எனக்கொரு வீடு இருந்தது..
அங்கே எனக்கொரு போர்வை
எனக்கென ஒரு தலையணை
எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது..
என் தலையணையிடம் நான் நிறைய
பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன்
தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்..
வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும்
நான்கு கைகொண்டு வீடு எனை
அணைத்துக் கொள்ளும்..
எட்டி வெளியே பார்த்தால்
வாசலில் மல்லிகைத் தெரியும்
மல்லிகை வீடெல்லாம் எனக்காக மணக்கும்..
மல்லிகை எனக்கெனப் பூத்திராவிட்டாலும்
தினமும் பூக்கும் மல்லிகைச் செடியொன்று எனக்கென
அந்த வீட்டில் இருந்தது..
அந்த வீட்டில் அப்பா எனக்கு
முத்தமிட்டிருக்கிறார்
அம்மா என் கன்னத்தில் கன்னம் வைத்து கொஞ்சியிருக்கிறாள்..
நான் எடுத்த முதல்மதிப்பெண்ணின் அங்கீகாரம்
சந்தோசங்களெல்லாம்
அந்த வீட்டில்தான் புதைந்திருக்கின்றன..
என் தோழி என்னருகிலமர்ந்துப் பேசிய மாலைநேரம்
அவளென் மடியில் சாய்ந்துக் கொண்டு
எனைப் பார்த்த பார்வையின் தருணசுகம்
அவள் புரட்டிப் புரட்டிக் காட்டிய புத்தகத்தின் வாசத்தில்
கலந்திருந்த அந்நாட்களின் ரசனைகள் என
எல்லாமே அந்த வீட்டின் திறந்த கதவுகளைத் தாண்டி
காலத்தால் மூடப்பட்டுக் கிடக்கிறது..
நான் கண்ட முதல் கனவு
ஒவ்வொரு முடிச்சாக கழன்று விழுந்த
எனக்கும் அந்த வீட்டிற்கான நெருக்கம்
இனி கிடைக்குமா என நான் ஏங்கி நழுவவிட்ட எல்லாமே
அந்த வீட்டிலிருக்கிறது..
அந்த வீட்டில் நான் பிறந்த நொடியின்
கனம் இன்றும்
சந்தோசத்தால் நிறைந்தேயிருக்கிறது..
நான் சத்தமிட்டு சிரித்த சிரிப்புகளையும்
அந்த வீடுவிட்டு வருகையில் அழுத கண்ணீரையும்
இன்னும் பத்திரப்படுத்திக்கொண்டேயிருக்கிறது அந்த வீடு..
எனக்கென இன்னும் ரெண்டு மனசு அங்கே
ஏங்கி அழுது என் கால்மிதிபடும் நாளெதிர்பார்த்து
என் நிம்மதியை இரைஞ்சிய படியே வாழ்கிறது..
என் உயிர் எனக்குத் தெரியாமலே
புதைபட்ட அவ் வீட்டின் இணக்கத்தை இடைவெளிப் படுத்திய
இச்சமூகத்தை மனம்விட்டு சபித்தால் தானென்ன?
போகட்டும்,
போகட்டும்தான் ஆனால்
அந்த வீடு ?
அந்த வீடு ஒரு ஏக்கத்தின் பெருமூச்சு
எனக்கென அப்பா அம்மா அண்ணன்
அவர்களுக்கென நான் என ஒரு ஒட்டுமொத்தப் பேரின்
பெருமூச்சில் தான் உயிகொண்டிருக்கிறது அந்த வீடு..
இப்போதும் வருடங்கழித்து அங்கே செல்கையில்
மண்தரையில் கைவைத்து அந்த வீட்டின் நினைவுகளை
களைத்துப் பார்த்துக் கொள்கிறேன்..
ஒரு தேம்பிய அழையின் கண்ணீர்சிந்தி
அந் நினைவுகளையெல்லாம்
அங்கேயே புதைத்துவிடுகிறேன்..
அந்த வீட்டை நினைவுபடுத்தும் பாடல்
திரைப்படம் தொலைக்காட்சியைக் கூட
இங்கு வந்தால் பார்க்கமறுக்கிறேன்..
ஏதோ கலங்கிய உணர்வினைக் கண்டு
என் குழந்தைகள் கணவர் அத்தையிங்கே விசாரிக்கையில்
ச்ச ச்ச ஒன்றுமில்லையே என சற்றே உதறி விடுகிறேன் அந்நாட்களின்
அவ்வீட்டின் நினைவுதனை
அது கண்ணீராய் அடைபட்டு
என்றேனும் கத்தியழுதுவிடும் ஒரு நாளிற்குள் புதையுண்டுக்
கிடக்கிறது; உள்ளிருக்கும் மரணம்போல்!!
——————————————————————-
வித்யாசாகர்
அருமை! பழைய ஞாபகங்கள் வருகிறது…
LikeLike
அவள் விட்டுவந்த வீட்டின் நியாபகச் சுவர்களில் நான் தேடிப் படித்துக்கொண்ட உணர்வின் பெருந்தீ யெரிந்த வடுக்கள் உமா இது..
தங்களின் கருத்திற்கு நன்றி!!
LikeLike
அருமை அருமை..
LikeLike
நன்றி வித்யாகரன், உறவுகளின் சிறகு எட்டித் தொடும் மகிழ்ச்சி வானின் எல்லையை நாமறிவோம். அதன் முடைதலில் தைத்த முள்’ வலி தான் என்று உணர்வோம். அவர்களுக்கான சுதந்திர விண்முட்டி அவர்கள் பறக்கட்டும் அவர்களாக..
பெருமகிழ்ச்சி கருத்திட்டமைக்கு. அன்பும் வணக்கமும்!!
LikeLike
அருமை.. அருமை..
ஒவ்வொரு வரியும் கடந்து வந்த
தடம்தனை நினைவு கூறுகின்றன..
பெரும் மகிழ்ச்சியோடு வாசித்தோம்..
உங்களின் புலமையும்.. கவிதையும்.. மேன்மேலும் பெருகட்டும்
மிக்க மகிழ்ச்சியும்.. நன்றியும்..
LikeLike
நல்லது செல்லம். சீர்தூக்கிப் பார்த்து பார்த்து நடந்துக்கொள்வதன் மூலம் ஏற்படும் வாழ்வின் அனுபவங்களே நன்மையைப் பயக்கவும் தீமையிலிருந்து தூர ஒதுங்கவும் கற்றுத் தருகிறது. அந்த ஒதுங்கிய கணமும் நன்மையைப் பற்றிய சிந்தித்ததன் விளைவுமாய், ‘நல்லோரின் நெருக்கத்தில் செழிக்கிறது வாழ்க்கை. அதற்கான அரவணைப்பும் அன்பும் உனக்குமுண்டு.. மகிழ்ச்சியோடு நிறைகிறேன்!!
LikeLike
உங்கள் கவிதை அருமை..
LikeLike
மிக்க நன்றிமா.. தங்களின் அருமை எனும் வார்த்தையின் ஆழத்தில் இன்னும் எண்ணற்ற (கவி)முத்துக்கள் எடுக்கலாம். வாழ்க!!
LikeLike