று இப்படத்தின் நிறைய இடங்களில் பல வண்ணங்களாக அழகாக கொளுத்திப் போடப்பட்டுள்ளது.

அதிலும், அந்த கடைசி காட்சி, உண்மையிலேயே இயக்குனரைப் பாராட்டவைக்குமொரு சவாலான உத்திதான். ரொம்ப நல்லா ஆரம்பித்து ரொம்ப நல்லாவே முடித்திருக்கிற இந்தப் படத்தைப் பத்தி அப்படி இன்னும் ஆகா ஓகோன்னு எல்லாம் எழுத வேண்டியதில்லை. அது ஆகா ஓகோ தான். ஆனால் படம் என்ன சொல்ல வருதுன்னு சிந்திக்கத் தவறக்கூடாது.

பொதுவாகச் சொன்னால் காதல் தவறில்லை. காதலெனும் இயற்கையான அந்த உணர்வுகுறித்து நாம் நம் தேவைக்கேற்ப மட்டுமான நமக்கொத்ததுபோன்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்வதில் அல்லது புரிதலை நமக்கு வேண்டியப்படி ஒரு சமுதாயமாகச் சேர்ந்து நாம் அமைத்துக் கொண்டதன்பேரில் மட்டுமே இளையப் பருவத்தினருக்கான பல சிக்கல்கள் நேரிடுகிறது.

முதலில், அறிவோட நிதானமா தன் வாழ்க்கைப் பற்றி எதிர்காலம் பற்றி தன் குடும்பம் பற்றி உற்றார் உறவினர் ஊரென நம் அக்கம்பக்கத்து மனிதர்களைப் பற்றியெல்லாம் சிந்தித்து தன் ஒவ்வொரு அடிகளையும் எடுத்துவைக்கும் நல்ல பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் பக்குவப்பட்டிருக்கனும்.

அப்பா புரிந்து அம்மா புரிந்து யாரின் மனசும் வலிக்காம நடந்துக்குற குணமும், வெல்லும் திறமும் பெருக பிள்ளைகள் வளரனும்.

காதலின் புள்ளி எதையுமே யோசிக்காம உள்ளே வந்து விழுந்துவிட்டாலும் அதன் தொடர்புள்ள அனைத்தைப் பற்றியுமே சிந்தித்து அதனைச் சாதகமாக்கிக் கொள்ளும் சாதுர்யத்தை காதலர்கள் வளர்த்துக்கனும்.

பெண்களை தரக்குறைவாக மதிப்பிடுவது, பெண்கள் பற்றி நாராசமாகப் பேசுவது, பெண்களென்றால் தக்க மதிப்புகளை விட்டு துச்சமாகக் கருதுவது, அவர்களுக்குப் பிடிக்காத வகையில் கிண்டலடிப்பது, வெறுப்பேற்றி கோபப் படுத்தி ரசிப்பது போன்ற குணங்களையும், ஆண்களை சும்மா அலைய விடுவது, மனது புரிந்ததும் ஏற்றோ அல்லது பிடிக்கலை இப்படிச் செய்யாதே என்று முகத்திற்கு நேரே சொல்லிவிடவோ எச்சரிக்கவோ தயங்குவதும், பிடித்திருந்தால் காதலித்திருந்தால் வீட்டில் பேசி’ புரியவைத்து’ ஒப்புதல் வாங்கி’ தனது வாழ்க்கையை தான் விரும்பியதுபோல் அமைத்துக்கொள்ள முனையாததும், குறைந்தபட்சம் அது சரியா தவறா என்று கூட வீட்டில் கலந்துக் கொள்ளாததும், வெறுமனே ஆண்களைப் பெண்களும் பெண்களை ஆண்களும் கவரும் வண்ணம் பீடிகைப் போடுவது அல்லது அலங்காரத்தை உடல் வசீகரத்தை இன்னொரு மனம் பித்தாகித் தவிக்க அமைத்துக் கொள்வதையுமெல்லாம் இனி வரும் காலத்து இளநெஞ்சங்கள் தவிர்த்தல் வேண்டும். அல்லது அத்தகைய உடல்கூறு புரிந்த விசயங்களைத் தெரிந்துவைத்துக் கொண்டு சட்டென அதிலெல்லாம் விழாத ஒரு திடநிலையை எல்லோரும் கொள்ளல் நலம்.

அல்லாது தோற்றத்தை மாற்றிக் கொள்வதும், தாடியில் சோகத்தை வெளிப்படுத்துவதும், மது அருந்துவதும் புகைப்பிடிப்பதும் மேலும் நம்மை பலமிழக்கச் செய்து மனதின் வடிகால் வழியே வாழ்வையே இழக்கச் செய்யுமேயொழியே நல்ல மனநிலையை’ வாழ்விற்கான தீர்வைத் தராது.

மாறாக, தனது அன்றாட விருப்பங்களை சொல்லாவிட்டாலும், வெறுப்புக்களை சிக்கல்களை வீட்டில் அப்பா அம்மா அக்கா அண்ணன் போன்ற மூத்தொரிடத்தில் சொல்லி தன் பார்வையை நடத்தையை சூழலை சரிபடுத்திக் கொள்ள முனைதல்வேண்டும். பெண்களை தனது தோழிகளாகவும் நம் தங்கையை காதலியை மனைவியை நாம் வைத்துக் கொள்ள விரும்புவது போன்றும் பண்போடு நடத்தல் வேண்டும். ஒரு ஆண் தனைப் பார்ப்பதை பார்வையாக நேரேடுத்து பேசி தெளிவாக பதில் சொல்லி கடந்துப் போதல் வேண்டும்.

அதேநேரம் வீடும் தனது பிள்ளைகளின் மீது அக்கறைக் கொள்ளுமளவு அவர்களின் உணர்வுகளையும் புரிந்துக் கொள்ளல் அவசியம். ஒரு பெண்ணை ஆண் பார்ப்பதும் ஆணைப் பெண் பார்ப்பதும் ஒரு இனக்கவர்ச்சி. அதில் தவறுகள் நேர்ந்திடா வண்ணம் வாழ்வின் தன்மைகளை’ ரசங்களை’ மதிப்பீட்டை’ பாசத்தை’ நட்பை’ புரிந்துணர்வை’ குறைகளை’ வலிகளை’ ஆபத்துக்களை’ தெளிந்து வெளிவரும் வழிகளை நாம் தான் நம் குழந்தைகளுக்கு நட்புநிறை மனசோடு அவர்களின் மொழியோடு ஒன்றி நின்று சொல்லித் தரனும்.

காதல்னா முதல்ல என்ன? “தனித் தனியா முளைத்து இரண்டும் ஒன்றெனக் கலந்துப்போகிற, ஒரே சிந்தனையாய் ஒன்றிப்போகிற, உயிர்களிணையும் அன்பை எதற்கும் விட்டுக் கொடுத்திடாத, பிரிந்தால் உயிர் போய்விடுமொரு வலியையடையும், ஒரு மனசுக்குள்ளிருக்கும் இரு சிறகுகளில்லையா?

பின்ன அந்த ரெண்டு சிறகும் ஒருங்கே முளைக்கனுமில்லையா? அது முளைத்திருப்பது ரெண்டுப் பேருக்கும் தெரியனுமில்லையா? அதைத் தெரிந்துக் கொள்ள தெளிவாப் பேசிக்கிற அளவுக்கு நாம் நம் ஆண் பெண் நட்பினை வளர்க்கணும். ஆண் பெண் உறவினை ஏற்றத் தாழ்வுகளின்றி புரிதலோடு பழகுமொருப் புள்ளிக்கு நம்மை நாம் நகர்த்தனும். ஒருவரை ஒருவர் புரிந்து ஒரு ஆண் பெண்ணிடமோ அல்லது பெண் ஆணிடமோ கனமா பேசுற, சுயமா எடுத்து தன் மன உணர்வுகளை சொல்லி புரியவைக்கிற, அதேநேரம் ஒருத்தருக்கு பிடிக்கலைன்னா ஒருத்தர் உடனே விட்டு விலகி அவரின் மனதை நோகடித்திடாத நற்பண்பு மிக்கதொரு மனநிலைக்கு வரனும்.

அப்படி ஒரு இடத்திற்கு வந்துட்டோம்னா, நம்ம காதல் ஜெயிக்கும். நம்ம இளைஞர்கள் வெற்றியின் வாலிப்பில் காதல் புரிவர். அப்படிப்பட்ட காதல் கண்ணியமாக ஏற்கப்படும். ஏற்கப்படாத இடத்தில் இந்த “சுந்தர பாண்டியனைப் போல” எதற்கும் துணிந்து நாமும் நிற்போம். நம் துணிவில், காதலில், பண்பில், நடத்தையில் பிறப்பின் முதிர்ச்சியைக் கற்குமிவ்வுலகு; கவலைப் படாதீர்.

அவ்வழியே, அத்தகைய பண்புகளின் நாடியைப் பிடித்து நமக்குத் திரைப்படங்களாக்கித் தரும் இதுபோன்ற திரையிலக்கியங்களின் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் இதர திரைத் துறைச் சார்ந்த அத்தனைக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து திரைத்துறையின் தேவைக்குரிய அளவுமட்டும் நம் முழு வரவேற்பினை திரைப்படங்களுக்கு நல்குவோம்..

அதோடு, ‘குத்தினவன் நண்பன்னு தெரிந்தா அதை வெளியிலக் கூடச் சொல்லாததுதான் நட்பு’ என நட்பின் பெருமித குணத்தோடு முடியுமிப்படம் நிச்சயம் எல்லோருக்கும் வெகு சாதாரமாகப் பிடித்துவிடக் கூடிய சிறந்ததொரு திரைப்படம்தானென்றும் மெச்சுவோம்..

————-*————-*————–

இப் படத்தின் இதர குறைகளும் நிறைகளும்:

குறைகள்:

புகைப் பிடித்தல் மது அருந்துதல் போன்ற காட்சிகளை “வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல” எனும் வசனங்களோடு மீண்டும் மீண்டும் அதன் ஆசைகளைத் தூண்டுவதாகவே காட்சியமைத்துள்ளது. படத்தை நாம்தானே எடுக்கிறோம்? யதார்த்தம் என்பதற்காக தீயப் பழக்கங்களைத் தான் சேர்த்துக்கனும்னு இல்லையே. நல்ல செயல்களை பழக்கவழக்கங்களை அத்தகைய செயல்களின் வீரியன்களைக் காட்டி செய்யக்கூடாதென்பது போன்ற காட்சிகளை திணித்தாவது சமுதாயத்திற்குத் தீமைகளை விளைவிக்கக் கூடிய அத்தகைய செயல்களை செய்யத் தூண்டும் காட்சிகளைத் தவிர்க்கலாமே.

முதல் காதல் மறக்காது, காதலில் இது வெற்றி இது தோல்வி, தோற்றால் குடிக்கணும் புகைப் பிடிக்கணும் தன் நிலை மறந்துத் தவிக்கணும் போன்ற உத்திகள் அடங்கிய அதே பழைய காட்சிகளின் உட்புகுத்தல்கள் என்னதான் இன்றும் இளைஞர்களால் ஏற்றுக் கொண்டு விசில் பறக்கவைக்கிறது என்றாலும் அதெல்லாம் இனி தேவையா? என்று யோசித்திருக்கலாம்.

அடுத்து, அடமாக அதிக பாட்டிகளைக் காட்டி அவர்களில் சிலரை நகைச்சுவையின் பொருட்டாக ஏளனப் படுத்தும் காட்சிகளை இத்தகைய சிறந்த இயக்கத் திறனுள்ள படத்தில் தவிர்த்திருக்கலாம். மாறாக பெரியோரை மதிக்கத் தக்க பண்புகளை வளர்த்தல் நலம். இதலாமென்ன பெரிய விசயமா? ஊர்ல இல்லாததா? எனலாம், ஆனால் இப்படி சின்னஞ்சிறு துளி துளிகளாகத் தான் விழப்படுகிறது பண்பைக் கெடுக்கும் நஞ்சுகள் நம் கலச்சாரத்திற்கிடையே.

அடுத்து அப்புக்குட்டி இறக்கும் தருனமாக வரும் காட்சியில் அவனுடைய நண்பர்கள் கடைசிவரை போலிசு போலிசு என்றே கதறுவது. ஒரு கட்டத்தில் காவலாளிகள் வந்துவிட்டதும் அப்புக்குட்டியின் உடலை வண்டிக்குள் ஏற்றுகையில் அவன் பெயரைச் சொல்லி வருந்துவதாக அங்கே மாறியிருப்பின், ஒரு லேசான செயற்கைத் தனம் அங்கே ஒட்டிக்கொண்டிருந்திருக்காது. இருப்பினும் எல்லோரும் கவனிக்கத் தக்கதுமல்ல. இதுபோல் எல்லோருக்கும் புரிபடாத வகைகளில் இடைபுகுந்திருக்கும் மிக சில குறைகளையே வருங்காலப் படங்களை இன்னும் திறமாக செய்வற்தகென்று சொல்லிவைக்கலாம்.

நிறைகள்:

அழகான காட்சிகளுக்கு அகப்படக்கூடிய, பார்க்கப் பார்க்க ஈர்க்கும் ரம்மியமான இடங்களின் தேர்வும் மற்றும் அதைப் பதிவுசெய்த ஒளிப்பதிவுத் திறனும், அதுபோல், பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் கனகச்சிதமாக நடிகர்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பென்பதையும் மீறி வாழவிட்டிருப்பதும் சிறப்புதான். குறிப்பாக அந்த சுந்தரப் பாண்டியனின் அப்பாவும் அர்ச்சனாவின் அப்பாவும் மனதில் நிற்கிறார்கள். (பாட்டிகள் இதில் அடக்கமில்லை)

முழுக்க முழுக்க காதல் படம்தானே என்று இரு உதடுகள் உரசி வெப்பமேற முத்தமிட்டுக்கொள்வது போன்ற காட்சியையும் மற்றும் அரைகுறை ஆடைகளில் மார்புக்கூடு தழுவி கழுத்துவரை நெளிந்து பார்ப்போரை காமப்பசிக்கு ஆளாக்கும் பாடல்கள் தான் காதல் பாடல்களென சித்ரவதை செய்யாது ரசிக்கும் காட்சிகளை காதலின் மனது பதறும் அதேவேளை அன்பு வெளிப்படும் அருமையான காட்சிகளோடு பாடலையும் காதல் கதையையும் இயக்கியது.

லட்சுமி மேனனின் நடிப்பை நேர்த்தியாக பயன்படுத்தியது. தன் காதலை வீடு ஏற்றுக் கொள்ளுமென்று புரிந்ததும் ஒரு மகள் படும் சந்தோசத்தை ஒரு மயிலாடும் ஆட்டம் போல் அழகாகக் காட்டியது. குறிப்பாக மருமகளே தண்ணிக் கொண்டுவாவென்று சுந்தரபாண்டியனின் தந்தை சொன்னதும் நாயகி தன் முகத்தில் காட்டிய நடிப்பு’ அவரையும் இயக்குனரையும் மெச்ச வைக்கும்.

அதுபோல் நாயகி நாயகன் இருவரின் உயரத்தை சமநிலையாக காண்பிக்க நேராக இருவரையும் காண்பிக்கும் காட்சிகளிலெல்லாம் குனிந்து இழுப்பது ஏதேனும் விளையாடுவது போன்ற காட்சிகளை அமைத்துக்கொண்ட இயக்குனரின் ஒளிப்பதிவாளரின் புத்திசாலித் தனம்.

கடைசியில் தன்னைக் கொல்லவந்த மூவருமே தன் உயிருக்குயிரான நண்பர்கள் என்று தெரிய வருகையில், குறிப்பாக அந்த மூன்றாம் நண்பன் பின்னாலிருந்து கத்தியில் குத்துகையில் மனசு அவனின் துரோகத்தை எண்ணி அழும் ஆழியை அவனின் கன்னத்தில் வழியுமொரு சொட்டுக் கண்ணீராகக் காண்பித்தது.

மிக முக்கியமாக, தனியாக நகைச்சுவைக்காக இடமமைத்து நம்மை மிரட்டாமல் படத்தினூடையில் யதார்த்தமாக வரும் வசனங்கள் மூலமாக எல்லோரையுமே சிரிக்க வைக்கும் எளிய வார்த்தைகளின் ஜோடனையும் அதற்கேற்றாற்போல் நடித்துள்ள சூரியின் நடிப்பும் ரசனைக்குரியது.

ஒரு சாதாரண பாத்திரமாகவும், அதேநேரம் நம் நண்பர்களுக்கிடையே ஒரு நாயகத்துவமுள்ள ஒரு தோழனைப் போலவும், கண்ணியமான காதலனாக, நல்ல மனிதனாக நல்ல நடிகனாகவும் சசியைக் காட்டியதும் அவர் நடித்துள்ளதும் அழகு! பாராட்டுக்குரியதும்!!

அனைவருக்கும் நன்றிகளுடன்..

வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“கனவுத் தொட்டில்” நாவலின் ஆய்விற்கென நம்மிடம் கண்ட நேர்காணல்..

இணைப்புக்களை வாசிக்க கீழே சொடுக்கவும்

இணைப்பு 1 : ஆய்வு ஏற்கப்பட்டதன் கையொப்பச் சான்றிதழ்

இணைப்பு 2 : ஆய்வின் முடிவுரை

நேர்காணல் கீழுள்ளவாறு..

1) குடும்பச் சிக்கலை கனவுத் தொட்டிலின் கதைக் கருவாக எடுத்துக்கொள்ளக் காரணம் என்ன?

இச்சமுகத்தால் சுடப்பட்ட ரணத்தின் வலியில் பிறந்த சாதனையாளர்கள் எண்ணற்றோருள்ளனர். ஏழை பணக்காரர் எனும் ஏற்றத் தாழ்விற்கு இச்சமூகத்தின் உள்ளடக்கமான நாம் ஒவ்வொருவரும் மறைமுகமாகவேனும் பொறுப்பென்பது என் குற்ற உணர்வு.  இதன் வழி; ஒரு படைப்பாளி ஏழ்மை குடும்பத்தில் பிறந்து மெல்ல மெல்ல உயர்நிலையை அடைகையில் அவனின் பார்வை என்றும் இச்சமுதாயத்தின் வளர்க்கப்படவேண்டியவர்களின் மீதிருக்கும் என்பதால், இக்கதையில் வரும் வெண்மதியையும் ஏழ்மைக் குடியில் பிறந்தவனாகச்  சித்தரித்து, அதன் வழி பல சிக்கல்களை ஏற்படுத்தி, உலகின் மாற்றங்களை செய்ய எண்ணுவோர் அதை தன் வீட்டிலிருந்து துவங்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும், நாட்டை நீ தவறு என்பதைவிட இந்த நாட்டில் அடங்கிய நான் தவறு’ எனவே நான் சரியானால் எல்லாம் சரியாகும் என்பதால் எல்லோருமே முதலில் தன்னை சரிபடுத்திக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாக சொல்லும்விதமாகவும் குடும்பச் சிக்கல்களுக்கான நிறைய வழிகளையமைத்து, பின் அவைகளை சரிசெய்து சுபமாக முடியுமாறு இந்நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் சிக்கல்கள் குடும்பத்தில் எவ்வாறு உண்டாகிறது, பின் அவைகளை நாம் எவ்வாறு சீர் செய்யலாம், ஒரு குடும்பம் என்பது எத்தனை நுட்பமானது, பின் அதை எவ்வாறு சிறப்பாக நாம் நடத்துகையில் அது நம் வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை பயக்குகிறது என்பதை படிக்கும் வாசகர்கள் விளங்கிக் கொள்ளவே குடும்பச் சிக்கல்கள் நிறைய இந்நாவலில் கையாளப்பட்டது.

பொதுவாக என் நம்பிக்கை அதுதான் ‘ஒவ்வொருவரும் தன் திருத்தத்தை வீட்டிலிருந்து துவங்கவேண்டும், வீடுகள் ஒவ்வொன்றாக சரியாகுமெனில்  பின் நாடும் மெல்ல சரியாகும்’.

2)   நடையின் உத்தியில் சில இடங்களில் கவிதைகள் வலிந்து புகுத்தப்பட்டதாகத் தெரிகிறதே? கவிஞர் என்பதால் 19 கவிதைகள் இடம் பெற்றுவிட்டதா?

கவிதை என்பது மனதை ஈர்க்கும் விதை. நல்ல கவிதைகள் நல்லெண்ணங்களின் விதைகள் என்பது எனது நம்பிக்கை. பொதுவாக இக்கால இளைஞர்களுக்கு கவிதையின் மீதான ஆர்வம் அதிகம் என்றுணர்கிறேன். எனவே புத்தகத்தைப் புரட்டுகையில் அக்கவிதையினால் உள்ளீர்க்கப் படலாம், அல்லது நாவல் படிக்க விரும்பாதோர் நேரமற்றோர் கூட குறைந்தது அக்கவிதைகளை மட்டுமே படித்தாலும் எனது எண்ணத்தின் ஒரு பாதியையேனும் அவர்கள் தன் மனதில் பதியப்பட்டுக் கொள்வார்களென்று நம்பினேன்.

இன்னொரு முக்கியத்துவ உண்மை என்னவெனில், முதலில் எழுதியவை இக்கவிதைகளே. இக்கவிதைகளை மக்களிடம் கொண்டுசேர்த்தால் நல்லெண்ணம் பரவும் என்று நம்பி அதற்காக எழுப்பப்பட்ட அடுத்தடுத்த பல எழுத்துச் சுவர்களே நாவலின் அடுத்த பல பக்கங்களாக நீண்டன என்பதும் மறைக்கவேன்டாத உண்மை.

3)   காதல் – காதலர்கள் கனவு உத்தியாக அமைத்துக்கொண்டதின் காரணம் என்ன?

காதல் ஒரு ரசம். நாவலின் நரம்பை விரைவு படுத்த எடுத்துக் கொண்ட இன்னொரு ஆயுதம். குடும்பம் எனில் வாழ்க்கை எனில் மனிதர் எனில் காதலும் இருக்குமென்பதன் இயல்பினை இங்கும் கையாண்டுள்ளேன். அதிலும் காதலும் வீரமும் செறிந்தவர் தமிழர் எனும் மரபுவாக்கிற்கு விதிவிலக்கல்ல நானும் என்பதையும் இங்கு எடுத்துக் கொள்ளலாம்.

பின்பு கனவு என்று எடுத்துக் கொண்டால், அதுவும் இந்நாவலின் ஒரு ஆயுதமே. நம் வெளியில் தெரியாத இன்னொரு முகத்தின் அகத்தின் வெளிப்பாடு அது. நிறைய உலக விகாரங்களை நல்லவை தீயவைகளைப் பற்றியெல்லாம் பேசிவிட்டு பின் வெகு சுருக்கமாக ஆனால் அவன் இப்படிப்பட்டவனென்று சொல்லிவிட்டுப் போக கனவுகள் இலகுவாக கைகொடுத்தன.

அதுபோல் படிப்போருக்குத் தெரிந்து, அந்த பாத்திரத்திற்கு தெரியாமல் சில சம்பவங்கள் கதையில் நடந்துவருகையில் படிப்போருக்கு பதைப்பு கூடுகிறது, அங்ஙனம் பதைபதைத்து, தவித்து, ரசனை கூடி இக்கதையின் பாத்திரங்களைப் பார்க்கையில் இயல்பு அழுந்தப் பற்றிக் கொள்கின்றன மனதில்.

உதாரணத்திற்கு கனவில் பார்த்தவள் போலவே கதாநாயகியும் இருந்தது. ராணியைப் போலவே ரயில் தண்டவாளம் கடந்த அக்குழந்தையின்  தாய் முகம் அமைந்திருப்பது போன்றவைகள்’ கதையின் பாத்திரத்திற்கு வலிமை சேர்த்து கதையை மனதில் அழுத்தமாக பதியச் செய்வதாக அப்போது அந்நாவலை எழுதுகையில் நம்பியிருந்தேன்.

4)   இன்றைய காதல் – காதலர்களின் செயல்பாடுகள் எதிர்கால சமுதாயத்தைச் செம்மைப்படுத்துமா?

முழுதாக நம்புவதற்கில்லை. ஆயினும் காதலால் எத்தகைய மாற்றத்தையும் நிகழ்த்தும் இளைஞர்களை நாம் கொண்டுள்ளோம். முதலில் காதலை ஒரு உணர்வாகப் புரியும் புரிதல் இளைஞர்களிடத்திலும் பெற்றோரிடத்திலும் வேண்டும். அது ஒரு மனதில் ஊரும் உணர்வு. அது பின் எத்தகைய வடிவங்களில் மாற்றம்கொள்ளும், எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்துமெனும் தெளிவை நோக்கிச் சிந்திக்கக் கூடிய பக்குவத்தை நாம் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குக் கொடுத்தல் வேண்டும். காதலால் சாதிமத பாகுபாடு ஒழியும், காதலால் பிறந்த நாகரீகம்போல் சில வெற்றிகள் கிட்டும், அதேநேரம் பெரிய இழப்புக்களும் நேரிடத் தக்க சமுதாயத்தைத்தான் நாம் சமைத்து வைத்துள்ளோம் என்பது புரியவேண்டிய ஒன்று.

எனவே காதல் என்பது யாதெனில் என ஆரம்பத்திலிருந்து நாமெல்லோருமே சற்று இலக்கிய மற்றும் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிவிட்டு, நடைமுறை ஆராய்ந்துக் கொண்டு, எதிர்கால நன்மைக் கருதி இடத்திற்கு ஏற்றார்போல் முடிவெடுக்கத் தக்கதாகவே காதல் மற்றும் காதலர்கள் இருக்கையில் முழுமையாக இச்சமுதாயத்தை காதல் செம்மைப் படுத்தும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் செம்மைப் படுத்தும் வலிமைக் காதலுக்குண்டு.

5)   இன்றைய அறிவியல் யுகத்தில் கடவுள் பக்தி என்பது மூடநம்பிக்கை யில்லையா?

இல்லை. அறிவியல் என்பது நம் அவசியத்திற்கு நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு தேடுதல், அல்லது நம் தேவையாக நாம் வலிந்து ஆக்கிக்கொன்டதன் விளைவு. கடவுள் என்பது நமையறியாது நமக்குள் ஏற்படுமொரு தேடுதல். அதில் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள ‘அலசிப் பார்க்கும் சரி தவறு ஆதாரங்களாகவே’ இன்றைய பக்தியும் பக்திசார் இன்ன பிறவும் இருக்கின்றன.

இன்னும் யதார்த்தமாக சொல்வதெனில், அறிவியல் நமக்கு உதவியாக இருக்கும் குழப்பத்தை நீக்கும் அமைதியைத் தருமா எனும் கேள்வியையும், கடவுள் விசயத்தில் புரிதல் ஏற்படுமெனில் உள்ளே அது மனித மாண்பினை சுரப்பிக்கும், நல்லோர் அல்லாரையும் பகுத்தறியச் செய்யும், உள்ளே கருணை சொட்ட சொட்ட அன்பூறிய ஒரு மனதை ஈரமாக்கியே வைத்திருக்கும் எனும் நம்பிக்கையையும்’ ஏற்குமாறே நமக்கான சுற்றங்களும் கற்பிதமும் அதிகபட்ச வாழ்பனுபவமும் உலக ஆதாரங்களும் உள்ளன.

6)   கடவுள் பக்தியை இந்த நாவலில் வலிந்து புகுத்தப்பட்டதாகத் தெரிகிறதே?

ஒரு இளைஞன் அல்லது இளைஞி வளர்ந்து வரும் பதின் பருவத்தில் ஒன்று காதல் குழப்புகிறது, அல்லது கடவுள் குழப்புகிறார். இரண்டிலும் தெளிவை ஏற்படுத்துவது ஒரு படைப்பாளியான என் கடமையாக எண்ணியதன் மூலம், அன்று எனக்குப் புரிந்துள்ள அளவில் கடவுளின் இருக்கு இல்லை பற்றி பேசி, ஒரு நடுநிலை சிந்தனையை நிலைநிறுத்த எண்ணியதன் கசிவு அது.

கடவுள் பற்றி நான் சிந்தித்த பல கோணங்களை எனை வாசிப்போருக்கும் தெரியப்படுத்தி தீர்ப்பினை இது சரியென்று அவரவர் எடுத்துக்கொள்ளத் தக்க அமைக்க எடுத்த முயற்சி அது, வெறும் திணிப்பு அல்ல.

7)   கடவுள் பக்தியைச் சிலர் தவறாக – தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விலக்க வேண்டியதை முற்றும் மிகையாக அனுபவித்து சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே?

கொடுந்தவறு. கடவுளை நம்பும் மனிதன் மனிதரை வெறுக்கத் துவங்கிய இடத்திலிருந்தே மனிதன் கடவுளாக ஆசைப்படவும் துவங்கியிருப்பானென்று எண்ணுகிறேன். இதுபோன்ற கோளாறுகள் எல்லாமே நாம் உருவாக்கியுள்ள ஏற்றத் தாழ்வுள்ள சமுதாயத்தின் பின்விளைவுகள் மட்டுமேயன்றி வேறில்லை. தின்பதற்கு சோறில்லாதவன் திருடிப் பிழைக்க பயந்து காவியுடை தரித்துக் கொண்டது நம் மேல் நாமேயிட்டுக் கொண்ட சாபமன்றி வேறில்லை.

எல்லோரும் சமமென்று மனிதரை மனிதர் மதிக்கத் துவங்கும் நாளில் இதுபோன்ற அவலங்கள் தானே நீங்கிப் போகும். என்றாலும், அதுவரை இதுபோன்ற தீய சக்திகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கடவுளை மனிதரிடம் தேடுவதை விட்டுவிட்டு தன் ஒழுக்கத்தின் மூலம் தேடுவது பயனளிக்கலாம்.

8)   படைப்புகளின் எழுத்தின் மூலம் விபச்சாரத்தை ஒழிக்க முடியும் என்று தாங்கள் கருதுகிறீர்களா?

ஒரு விதையில் நூறு பூ பூக்கும். நூறில் ஐம்பதேனும் மீண்டும் விதையாக மண்ணிலூன்றும். ஐம்பதில் ஐயாயிரமேனும் பூவாக மலரும், அவைகள் காய்த்து மீண்டும் விதைகளாகலாம், விதைகள் விருட்சமாகும் பட்சத்தில் கனக்குமொரு காடு ஒரு ஒரு விதைக்குள்ளும் அடங்கியுள்ளதைப் போன்று; ஒவ்வொரு எழுத்துக்குள்ளும் இச்காமுதயத்தின் மாற்றங்கள் அடங்கிக் கிடக்கின்றன. இவ்வுலகின் முடிவு ஒருவேளை நாளை எழுத்துக்களாலும் தீர்மானிக்கப் படலாம் என்பது என் தொலைதூரப் பார்வை.

பின் இதில் விபச்சாரத்தை ஒழிக்க வழியெங்கே எனில்; எரிவதிலிருந்து ஒன்று பஞ்சினை அகற்றவேண்டும் அல்லது தீயை அணைக்கவேண்டும். என் பணி இந்நாவலில் விபச்சாரத் தீயை அணைப்பதில் முக்கியத்துவம் கொண்டிருந்தது.  ஊசியை பிடுங்கினாலும் நூலைப் பிடுங்கினாலும் ஒரு கலாச்சாரம் தவறான பாதையில் தைக்கப்படுவதை நிறுத்திவிடலாம் என்று எண்ணினேன். விபசாரத்தை அணுகும் மனசொன்று வாசிக்க வருமாயின் தீயென சுட்டு விலகி கைவிரித்துப் பிடித்துக்கொள்ளும் பிறரையும் என்றெண்ணினேன். யாரோ எங்கோ ஒருவரேனும் படித்து பதறிப் போய் தன்னை சரிசெய்துக் கொள்ள எண்ணினால்; அந்த ஒரு விதையிலிருந்து நாளைய நல்லதொரு சமூக மாற்றத்திற்கான காடு பரந்து விரியாமலாப் போகும்?

9)   விபச்சாரம் தொழிலாக – பாதுகாப்பானத் தொழிலாக அங்கிகரிக்க வேண்டும் என்று போராடும் பெண்களையும் தாங்கள் சாடுவதற்கானக் காரணங்கள் யாவை?

அது முதலில் பெண்களுக்குப் பாதுகாப்பானதில்லை என்று அழுத்தமாக உணர்வுப்பூர்வமாக நம்பியதால். நிறைய ‘விபச்சாரம் குறித்தும் அதை ஏற்றுக் கொள்ளல் குறித்தும் ஆழமாகச் சிந்தித்ததால். அங்ஙனம் தாம்பத்யம் ஒரு தொழிலானால், வாழ்வின் ரசம் குறையும், கட்டுப்பாடு தகர்க்கப்படும், விலங்கின் மூர்க்கம் அதிகமாக புத்தியிலேறும், காதல் மெல்ல ஒழிந்து காமம் விற்பனைப் பொருளாகும், குடும்பத்தின் அர்த்தம் ஏதுமற்றவையாகி வெறும் உண்ணல் உறங்கல் புனர்தலோடு வாழ்க்கை நின்று போகலாம். இதில் மிதிபடுபவை பெண்மையாகவே மிஞ்சுமொரு சூழல் நம் சமூகத்தில் பின்னிப் பிணையப்பட்டுள்ள பலதைப் பற்றி சிந்திக்கையில்’ கட்டுப்பாடான வாழ்க்கையே நம் தரத்தை உயர்த்துவதாகவும், பெண்களுக்கு நேரும் இழிசெயல்பாடுகளிலிருந்து  பெண்களை காக்கக்கூடுமென்றும் மரியாதைப் படுத்துமென்றும் எண்ணுகிறேன்.

அதேநேரம், உடல்மொழி குறித்த, உடல்கூறு சம்மந்தப்பட்ட, ஆண்பெண் எனும் இருவேறு பிறப்பின் மாற்றம் வேறுபாடு மற்றும் தேவைகள் குறித்த பாடங்கள் காலத்தின் அணுகுமுறையொத்து எல்லோருக்கும் புரிதலோடு அமையுமெனில்; வறுமை நீங்க வழிவகுக்கவோ அல்லது வறுமைக்கான தொழில் வேறு உடலுக்கான பசி வேறென்பதை நம்மால் எல்லோருக்கும் புரியப்படுத்த முடியுமெனில்; காமம் ‘விலைபோகுமிடத்து நிகழும் விபச்சாரமெனும் வியாபார நிலை அற்றுபோய், அது வாழ்வில் ருசிக்கும் காதலாக கணியலாம்..

10)           எளிமையாகச் சம்பாதிக்க விபச்சாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தொழில் செய்யும் பெண்கள் அதிகரிக்க யார் காரணம்?

அப்பெண்களை தெருவில் நிற்கவைத்த நாம் அனைவரும் காரணம். நம் சமுதாயம், நம் கலாச்சாரத் திரிபு, நம் நகர்தலின் ஊடையில் வந்துவிட்ட மூட பழக்கவழக்கங்கள், எளிய வழியில் மிடுக்காக வாழ எடுத்த பிரயத்தனம்,  தன் தேவையை தனக்குச் சாதகமாக அமைத்துக்கொள்ள மனிதன் பட்ட  வரம்புமீறிய ஆசைகள், பின் உழைக்க மறுத்தவை, பிறர் மனை நோக்கல், பொறாமை, சுயநலம் என எல்லாம் சேர்ந்து மொத்தமாக நாம் பண்பு தவறி வாழ்ந்துவிட்டதன் சாட்சியங்களே நம் பெண்கள் விபசாரத்தை கையிலெடுத்துக்கொண்டதும் அவர்களை நாம் அத்தொழிலுக்கு உந்தியதும்.

11)            எளிமையாகச் சம்பாதிக்க விபச்சாரம்தான் சிறந்த வழியென்று விலைமகளிரே பேட்டிகளில் துணிந்து சொல்கிறார்களே?

தெரியாதவை தானே புதிராக இருக்கமுடியும். எளிதில் காணக்கிடைக்காதவை தானே அதிசயமாகி விடுகிறது. தனக்குத் தெரிந்த ஒன்று இலகுவாக இருப்பதில் பெரிதாகப் படுவதில் ஆச்சர்யமொன்றுமில்லையே. ரோஜா மட்டுமே வாசனையாக இருக்கையில் மல்லியை நுகர்ந்தால் தானே ஆம் இதுவும் நல்ல வாசமென்று புரியும். ஒரு கிணற்றுக்கு உள்ளேயே இருக்கும் தவளை அந்த கிணற்றை உலகமாக நினைப்பதில் தவறென்ன உண்டு? அதை வெளிக்கொண்டுவந்து உலகத்தைக் காட்டி, இதனால் இது விளைவு, இதனால் இது வலிக்கிறது, இதனால் இது சிறப்பு, இதனால் இப்படி நல்வழி அமையுமென்று நல்வழியை காட்டும் பொறுப்பு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தைச் சார்ந்தது என்பதே என் வலி.

12)            விபச்சாரத்தை ஒழிக்க வேண்டியது யார் கடமை?

பூவில் முள் விழுந்தாலும், முள்ளில் பூ விழுந்தாலும் பூவின் இதழ்களே கிழியும் என்பர். அதுபோலொத்து பெண்கள் எங்கிருப்பினும் அவர்களுக்கே வலிக்குமொரு சமுதாயத்தை படைத்தவர் யார்? ஆணும் பெண்ணுமாக சேர்ந்த நாம் தானே? நம் சுற்றமும் நாம் உருவாக்கிய சமுதாயமும் தானே?

அப்படிப்பட்ட அந்த சமுதாயமும், அந்த சமுதாய பிரதிநிதிகளாக நியமிக்கப் பட்டுள்ள அரசியல் அமைப்புக்களும், அந்த அமைப்பினை சரியாக தேர்வுசெய்து அதன் பலத்தினால் மெல்ல யாருக்கும் வலிக்காமல் விபச்சாரத்தை அவசியமற்ற ஒன்றாக ஆக்கத் தக்க வலிமையான பண்புநிறைச் சூழலை நம் சமூகத்தில் மலரச் செய்யும் கடமை நம் செயல்பாடுகளுக்குரியதன்றி வேறில்லை.

13)             நாம் சார்ந்திருப்பது ஒன்று குடும்பம். மற்றொன்று சமூகம். இன்று இரண்டிலும் சகித்துக்கொண்டுதானே வாழ வேண்டியிருக்கிறது?

உப்பைத் தின்றவர் தண்ணீர் குடிக்கத் தானே வேண்டும்? இரண்டையுமே ஆள்வது நாம் தானே? சகித்துக் கொள்ளும் இந்த நிலைக்கு எப்படி உள்வந்தோமோ அப்படி கொஞ்சம் கொஞ்சமாகவேனும் நமை மாற்றி நல்லதொரு சமநிலைக்குப் போகவேண்டியதும் நம் பொறுப்புதான்.

14)             ஒரு படைப்பாளராகச் சொல்லுங்கள்… வருங்கால சமுதாயத்தில் விவாகரத்து அதிகரிக்குமா? குறையுமா?

காதல் மனங்கள் ஆங்காங்கே புரிதலோடு நடந்துவருகின்றன. இழுத்துக் கொண்டு ஓடுவது குறைந்து புரிந்து ஏற்றுக் கொள்ளும் மனசு நிறைய பேருக்கு வந்துள்ளது. ஆண்பெண் உறவுமுறை நட்பு ரீதியாக நெருக்கம் கொண்டுள்ளது. தொட்டால் காதல் பார்த்தால் காதல் கரையொதுங்க ஆரம்பித்துள்ளது.

அதுபோல், படிப்பு வேலை சம்பாத்தியம் சாதனையென உலகளவிற்கு விரிந்தும் அதேநேரம் நாடு மாநிலம் ஊர் குடும்பம் சுயம் என மனிதன் சுருங்கவும் ஆரம்பித்துவிட்டான். ஒரு வீட்டிற்குள் அம்மா மனைவி குழந்தை என்று சந்தோஷம் ஒரு கட்டுக்குள் ஒரு வட்டத்திற்குள் அடங்கிவிட்டது. எனவே எதையும் ஏற்கப் பழகிவருவதால் எதுவாயினும் சகிக்கமுடிவதால் மாமியார் மருமகள் மாறி அம்மா மகள் முறை வந்து அக்கம்பக்கத்து கவலை குறைந்து தன் வாழ்க்கை தன் வேலை என்று மட்டுமே நம் வாழ்தல் சுயநல வட்டத்திற்குள் அடங்கிவரும் இந்நிலையில் விவாகரத்திற்கான ஊக்கமும் அவசர அல்லது நிர்பந்தத் தனமான தேவையும் இனி வெகுவாகக் குறையலாம்

விவாகரத்து தேவைப்படாதளவிற்கு புரிதலை ஏற்படுத்தி, அவசியமெனில் விட்டுக்கொடுத்துக் கொள்ளத் தக்க மனநிலை பரவலாக உள்ளதால், நட்புரீதியாக உயர்ந்து இருபாலருக்குமுள்ள பாகுபாடு மனப்பான்மையை குறைத்துக்கொள்ள, பொறாமையெனும் தீவினையை அறுத்துக்கொள்ள முடிகிற இவ்விளைய சமுதாயத்திற்கு விவாகரத்தின் தேவையும்  இனி குறையும்.

அதேநேரம், அவசியப் பட்டால் சட்டென விலகிக் கொள்ள மனதைரியமும், அழுத்தமும், சாதுர்யமும், உடனே தூக்கியெறியும் மனதும் கூட இவர்களுக்கு உண்டு. அங்ஙனம் சட்டரீதியான ஏற்பாடுகளும் ஏற்பாடுகளை இலகுவாக அறிந்துகொள்ளும் வழிவகைகளும்  கைக்கெட்டும் தூரத்திலேயே உண்டென புரிந்துவிட்ட மனப்பாங்கு நம்மிடத்தில் நிலவுவதால் இனி விவாகரத்தும் குறையுமென்றே எண்ணுகிறேன்.

குறிப்பாக சுதந்திரமில்லா நிலை தான் வெளியே பறக்க ஆசையை ஏற்படுத்துகிறது. ஆனால் இப்போதைக்கு ஓரளவு சுதந்திரமாக எதையும் சிந்திக்கும் தீர்மானிக்கும் நிலைக்கு நாம் சமபங்காக வந்துள்ளோம் என்பதால் விவாகரத்தின் பெரிய அவசியமெல்லாம் இனி பிற்காலத்தில் இருந்துவிடாது என்று எண்ணம்.

15)            விவாகரத்தால் ஒருவர் சாதிப்பது என்ன? இழப்பது என்ன?

விவாகரத்தின் தேவை குறித்தே சாதனையும் இழப்பும் எதுவெனக் கருதப்படுகிறது. பொதுவில், சாதிப்பது சுதந்திரம் அல்லது மனஉளைச்சல் எனில், இழப்பது நரக வாழ்க்கயை அல்லது மனிதத்தையாக யிருக்கலாம்!

16)            விபச்சாரிகள் பற்றிய கருத்தோட்டங்கள் கனவு உத்தியில் இடம் பெற காரணம் என்ன? விபச்சாரத்தை ஒழிக்க முடியாது என்பதாலா?

அது ஒரு களம். கனவு மூலம் சொல்வதை ஒரு உத்தியாகக் கருதிய மனப்போக்கு அது, மற்றபடி உள்நோக்கமெல்லாமில்லை. எழுத்தை கூர்மிகு ஆயுதமாக நம்புபவன் நான். கனவு அதற்கு மையாக விடப்பட்டது அவ்வளவே.

அதேநேரம், விபசாரத்தை மேன்மை படுத்துவதும் ஒழிப்பதும் இரண்டுமே ஒரு நாளைய திடீர் நிகழ்வு ஒன்றுமல்ல. அதேநேரம் எப்படி உள்ளே வந்தோமோ அப்படி வெளியில் போகவும் முடியுமென்பது எனது நம்பிக்கை.

17)            விலைமகளிரை இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுத் என்று முன்மொழிகிறீர்கள். அவ்வாறு திருமணம் செய்துகொண்டால் குடும்பமும் சமூகமும் அவர்களை ஏற்றுக்கொள்ளும் என்று கருதுகிறீர்களா?

நடிகர்களை முதல்வராக கொள்ளுமொரு மனநிலை நமக்கு எப்படி வந்தது? நாலு பேர் நம்பினால் நாமும் நம்புவோம். நான் அந்த நாலு பேரில் முதலாவதாக நிற்கும் நால்வரைத் தேடுகிறேன். ஒரு விபச்சாரப் பெண்ணை தன் பிள்ளைக்கு மனம் முடிக்க ஒரு தாயாக தயங்கினால், அதே ஒரு தாயாக தன் விபச்சார மகளுக்கு யாரையேனும் கட்டிவைத்து நல்வழி செய்யும் மனப்பாங்கும் நமக்கு வரவும் வேண்டுமில்லையா?

எத்தனை குளத்தில் தாமரை மலர்கிறது, எத்தனைக் குளத்தில் பாம்பு திரிகிறது, எங்கும் ஏதும் இருந்தும் முற்றிலுமில்லாமலும் இல்லையே. கரடுமுரடான பாதையில் நடந்தால் கால்கள் அப்பாதையினால் தைக்கப்படத் தானே செய்யும்? ஆனால் அந்த கரடு முரடான பாதைக்கு காரணம் நாமென்று உணரும் பட்சத்தில் வலியை ஏற்கும் மனதைரியமும் வரும். ஒரு கெட்டதை நோக்கி சட்டென திரும்பும் உலகம், நல்லதைநோக்கித் திரும்ப நாளாகிறது. அதற்காக உலகத்திற்கு பயந்து கசக்கும் மருந்தை குடிக்காமல் இருந்தால் நோயாளியாகவே இச்சமுதாயம் புழுத்துப் போகும்.

முதலில் அங்ஙனம் ஒரு பெண்ணை மனம் முடிப்பவர், அப்பெண்ணின் மனநிலை, அதனால் தனது வீட்டினில் நிகழும் மாற்றங்கள், அதை சமாளிக்கும் பக்குவம்,  எதையும் ஏற்கும் பெருந்தன்மை என எல்லாவற்றையும் கொண்டிருக்கவேண்டியதொரு இழிவு நிலையை நாம் தான் உருவாக்கியுள்ளோம், அதையும் நாம் தான் சரிசெய்ய வேண்டும்.

முதலில் வீட்டிற்கு வரும் பெண் ‘இவள்’ என்றுதான் உறுத்தும், பின் மெல்ல மெல்ல மாறி அந்த இவள் மறைந்து அவள் இத்தனை நல்லவளெனப் புரியவும் வாய்ப்பும் உண்டு.  பொதுவாக கெட்டவை விரைந்து நடந்துவிடும், நல்லவை நடக்க புரிய ஏற்க நாளாகும். சீர்திருத்தமானதும் அப்படித்தான்  சொன்னதும் நிகழ்ந்துவிடுவதல்ல,  மெல்ல மெல்லவேனும் நிகழ்த்தவேண்டியது.

18)            விவாகரத்து தற்காலிக அவசர முடிவாக எடுக்கப்படுகிறதா? நீண்ட சிந்தனைக்குப் பிறகு எடுக்கப்படுகிறதா?

நீண்ட அவஸ்தைக்குப் பிறகு தடாரென சொடுக்கும் நொடிப்பில் நிகழ்கிறது என்பது எனது கணிப்பு. உண்மையில் பிடிக்காத இருவரை விலக்கி அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ வழி அமைத்துத் தர விவாகரத்து நல்ல ஒரு ஆயுதமென்று நம்பிதான் விவாகரத்து முறை நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் நன்றாக வாழ்ந்த இரு மனசு ஏதோ ஒரு கோபத்தில், ஒரு புரிதலில்லா நிலையில், அல்லது யாரோ வேற்று மனிதரின் கற்பிதத்தில் விலகிக் கொள்ளுமெனில் அது பின் விடை கிடைத்திடாத பெரு அவஸ்த்தையோடு நில்லாமல், அவர்களைச் சார்ந்தோரையும் முக்கியமாக குழந்தைகளை எல்லாம் பாதிப்பது கொடுமையில்லையா? அதைக் காட்டிலும், புரிதலை ஏற்படுத்திக் கொண்டு, இணைந்து வாழ இயலுமெனில் அங்கு மீண்டும் அன்பு பூக்கவும் வாய்ப்புண்டு. மனசென்ன ‘ஒரு சின்ன சிரிப்பில் மன்னிப்பில் அணைப்பில் அன்பு பார்வையில் பூத்துவிடுமொரு உணர்வின் மாயத் திரள் தானே..?

19)             விவாகரத்தானவர்களை இன்றைய சமுதாயம் எவ்வாறு பார்க்கிறது?

அவர்கள் அதற்குப் பிறகு வாழும் நடத்தையைப் பொருத்தே அந்த சமுதாயத்தின் கொடிய அல்லது இணக்கமான பார்வையும் அமைகிறது.

என்றாலும், என்னதான் இருந்தாலும், இரண்டாவது புருஷன் அல்லது இரண்டாவது பொண்டாட்டி இரண்டாம்பட்ச மனிதர்கள் தானில்லையா? அல்லாதுபோனாலும் ஒற்றைத் தனிமரம் என்று வைத்துக் கொண்டாலும் வாழ்வு முதுழும் தனிமை வதையில்லையா?

எல்லாம் கடந்து சமுதாயம் பார்க்கும் பார்வையென்று எடுத்துக் கொண்டாலது இன்னும் கொடிது; சொல்லம்பு தாங்கியதென்றும் சொல்லலாம். உதாரணத்திற்கு: வாழாவெட்டி, அறுத்துகிட்டு வந்தவ, வந்தவன், வாழ வக்கற்றோன், முண்டச்சி என இன்ன பிற..,

இருப்பினும் சூழ்நிலைக் கைதியாக பிரிந்து ஒழுக்கம் குறையாது வாழ்வோரை இவ்வுலகம் என்றும் மதிப்பாகவும் மரியாதை கூட்டியுமே பார்கிறது.

எங்கிருப்பினும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதற்கிணங்கவே நமை பார்க்கும் உலகமன்றோ யிது..

20)            விவாகரத்தில் பெற்றோர்களின் செயல்பாடுகள் குறித்து தங்கள் கருத்து என்ன?

தான் பெற்ற மகன் மகள் என்றாலும் ஒரு சமுதாயப் பார்வையோடு அணுகுவதும், அவர்களின் உணர்வு புரிந்து செயல்படுவதும், எது அவர்களுக்கு நன்மையை நல்குமோ அதை அவர்களுக்குப் புரியும்வண்ணம் எடுத்துரைத்து நல்வழிபடுத்தி ‘மானுட சுகத்தை நல்ல பண்போடும் மதிப்போடும் அடைந்து வாழுமாறு எடுத்தியம்புவதும் நல்ல பெற்றோரின் கடமையாக எண்ணுகிறேன்.

ஆனால், பொதுவாக இவ்விசயத்தில் இன்றைய பெற்றோர்கள் அதிகபட்சமாக உணர்ச்சிவசப் படுபவர்களாகவும், சுயநலம் பூண்டும், தன் கருத்தை தன் எண்ணத்திற்கிணங்க  பிள்ளைகள்மீது திணிப்பவர்களாகவும், மகன் அல்லது மகள் வழி நின்று எது அவர்களக்கு சாத்தியமென சிந்திக்காமல் எதையோ எடுத்தோம் கவிழ்த்தோமென்று தன் விருப்பப்படி செய்பவர்களாகவே இருக்கிறார்கள் சிலர். அவர்களெல்லாம் தன் பிள்ளைகளின் நலத்திற்குத் தக மாறவேண்டும்.

21)            விவாகரத்தால் பிற்காலத்தில் குழந்தைகளின் மனநிலை என்னவாக இருக்கும்?

தக்க விவாகரத்து என்பது விதிவிலக்ககுட்பட்டது. அல்லது சில உரித்த விதிகளுக்குரியது.

அதன்றி, பிடித்தால் வாழ்வோம், பிடிக்காவிட்டால் அறுத்துவிட்டுப் போவோம் எனும் விட்டேத்தியான மனநிலை மோசகரமனது. அதனால் நாளை குழந்தைகளிடத்தில் பெருத்த குழப்பமேற்படலாம். இங்குமங்கும் அவதிப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு தான்தோன்றித் தனமாக பிள்ளைகள் நடந்துகொள்ளலாம். அதை தட்டிக் கேட்கும் உரிமை கூட பரஸ்பரம் பெற்றோரிடத்தில் இல்லாது போகலாம்.

குடும்பம், பாசம், விட்டுக் கொடுத்தல், பெருந்தன்மை கருதல், உதவியாக இருத்தல், பிறர் நன்மைப் புரிந்து செயல்படல், அப்பா அம்மா உறவு, தியாக உணர்வு எல்லாம் மெல்ல மெல்ல மறுத்துபோய் அற்று போகவும் வாய்ப்புண்டு. சுயநலம் பெருத்து கட்டுப்பாடு தகர்ந்து பெற்றோரிடத்தில் பெருத்த வெறுப்பினை ஏற்படுத்திக் கொள்ளுமொரு நிலை குழந்தைகளுக்கு ஏற்பட சாத்தியமுண்டு.

அல்லாது பெற்றோரின் விவாகரத்து நியாயமானது என்று புரியத் தக்க பிள்ளைகள் நாளை அதையே தன் வாழ்விற்கான முன் அனுபவமாக எடுத்துக் கொண்டு நேர்மறையாக செயல்பட முயற்சிக்கவும் வாய்ப்புண்டு.

22)            சமுதாயத்தின் தீமைகளில் விவாகரத்தும் இடம்பிடித்து விட்டது என்பது எதனைக் காட்டுகிறது?

நம் வாழ்வுமுறை நமக்கு மத்தியில் ஏற்படுத்தியுள்ள புரிதலின் இடைவெளி  அதிகரித்துள்ளதையும், கலாச்சார சீரழிவு அல்லது வேறொரு கலாச்சார மாற்றத்தின் ஆரம்பத்திற்கு நாம் தயாராகி விட்டதையும், குறிப்பாக கிடைக்கும் வாய்ப்பை துஸ்பிரயோகம் செய்து வாழும் நம் இன்றைய வாழ்வின் சமகால பெருந்தவற்றின் கொடூரத்தையும் காட்டுகிறது. சுருக்கமாகச் சொன்னால் நம் பிழைகளின் சாட்சியமாக விளங்குமொரு வெளிப்பாடு அது.

23)             குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தலின் சிறப்புகளால் விளையும் நன்மைகளாகத் தாங்கள் கருதுவது என்னென்ன?

வீட்டின் பழக்கம்தான் வெளியிலிறங்கி தெருவிலும் நிற்கும். உன் நண்பனைப் பற்றி சொல் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பார்களே. அதுபோல் ஒரு குடும்பம் வைத்து அக்கம் பக்கத்தாரின் நன்மை தீமையும் கூட தீர்மானிக்கப் படுகிறது. ஒரு நல்ல குடும்பம் வீட்டின் முற்றத்து துளசி போல, ‘ஒரு ஊரின் நன்மை தீமைக்கு தன்னை பொறுப்பாக்கிக் கொள்கிறது. என் அண்ணன் தானே என்று நினைப்பவனால் தான் என் நண்பன் தானே என்று விட்டுத் தரவும் முடியும். என் தங்கை இப்படி வாழவேண்டும் என்று தன் தங்கைக்கென தன் உணர்வுகளை கட்டுபப்டுத்தி ஒரு நல்லதைச் செய்ய முயல்பவனால் தான் தன் மனைவியையும் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள முடியும். தன் மனைவி மீது அக்கறை கொள்வோருக்கு பிறர் மனைவி மீது மதிப்பு கூடும். நல்ல ஆண்மகனைத் தான் சுற்றம் மதிக்கும். கண்ணியமான பெண்களைத் தான் மரியாதையுடன் பார்ப்பர் மக்கள். ஆக, சுற்றத்தால் மதிக்கத் தக்க குணங்கள் ஒரு ஆணிற்கும் சரி பெண்ணிற்கும் சரி அவர்கள் வாழும் வீட்டின் நற்பண்புகளாலேயே பிறக்கிறது. மீதம் அது வளர்வது வேண்டுமெனில் சமுதாயத்தின் கையிலிருக்கலாம்..

சுருக்கமாக சொல்வதெனில் வீடு சிறக்குமெனில் நாடும் சிறக்கும். ஒரு குடும்பத்தின் வெளிச்சம் என்பது ஒரு தேசத்தின் நன்மைக்கான முதற்புள்ளி..

24)             கூட்டுக் குடும்பம்தானே நாவலின் நாயகன் மதிவாணன் – நாயகி வைஷ்ணவியின் பிரிவுக்கும் விவாகரத்து கோருவதற்கும் காரணம்?

தனித்து வாழும் குடும்பங்களிலும் விவாகரத்துகள் நடக்காமலில்லை. நான் எடுத்துக் கொண்ட களம் கூட்டுக் குடும்பம் அவ்வளவே. அதோடு, கூட்டுக் குடும்பத்தில் விவாகரத்துப் பெற எவ்வளவு வழியுண்டோ அதே அளவு அந்த எண்ணத்தைக் களைந்து குடும்பம்னா இப்படித் தான், வாழ்க்கை என்றால் பல்வேறு சிக்கல்கள் இருக்கத் தான் செய்யும் என்றெல்லாம் பல்வேறுபட்ட நேர்மறை அனுபவ யோசனைகளை சொல்லி, மனங்கள் ஓடிந்துப் போகாத அளவிற்கு காத்திடவும் வாய்ப்புண்டு.

உதாரணம், வைஸ்ணவியின் அம்மா, வெண்மதிவாணனின் அப்பா அண்ணி மற்றும் குடும்பத்தார்..

25)            நவீன கலாச்சார நாகரிகத்தினால் குடும்ப அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தங்கள் பார்வை என்ன?

சாக்குபோக்குகள் நீங்கி, ஒருவருக்கொருவர் நேராக பேசி, உண்மையாக மதித்து, நட்பு பரிமாறி, வெளிப்படை விவாதங்கள் மூலம் புரிதலை மேற்கொண்டு விட்டுக்கொடுத்து பல நல்லது கெட்டதை பகிர்ந்துக் கொள்ளும் பாங்குகள் இயல்பாக இருந்தாலும் –

அன்றும் இன்றும் பெற்றோர் அவதிபடுவது மாறாமலே இருப்பது வருந்தத் தக்கது. கூட்டுக் குடும்பம் எத்தனை சௌகரியமனது என்பதெல்லாம் அக்குடும்பத்தாரைப் பொருத்ததே.

தனிக்குடும்பம் அதுபோல் பெருத்த ருசியென்றும் சொல்வதற்கில்லை. தனிக்குடும்பமாக வாழ்கையில், வெறுமனே ஆக்கி தின்று தூங்குவது மட்டுமே வாழ்வில்லை என்ற ஒரு அலுப்பும், தனித்துவிடப்பட்ட அயர்ச்சியும், அதேநேரம் நம் வாழ்க்கையை நாம் வாழ்கிறோம் எனும் ஒரு நிறைவும் ஏற்பட்டாலும் பெற்றோரைத் தாங்கி வாழும் வாழ்வே குறையற்றது.

26)  இன்றைய அறிவியல் யுகத்தில் பக்தியின் தேவை என்ன?

அறிவியல் வேறு, பக்தி வேறு. சாப்பிடுவதற்கும் சுவாசிப்பதற்கும் உள்ள இடைவெளி போல தேவைக்கும் ஆசைக்கும் நிறைய வேறுபாடுகள் இயற்கையாகவும் செயற்கையாகவும் உண்டு. அறிவியல் இதில் ஆசைக்குட்பட்டது. பக்தி அந்த ஆசையை அடக்கும் அளக்கும் ஆளும் அவசியத்திற்குட்பட்டது.

ஆயினும் பக்தி குறித்த புரிதலும் இடறிய இடத்திலிருந்தே இக்கேள்வியின் அவசியமும் பிறந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டியவர்களாகிப் போனோம்..

நன்றிகளுடனும் வணக்கதோடும்..

வித்யாசாகர்

Posted in ஆய்வுகள், நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்