13 தாயுமானவரின் கதைக்கு ‘தோனி’ என்று பெயர்.. (திரைவிமர்சனம்)

ரு தாயின் வலி தெரியும், தவிப்பும் கண்ணீரும் புரியும், தந்தையின் ரணம் எத்தனை குழந்தைகளுக்குத் தெரிகிறது?

படிப்பின் வாசல் பெரிது, வாசனை அதிகம், அள்ள அள்ள குறையாத செல்வத்தைத் தரும் அமுதசுரபியென எல்லோருக்கும் தெரியும், படிக்க இயலாத குழந்தைகளின் கதி என்ன, அவர்களுக்கென இச்சமுதாயத்தில் நாம் வைத்திருக்கும் இடம் எது?

கனவன் மனைவி அம்மா அப்பா அக்காத் தங்கை குழந்தைகள் சுற்றம் உற்றார் உறவு வீடு மனை சொத்து எல்லாம் பெரிது தான். ஒரு கனவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் ‘அன்பு காட்டுவதில் ‘புரிந்துக் கொள்வதில்; விட்டுக் கொடுப்பதில்; அக்கறை செய்தலில் தாயிற்குச் சமம்தான். ஆக, மதிக்கத் தக்க உறவென்பது தெய்வத்திற்கு ஈடுதான்’ என்பது எல்லோருக்குமேப் புரிகிறது, யாருமில்லார் நம்மிடையே எத்தனையோ பேர் வாழ்கின்றனரே அவர்களின் கதி என்ன?

பை நிறைய புத்தகம், புத்தகம் நிறைய கனம், கனத்து கனத்து கடக்கும் பிள்ளைகளின் காலையிலிருந்து மாலைவரை படும் அவஸ்தை பள்ளிக்கூடத்து சுத்தம் செய்யும் தொழிலாளிமுதல் வீடு வந்ததும் மடியில் கிடத்திக் கொஞ்சும் அப்பாம்மா வரை எல்லோருக்குமே தெரிகிறது, அதை குறைக்கும் எண்ணத்தில் துளிகூட நமக்குள் ஒட்டுமொத்தமாய் எழவில்லையே ஏன்?

நம் பிள்ளைகள் பாவமில்லையா? அவர்கள் வருங்காலத்தின் வெற்றிப் பதக்கங்கள் இல்லையா? நம் தேசத்தைத் தாங்கப்போகும் தூண்கள் இல்லையா? பிறகவர்களை நாம் எங்கே வைத்திருக்கிறோம் எப்படி வளர்திருக்கிறோம் எதைநோக்கி படிக்கவைக்கிறோம்? இப்படி அடுக்கிக் கொண்டேப் போகும் பல கேள்விகளை கண்ணீர் சொட்ட சொட்ட திரைப்படம் வழியாக மனதிற்குள் அடுக்கிவிடுகிறது தோனி’ திரைப்படத்தின் காட்சிகளும் வசனங்களும் பிரகாஷ்ராஜின் கண்ணீர் நிரைக்கும் நடிப்பும்..

ஒரு நண்பர்களின் வட்டத்தை நம் எண்ணத்திற்கேற்ப நாம் எப்படி அமைத்துக் கொள்கிறோம் என்பதிலிருந்து, நாம் சரிஎனில் நம்மோடுள்ளவரையும் நம்மால் எப்படி சரிபடுத்த முடியும் என்பதையும் நாசுக்காக எடுத்துச் சொல்கிறதிந்த திரைப்படம்.

காவேரியாகவும் கார்த்தியாகவும் வரும் குழந்தைகள் இரண்டும் நடிப்பில் விஞ்சி நம் இதயத்தை நம் பிள்ளைகளின் உணர்வுகளால் நிறைத்தாலும், நம் பிள்ளைகளைப் பற்றி நாம் அறியாத முகாமொன்றை அல்லது கவனியாத திறமையொன்றினை அவர்களுக்குள்ளிருந்து தேடிப்பார்க்க மானசீகமாய் சொல்லித் தருகிறார் திரு. பிரகாஷ் ராஜ்.

ஒரு அலுவலின் ஸ்பரிசத்தையும் அது நமை கைவிடும் இடத்தின் அவலத்தையும், தட்டிக்கேட்பவனை குட்டிச்செல்ல கைகோர்த்து வரும் இச்சமுதாய இழிவையும், அதற்குத் துணைபோகும் அரசுசார் கைக்கூலிகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக நல்லோரைச் சுற்றிநிற்கும் மனிதரையும், அந்த மனிதரின் அதிர்வுகளால் தன் முகம் மாற்றிக் கொள்ளும் அரசாங்கத்தையும் விரல் விட்டு எண்ணினாற்போல் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு காட்சியிலும் காண்பித்து காண்பித்து மிக யதார்த்த நடையின் தோற்றத்தில் ஒரு நல்ல திரைப்படமாக நகர்கிறது இந்த தோனி திரைப்படம், என்றாலும் இத்தகைய நம் உணர்வுகளை சுமந்துவந்த ஒரு திரைப்படத்திற்கு நாம் அத்தனை போதிய ஆதரவினைக் கொடுத்திடவில்லையோ என்ற ஒரு குற்றஉணர்வு மனதை சுடத் தான் செய்கிறது.

பள்ளிக்கூடங்கள் நிறைந்த இடத்தில் நாகரிகம் வேகமாய் பிறக்கிறது நிலைக்கிறது எனும் நம்பிக்கை மாறி, ஒரு சமுதாயம் சரி இல்லையெனில் அந்த சமுதாயத்தை சார்ந்த பள்ளிக்கூடங்களும் சரியில்லை என்று வசனம் எழுத வைத்த இந்நிலைக்கு நாம் முழு பொறுப்பு என்பதை எப்படியும் நம்மால் மறுத்துவிட முடியாது

அப்படி சில நெஞ்சைப் பிளக்கும் வசனங்கள் நீண்டிருக்க, நேர்பட கண்கொத்திப் பாம்பாய் படக் காட்சிகள் அமைந்திருக்க, அச்சச்சோ என ஒதுங்கிக் கொண்டோமா வசீகரத் திரைப்படங்களை ரசிக்கத் தெரிந்த நாம்? நம் பிள்ளைகளின் கனவை நாம் சுமக்கிறோம் என்பதில் அக்கறை இருக்கலாம், அதை மாற்றி நம் கனவின் முட்டைகளையும் அதோடு சேர்த்துவைத்து அதன் மீதேறி அமர்ந்துக்கொள்ள நம்மக்கென உரிமை இருக்கிறது என்பதைத் தானே இத்திரைப்படம் கேட்கிறது?

என் மகனை நான் முதன் முதலில் கதற கதற பள்ளியில் விட்டுவந்தபோது அவன் அழுத அழை என் பாடை கடந்து போய் குழியில் வீழ்ந்து என்னுடல் எரிந்தாலும் உள்ளே ஈரப்பட்டுப்போய் கிடக்கும். நாளை இன்னொரு கண்ணீரின் கதறலை சுமக்க என் மகளையும் கொண்டுபோய் விடப்போகிறவன் தான் நானும், காரணம் நமை சுற்றியிருக்கும் நாம் போட்ட வட்டம் அப்படி.

மூன்று நான்கு வயதொத்த குழந்தையொன்று நான் அம்மாப்பாவை விட்டுப் போகமாட்டேன் என்று அழுவதில் இருக்கும் நியாயத்தை அதன் எதிர்காலம் இப்படி அமையவேண்டும் என்று நாம் கட்டிவைத்திருக்கும் கனவுகோட்டை எப்படி சமபடுத்திக் கொள்ளுகிறதோ தெரியவில்லை.

அதற்காக குழந்தைகள் படிக்காமல் இருந்தால் தகுமா? என்று கேள்வி வருமெனில் முதலில் படிப்பு என்பதன் அர்த்தம் என்ன என்பதையும் சிந்திக்க வேண்டிய இடத்தில் தான் நாமிருக்கிறோம்?

நான் நினைத்திருக்கிறேன்; பாட்டில் இசையில் இத்தனை ஈர்ப்பாக உள்ளானே இவனை இப்போதிலிருந்தே இசைத் துறையில் முழுமையாக ஆட்ப்படும்படி சேர்த்தால்லென்ன (?) பாதியை மருந்தாக சாப்பிட்டு விட்டு மீதியைக் கடைசியில் அவனுக்குப் பிடித்த அமுதம்போல் கொடுத்து என்ன பயன்? இன்றிலிருந்தே அவனுக்குப் பிடித்த துறையில் அவனை விட்டுவிட்டால் நாளை அதில் பெரிய சாதனையாளனாகவோ அல்லது அதில்சிறந்த நிபுணராகவோ அல்லது குறைந்த பட்சம் அவன் எதிர்பார்த்ததை அவன் அடைந்து, அவனுடைய வாழ்க்கையை அவன் முழுதாக அவன்விருப்பப்படி வாழ்ந்த திருப்தியையேனும் அவன் அடைய மாட்டானா? என்றொரு ஏக்கத்தைப் பற்றி நான் சிந்தித்திருக்கிறேன்.

ஆனால், மீண்டும் சுற்றம், இச்சமுதாயம், நம் பாழாப்போன அதே பழகிப்போன நம் வாழக்கையின் அதே தேய்ந்து தேய்ந்தும் மிஞ்சியுள்ள வட்டங்கள் என ஒவ்வொன்றாய் வந்து நமை மிரட்ட தர தரவென்று இழுத்துக் கொண்டுபோய் குழந்தையை பள்ளிக்கூடத்தில் விட்டுத் தானே வந்திருக்கிறேன்.

அதற்காக பள்ளிக்கூடமும், பாடங்களும், படிப்பும் வரமா சாபமா என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல இந்த தோனி திரைப்படத்திற்கு உட்படுத்தப்பட்ட ஆய்வோ அல்லது என் சிற்றறிவோ அத்தனைப் போதுமானதல்ல. என்றாலும், படிப்பு நிச்சயம் வரம் தான், பள்ளிக்கூடங்கள் அறிவினையூட்டும் கோவில் தான், ஆசிரியர்கள் தெய்வத்தினும் முன்னதாகப் போற்றத் தக்க சிறந்த போற்றுதலுக்கு உரியவர்கள் தான் என்பதை ஏற்க, இப்போதிருப்பதைவிடவும் பெரிய ஞானமொன்றும் தேவையில்லைதான். ஆனாலும், அந்த படிப்பு எப்படி இருக்க வேண்டும்? ஆனால் இப்போது எப்படி இருக்கிறது என்பதில்தான் கேள்விகளும் குறையும் பலமும் பலவீனங்கங்களும் வருத்தமும் சூழ்ச்சியும் கொட்டிக் கிடக்கின்றன.

எல்லாமே வியாபாரமாகிப் போனதன் கொடுமைக்கு அப்பால் நிறுவப் பட்டிருந்த கல்விச் சாலைகளும் இன்று கடைகளின் வரிசையில் நின்றுப் போனது பெருத்த வருத்தைத்தையே அளிக்கின்றன என்பதைப் பற்றி தெள்ளத் தெளிவாக யோசிக்க வைக்கிறது இத் தோனி திரைப்படம்.

இப்படத்தின் ஒரு காட்சியில் கேட்கிறார்கள், இன்றைய கல்வி வரமா சாபமா என்று, அதற்கு பிரகாஷ் ராஜ் மொத்த கல்வியும் இன்றைய சாபமே என்று சொல்லுமிடத்தில் வசனம் குறித்த ஒரு சின்ன நெருடல் இருந்தாலும், அதையும் ஒரு பாதிக்கப்பட்டதொரு தந்தையின் மனநிலையில் நின்று பார்க்கையில் பெரிய குற்றமாகத் தெரியவில்லை. வேண்டுமெனில் சாபமே என்று சொல்வதற்கிணங்க கொடுமைகளை மட்டும் நம்மால் தினமும் செய்தியிலும் மற்றும் இன்றும் நமைச் சுற்றி நடந்துப்போகும் குழந்தைகளின் முகத்திலும் பார்க்கத் தானே முடிகிறது.

உண்மையில் பிரகாஷ் ராஜ் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை, இருப்பினும் அவர் ஒரு நல்ல இயக்குனரும் என்பதைமீறி ஒரு நல்ல மனிதர், ஒரு திறமை மிக்க அரிய கலைஞன், நம் சமுதாய இழிவுகளைக் கண்டுத் துடிக்கும் பல இதயங்களில் ஒன்றிற்கு அவரும் சொந்தக் காரர் என்பதை இப்படத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளின் மூலம் நிச்சயம் அறியலாம்.

நளினி என்று அற்புதமான தாய்மை நிறைந்த பாத்திரத்தை காட்டுவதோடு நின்றுவிடாமல், நல்ல நண்பர்கள், மனிதம் மிக்க மருத்துவர்கள், ஒரு ஒதுக்குதலை அல்லது தரந்தாழ்த்தலை எண்ணி மனசு ஏங்கிக் கிடக்கும் பள்ளிக்கூடத்து பீயுன் பாத்திரம், வட்டிக்கு பணம் கொடுத்து பதிலுக்கு இயலாதோரின் ரத்தம் குடித்து வாழ்ந்தாலும் ‘அவசரத்தில் ஓடிவந்து கைகொடுக்கும் ஒரு மனிதம் மிக்க மிக நல்ல மனிதரொருவரின் பாத்திரமென படத்தில் வரும் பலரை மிக நல்லோராகவே காட்டுவதோடு நின்றுவிடாமல், ஒரு தலைமை சரியாக இருக்குமெனில், இம்மண்ணின் அரசியல் தலைவர்கள் உயர்வாக நடப்பார்களெனில் நம் தேசமும் உயர்வானதாகவே உருவெடுக்கும் என்பதையும் நன்றாகக் காட்டியுள்ளார்.

இசைதான் அத்தனை அழுத்தமாக நெஞ்சில் ஒட்டவில்லை என்றாலும், கதை நகரும் திசைநோக்கி சற்று பயணிப்பதில் யாரது இசை போட்டதென்று எட்டிப்பார்க்கவைத்து, கடைசியில் கார்த்தி எனும் சிறுவன் மட்டையடி விளையாட்டில் ஒரே பந்தில் ஆறு ஓட்டத்திற்கான மதிப்பினைப் பெற்று ஆட்டத்தில் வென்று நிற்கையில் எழும் இசையென்னவோ அந்த கடைசியில் படம் முடிகையில் முடியுமந்த பாடல் என்னவோ அட ஆமாம்பா நம்ம இளையராஜா தான் என்று தலையசைக்கவே வைக்கிறது.

ஆனால் படத்தை இன்னும் கூட கொஞ்சம் பட்டை தீட்டி இருக்கலாம், படத்திற்கு பெயர் கூட வேறு ஈர்ப்பாக இன்னும் உயிர்ப்பாக திரைமொழியோடு ஒட்டுமாறு வைத்திருக்கலாம், நடிகர்கள் தேர்வில் இன்னும் சற்று கவனம் கொண்டிருக்கலாம் என்று ஏதோ ஓரிரு இடத்தில் எண்ணம் வந்தாலும், அந்த பிள்ளைகளுக்காக தவிக்கும், அவர்களின் எதிர்காலம் எண்ணி எண்ணி நெருப்பென தகிக்கும் பயத்தில் வாழும், உழைக்க உழைக்க உயிர்வரை தேயும் ஒரு நல்ல தாய்மை நிறைந்த தந்தையை நம் கண்முன் காட்டினாரே பிரகாஷ்ராஜ்……… அவருக்கு நன்றியும் வாழ்த்தையும் நிறையவே சொல்லலாம்க..

நன்றிகளுடன்..

வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

15, ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு..

1
ள்ளூர இருக்கிறது அந்த வலி
தாய்வீடு பற்றி –
பெண்களைப்போல ஆண்களுக்கும்;

என்னதான் உயிரோடு ஒன்றினாலும்
தேனில் கலக்கும் கசப்புபோல்
கலந்துதான் போகிறது அந்த விஷம்,

என் அப்பா என் அம்மா
என் வீடென – என்னதான் பார்த்தாலும்
தன் வீட்டின் அக்கறை எப்படியோ அவளுக்கு
முன்னதாகியே விடுகிறது;

அதுசரி, அக்கறைதானே என்றுதான்
விட்டுவிட்டேன் நானும், அதனாலோ என்னவோ
என் வீட்டு உறவுகளின்னும்
பிரிந்தேக் கிடக்கின்றன!!
————————————————————————————–

2
நீ
செருப்பு வாங்கிக் கொண்டாய்
உன் தங்கைக்கும்
சேர்த்து நான் வாங்கினேன்,

உனக்கென ஒரு
புடவை எடுத்துக் கொண்டாய்
உன் அம்மாவிற்கும் ஒரு புடவை எடுத்தேன்,

அப்பாவிற்கு வேட்டியும் சட்டையும்
வேண்டுமென்றார், உன் அப்பாவிற்கும் ஒன்றைச்
சேர்த்தே வாங்கினேன்,

எதிலும் எனக்குப் பாகுபாடில்லை – உனக்கு
எல்லாவற்றிலும் இருக்கிறதென்பதை – நீ அந்த
சட்டையை பிரித்து
திருப்பி திருப்பிப் பார்க்கையில்
புரிந்துக் கொண்டேன்!
————————————————————————————–

3
ப்பாவிற்கு நீயென்றால்
கொள்ளைப் பாசம்,

ஆனால் ஒரு குரல்போட்டு அழைத்ததும்
நீ ஓடிச்சென்று நின்ற இடம்; உன்
அப்பா அழைத்த
இடமாகவே இருந்தது!
————————————————————————————–

4
ருக்குப் போகையில்
எல்லோருக்கும் என்னென்னவோ
வாங்கத் தோணும்,

எனக்குப் போலவே உனக்கும்
கனவுகள் கூடும்..,

ஆனாலும்,
அதிலும் அடிப்பட்டுப் போயிருக்கும்
என் கனவுகள்..
————————————————————————————–

5
ன் பொண்ணு
என் பொண்ணுன்னு சொல்ற
என் அம்மாவைவிட –

உனைப் பெற்றவளாக உன்
முன்வந்து நிற்கும் நம் அம்மாவிடம்
எனக்கெந்த வேறுபாடுமில்லை,

ஆனாலும்,
என்னம்மா பாவம் என்பதான ஒரு
வருத்தமெனக்கு!!
————————————————————————————–

6
வே
ளைவேளைக்கு
சோறு போட்டாய்,

தண்ணீர் சுடவைத்து காலாற
ஊற்றினாய்,

உடம்பு வலித்தால் தைலம் தடவி
சுளுக்கெடுத்துவிட்டாய்,

வீடுவாசல் பெருக்கி கோலமிட்டு
அழகுபடுத்தினாய் –

ஆனாலும்

உன் வியர்வையால் நனைந்த நம் வீடு
பாசத்தால் அத்தனை
நிறையவேயில்லை..
————————————————————————————–

7
நீ
மூச்சுக்கு முன்னூறுமுறை காட்டினாய் – நீ
வீட்டிலிருந்து கொண்டுவந்தப்
பொருட்களை,

நான் ஒருமுறையேனும்
கேட்டுவிட நினைக்கிறேன் – அம்மா
வாங்கித் தந்த அந்த புடவைப் பற்றி,

உனக்குப் பிடித்த நிறம்தான் என்றாலும்
உனக்குப் பிடித்த புடவைதான் என்றாலும்
அதில் வேறு ஏதோ ஒன்று உனக்கு
ஒட்டவேயில்லை,

உண்மையில்,
நீ உடுத்தாத அந்த புடவையிலிருந்துதான்
கிழிகிறது –
அந்த அம்மாவின் பிள்ளைக்கான மனசு!!
————————————————————————————–

8
ன்னதான் சிரித்து சிரித்துப்
பேசினாலும்
பழகினாலும்
உன் அன்பின் உயிர்ப்பு நிறைந்த அந்த
ஒரு சொட்டுக் கண்ணீர் –
அவர்களின் காலடியிலேயேச் சொட்டியது,

நான் –
அதையும் இயல்பென்று கடந்துசெல்கிறேன்..
————————————————————————————–

9
போதும் போதும்மா
பொழுதுபோயி தலையில தண்ணி ஊத்தாதன்னு
எத்தனை முறைம்மா உனக்குச் சொல்றது’ன்னு வருந்தி
துண்டெடுத்து உன் தலை துவட்டிவிட்ட என்
அம்மாவின் வார்த்தைகள் உன்
தூக்கத்தைக் கெடுத்தன;

‘என்னடி மணியிப்போ…., வா வா
உடம்பொன்னும் ஊசிப் போகாது
நாளைக்குக் குளி’ என்று சொல்லி
அதட்டிக் கதவடைத்துவிட்டுப் போன
உன் அம்மாவின் வார்த்தைகள் உனக்கு
அக்கறை யாயின’ எனும்
மனப்போக்கில்தான் –
ஒரு காலபெருவெள்ளம் பிளவு பட்டிருக்கவேண்டும்!
————————————————————————————–

10
ண்டவாளத்தின் இரு தடம்போல
சேர்ந்தே பிரிந்தும்
பிரிந்தே சேர்ந்தும் தானிருக்கிறது – நம்மிரு
குடும்பத்திற்கான மனசு;

என் வீட்டுத் தோட்டத்தைக்
காட்டிலும், அழகான பூக்கள் உனக்கு
உன் வீட்டு வாசலிலில் மட்டுமேப்
பூத்துக்கிடந்தன;

என் வீட்டு மாடியில் தெரியும்
சூரியனை விட – உனக்கு
உன் வீட்டு ஜன்னல் வழியேத் தெரியும் வெளிச்சம்
மிக பிரகாசமாக இருந்தது;

இங்கே தேனில் அரிசி வேகவைத்து
சமைத்தாலும், அதைவிட
உன் வீட்டுச் சமையலிலிருந்து சிந்தும்
சோற்றுப் பருக்கைகூட உனக்கு இனிப்பாகவே பட்டன;

எதற்குத் தான் இப்படி இழுத்து
ஒரு பக்கமாக கட்டப்பட்டதோ – இக்
குடும்பத்தின் மூலச் சங்கிலி…’ என்று அழாமல்
உடையும் மனசை விதியென்று
தேற்றிக்கொள்ள முடியவில்லை என்னால்

எங்கேனும் அறுபட்டு
எங்கேனும் போய்த்தொலையட்டும் அதற்கான
அதன் புள்ளியில்’ என விட்டேவிட்டேன்;

அது சாய்ந்து
அதன் விளக்கு சாய்ந்து
ஒரு பக்கமாகவே எரிகிறது திரி
எங்கோ ஒரு பக்கம் இருட்டாகவே
மூடியும் திறந்தும் கிடக்கிறது வீடுகள்..
————————————————————————————–
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

47, என் கவிதை பிறந்ததன் காரணம் கேளுங்கள்..

தயம் இடிந்துவிழுந்த இடத்தில்
பிறக்கிறது கவிதை,
ரணமாய் வலிக்க வலிக்க அழுதகணம்
வடிக்கக் கேட்கிறதென் கவிதை;

காதல் சொல்லிதரப்படாத பிஞ்சுமனம்
வெம்பியழுத தருணத்தில் கட்டவிழ்கிறது கவிதை,
காதல் தவறென்று மட்டும் சித்தரித்த கவலையில்
கதறி கதறி கிறுக்கும் கோடுகளில் எழுதக்  கேட்கிறதென் கவிதை;

டைவெளிவிட்டு வளர்த்தப் பண்பின் தெளிவுறா
மனோபலத்தில் குற்றவாளியைத் தேடி அலைகிறது கவிதை,
இளைய பருவத்தில் கண்ட உலகை, பாதி கைவைத்து மறைத்த
பகையோரை எண்ணித் தகிக்கிறதென் கவிதை;

குடும்பம், காதல், வெற்றி, பணம் பணம் பணமென்று
திரியுமொரு சுயநல திணித்தலை எதிர்க்கத் துடிக்கிறது கவிதை,
பிறரை, பிறர் வலியை, ஒரு மலர் கசங்கும்
சூழலைக்  கூட தவிர்க்கக் கெஞ்சுகிறதென் கவிதை;

னம் மானம் அறிவு மொழிதனை
உணர்வினில் உயிர்பதிக்க உருக்கொள்கிறது கவிதை,
உலகின் பார்வைக்கு நிறம் மாறி’ தன் உணர்வறுந்துப் போனோரை
எழுத்தின் கூர்மையில் செவ்வனேச் செதுக்கப்பார்க்கிறது என் கவிதை;

ரலாறு தெரியாத, தெரியத் தராத, தெரிய முனையாத
என் பிள்ளையிலிருந்து பாட்டனைவரை எதிர்க்கத் துணிகிறது கவிதை,
இனி வரும் காலத்திலேனும் – நகர்வின் துளி நிழல்களையும்
நாளைக்கெனச் சேகரிக்க சுயசார்பு துறந்து பிறக்கிறதென் கவிதை!

திக்கத் தக்கவன் மனிதன், மன்னிக்கத்தக்கவன் மனிதன்
அன்பிலும் பண்பிலும் ஏன் அடிநெருப்பிட்டால் எரிந்து எட்டி
சூரியனையும் சுடத்தக்கவன் மனிதன்’ என்றுணர், நம்பு,
நம்பினால் உன்னால் எல்லாம் முடியுமமென்கிறது என் கவிதை;

மொழி உணர்வு கொள், இன உணர்வு கொள், மனிதம் பரப்பு
உலக அரங்கில் தெளிவின்முகத்தை தமிழராய் பதிய வை;
காட்சிகளில் பதிந்த வலியை தன் வெற்றிகளால் துடைத்து எறி
காணுமுலகம் காணுமோர் நாள் நாம் மூத்தக் குடியெனப் புரி;

என்று எழுத்தில் கர்ஜிக்க இயல்பில் பிறக்கிறதென் கவிதை!!
————————————————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கவிஞர் நடா சிவராஜாவின் சின்ன சின்ன தூறல்கள்.. (அணிந்துரை)

மண்ணும் மரபும் பிசைந்த நிலாச்சோறுக் கவிதைகள் அழகு!!

ழுத்து ஒரு கலை. அதை எழுத எடுக்கையில் எல்லாம் மறக்கும், உலகே நம் நினைவிலிருந்து அகன்றுப் போகும், எழுத்தொன்றே மூச்சாகும்; அது மூச்சாகும் தருணம் பிறக்கிறது நம் கவிதையும் இன்னபிற படைப்புக்களுமென்பதற்கு இன்னொரு உதாரணம் தான் இந்த “சின்ன சின்ன தூறல்கள்” எனும் கவிதைத் தொகுப்பும்.

வாழ்வின் வலிக்கும் தருணங்களுக்ககவே படைக்கப்பட்ட என் உறவுகளின் மண் இனி நம் படைப்புக்களால் துடித்து எழுமென்பதை தன்னிந்த கவிதைத் தொகுப்பின் மூலமும் நிருபித்திருக்கிறார் நம் கவிஞர் நடா சிவராசா.

காலங்காலமாக கவிதைகள் புனையப்படுகின்றன, பின்பும் பின்பும் கவிதையின் ஊற்று பெருக்கெடுத்தே நிரைகிறது உலகின் மனசாட்சியும், உன்னத மனிதர்களின் வாழ்வும். அவ்வழியில் இப்படைப்பின் ஆசிரியர் திரு. நடா சிவாவும் இத் தமிழுலகில் நிலைத்து இன்னும் நடைப் போடும் தூரம் வெகுதொலைவுண்டு என்பதற்கு இந்த முதல் படைப்பு ஒரு முத்தாய்ப்புச் சான்று எனலாம்.

புத்தகம் நிறையும் அலமாரியின் அளவிற்கு புத்தகத்தின் சாராம்சம் படித்தோரின் நினைவில் நிறைந்துள்ளதா எனில் ஆம் என்றுச் சொல்லத் தக்க படைப்புக்கள் மிகச் சிலதே நம்மைச் சுற்றிக் கிடக்கின்றன என்றாலும் அதன் வரிசையில் இனி இந்த கவிதைகளின் தொகுப்பையும் சேர்த்துக் கொள்வோம். வெறும் வலிகள் பாடுபொருளாகி நின்றுவிடாமல் சமூகத்தின் அக்கறை நிறைந்த பக்கங்கள் ஒவ்வொன்றும் இவரின் கவிதைக்குள் அடங்கிப் போயிருப்பது மிகச் சிறப்பு.

உதாரனத்திற்கு –

காவியத் தாயின் தூரிகைப்
பற்றியெரிதல் கண்டு
பதறியதே பைந்தமிழர் நெஞ்சமெலாம்;

நீராய்ப் பூத்த நீற்றின் மேல்
சத்தியம் செய்துன் நாள்
மாறாதழிப்பேன் இப்பாதகச் செயல் செய்தவன் புனை” என்று கொள்ளும் வார்த்தையின் ஆழத்தில் பொங்குவது பாரதியின் கோபமல்லவா?

இன்னொரு இடத்தில் புது யுகம் படைப்போமென்று சொல்லி உலக முகத்தின் மீது எழுத்தை வாரி இறைக்கும் சாட்டையடிப் பாருங்கள்

தர்மம் செய்யும் தமிழனைக் கொல்
அவர்கள் வாழும் நிலங்களையும் கொள்
போதிமரம் சொன்னது பூமியில் கலியுகம்” என்கிறார் பாருங்கள், கையருந்து காலுடைந்து உயிர் கொன்று வீழ்த்தப்பட்ட என் சகோதர உறவுகளின் காலடியை கண்ணீரால் கழுவி அதன் மண்ணெடுத்து உயிர் பறித்தவனின் மீதேயெறியும் லாவகமில்லையா இது?

இப்படிச் சொல்லிக் கொண்டே நீண்டு கடைசியில் –

கறைபடிந்த பூமியை கவிமழைப் பொழிந்து
கழுவிக்காப்போம் கவிஞர்களே;
கலியுகம் களைந்து புதுயுகம் படைப்போம் வாருங்கள் தோழர்களே”

என்கிறார், உண்மையில் கவிஞர்களின் எழுத்தாளர்களின் நல்ல படைப்பாளிகளின் சிந்தனைக் கதறல்களுக்கு காதுகொடுத்தே ஆகும் கட்டாயத்தில் தான் நம் உலகமின்று திணறி நிற்கிறதோ என்றொரு பதைப்பு எனையறியாமல் என்னுள் எழுந்ததை மறுக்க முடியாமல் உணர்ந்தேன்.

அதுபோல் உயிரோடு இருக்கும்போது வீணன் அறிவிலி வெட்டிப் பயலென்று தூற்றும் இதே உலகம் அவன் இறந்துப்போன பின் அவனை வீரன் சூரன் வல்லவன் நல்லவனென்றெல்லாம் போற்றுமொரு பாங்கும் இம்மண்ணில் இயல்பென்று சொல்லுமொரு கவிதையும் சிறப்பு.

இன்னொரு கவிதை வருகிறது ‘பெருமைக்கோர் பெருங்குளம்’ என்ற தலைப்பில். அதில் வரும் –

தளத்தால் பெரியகுளம்
தவச்செடிகள் நிறைஞ்ச குளம்
ஊரின் நடுப்பக்கம்
ஒருச் சாஞ்சு படுத்த குளம்;

மழை தந்த நீரோட
மண்கொண்ட நிறத்தோட
வனமெல்லாம் வளம் வந்து
வளமாய் நிரைஞ்ச குளம்;

செல்லச்சாமி மடம் நின்று
துள்ளி குதித்தாட
சிறுவருக்கும் பக்குவமாய்
அமைந்த குளம்;

வேளாண்மை நெல்லுக்கும்
விவசாய மண்ணுக்கும்
விடுவாய்க்கால் வழியோடும்
விசாலப்பட்ட குளம்” என்று நீள்கிறது தன் ஊர் அருமை பற்றிப் பாடும் பா’ வொன்று, அங்கே நெஞ்சம் கவிமழையில் நனைவது போல் நனைய நனைய அக் கவிதையினை ரசித்தேன்.

அரைத்தூக்கம் கலையும் முன்னே
அம்மாவின் கையில் தேனீரும் சகக்றித் துண்டும்
அலுப்புமுறிய அரைக்குளியல் ஆறுபுத்தகமும்
கையில் எழுதுகோல் பெட்டகமும்
எட்டியுதைக்கும் எட்டாத துவிச் சக்கரமும்
ஒற்றையடிப் பாதையில் ஒற்றைக் கையினால் ஓட்டமும்
ஆலமரத்தின்கீழ் ஆரம்பக் கூடலும்
அணிவகுத்து நின்று நமச்சிவாய ஓதலும்” என்று பால்ய வயதின் நினைவுகளை வரிகளுக்குள் நிறைக்கும் தமிழின் அழகு காண்கையில் என் ஈழ உறவுகள் கைபிடித்து ஆளுக்கொரு கையில் எழுதுகோலை எழுதத் தினைத்தாலென்ன என்றொரு ஏக்கம் முளைவிட்டெழுகிறது.

கற்ற நம் தலைப்பாகைகள் காணுமே
இது போதுமென்று
தன்னலம் பேணி உன்னிலம்
பறிகொடுத்தனரே தமிழா;

ஏனென்று நீ கேட்க ஏலாமல்
ஒளிந்து மறையலாமா?
நலிந்த ஏழைத் தமிழன் நீயென்ற
நகைப்பினை ஏற்கலாமா சொல்?” என்று கேட்கும் இக்கேள்வி உண்மையில் உலகத் தமிழரின் சட்டைப் பிடிக்கும் நியாயமான கேள்வியன்றி வேறில்லை. ஆக இப்படி இனிக்க இனிக்க உரைக்க வலிக்க என சிந்தனைத் தூண்டும் பல படைப்புகளின் மூலம் ஒரு புதுக் கவிஞரை அறிமுகமாகும் பழுத்த கவியை வாழ்த்த வாருங்க உறவுகளே. திண்ண திண்ண திகட்டாத பழம் போல் இப்படைப்பினை எங்கு கண்டாலும் ஒரு வாங்கிச் சென்று ஒரு ஓரமமர்ந்து முழுதாக படிக்கக் கோருமென் அன்பை ஏற்பீர்கள் எனும் நம்பிக்கையோடு இவ்விடம் என் அணி பூட்டும் ஆசையில் கூட்டிய உரையை முடித்துக் கொள்கிறேன். மீண்டும் பிற படைப்புக்களோடு இவர் கைகோர்க்கும் உறுதியில் நிறைகிறேன்.

இனி என் வார்த்தைகளை வாரி ஒருபுறம் எறிந்துவிட்டு உங்களின் கண்கொண்டு பாருங்கள். சிந்திக்கக் கேட்குமிடத்தில் சிந்தியுங்கள். நல்லதை எடுத்து வழிநடத்தி அல்லதை விட்டு இக்கவிஞரை வாழ்த்தி இன்னும் நான்குப் படைப்பாளிகளுக்கான வாசலைத் திறவுங்கள். அத்தனைப் பேரின் சமூக அக்கரையிலும் மூழ்கி முத்தெடுத்ததுபோல் பிறக்கட்டும் நமக்கான புது உலகம்.

உண்மையில் இப்படைப்பினைப் படிக்கையில் இவரின் முதல் படைப்பென்றெண்ணாது, மரம் பற்றியும் மனிதர் பற்றியும் சமஅளவில் பேசுமொரு பெரும் படைப்பாளியின் மனநிலை கொண்ட ஆழத்தை இப்புத்தகத்தில் காணமுடிந்தமையில் அணிந்துரை எழுதவேண்டி பெருமைக் கொண்டேன். ஒரு விதை பூமியில் விழும் கணம் அதன் கனவுகள் எப்படி உலகலாவி விரியுமோ அப்படி ஒரு ‘தாய்மை நிறைந்த கண்களோடு’ இவரின் முதல் படைப்பினைப் பார்க்கையில் பூரிக்கும் நெஞ்சமெலாம் நிறைந்தேப் போனேன். எங்கும் பச்சை உதிராமல் உயிரறுந்து போகும் கடைசி நொடிவரை பசுமைப் பூத்திருக்கும் ஒரு அரிய விருட்சத்தின் பலனாக இவரின் படைப்புகளும் இவ்வுலக மக்களுக்கு பயன்பட்டு இவரின் புகழும் திக்கெட்டும் கால் பரப்பி உலகமெலாம் நிறையட்டும்!

வாழ்த்துக்களுடன்..

வித்யாசாகர்

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீ பார்க்கும் பார்வையிலே..

பல்லவி

நீ பார்க்கும் பார்வையிலே பொழுதொன்று விடிகிறதே
நீ மூடும் கண்களுக்குள் வாழ்க்கை கனமாகிறதே;
உன் வாசம் நுகரத் தானே; மனசெல்லாம் ஆசைப் பூக்கிறதே
நீ பேசாத தருணம் மட்டும் உயிர்செத்து செத்து உடல் வேகிறதே..

சரணம் – 1

காதல் காதல் காதல்தின்றால் உயிர் மென்றுத்
தீர்ப்பாயோ – நீ போகாத தெருவழி எந்தன்
மௌனத்தை மொழியாய்க் கேட்பாயோ

பெண்ணே பெண்ணே ஒருமுறைப் பாரு – உயிர்மொத்தம்
உன்னில் பூப்பேன்; உடலாலே ஓவியந் தீட்டி
உனக்குள்ளே வண்ணங்களாவேன், உயிர் காற்று நீயாய் வீசுதடி
என் மொழியெல்லா-முன் பேரே வேதம் ஆனதடி;

(நீ பார்க்கும் பார்வையிலே)

சரணம் – 2

விளக்கொன்றில் எரியும் சிறகாய் மனசெல்லாம் எரியுதடி
உன் புன்னகையொன்றை மீட்டுக்கொள்ள கடலாய் மனசு ஏங்குதடி
விண்ணின் நீளம் கவலைக் கொண்டு நட்சத்திரமாய் வீழுதடி
ஒரு பார்வைக் கேட்டு கொட்டும்மழையென காதல்காதல் கரையுதடி

மின்னல்பெண்ணே என்னை வெறுக்காதே – என் உலகமிருண்டுப்
போகுமடி, நீ காணும் கனவிலே வாசல்வைத்தேன் – என்
இதயம்நுழைய வேண்டுமடி, நித்தம் எனது நினைவில் நீதான்
உயிர் காற்றாய் கலக்க வேண்டுமடி; இத்தருணம் மட்டும்
என்னில் பூத்தால் வாழ்வே வெளிச்ச(ம்) மாகுமடி..

(நீ பார்க்கும் பார்வையிலே)

வித்யாசாகர்

Posted in பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்