புது யுகம் படைப்போம்!!
ஓடி மறைந்து வாழ்ந்தது போதும்
ஊர் மறந்து உறங்கியது போதும்
உறவுகளை அறுத்துவிட்டு கதறியது போதும்
பிள்ளைகளின் – சமாதிகளை கூட உடைத்தது போதும்
எம் – பண்பினை மண்ணோடு மண்ணாக தொலைத்தது போதும்;
வாருங்கள் உறவுகளே; புது யுகம் படைப்போம்;
இனியேனும் இழந்ததை நமக்காய் மீட்போம்!
விடுதலை விடுதலை யென்றே
உயிர்விட்ட இனமே..
சுதந்திரக் காற்றினை சுவாசிக்கவே
நாளுக்கொரு போருக்குள் வித்தான மனிதர்களே..
வாருங்கள்; உயிர்கொல்லாது உயிர்வென்று –
நம் இனம் வாழ ஓர் – யுகம் படைப்போம்!
ஒற்றுமை தீயின் சுவாலையை – நம்
எதிரி நாக்கில் தீண்டி
உயிர்பயம் கொள்ள செய்வோம்;
உயிரோடு விட்டு நம் – விடுதலையை மட்டும் வெல்வோம்!
கற்றை கற்றையாய் குண்டுகளை வீசி
பறித்துக் கொண்ட நம் உடமைகளை
நாம் வாழ்ந்த அடையாளத்தை –
நம் ஒற்றுமையால் மீட்டெடுப்போம்!
மரணத்தின் விளிம்பில் சாய்ந்த
ஒரு இனத்தின் – மிச்ச சுவாசத்தை வார்த்தெடுத்து
புதியதொரு யுகம் படைப்போம் – அதில் தமிழரின்
ஒற்றுமையை ஓங்க வைப்போம்; வாருங்கள் உறவுகளே…!!!!!!
கல்லில் அடிக்கவில்லை குண்டில் அடித்தார்
தள்ளிப் போகவில்லை எள்ளி – நகைத்தார்
முல்லை பறிக்கவில்லை முற்றும் பறித்தார்
சண்டை ஒழிந்ததென்று – சங்கினை யறுத்தார்,
வாழ்ந்த சுவடுகளை அழித்து – அந்நியரென்றார் –
தூர வந்து தமிழரென்று மார் தட்டினோமே யொழிய
பிறந்த எம் தேசத்தில் ஒரு பிடி மண்ணுக்கே –
விரோதியானோமே???!!!!!!!!!
‘நாம்’ என்ற ஒற்றை குறையினால்
நானென்றே ஒருமை பட்டோமே????????
இனி – வாருங்கள் உறவுகளே நாமென்றே இணைவோம் –
ஒற்றுமையின் பலத்தில் தமிழினத்தின்; புது யுகம் படைப்போம்!
————————————————————————————
வித்யாசாகர்
இன்னொரு தகவல் உறவுகளே; இது கனடா பாடசாலைக்கு இல்லையாம் லண்டன் பாடசாலைக்கு கேட்கப் பட்டதாம், இன்று சகோதரி நம் பதிவு கண்டுவிட்டு மீண்டும் தெரிவித்தார்.. லண்டன் வாழ் உறவுகள் மன்னிப்பீர்களாக!!
வித்யாசாகர்
LikeLike