39, மனைவியென்பவள் யாதுமானவள்..

நீயில்லாத இடம் தேடிக் குவிகிறது
வார்த்தைகள்..
உன் நினைவுகளின் அழுத்தம் அறையெங்கும்
கொல்லும் தனிமையை உடைத்தெறிகிறது கவிதை;

கவிதையின் லயம் பிடித்து
வரிகளாய்க் கோர்க்கிறேன்
உள்ளே நீயிருக்கிறாய்,
என் பசியறிந்தவளாய்
என் உறக்கத்தின் அளவறிந்தவளாய்
என் வாழ்வின் தூரம் முழுதும் உன் மயமாகியிருக்கிறாய்..

காற்று
வீட்டுச் சுவர்
உன் துணிகள்
எங்கும் தொடுகையில் உன் முகம் உன் குரல் உன் அன்பு
உன் வாசனைமுழுதும் நான் கலந்து
என் எல்லாமுமாய் நீ மட்டுமேயிருக்கிறாய்..

உன் பார்வை விடுபடுகையில்
போகமாட்டேனென்றுக் கதறியதை நானறிவேன்
போகையில் மறுக்குமுன் பாதங்களின் தவிப்பை நானறிவேன்
போய் கடைமுனையில் நின்று திரும்பிப் பார்க்கும்போதே
ஓடிவந்துவிட துடித்த மனசையும் நானறிந்து
கூடவே நான் கதறியதையும் இந்த வரிகளுக்குச்
சொல்லிவைக்கிறேன்..

இந்த வரிகள் நம் பிள்ளைகளுக்கு நம்
அன்பைச் சொல்லும்
அன்பு அவர்களையும் வளர்க்கும்
அவர்களால் வலுக்கட்டுமிந்த சமுகம்’ போய் வா
ஊர்போய் நீ திரும்பி வரும்வரை,
நீ விட்டுச்சென்ற உன் மனசாக
துடித்துக்கொண்டேயிருப்பேன் நானும்’ உனக்காய்!!

வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

‘இசை’ படத்திற்கு எழுதிய பாடல்..

திரைப்படத்திற்கு பாடலெழுத எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பினை பொதுவில் வழங்குவதாகச் சொல்லி இயக்குனர் SJ சூர்யா http://www.youtube.com/watch?v=JqRIvK9McFs இவ்விசையை யூ- டியூபில் பகிர்ந்தார்.

அதற்கெழுதிய பாடலிது..

பல்லவி
—————————————————–
ரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு
புது வெப்பம் முளைக்குமோ
ஒரு பாடல் பிறக்கும் இசைகேட்டு
எந்தன் தாளங்கள் மோகத்தில் தள்ளாடுமோ…

ஒரு காற்று ஒரு வானம்
உன் பார்வையில் கரையுமோ
புது தேடல் ஒன்று பெண்ணுக்குள் பூக்க
கனவுகள் காற்றில் கைவீசுமோ..

சரணம் – 1
—————————————————–
அடிப்பெண்ணே அடிப்பெண்ணே
ஏனோ உயிரில் உரசிப் போனாய்
ஒரு காதல் முத்தம் சிந்தி
புது  ஜென்மம் பூசினாய்,
உடலெல்லாம் உனக்காக புது ரத்தம் பாய பருகினாய்
உயிர்காற்றால் மெல்ல எனைத் தீண்டி
என் மரணம் தின்று தீர்த்தாய்;
(ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு)

சரணம் – 2
—————————————————–
தென்றல் வீசும் தெருவொன்றில் இரு
சந்தனம் எரியுதே,
இரு ராகம் மெல்ல ஒன்றாகி
ஒரு பாடலாய் ஆனதே,
சுடுந்தீயே சுடுந்தீயே எனைக் கொன்று கொன்றுப் போட்டாய்,
உன்னிதழின் முத்த சப்தத்தில்
முழு இரவை வென்று உதிர்த்தாய்;
(ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு)

_வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பொழுதுபோக்கின் உச்ச நட்சத்திரமது “முகமூடி” (திரை விமர்சனம்)

யக்குனர் மிஸ்கினின் நான் பார்த்த முதல் படமிது. நான் பார்த்த படங்களில் என் கண்ணாடியைக் கழற்றுவது போல் எண்ணங்களை கழற்றிவைத்துவிட்டு அவர் கதைக்கு பின் மட்டுமே அவர் ரசித்த ரசனையோடு ஒரு இயக்குனர் என்னைக் கொண்டுசென்ற முதல் படமும் இதுவே.. என்று மெச்சத்தக்க நல்லபடம் செய்திருக்கிறார் மிஸ்கின்.

வெறும் கொலையெனும் முட்களை கலை எனும் வண்ண மலர்களோடு கலந்து வெள்ளித் திரையில் விரைத்து, அதைக் காணும் மனங்களையெல்லாம் ஆஹா ஆஹா என ஆச்சர்யத்தோடு பார்கைவைத்து, நமை அவர் நினைத்த இடத்திலெல்லாம் தொலையச் செய்த உழைப்பு, தான் விரும்பிய’ ரசித்த’ கனவுகண்ட காட்சிகளின் தோற்றத்தை தனது நாயகர்களின் முகத்தில் காட்டிய ஒரு மகா கலைஞனின் புதிய திரை யோசனை இந்த “முகமூடி” எனும் திரைப்படம்!

தற்காப்புக் கலை எனும் ஒரு வெளிவட்டத்தை கிழித்து அதற்குள் அடங்கிப் போகும் காதல் சாதல் வாழ்க்கை வெற்றி என ஒரு இளைஞனின் மெத்த நகர்வுகளுக்கான  துடிப்பு’ ஆச்சர்யம்’ கனவுப் பார்வையென அனைத்திலும் புதிய யுத்தியை புகுத்தி தமிழ் பட தரத்தை இன்னொரு புதிய கோணத்திற்கு மாற்ற முயன்ற பொழுதுபோக்குச் சித்திரமிது.

என்றாலும், அந்த பொழுதுதனை எப்படி ரசித்து ரசித்து கழிப்பதென்னும் கேள்விக்கு பதிலாக ‘இம்முகமூடியை மட்டும் ஒருமுறைப் பாருங்கள், அதும் திரையில் சென்று அவர்கள் தீர்மானித்த அளவீடுகளோடு பாருங்கள், ஒரு மர்மம் நிறைந்த திரைப்படம் இப்படியும் ஒரு புதிய மொழியில் புதிய நடையில் புது சப்தத்தோடு இருக்கலாமென்று நம்பவைத்துவிடுவதை தானாக உணர்வீர்களென்பதே இப்படத்தின் சிறப்பு.

உண்மையில் திரும்பித திரும்பிச் சொல்வதெனில் இப்படத்தில் தெரிவது ஒன்றே ஒன்று தான்; அது அப்பட்டமாக காணக்கிடைக்கும் மிஸ்கினின் இயக்குனர் திறமைக்கான முகமன்றி வேறில்லை. அப்படி அவருடைய ஆளுமையை விட்டுவிட்டு வேறென்ன உண்டென்று ஆராய்ந்தால் அடுத்த இப்படத்தின் புது ஆட்கொள்ளலாக வருபவைகளில் ஒன்று மனதை மெய்மறக்கச் செய்யுமந்த பின்னணியிசை. அல்லது மனதிடம் பேசுமந்த புதிய இசைமொழி. அந்த இசைமொழியின் நறுமணத்தை தனக்குள் அச்சு பிசகாமல் தக்கவைத்துக் கொள்ளும் ஒளிப்பதிவும், பின் நடிப்புமென பல ஆச்சர்யங்களை மறைத்துக் கொண்டு மேலே முகமூடியாகத் தெரிவதும் இயக்குனரின் யோசனைக்குட்பட்ட அம்சங்களேயென்பதை மறுப்பதற்கேயில்லை.

அதுபோல் நடிப்பென்று பார்த்தால் ஜீவாவை உழைக்கச் சொல்லியிருகிறார், நரேனை மட்டுமே நடிக்கக் கேட்டிருக்கிறார் இயக்குனர். அத்தனை அழகு நரேனின் நடிப்பும் ஜீவாவின் உழைப்பும். அழகு எனில் அது ஒரு திரை மொழி வாசனை. புது மணம். புது ருசி. பார்த்தால் மட்டுமேப் புரியக்கூடிய காட்சிகளது.

அதுபோல், ஒரு வில்லனை கம்பீரமான திறமையான எந்த மகா அழிச்சாட்டியமுமின்றி காட்டுகிறது இந்த முகமூடி. யாரையும் கற்பழிக்காமல், கண்முன்னே பொடீர் பொடீரென்று சுடாமல், கழுத்தில் கத்தி விட்டு மூச்சை படக்கென நிறுத்தாமல்; அவ்வளவு ஏன் ஒரு கொலையைக் கூட கண்ணில் காட்டாமலேயே பல கொலைகளைப் பற்றிய பீதியை அரங்கமெங்கும் பரவச் செய்யும் திறன் பாராட்டத் தக்கதுதானே?

என்ன பெருஸ்ஸ்சா ஃபைடர்மேன், பிளாக்மேன், சூப்பர்மேன்? எங்க ஜீவாவுக்கு இணை யாரிருக்கான்னு கேட்குமளவு ஒரு கதாநாயகனின் திறமைகளை வெளிக் கொண்டுவருவதில் வல்லவரெனும் பட்டத்தை இப்படத்தின் மூலம் பெறுகிறார் இயக்குனர் மிஸ்கின் என்பதை இப்படத்தை பார்ப்பவர் ஏற்கலாம்..

ஒரு சங்கர் படம் பார்த்தால் சமூக அக்கறைகள் பிரம்மாண்ட பார்வையில் தெரியும், பாலாவின் படம் பார்த்தால் நாம் பார்க்க மறந்த அல்லது மறுக்கும் எளிய மனிதர்களின் முகங்கள் தெரியும், பாலாஜி சக்திவேலின் படத்தைப் பார்த்தால் நமது வாழ்தலில் வந்துவிட்ட சீரழிவுகள் அருங் கலையாக பதிந்திருக்கும், சேரனின் படமொன்றுப் பார்த்தால் நம் உணர்வுகள் அனைத்துமங்கே மொழியாக்கக் காட்சிகளாக மாறி கண்ணெதிரே மிளிரும், இப்படி சமகாலத்தின் யதார்த்தம் பிசகாத தங்கர்பச்சானிலிருந்து, சசி, சமுத்திரக்கனி, வெற்றிமாறன் என எல்லோரையும் விட்டு விலகி தூரமாக நின்று திரைப்படங்களை நுகர்ந்துப்பார்த்தால் மணிரத்தனத்தை மீள்பதிவு செய்து பின் அதிலிருந்தும் மாறுபடும் புதிய மணமொன்று கமழ்கிறது அது மிஸ்கினின் தனித்ததொரு நறுமணமாக மட்டுமே திகழ்கிறது..

அத்தகு, நிறைய ரசிக்கத் தக்கக் காட்சிகள் நிறைந்துள்ளது இப் படத்திலென்றுச் சொன்னால் ‘அதென்ன எல்லாப் படத்திலுந் தானேயிருக்கு என்று தோன்றும். ஆனால் இந்த படத்தைக் கண்டதும் தான் புரியும் ‘தனது குரு இறந்துப்போகும் காட்சியை’ கதறிக் கொண்டே அந்த குருவின் மாணவன் பார்க்க ஓடிவரும் காட்சியை’ ஒரு புதிய சப்தத்தின் உணர்வில் இதுவரைப் பார்த்த மரணத்தின் ஓலமின்றி உள்ளே பதறுமொரு யதார்த்த நிகழ்வின் துடிப்பாக மட்டுமேகூட காட்டமுடியுமென்று.

முக்கியமாக இவ்வுலகத்தை தனது மூன்றாவது கண் கொண்டு அவரின் புதிய கட்டத்திற்குள் காண்கிறார் இயக்குனர். அந்த கட்டத்தில் வெள்ளையடிக்கப்படாத சுவர்கள் பல அழகாகத் தெரிகிறது, விளக்கிட்டிடாத வீடுகள் உள்ளே வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது, வண்ணங்களின் அழகு விழித்திரையில் ஜொலிக்கிறது, புத்தர் சிலையின் அழகு ஞானத்தில் கனக்கிறது, இன்னும் உருவத்தின் அழகு’ பார்வையின் அழகு’ பேச்சின்’ நடையின்’ உடையின்’ பாவத்தின்’ ஏன் இருட்டிற்குக் கூட ஒரு அழகு உண்டென்று சொல்லி அதை புதுமையோடு பிசைந்துக் காண்பிக்கிறார் இப்படத்தின் இயக்குனர் மிஸ்கின் அவர்கள்.

ஆத்திரம் பொங்கி எழுந்து வராத சண்டை, வில்லனை கொல்லனும் கண்டம் துண்டமா வெட்டனும் காக்கா கழுகு கொத்தனுமென்றெல்லாம் எந்த உணர்வையும் நமக்குள் எழவிடாமல் அந்த படம் என்ன நினைக்கிறது, அந்த கதை என்ன சொல்ல வருகிறது, அவன் அடுத்தென்ன செய்யப் போகிறான், அந்த நாயகன் நாயகி அந்த பாத்திரம் என்ன செய்ய எண்ணுகிறது அதை மட்டும் பார்; உற்றுப் பாரென்று சொன்னால் எப்படிப் பார்ப்பார்கள் நம் மக்கள்? அப்படி மொத்த சனத்தையும் கண்கொட்டாமல் பரபரப்போடு பார்க்கவைக்கிறது இம் முகமூடி திரைப்படம்.

இப்படத்தில் இசை பெரிதா? ஒளிப்பதிவு பெரிதா? சண்டைக் காட்சிகள் பெரிதா? நடிப்பு பெரிதா அல்லது ஒப்பனை பெரிதா எனும் போட்டியொன்றினை வைத்தால், இந்த படம் எல்லாவற்றிற்குமான ஒவ்வொரு பாராட்டுக்களைப் பெற்றுக் குவிக்குமென்பதில் சந்தேகமில்லை. அதற்காக, ரொம்ப பெரூசா ஒரு சீரிய சிந்தனையோடெல்லாம் படம் பார்க்க போகனுமென்றில்லை, மிக சாதாரணப் படம் தான், என்றாலும் அதற்கான ஒரு பாடத்தில் புதைக்கப்பட்டிருக்கிறது இம்முகமூடியின் திரைக் கரு.

பெரிய்ய தத்துவம் சொன்னாதான் ஆச்சா..? ஒரு சின்ன காற்றிலலையும் நெருப்பு போதாதா ஒரு ஊரெரிக்க? ஒரு நொடி காற்றை விரட்டினால் போதாதா ஊரழிய ? ஒரு துளி தண்ணீரற்றுப் போனால் அழியாதா இவ்வுலகம் ? அப்படித்தான், பெரிய போதனை கற்பிதம் பிரம்மாண்டமென்றெல்லாம் ஒன்றுமேயின்றி ஒரு தனிமனிதனின் திறமையில் உலகத்தைக் கொண்டு அடைக்கிறார் மிஸ்கின். ஒரு சின்ன பொடியை கண்களில் தூவி இமைகளை அரக்கிக்கொண்டு நிற்கும் இடைவெளியில் ‘நீ யார்? நீ யாராக இருக்கிறாய்? யாராக வேண்டும் நீ? போ.. போய் யோசி.. எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆவாய் போ.. என்கிறார். நல்லதாக உன்னை நீ யோசி நல்லதாக மாறுவாய் என்று திரைக்குப் பின்னிருந்துக்கொண்டு திரைக்கு முன்னால் நிற்கும் கலைஞர்களின் மூலம் பேசுகிறார். எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் எனும் உயர்ந்த உண்மை நிறைந்த தத்துவத்தை கண்முன் காட்சியாக்கி தனது திரைப்படத்தைக் காணவரும் இளைய சமுதாயத்திற்கு ‘நீ எதுவாக ஆகப் போகிறாயெனும் கேள்வியை’ உள்ளே திணித்து தனது சமுதாய அக்கரையில் வழுவாது படம் செய்திருக்கிறார்.

விவிலியத்தில் சொல்வார்கள், ஒருவன் இறைவனுக்கு உபசரனையாக நல்லவனாக இருந்தான் நன்றாக வாழ்ந்தான், இன்னொருவன் சைத்தானின் வழியில் நடந்தான் சைத்தானாக முடிந்தான் என்பார்கள். இதிலும் ஒரு குரு வருகிறார். அவருக்கு நன்மை தீமை என்று இரு மாணவர்கள். அதில் தீமை தாமாக வலியவந்து அழிகிறது, நன்மையையும் தாமாக வலிய வந்து வாழ்வில் வென்று முடிகிறது. எனவே நல்லதை நினையுங்கள் நல்லதே நடக்குமென்று சொல்லாமல் சொல்கிறது இம் முகமூடி திரைப்படம்.

ஓரிடத்தில், ஒரு போதையில் ஆடிப்பாடும் பாடலொன்று வருகிறது. அதில் இச்சமுகத்தால் விரட்டப் படுபவர்களை நாசுக்காக காட்டுகிறார் பாருங்கள், உண்மையில் அதாலாம் புரிய ஒரு பார்வை வேண்டும். உனக்கந்த பார்வை இல்லாவிட்டாலென்ன நீ போ பொய் எந்த சுவற்றில் வேண்டுமோ முட்டிக் கொள் என் நாசாமகிப்போன சமுகமே; நான் அவர்களை அரவணைப்பேன், அவர்கள் என்னோடிருப்பார்கள், என் திரைப்படம் அவர்களையெல்லாம் தாங்கிக் கொள்ளுமென்று காண்பிக்கிறது  இப்படத்தின் திரைக்கதை. அந்த திரைக்கதை உத்தியில் வந்துப் போகிறார்கள் நம்மால் அசட்டை செய்யப்படும் பலர்.  அதிலும் –

குறிப்பாக இவ்வுலகத்தால் ஓரங்கட்டப்பட்ட திருநங்கைகள், தீய வழி தேடி அல்லது வேறு வழியறியாது குடிபழக்கத்திற்கு அடிமையுற்றவர்கள், கூன் விழுந்ததன் வலி, ஒரு கலைஞனின் மதிப்பறியா இவ்வுலகின் முகத்தை தன் வயலின் நூலிழையில் அறுத்தெறியும் பெரியவர், வெட்டிப் பயல்களென நாமொதுக்கிய குருபக்தி நிறைந்த நட்பு பெருத்த நம் இளைஞர்கள், மரணம் வரை’ ஏன், தான் இறந்தப்பின்பும் தன் நண்பனுக்கென கலங்கி அவனைப் பார்த்துக்கொள்ளச் சொல்லும் உயிர் காத்த நண்பன், இவனை எப்படிக் கொன்றேன் தெரியுமா இப்படி’ அவனை எப்படிக் கொன்றேன் தெரியுமா அப்படி என்று சொல்லிச் சொல்லியே  உணர்ச்சிவசப்படவைத்து எதிராளியை செயலிழுக்கச் செய்து பின் எளிதாகக் கொல்லும் பகையாளியின் தந்திரம் நிறைந்த ரத்த சுவை ருசித்த ஒருவன் என, கதையெங்கும் குவாட்டரிலிருந்து கம்பியூட்டர் வரை ஒரு மாறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளது இம்முகமுடி திரைப்படம்.

என்ன இசையது, மனதை விட்டு நீங்காத அந்த ஒளிப்பதிவைப் போலவே அந்த காட்சியின் சப்தமாக வருமந்த இசையும், இசையின் முகமாக தெரியுமந்த காட்சிகளும் பின்னிப்பிணைந்து நம் வாயடைத்துவிட்டு உணர்வுதனில் நிறைந்துதான் போகிறது இப்படம்..

தெருவில், வாழைப்பழத் தோலைப் போடுபவனின் காரில் மீண்டும் அதே வாழைப்பழ தோலை போடும் காட்சி, நரேன் பேசும் காட்சி, ஜீவா பேசும் காட்சி, கதாநாயகியின் உடல்மூடியும் மிளிரும் அழகிய கண்கள், லீ யின் நண்பன் இறந்து கீழே விழுகையில் மேலிருந்து காண்பிக்கும் அருகே உதிர்ந்த சிவந்த மலர்கள், கிறிஸ்மஸ் தத்தா வந்து கடைசியாக செய்யும் கொலைகள், அப்போது அவர்கள் ஊதும் நீற்குமிழிகளின் நிறம், டியூட்களின் சிகை அலங்காரம், யதார்த்தமாக நம்மை சிரிக்கவைக்கும் சில வசனங்கள், ஒவ்வொரு முறையும் ஜீவா செல்வா குழுவினைக் காண்பிக்கையில் காட்டும் பழைய இடிந்த நலிவுற்ற வீடுகளின் அறைகள், அறைகளின் ஜன்னலோரம், மாடிப்படிகளை கீழிருந்துக் காட்டுவது, டவர் கிரேனின் மேலிருந்துக்கொண்டு சண்டைப்போடுவது, அதைக் கீழிருந்து அழகாக காட்டுவதுமென’ மரணத்தை கொலையைக் கூட ரசிக்கும் ஒரு துணிச்சலை லாவகமாக கொடுக்கும் இத்திரைப்படத்தில் மனசு ஒன்றித்தான் போகிறது என்றால், அதை வெளிப்படையாக சொல்ல மறுப்பேதுமில்லை.

உலகிடம்’ பல இடங்களில்  எப்போதிலிருந்தோ தோற்றுக்கொண்டிருக்கும்  தமிழினம் இத்திரைக் கலையில் இனி இதுபோன்ற திரைப்படங்களால் வென்று நிற்கும். தமிழன் இனி தன் வாழ்தலை ஒவ்வொரு புள்ளியாக வெற்றியினிடத்து நகற்றி இறுதியில் தன் மரபு பரப்பும் சாதனையாளனாக தன்னை மாற்றிக் கொள்வான் என்று நம்புமளவிற்கு நமது தனிமனித திறன்களை மூன்று மணிநேரத்திற்குள்ளான திரைப்பத்திற்குள் அடக்கி, ரசிக்க ரசிக்க பார்க்குமொரு அருமையான பொழுதுபோக்குச் சித்தித்தைத் தந்திருக்கும் இத்திரைப்படத்தின் மொத்த கலைஞர்களையும் மனம் திறந்து பாராட்டுவோம்..

இயக்குனர் சேரனின் பாண்டவர்பூமி திரைப்படத்தில் கோபுரங்களின் நிர்வாணம் பிரதிபலிக்கும் சிலையழகினூடாக நகரும் காமிரா சட்டென பெண்ணின் இடுப்பிற்கு மேலெழாமல்மல் பக்கவாட்டில் ஒதுங்கி கிராமத்தைப் பார்க்குமொரு பார்வையாக மாறுவது போல, ஆங்கில படங்களுக்கு நிகராக ஏன் எந்த பிற மொழியில் இப்படத்தை எடுத்தாலும் அம்மொழியிலும் நிச்சயம் வெல்லும் என்று சொல்லுமளவிற்கு திரைத் துறையின் நேர்த்திக்கு ஒரு புதிய பலத்தைக் கொடுத்திருக்கும் இத்திரைப்படத்தை, சபலக் காட்சிகளில்லாத கொடூர காட்சிகளில்லாத முகஞ் சுழிக்கும் நிலையில் நம்மை ஆழ்த்தாத, பயமற்று பார்க்கவைக்குமிந்த மர்ம திரைமொழியை மனமுவந்து அங்கீகரிப்போம்..

இப்போதெல்லாம் பல படங்கள் புதுமையாக பிரம்மாண்டமாக வந்துப் போகிறது தான்.  சிலது வந்து வந்ததறியாது போகவும் செய்கிறது தான். ஆனால் இப்படம் நிற்கும். நம் எண்ணங்களில், நம் திரையுலக வரலாற்று காலத்தில் மறக்கமுடியாத ஏதேனும் ஒரு ராஜேஷ்குமாரின் நாவலைப் போல இப்படமும் நம்மோடு நிற்கும். எப்படி ரோபோ செய்கையில் சங்கர் இத்திரை உலகிற்கு வேண்டி ஏதோ ஒன்றை பிரம்மாண்டமாய் செய்தாரென்று நினைத்தோமோ அப்படி, 7ஜி ரயின்போ காலனி எனுமந்த திரைப்படம் பார்க்கையில் தமிழ் திரைப்பட இசை எப்படி சற்று தனது பல பழைய விதிகளிலிருந்து மாறியதோ அப்படி, இராவணன் எனும் திரைப்படம் பார்க்கையில், கன்னத்தில் முத்தமிட்டால் பார்க்கையில் அக்னி நட்சத்திரம் மற்றும் அஞ்சலியைப் பார்க்கையில் எப்படி ஒளிப்பதிவை எண்ணி மகிழ்ந்தோமோ அப்படி, சூர்யவின் ஏழாமறிவு திரைப்படத்தைக் காண்கையில் கடைசி சண்டைக்கு எழுந்து எப்படி கை தட்டினோமோ அப்படி படம் முழுக்க இதுவரை நாம் பார்த்த பல ஆச்சர்யங்களையும், கேட்பதற்குப் பிடிக்கும் இசையோடும் கடக்கச் செய்து புதியதொரு பரவசத்தில் நமைத் தொலைக்கவே வைக்கிற இம் ‘முகமூடி’ திரைப்படத்தின் புதுமையை தவிர்க்கப்படவேண்டிய பல திரைப்படக் காட்சிகளுக்கு முன்னுதாரணப் படுத்துவோம்..

உண்மையில் மிஸ்கினின் தலைகிரீட படமிது. இதில் உழைத்த நட்சத்திரங்களும் அக் கிரீடத்தோடு நிச்சயம் ஜொலிக்கப் படுவார்கள். வெகுவாக பாராட்டப்படுவார்கள். மேலும் பல இடங்களின் வெற்றிக்கு நகர்வார்கள். எனவே அவர்கள் அனைவருக்குமென் முன்கூட்டிய வாழ்த்துக்கள்!!

வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

3, அந்த வெடி வெடிக்கையில் அந்த விதைகள் முளைக்கிறது.. (சிறுகதை)

கொலம்போ விமான நிலையைம். தலையை ஒதுக்கி வாரி, தலைப்பாகையை எடுத்து மேல்கட்டிக் கொண்டு, காவித் துண்டு ஒன்றினை அகல விரித்து மார்பு முதுகு சுற்றி பின்னிடுப்பில் சொருகிக்கொண்டு, பொத்தான்போலயிருந்த மினி காமிரா ஒன்றினையெடுத்து துண்டு துண்டாக கழற்றி ஒரு காகிதத்தில் சுற்றி மடித்து அதை சாப்பாட்டுப் பொட்டலத்திற்கு நடுவில் திணித்துவைத்துக்கொண்டு தோள்பையொன்றினை எடுத்து மாட்டிக்கொண்டவாறு கழிப்பறையிலிருந்து வெளியேறி இமிக்ரேசனில் நுழைந்து வணக்கம் தெரிவிக்கிறானவன் ஆங்கிலத்தில்..

“பாஸ்போர்ட் கொடு..”

“ம்ம்.. “

“உன் பேரென்ன ?”

“கலிங்கா தராசி”

“இந்துவா ?”

“இல்லை”

“எங்கிருந்து வர? “

“இந்தியாவுலருந்து”

“இங்க எதுக்கு வர ? கடும் போர் நடக்குது தெரியுமில்ல.. (?)”

“தெரியும், நான் போற இடத்துல சண்டையெல்லாம் இல்லைன்னு சொன்னாங்க”

“எங்க போற? ஸ்பெசல் பர்மிசன் எதனா இருக்கா?”

“ம்ம்.. கெண்டி க்கு போறேன், அங்கிருக்கும் கெண்டி சிங்கள பௌத்த மையம் ஒரு உலகளாவிய மாநாடு நடத்துது அதுக்குப் போறேன்”

“அழைப்பிருக்கா?”

“ம்ம்”

“எங்கே காண்பி”

“இதோ., அழைப்பும் அனுப்பி, அதோட அரசிடம் ஒப்புதல் வாங்கியும் அனுப்பியிருக்காங்க பாருங்க”

“ம்.. ம்.. சரிதான் என்ன விசயமா போற”

“உலக பெளத்த ,மாநாடு நடக்குதுல்ல; அதுல கலந்து பேசப்போறேன்”

“நீயா?”

“ஏன், பௌத்தம் நான் பேசக்கூடாதா? பௌத்தத்தின் கோட்பாடு, ஆசையை அறு, அதுவே துன்பத்திற்குக் காரணம், ஆசையை நீக்கினால் துன்பமின்றி வாழலாம், மனம் சொல் செயல் ஆகியவற்றில் தூய்மை வேண்டும், எப்போதும் உண்மையே பேசவேண்டும், எல்லாம் உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும் என்பன எனக்கு மிக பிடிக்கும்..”

“ஓ.. மகிழ்ச்சி மகிழ்ச்சி இங்க எதைப் பற்றி பேசப் போற?”

“பௌத்தம் சொல்லித் தரப்போறேன்”

“வாட்………….., நாங்க நாடு தழுவிய பௌத்தமதத்தினர், எங்களுக்கேவா..?” என்றவன் கேட்பதற்குள் அவன் முந்திக்கொண்டான்.

“உங்கள் மண்ணில் தானேடா பாய்கிறது ரத்த ஆறு? அதிலென்ன முகம் கழுவிக் கொண்டுள்ளனரா உங்களுடைய பௌத்த துறவிகளெல்லாம்? என்று வெடுக்கென கேட்கநினைத்திருப்பான் போல, அதை மறைத்துக்கொண்டு “எல்லோருக்கும் பரவலா தெரிலை இல்லையா, அதான் நான் அதைபத்தி பேசப் போறேன்” என்றுசொல்லி மழுப்பினான்..

“ஓ.. சரி சரி எங்கருந்து வரீங்க?”

“வடக்கு நாடு, தமிழகம்..”

“நோ நோ … தமிழனா நீ ? நீ ஆங்கிலத்துல பேசவே உன்னை எங்க இனம்னு நினைத்தேனே, உனக்கெல்லாம் அனுமதி கிடையாது வெளியே போ..”

“எனக்கு சிறப்பு அழைப்பு இருக்கு, நான் பௌத்தம் பத்தி பெருசா பேசப் போறேன்..”

“உள்ளேப் போனா உயிருக்கு நாங்க உத்தரவாதம் இல்லை பரவாயில்லையா?”

“யாருக்குதான் இங்க இருக்கு?”

“வாட்…………..?”

“இங்க நம்ம எல்லோருமே அப்படித் தானே, உங்களை மாதிரி தானே நானும்னே(ன்)”

“சரி சரி.. ம்ம்.. பாஸ்போர்ட் புடி, அதோ அந்த அறைக்குப் போ, உள்ள யாரும் இருக்க மாட்டாங்க சும்மா போயிட்டு உள்ள நில்லு, பீப் சத்தம் வந்ததும் வெளிய போய்டு”

அவன் சோத்துப் பொட்டலத்தை எடுத்து வெளியே மேஜையில் வைத்துவிட்டு உள்ளேப் போக, அந்த ஆர்மியும் கூட ஒருவரும் ஓடி வந்து அவசரமாக அந்த பொட்டலத்தை எடுத்துப் பிரிக்க அவன் உள்ளிருந்து வெளியே வந்து ஐயையோ அது சோறுங்க வாசனை அடிக்கும் அதான் வெளியவைத்தேன் என்றிழுக்க, ஆர்மிகாரர்கள் அவசரமாக அதைப் பிரித்து மேலே கிளறி சற்று கீழேயும் கொட்டிவிட ஒரு ஊசி போன நாற்றம் வேறு அடிக்கவே கண்கள் பிதுங்க மூடியும் மூடாமலும் அவனிடம் நீட்டினார்கள். அவன் அதை வாங்கி மடித்துவைத்துக் கொண்டு நன்றி கூறியவாறு வெளியேறினான்..

“உன் நன்றி எல்லாம் எங்களுக்கு வேண்டாம் சிறப்பு காவல்படை உன்னை கண்காணிச்சுகிட்டே இருக்கும், எங்கு அத்துமீறினாலும் அங்கே உன் உயிர் விலையின்றி போகும்; எச்சரிக்கை!!”

‘எங்கள் உயிர் விலைபோயிதான் வருடங்கள் பல ஆகுதேடா..’ என்று நினைத்துக் கொண்டே அந்த ஆர்மிக்காரனைப் பார்த்து முறைத்தான் கலிங்கன் எனுமந்த வாலிபன்.

“என்ன பார்க்குற ?”

“ஒண்ணுமில்ல மிக்க நன்றி..”

“நன்றியெல்லாம் வேண்டாம் போ..”

“கலிங்கன் ஏதோ மனதிற்குள் முனகிக் கொண்டே விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து அவனை கொண்டுபோக வந்த நபரை சந்தித்து அவரோடு வண்டியிலேறி கெண்டி மாநகரை நோக்கி விரைந்தான்..

இடையே இடையே அவனை கொண்டுசெல்ல வந்த ஓட்டுனர் ஏதேதோ கேட்டு விசாரித்துக் கொண்டே வந்தான்.

“எப்போ..ண்ணே பொறப்புட்டீங்க”

“ஊர்ல இருந்து காலைல புறப்பட்டேன், மதியம் சென்னை வந்து விமானம் ஏறுனதும் ஒரு மணி நேரத்துல இங்க வந்துட்டன் மன்னாரு..”

“எதனா கேட்டானுங்களா ஏன் போற என்ன விசயம்னு?”

“கேட்டான் கேட்டான்..”

“போர் நடக்குறதால தமிழன்னா உள்ளேயே விடுறதில்லைன்னு கேள்விபட்டேன் (?)”

“ஆமா, முதல்ல அப்படித் தான் பண்ணான், பிறகு பௌத்த மாநாடுன்னு நீ அனுப்புன கடிதம் காட்டுன பிறகுதான் போடான்னு விட்டுட்டான், அது போகட்டும் –

எப்படி இருக்கு நிலைமை, மண்ணை மீட்பாங்களா?”

“எங்கண்ணே.., உயிரை கொடுக்குறாகண்ணே பாவம், எப்போ யார் சாவுறான்னு தெரியமாட்டேங்குது, அதுலயும் வன்னி முழுக்க நெருப்பும் புகையுமா அடஞ்சி கெடக்கு”

“இவனுங்க ஓயவே மாட்டாங்களா? நம்ம மக்களுக்கு விடுதலையே கிடைக்காதா? செய்தியில காட்டும்போது மட்டும் ஏதோ ஒண்ணுமேயில்லாத மாதிரி காட்றானுங்க, நாங்க கூட ஏதோ போர்தான் முடிவுக்கு வந்துடுச்சோன்னு நம்பிட்டோம், பிறகு நீ அனுப்புன மின்னஞ்சல் பார்த்துதான் எல்லாமே அதிர்சியானோம், இனி இங்க ஒரு உயிர் மண்ணுல விழுந்தாக்கூட அங்க ஒரு புரட்சி வெடிக்கும், தமிழன்னா என்னன்னு இனி காட்டனும்டா, இங்கே பாத்தியா பட்டன்ல கேமரா வெச்சிருக்கேன்..”

“ஐயோ ஏர்போர்ட்ல புடிக்கில”

“அவுங்கப்பன் இல்லை அவனோட பாட்டன் வந்தாக் கூட என்னைப் புடிக்கமுடியாது”

“தனியறை சோதனை ?”

“எல்லாம் செஞ்சாங்க”

“அப்புறம் எப்படி”

“பார்ட்ஸ் கொண்டுவந்தேன் மன்னாரு”

“ஓ….ஹோ..”

“வெளிய வந்து உனக்காக நின்னப்பதான் டாய்லெட்ல வெச்சி பிக்ஸ் பண்ணேன்”

“ஓ..”

“இங்க பாரு.. மன்னாரு..”

“அண்ணே அண்ணே ஆர்மிகாரன் வரான் கையை கீழ போடுங்க அந்த பையை எடுத்து கீழே வையுங்க..”

“ஹேய்.. நில்லு நில்லு..”

“ .. “ வண்டி உறுமி நின்றது

“எங்கருந்து வறீங்க..”

“கொலம்போவுலருந்து”

“ஏன் அங்கே போன?”

“விமானநிலையத்துலயிருந்து.. இவரைக் கூட்டியாறேன்”

“எந்த ஊரு நீ இந்தியாவா?”

“ஆமாங்க..”

“பாஸ்போர்ட் எங்க ?”

“இதோ..”

“உன் பேரென்ன ?”

“கலிங்கா!!”

உன்னை கேட்டனா? ஏன் சாருக்கு பேர் தெரியாதா நீ கீழ இறங்கு முதல்ல’

“பேரு கலிங்காங்க., தராசி குடும்பம்”

“ஓ சிங்களமா?”

“முன்ன போனவங்க, அப்படி கூட இருக்கலாம், முழுப்பேரு கலிங்கா தராசியா, தராசின்னுதான் கூப்பிடுவாங்க. ஊரு தமிழ்நாடு, இந்தியா” அவனே கலிங்கனே குனிந்து ஆர்மியை வணங்கிவிட்டு சொன்னான்.

“நீ..நல்லவநாத் தான் தெரியற –

இவன் யாரு…., ஏன்டா அவனுக்கு நீ பெரிய ஆளா?”

“இல்லீங்க, நான் வண்டி ஓட்றவனுங்க, அவரைக் கூப்பிட வந்தேன்”

“எங்க போறீங்க ரெண்டுபேரும்..”

“கெண்டி பௌத்த மாநாட்டுக்கு போறோம், இதோ அழைப்பிதழ் இருக்கு.. பாருங்க”

“ஓ அப்படியா, புத்தம் சரணம்.. புத்தம் சரணம்…, போங்க போங்க.., யாராச்சும் கேட்டா இந்த அழைப்பிதழை முதல்ல காட்டுங்க”

ஓ.. சரி சரியென்று தலையாட்டிவிட்டு, ஏறி வண்டியில் அமர்ந்ததும் கலிங்கனுக்கு சற்று வியர்த்துதான்போனது”

“தமிழன்னாலே சிங்களன்கிட்ட ஒரு மரியாதையே இல்லல்லே மன்னாரு ?”

“மரியாதையா ? இழிவா பார்ப்பாங்கண்ணே, (இ)தோப் பாருங்க இங்க ஒருத்தன் வறான்.. “

“இவனும் கேட்பானா?”

“ஆயிரம் பேர் வந்தா ஆயிரம் பேரும் கேப்பான், பேசாத இருங்க”

“நிறுத்து நிறுத்து, எங்க போற ?” லட்டி வைத்து வண்டியின்மீது தட்டுகிறான் அந்த ஆர்மிகாரன்

வண்டியை உடனே நிறுத்த –

“எங்க போற ?”
“கெண்டிக்கு..”

“எங்கருந்து வர ?’

“நான் கெண்டி, அவரு தமிழ்நாடு, இந்தியா”

“நீ என்னத்துக்கு? பாஸ்போர்ட் எங்…”

“பௌத்த மாநாட்டுக்கு போறேங்க, அனுமதி கடிதமிருக்கு பாருங்க.., இதோ பாஸ்போர்ட்”

“ம்ம் போ போ..”

“என்னடா மன்னாரு வழியெல்லாம் இப்படிதானா? நெறைஞ்சிக் கிடக்குறானுங்களே..”

“நம்மலை மட்டும்தான் இப்படி சலிப்பானுங்கண்ணே..”

“சரி என்னை அங்க கூட்டிகிட்டு போயேன் வன்னி பக்கம்”

“ஐயோ ஆபத்துண்ணே!!”

“ஏன் இப்படி பதருற?”

“உயிரோட திரும்பி வர முடியாது”

“எனக்கு உயிர் வேண்டாம் மன்னாரு, அந்த மண்ணுக்குப் போகணும், அப்படி ஒருவேளை நான் அங்கேயே இறந்துட்டா, பின்ன அங்கருந்து என் தோழர்கள் இம்மண்ணுக்காக என் மரணத்திலிருந்து தொடங்குவாங்க, எனக்கு நம்பிக்கை இருக்கு மன்னாரு, நீ நேரா வண்டியை அங்கே விடு..”

“இல்லைண்ணே, இப்ப வேண்டாம், மாட்டிகிட்டா, அநியாய சாவாப் போகும், இன்னைக்கு இரவு வேணும்னா காட்டு வழியாப் போவோம்..”

அவர்கள் பேசிக்கொண்டே, அந்த விழா நடக்குமிடம் சென்று சேர்ந்தனர். கலிங்கன், எல்லாவற்றையும் சுற்றி சுற்றி பார்த்தான். அங்கே அதே மண்ணின் ஒரு புறத்தில் போர் நடந்துக் கொண்டிருக்க, இங்கே இவர்கள் ஆடிப்பாடி களித்துக் கொண்டிருப்பதை காண வேதனையாக இருந்தது. மனதை அடக்கமுடியாமல், அங்கிருந்து புறப்பட்டான்.

மறுநாள் விடியும் நேரத்தில் வன்னி வந்திருந்தான்.

போர் நடக்குமிடம் அதிபயங்கரமாக இருந்தது. புகை மூடிய வெளிச்சத்தில் சூரியன் மறைந்திருக்க, எங்கும் வெடி சப்தமும் ஓட்டமும் கத்தலும் கதறலுமென அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் பூமியைக் காண்கையில் கைகாலெல்லாம் மனசோடு சேர்ந்து கலிங்கனுக்கு நடுங்கத்தான் செய்தது. குத்திட்டு நின்ற கால் கை மயிர்களை நீவி விட்டுவிட்டு, அருகிலிருந்த ஒரு குளத்தில் இறங்கி நீர் மோந்து முகத்தில் அடித்தான். தலையிலெல்லாம் தண்ணீர் அள்ளி ஊற்றிக் கொண்டான்.

நனைந்த தலையில் துணி வைத்து சுத்திக் கொண்டு, குளத்திலிருந்து ஏறி ஒரு காட்டிற்குள் புகுந்து வன்னிப் போர் நடக்குமொரு ஊரின் ஒரு ஓரப்பகுதியில் மக்கள் வாழும் இடத்தை நோக்கி வந்து ஒரு பெரிய மரத்தின் மீதேறி ஒசரமாக நின்றுக் கொண்டான்.

மேலிருந்துப் பார்க்கையில், பச்சைநீர் பரவி ஊரெங்கும் கவிழ்ந்துக்கொண்டதுபோல், ஒரு செந்தாமரை ஊரெங்கும் இதழ்பரப்பி பச்சையாக விரிந்திருப்பதுபோல் பசுமை பூரித்து; எழில் செறிந்த ஒரு மண்ணின் நடுவே, எரிமலை குமுறுவது போல் வெடித்து புகைந்துக் கொண்டிருந்தன அந்த உரிமைக்கான போருக்கு நடுவேயிருந்த அந்த வன்னி மண்.

சிங்களர் நெருங்கி வன்னியின் பாதியை நெருங்கிவிட்ட செய்தி மரணத்தை காற்றில் கலந்ததுபோல் கலந்து காற்றோடு காற்றாக வந்து காதில் விழ, பதற்றமெங்கும் பரவி, இருக்கும் இடத்தை எப்படியேனும் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் உயிரை துப்பாக்கியில் அடைத்துக்கொண்டு போராடினர் மொத்தத் தமிழரும் களத்திலிறங்கி.

ஒரு இனத்தின் விடுதலைக்கான வேட்கையை, தான் ஒடுக்கப்பட்டதன் நியாயத்தைக் கோரிய மனிதர்களை, மண்ணில் மார்தட்டி விளைந்திருந்த வீரத்தையென தமிழரின் ஒட்டுமொத்த பெருமதிப்பையும் தனது நயவஞ்சகத்தால் கொச்சைப்படுத்தி அவர்களுக்கு தீவிரவாத முகத்தை அணிவித்து கூண்டோடு கொண்றுதீர்க்கும் நாடுகளை சபித்துக் கொண்டிருந்தனர் அம்மக்கள்..

திடீரென மேலே பறந்துவந்த விமானமும் அடுக்கடுக்காக வீசும் குண்டுகளும் கைக்கெட்டிய உயிரைப் பறித்துக்கொள்ள; கலிங்கனும் அவனோடு சிலருமாய் சேர்ந்து ஓடி ஓரிடத்தில் மறையவேண்டி அருகிலிருந்த ஆற்றின் வழியே இறங்க அங்கொரு ஆர்மி கும்பல் அவர்களை கண்டு விரட்டியது..

திரும்பிச் சுட முடியாத ஒரு நிலையில் அந்த கூட்டம் கலிங்கனையும் சேர்த்தணைத்துக் கொண்டே ஓடியது. கலிங்கனுக்கும் உயிரென்றாலென்ன யெனும் கேள்விக்கான பதில் தெரியும் நேரமிதாகயிருந்தது. முடிந்தால் ஓடிப் பிழைத்துக்கொள்ளெனும் சவாலொன்றினை எதிர்கொள்ளுமொரு உணர்வொன்று வெளியெழும்பிவிட, முழு பயமும் வந்து முகத்தில் அறைந்ததுபோல் ஓடினான்..

தன் மக்களைப் பார்க்கவேண்டும் அவர்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று எண்ணம் கொண்டு வந்தாலும் அவனுக்கு இப்படி ஒரு அனுபவம் மரணவாசல் வழியே ஓடும் ஒரு கொலைக்காரனைப் போல், தன்னை தானே பார்க்குமிந்த அனுபவம் மிக மரணவலி கொண்டதாக இருந்தது.

வேறு வழியின்றி, ஓடி ஓடி ஓரிடத்தில் மொத்தபேரும் புகுந்துக் கொள்ள அந்த கூட்டத்திலிருந்து ஒரே ஒருவன் அந்த ஆர்மிக் காரர்களிடம் மாட்டிக்கொள்ள அவனைப் பிடித்து துப்பாக்கியால் குத்தி மண்டையில் அடித்து வாயில் துப்பாக்கி முனையைக் கொண்டு தாக்கி ஏதோ விசாரிக்கிறார்கள், அவன் மரணத்தை காரி எச்சிலின் வழியே அவர்களின் முகத்தின் மீதுமிழ.. அந்த அரக்க மனிதர்கள் கத்தி அடுத்து உயிரிருக்கும் போதே கை வேறாக கால் வேறாக வெட்ட இன்னொருவன் துப்பாக்கியை வைத்து அவரின் உடல் முழுதையும் சல்லடை சல்லடையாக சுட்டு தூர எறிகிறான். அந்த செத்த உடம்பை வேறு இன்னும் இரண்டு பேர் சென்று காலால் எட்டி உதைத்து விட்டு புகைப்படம் எடுக்கிறார்கள். பின் அங்கிருந்து இவர்கள் இருக்கும் இடம் நோக்கித் தேடியவாறு வெறிபிடித்தாற்போல் ஓடி வருகிறார்கள்.

கலிங்கனுக்கு கண்கள் சிவந்து உடம்பெல்லாம் வியர்த்து கைகாலெல்லாம் ஆடி ஒரு கிலி பிடித்ததுபோல ஆகியிருந்தான். அடுத்த நொடியின் எந்த நகர்விலும் நான் இறந்துவிடுவேன் எனும் பயம் உள்ளே அவனை பற்றிக் கொண்டது..

இங்கே நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகளை இவ்வாறு கேள்வியுற்று சிலதை படங்களில் நண்பர்கள் மூலம் பார்த்து பல இரவுகளை தூங்காமல் கழித்திருக்கிறான் கலிங்கன். என்றாலும், பௌத்த விழா வந்து தன் மண்ணைத் தொட்டுப் போகும் பார்த்துப்போகும் ஆசையொன்றே இருந்து இங்கு வந்திருந்தான். ஆனால் – இங்கு நடக்கும் சம்பவங்களைப் போன்றெல்லாம் அவன் கனவில் கூட கண்டதில்லை.

சற்று நேரத்திற்கெல்லாம் அங்கே வந்துசூழ்ந்த தமிழ்போராளிகளில் சிலர் அவனை அடையாளம் கண்டுக்கொள்ள “டேய்.. நம்மட தமிழ்நாட்டண்ணன் இடமறியாது வந்திருப்பார் கொண்டுபோங்கள்” என்று சொல்லி ஓடி வந்து சூழ்ந்துக்கொண்டனர். அவன் பயத்தில் மூர்சையாகிவிடுவதைப் போலிருந்தான்.

“அண்ணே.. உங்களை யாரு இங்க வரச் சொன்னது, பயப்படாதீங்க, மூச்சை நல்லா இழுத்து இழுத்து விடுங்க, அதிகமா பயப்படாதீங்க மூச்சு நின்னு போயிரும், அதுக்குபதிலா நீங்க ஒரே ஒரு எதிரியையாவது கொன்னுட்டு சாவலாம்..” என்றொருவர் சொல்ல –

கலிங்கனுக்கு அந்த வார்த்தை அசுர பலத்தைத் தந்தது. “ஆம், ஆம் அதுதான் சரி. இல்லை, எனக்கொன்றும் பயமில்லை, புறப்படுங்க புறப்படுங்க நான் வரேன் வாங்க போகலா…ம்…”

“ஷ்… சத்தம் போடாதீங்க, இங்க எப்படியும் ஆமிக்காரர்கள் வந்துவிடுவார்கள், இங்கருந்து முதலில் ஓடணும்.., ஓடி எப்படியாவது அந்த கட்டடம் மேல ஏறிட்டா போதும் அடுத்த ஒன்றிரண்டு மணித்துளியில ஏர்பஸ் வந்திடும் சீக்கிரம் மூவ் மூவ்.. கார்மல் குரலெழுப்பி கட்டளையிட எல்லோரும் நகர்ந்து நாலுக்கால் பாய்ச்சலில் ஓடினார்கள்.

ஓடி அவர்கள் அந்தக் கட்டிடத்தை நெருங்கப் போவதற்குள் கலிங்கனுக்கு மூச்சிரைத்து மார்பை அடைத்தது. அதற்குப் பின் ஒரு நொடி கூட ஓடமுடியாதது போல் பொதீரென அவன் கீழே விழ, ஆர்மிகாரர்கள் அங்கு வந்து நிற்க அதை கலிங்கன் வேறு பார்த்துவிட..

ஐயோ செத்துட்டமோ எனும் பயத்தில் எழுந்து மீண்டும் ஓட எத்தனிப்பதற்குள் இன்னொருவர் வந்து கலிங்கனை தூக்கி விட்டு போ போ ஓடு ஓடுன்னு விரட்டி நகர்வதற்குள் ஆர்மிகாரனில் ஒருவன் தன் துப்பாக்கியை தூக்கி எரிய.. மேலே அதேநேரம் விமானம் வர, அவர்கள் ஓடி ஏறிவிடுவதற்குள் அந்த துப்பாக்கிசீறி வந்து அந்த தூக்கிவிட்டவனின் மீது பட்டு அவன் கீழே விழுந்து எழுவதற்குள் ஆர்மிகாரர்கள் ஓடிவந்து அவனைப் பிடித்து விடுகிறார்கள்.. விமானம் மேலே சர்ரென பறந்துவிடுகிறது.

விமானத்தை விட்டுவிட்ட கொந்தளிப்பில் அவனைப் பிடித்துக்கொண்டுபோய் அருகே கொதிக்க கொதிக்க இருந்த தார் காய்ச்சும் எந்திரம் போன்ற ஒன்றினைத் திறந்து அவன் மீது கொதிக்க கொதிக்க பாய்ச்சிவிட, அது அவனைக் கரைத்துக்கொண்டு வெப்பத்தில் தாரோடு தாராக உருக்கி ரத்தமும் தாருமாக கலந்து வேறொரு நிறத்தில் ஒரு பிண்டம்போல ஆக்கி தரையில் உருட்டிவிட..

கலிங்கனின் கண்கள் அழையினாலும் கதறலினாலும் அலறி மூடிக்கொள்ள உடம்பெல்லாம் துடிதுடித்துப் போனது. அவனின் காமிரா கண்கள் மட்டும் இவைகளை எல்லாமே கண்கொட்டப் பார்த்துக் கொண்டிருந்தது, அவன் இயக்கியபோதெல்லாம் அந்த காமிரா கண்கள் ஒவ்வொரு நொடிப்பொழுதின் அசைவையும் சேகரித்து வைத்துக் கொண்டேயிருந்தது.

அதற்குள் விமானம் மேலே பறந்து வேறொரு எல்லைக்குள் போக.. அவனை சமாதானப் படுத்தி, வந்த விவரம் மற்றும் அவனைப் பற்றிய விவரமெல்லாம் கேட்டுக் கொண்டு அவனை தன் வீட்டிற்கு கொண்டுபோனான் கார்மல்.

கார்மலின் வீடுநிறைய யிருந்த பொதுவான மரணபயத்தைக் காட்டிலும் அன்பு அங்கே மிக அதிகமாகயிருந்தது. விடியலின் பொழுதொன்றில்தான் அவர்களின் விமானம் வந்திறங்கி நிற்க, கார்மலின் அம்மா ஓடிவந்து உபசரிப்போடு அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்து, உடைமாற்ற சொல்லி, விவரங்களை கேட்டு நிலவரம் அறிந்துக் கொண்டு ‘பல் விளக்கி வாருங்கள் பசியாறலாமென்று கேட்க, அவன் மறுப்பதற்குள் அவள் தன்னுடைய பிரெஷினையெடுத்துக் கொடுத்து பல்விலக்கி வா என்கிறாள். கலிங்கன் அவளை அணைத்துக்கொண்டு அழுதான். அந்த தாய்மடியின் மீதிருக்கும் மண்ணின் களங்கமகற்ற மேலுமவன் துடித்தான்.

அவனுக்கு இப்படியெல்லாம் காண்பது புதிது. மனசு அதிர்ந்தபடியே யிருக்க ஓடி வந்த பயம் உடம்பெல்லாம் காய்ச்சலாகி கனத்தது. சாப்பிடும் எண்ணமெல்லாம சற்றுமில்லை. ஓரிடத்தில் அமர்ந்து இதுவரை எடுத்ததை எல்லாம் விண்டோவ்ஸ் வீடியோவிற்கு நடுங்கிய ,மனதோடு மாற்றி ஜிப் செய்து இந்திய நண்பர்களுக்கு அனுப்பினான். நடந்த விவரமெல்லாம் சொல்லி இனி நான் திரும்பி வருவதில் உறுதியில்லை என்றும் மின்மடல் செய்தான்.

அந்த ஊர் மிக அழகாக மலைக்குன்று போல் இருந்தது. பார்க்க கிராமம் போல் இருந்தாலும் எளிதில் யாரும் தொட்டுவிடமுடியாத ஒரு பெரிய நெட்வொர்க் அங்கே இயங்கியது. தமிழீழப் போராளிகளின் அசைக்க முடியாத இடமாக அது விளங்கியது. உலகை ஒரு புள்ளியில் இணைக்கும் எல்லாம் வசதியையும் அங்கே அவர்கள் செய்துவைத்திருந்தனர். எங்கும் தமிழ் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்க, காணுமிடமெல்லாம் ஈழத்தின் நேர்த்தியை அடையாளப்படுத்தியது அந்த சிறிய ஊர்.

என்றாலும், நேரம் நெருங்க நெருங்க விசகுண்டு ஏந்தி எதிரியொருவன் உட்புகும் இடைவெளிக்கான சுதந்திரமாகவே அந்த தருணம் விளங்கியது. அதற்குள் கார்மலின் குடும்பத்தார் அவனைநோக்கி ஓடிவந்து யாருக்கேனும் பேசுவதானால் ஊருக்கு பேசு வா, பாதுகாப்பாக இருக்கிறாய் என்று தகவல் சொல்லு வா என்றழைத்தனர். அதலாம் இனி எனக்கு யாருமில்லை, யாரிடமும் பேச எனக்கென்ன உண்டு, நாம் வேறெங்கேனும் போக வேண்டுமா சொல்லுங்கள் அங்கேப் போவோமென்றான் கலிங்கன்.

அவனுக்கு மனசெல்லாம் வலித்தது. துடிதுடித்தது. விட இருக்கும் தனதுயிரை இம்மண்ணுக்கென விடுவதாக தீர்மானித்தான். கண்களெல்லாம் சிவந்து ஒரே எண்ணத்தில் ஒரே மூச்சாக ஒரே திசையில் சொருகிக் கொண்டிருந்தது. கார்மல் அதைப் புரிந்துக் கொண்டு ஒரு இடம் போகலாம் வா என்று அழைத்துப் போக, போகும் வழியில் ஆர்மிக் காரர்களின் விமானம் சாரை சாரையாக நுழைய, மாறி மாறி சுட்டுக் கொள்வதும் குண்டு வீசி எறிவதும், சில வீடுகள் சிதறி உயிர்கள் பிரிவதுமாக இருக்க, அதைக் கண்கூடாக கண்டு மேலும் பதறிபோனான் கலிங்கன்.

குழந்தை ஒன்று வெடிபட்டு பாதி சிதறியபடி துடித்தது, பெண்கள் கையிழந்து காலிழந்து கதறினர், வயோதிகர் நடுத்தர ஆண்களின் முகம் பிய்ந்து தலை வெடித்து முன்பாதியாகவும் பின்பாதியகவும் தமிழன் துண்டுதுண்டாகக் கிடந்தான்.. கலிங்கனால் தாளமுடியவில்லை, இரண்டுகைவைத்து மார்பில் அடித்துக் கொண்டு கத்தினான். வெறிவந்த சிங்கமொன்று தன் கைகளால் மார்பிலடித்துக் கொண்டு சீறுவது போல் சீறினான்.

சப்தம் கேட்டுத் திரும்பிய எதிரிப் படையினர் துப்பாக்கியினால் சரமாரியாக அவனைநோக்கிச் சுட்டனர், கலிங்கன் ஒதுங்கி ஓடி கீழிருந்த துப்பாக்கி எடுத்து நேரே எதிரியை சுட்டுக்கொண்டே ஓடினான். கண்ணில் பட்டவரையெல்லாம் சுட்டு சல்லடையாக்கினான். எதிரேயிருந்த பீரங்கி நோக்கி ஓடி, அதிலிருந்தவரை இழுத்துக் கீழே போட்டு துப்பாக்கியினால் நெஞ்சுக் குழியில் வைத்துச் சுட்டான். அவன் சரிந்ததும் புயலென எகுறி பீரங்கியின் மேலமர்ந்து வெறிபிடித்ததுபோல் எதிரிகளை நோக்கிச் சுட்டு சுட்டு வீழ்த்தினான். அடங்கிக் கிடந்த பாம்பொன்று அதன் வால் மிதித்ததும் திமிறியதைப் போல் திமிறி பொங்கும் கடலின் உச்சியென கலிங்கனின் மார்பு விரிய விரிய வன்னி மண் தமிழர்களின் மூச்சுக் காற்றைத் திருப்பி தன்பக்கம் வாங்கி சுதந்திரமாக சுவாசிக்கத் துவங்கியது..

யாருக்கும் கட்டுப்பட்டுவிடாத ஒரு கடல் திமிங்கிலம்போலவனுடல் இங்குமங்குமென அளவலாவி தனது மண்ணிற்கான விடுதலையை மிக வேகமாக மீட்டுக் கொண்டிருக்க; எட்டியதூரம்வரை சுட்டு சுட்டு பொசுக்கிய இடத்திலெல்லாம் எத்தனை உயிர்கள் செத்துமாய்ந்ததோ தெரியவில்லை, ஆனால் அந்த தருணத்தில் ஒரு வீரியம் மிக்க போராளி தமிழ்மண்ணிற்கெனப் பிறந்திருப்பதை எதிரிகள் தன் கணக்கில் எழுதிக்கொள்ளத்தான் வேண்டியதாயிற்று…

ஈழவிடுதலைக்கான முதல் வெற்றிக்கொடி அநேகம் இன்றிரவு அங்கே பறக்குமெனும் செய்தியை எல்லோருக்கும் மின்னனஞ்சலில் அனுப்ப கார்மல் ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தான்..

அடுத்தடுத்த ஊர்களில் அந்த வெடிகள் இன்னும் வீரியமாக வெடிக்கத் துவங்கின, ஒவ்வொரு வெடி வெடிக்கும் சப்தத்தின்போதும் ஒரு விதை அந்தந்த மண்ணின் சுதந்திரத்திற்கென ஆங்காங்கே முளைத்துக் கொண்டேயிருந்தது..

——————*——————*——————
..முற்றும்..

வித்யாசாகர்

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

“வெங்காயம்” கடிக்க காரமென்றாலும் காணல் தகும்.. (திரைவிமர்சனம்)

ம் கிராமத்துக் குறும்புகளைப் பொருக்கி காதல்மண்ணில் ஊன்றிய கதை. மூடநம்பிக்கையின் தாலியறுத்து மாடசாமியின் கோவிலுடைக்கும் காவியுடுத்திய காடைகளை இல்லாதொழிக்கும் கதை. யதார்த்ததின் தெரு திரிந்து எம் மக்களின் வாழ்தலை திரையிலக்கியமாக்கிய படம். பசுமைமாறாத வெளியெங்கும் மிளிரும் என் எளிய மக்களின் சிரிப்பையும் அழையையும் நகர்வுகளையும் தொகுத்துக்கொள்ளும் இரு மனசுகளின் உயிர்சுரம் கூடிய சோகராகம். இசையின் ஆழம் போல் மனதை வருத்தங்களும் மிக ஆழமாக தைத்திட்ட பல ஊர்களின் கதைகளைச் சேகரித்து அதை திரைமொழியில் படமாக்கிய சங்ககிரி ராஜ்குமாரின் கனவு சுமந்த உழைப்பிந்த வெங்காயமெனும் சீர்திருத்தத் திரைப்படம்.

ஓலையில் வேய்ந்த கூரையின் அழகு, பாட்டியின் முகத்தில் பெற்றவளை பார்த்த ஏக்கம், ஏழ்மையின் வீட்டில் கண்ணிய விளக்கெரிந்த வெளிச்சமென, எல்லாம் கடந்து ‘அழுத்தமான ஜோதிட நம்பிக்கையால் எதையும் அலசிப்பார்த்திடாது அல்லலுறும் ஒரு கிராமத்தின் கதையென’ படமெங்கும் பார்க்கும் பார்வைநரம்புதனில் பதைப்பையூட்டும் திரைக்கதையின் காட்சிகளாக மனதை கவ்விக் கொள்கிறது இப்படத்தின் சில பாத்திரப் படைப்புக்கள். குறிப்பாக அந்த தெருக்கூத்தாடியின் நடிப்பும் அவரைச் சார்ந்த கதைப்பின்னலும் இப்படத்தின் மிகப்பெரிய பலம்.

அவருக்கடுத்து, அதிக மினுக்கலில்லாத என் தங்கச்சியைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் கதாநாயகி’ போதுமான மிடுக்கோடு நேர்த்தியாக நடிக்கத் தக்க இளைஞனாக ஒரு கதாநாயகன்’ மனதில் பாசமாக ஒட்டிக் கொள்ளும் பாட்டியும் பாட்டியின் பேரனாக இயக்குனர் சங்ககிரியுமென அவர்களின் வரிசையில் மகளின் மகனின் நன்மைக்கென எண்ணி எதற்கும் இசைந்துவிடும் பெற்றோரையும் காட்டி நமை முகம் சுளிக்கவைக்கும் பாத்திர படைப்புகளின் மூலம் நம் மூடதனங்களை உடைத்தெறிகிறார் இயக்குனர்.

காடெரியும் தீயில் கடுகளவு விட்ட நீர்போல, நாடெங்கும் தலைவிரித்தாடும் ஜோதிட நம்பிக்கையை, அதுசார்ந்து நடக்கும் அதர்ம அட்டூழியங்களை, அதனால் அழிந்த குடும்ப வலி நிறைந்த காட்சிகளை வெள்ளித் திரையில் ஒருசில துளிகளாகக் காட்டி நம்மை மூடர்களாக்கும் சில மனித ஜடங்களின் முகத்தின்மீது  காரி உமிழ்கிறார்.

சில தொழிநுட்பக் குறைபாடு, இசையின் ரசம் போதுமானதாக இல்லாமை, ஆட்கொண்டுவிட்டதனால் அதை ஆட்பட்டபடியே காட்சிபடுத்திய சில இடங்களின் முனைப்பு, மேலும் படத்தின் பாத்திரங்களையொட்டிய  அழுத்தமான வசனங்கள் சில காட்சிகளில் போராமை என படம் பார்க்க வரும் சாதாரண ரசிகர்களை சற்று முகம் சுருக்கவைத்தாலும், முழுக்கப் படம் பார்த்த ஒருவரையேனும் திருத்திய நன்றி இயக்குனர் சங்ககிரி ராஜ்குமாரைச் சாரும்.

துடிக்க துடிக்க ஒரு குழந்தையின் கழுத்தறுக்கும் சுயநலம் எத்தனை மனிதத்தன்மையற்ற செயலென்று அறிந்த இவ்வுலகில் தான் இன்றும் நடக்கும் கொடுமையொன்றை நெஞ்சம் பதைக்க காண்பிக்கிறார். உள்ளே ஒரு சாபம் அப்படிச் செய்யும் அத்தனைப் பேர் மீதும் பட்டுத் தெறிக்கிறது அந்தக் காட்சியில். அந்த சிறுவன் கத்தித் துடிக்கும் அந்தக் கதறலின் சப்தத்தில் கண்மூடிக் கொள்ளும் நாம் அத்தகைய ஒரு வாய்ப்பை நமைச் சார்ந்த யாருக்குமே தராததொரு சமூகத்தை மீட்டமைக்கவேண்டிய நிலையிலும் இருக்கிறோம் என்பதையும் கட்டாயம் நினைவில் கொள்ளவேண்டும்.

கடவுள் ஒரு புனிதத் தன்மையெனும் எண்ணத்தை வலியுறுத்திய பல மகான்களின் அதே நிறத்தில் இன்றந்த கடவுளையே வெறுக்கச் செய்யும் பல பாதகர்கள் வாழும் பூமி பாவத்தால் கனக்கிறது. ஆங்காங்கே வெடித்தும், நீரில் மூழ்கியும் நீரற்றும் அழிகிறது உலகமெனில் அதற்குக் காரணமான பல அதர்மங்களின் முதலிடமாக வகிக்கும் போலிச் சாமியார்களை அசிங்கப் பாத்திரமமைத்து அவர்களின் உண்மை முகங்களை உலகிற்குத் தோலுரித்துக் காட்டுகிறார் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்.

போலிச் சாமியார்களின் சுயநல வெறியை, நம்பிக்கையின் ஆழத்தில் விழுந்துக் கிடக்கும் மனிதர்களை தன்வசப்படுத்திக் கொள்ளும் அவர்களின் கீழ்தனத்தை, பக்தர்களின் கண்களை கடவுளின் பேரால் மறைத்து தன்னை லாவகமாக வளர்த்துக்கொள்ளும் அபார வளர்ச்சியின் பொருளாதார சூழ்ச்சியை என்றெல்லாம் போலிச் சாமியார்களின், ஜோதிடப் பித்தர்களின் காம குரோத முகங்களை அப்பட்டமாகக் காட்டி அத்தகைய தவறுகளை இழைப்போர் முகத்தில் ஏழு ஜென்மத்திற்குமான சாபத்தை வாரியடித்து தனது முதல் படத்திலேயே சமூக சீர்கேடுகளைப் பற்றிப் பேச துணிவுகொண்ட இயக்குனரின் முயற்சிக்கு’ சமுதாய அக்கறைக்கு நன்றிகூறும் கடமையுணர்வும் நமக்குண்டு.

இவரை மட்டுமின்றி, இவரோடு ஒத்து நடித்த, படத்தின் முழுமைக்கும் உடன் நின்று ஒத்துழைத்த, படம் வந்தபின்பும் சென்றடைந்திடாத நிலையில் அதை மீண்டும் தன் பெயரில் வெளியிட்டு நம் போன்றோரின் கண்களில் மீண்டும் இப்படத்தைக் காண்பித்த இயக்குனர் திரு. சேரன் மற்றும் அனைவருக்கும் ஒரு ரசிக மனதோடு இப்படத்திற்கான பாராட்டுக்களைத் தெரிவிப்போம்.

ஆடல் பாடல் காதல் காதலென்று மட்டுமே ஆயிரமாயிரம் படங்கள் வந்துப் போன கலைத் தெரு ஒன்றில், ஒரு கட்டைதுடைப்பானை யெடுத்துக்கொண்டு நம்முடைய இழிவுகளைத் துடைத்தெறிய திரைப்பயணமொன்றைத் துவங்கியிருக்கிறார் இயக்குனர் சங்ககிரி, அவருக்கு வாழ்த்து கூறும் இதே தருணத்தில் –

சமகாலத்தை சுயகற்பனையின் சித்தரிப்பின்றி சமகாலமாகவே பதிந்து, அதன் குறைநிறைகளை அதன்போக்கில் அலசி, அதன் நன்மை தீமைகளை அதனூடாகக் காட்டி, அதுசார்ந்த சீர்திருத்த எண்ணங்களை மட்டுமே அப்படத்தின் வசனங்களாக வைத்து, பொருத்தமான அதேநேரம் சற்று வசீகர தலைப்பிட்டு, தன் சுய விருப்புவெருப்புக்களை விட்டு விலகி ஒரு கலையை கலைக்காக படைத்து அதை மக்களுக்கும் உதவும்வண்ணம் மக்களிடம் கொண்டு சேர்ப்பாரெனில் இன்னும் இவரால் ‘இதைவிட பல நல்லபடங்களை செய்யமுடியுமென்று நம்பி, பார்க்காதவரையும் வந்து படம் பார்க்கவைக்கும் திறன் இவரின் திரைமொழிக்கு உண்டென்று வாழ்த்தி என் மனம் நிறைந்த நன்றிகளோடிங்கே நிறைவு செய்கிறேன்..

வித்யாசாகர்

Posted in சொற்களின் போர் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்