83, சங்கதி சொல்லும் சங்கீதம் காதல்!!

சில இதயம் தின்று உறவுகள் வார்க்கும்
உறவு கடந்தும் இதயம் தேடும் – பிறர்
இதயம் உடைத்தும்; கெடுத்தும்; கொடுத்தும்; பெற்றும்; வாழ்வித்தும்
வெல்லும் காதல். காதல்.

காதல் காலங் காலமாக நம்மை
புதிய பரிமாணங்களுக்கு கொண்டு சென்றும்,
சில இடத்தில் இடறி விட்டும் –
நமக்குள் உணரப் பட்ட ஞானமாக – அறியாமலே தலைதூக்கி –
நன்மை பேசியும் – தீமை இழித்தும் – குறிப்பாக வயதுகளில் தீயிட்டும்
குதூகலம் சேர்த்தும் – நினைவில் நின்றும், நினைவினை கொன்றும்
எதுவாயினும், வாழ்வின் –
மறவா ‘சங்கதி சொல்லும்; சங்கீதமே காதல்!! காதல்!!

ந்த காதல் தெருவில் போகும் ஒரு பெண்ணை
காண்கையில் பூவாய் சென்று விழும்,
பூ கொண்டு வீடு வரும் பெண்ணின்
கண்ணியத்திலும் பூத்துவிடும்,

கடைதெருவில் குச்சி மிட்டாய் விற்கும்
பையனின் வெள்ளை பல்லிலும் இனிப்பாய் ஒட்டிக் கொண்டிருக்கும்,
எண்ணெய் தேய்த்திடாத என் ஏழை சகோதரியின் இதயத்திற்குள்ளும்
மௌனமாய் பூத்திருக்கும்,

ஓடிப் பிடித்து விளையாடும் மைதானத்தில்
பள்ளிச்சீருடையின் சட்டைப் பையில் மணலோடு வந்துவிழும்
விழுந்த புத்தகம் எடுத்துக் கொடுக்கையில்
பார்வையிலும் பற்றிக் கொள்ளும்,

பள்ளியறைகளில், நூலகத்தில், குழாயடியில்
சந்தையில், கோவிலில், வீட்டு வாசலில்; தெருவிலும் பூக்கும்
முகம் பாராத நுண்ணறிவிலும் எப்படியோ –
இதயமாய் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்!!

முகநூலில் மின்னசலில் இணையத்து வழியேவும்
தரவிறக்கம் ஆகும் –
தந்தி, தொலைபேசி, மடல், புறா விடும் தூது
எல்லாம் கடந்து கணினியிலிருந்து கணிக்கும் இடம் மாறும் காதல்!

அம்மா திட்டினாலும் அப்பா அடித்தாலும்
அண்ணா முறைத்தாலும் கேள்வி கேட்கும்,
காதலன் காதலியே பெரிதென்று வாதாடும்
இல்லையென்று சொன்னால் உயிரும் விடும்;

ஒரேஒருமுறை இருக்கென்று சொல்லிப் பாருங்களேன் –
உலகத்தையே வெல்லும் காதல்!!
—————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to 83, சங்கதி சொல்லும் சங்கீதம் காதல்!!

  1. வித்யாசாகர் சொல்கிறார்:

    தலைப்பு தந்த தமிழோசைக்கு நன்றி!!

    இது ‘குவைத் தமிழோசை கவிஞர்கள் மன்றம்’ சென்ற மாதக் கூட்டத்தின் போது, காதலர்தினம் குறித்து சிறப்பு கவியரங்கம் நடத்துகையில் எனக்கு தந்த தலைப்பு. விழா தலைமை ஏற்றதால் இத்தலைப்பில் நான் வாசித்திடாத கவிதை இது..

    Like

பின்னூட்டமொன்றை இடுக