நான் விடும் மூச்சுக்காற்று அம்மாவினுடையது..

ம்மா
இறப்பைப் பற்றியே
நினைக்கத் தடுக்கும் வார்தையில்லையா அது???

அம்மா இறப்பாள் என்று
சொல்வதையே தாங்கமுடியாத உயிர்
அம்மாவைவிட்டுப் பிரிந்தும்
எப்படியின்னும் போகாமலிருக்கிறதோ(?)

அம்மா சுமந்த மடி
அவள் தாங்கிய கர்ப்பம்
அவள் ஊட்டிய சோறு
அம்மா பாடிய தாலாட்டின் நினைவெல்லாம்
அவளில்லாத நேரத்தில் கொல்லுமென்று
அம்மா தெரிந்திருக்கமாட்டாள்,

அவள் மூடிப் படுத்திருந்த கண்களை
நினைக்கும்போதெல்லாம்
நெஞ்சு வெடிப்பதை
அம்மா அறிந்திருக்க வாய்ப்பில்லை,

அம்மா போகாதேம்மா என்று
தடுக்கமுடியாத என் உயிர்ப்பு’
அம்மா எழுந்திரும்மா என்று எழுப்பமுடியாத என் பிறப்பு
எத்தனைக் கொடுமையானது ?

அம்மா இல்லாது நான்
இருப்பேனென்று
எப்படி நம்பிவிட்டாள் அம்மா (?)

அம்மாவிற்கு என்னைப் புரியவேயில்லை
வெறும் சாப்பிட்டால் தூங்கினால் ஆச்சா
அவளில்லாமல் வாழ்வது
வதையில்லையா?

அம்மா இல்லாத தெரு
சுடுகாடுபோல
மனப்பினங்களை எரித்துக் கொண்டிருக்கிறதே,

அவள் இல்லாத இடந்தோறும்
கால்குத்தும் முள்ளாய்
அவளின் நினைவுகள் மட்டுமே நிரம்பிக்கிடக்கிறதே,

அம்மாவைப் பார்க்க ஒரு தவிப்பு
அம்மாவிடம் பேச ஒரு தவிப்பு
அம்மாவை தொட்டுப்பார்க்க ஒரு தவிப்பு என
எல்லாமே உயிர்கொல்லும் வதை, வதை,

அம்மாவைத் தேடி தேடி
குழந்தையில் அழுததெல்லாம் ஒரு அழையா?
இதோ அவளில்லாத வருடங்கள்
கண்ணீரால் நிரம்பிக் கடக்கிறதே; அதைத் துடைக்க ஒரு
மரணம் வந்தாலும் அது கொடிதில்லை,

உண்மையில் –
அம்மாவைத்
தேடும் மனசு வலிப்பதைவிட
உலகில் வேறு வலியில்லை,

அம்மா
அம்மா
அம்மாவென அழும் மனிதர்க்கு
அழுவதைவிட இறப்பது வெகுசுலபம்,

இறப்பொன்று
மூச்சை அடைத்துக் கொண்டு
தெருவில் விழும் பூக்களோடு விழுந்துச்
சிதறுமெனில் –
அது அம்மாவைப் பிரிந்தப்போதாக மட்டுமேயிருக்கும்,

அம்மா எப்படி நடப்பாள்
எப்படி கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாள்
தீராத தீராத அன்பைத் தந்த
அம்மா எங்கே.. ?

அவளில்லாமல் நான் இருந்ததேயில்லை
அதிலும் அப்போதெல்லாம்
அம்மா இல்லாத ஒரு நொடிகூட
நான்கு சுவர்களுக்கு மத்தியில் – என்னோடு
நிரமற்றுக் கிடக்கும்

இப்போதும் அப்படித் தான்
எங்கும் அந்த நிறமற்ற நொடிகள்
கண்பட்ட இடமெல்லாம்
அவளின் நிறமற்ற நொடிகள்,

இருந்தும் அவைகளைச் சுமந்துக்கொண்டு
மரணத்தைக் கண்டு அஞ்சி நிற்கிறேன்;

என் பிள்ளைகள் பாவமில்லையா…. ?
——————————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to நான் விடும் மூச்சுக்காற்று அம்மாவினுடையது..

  1. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    இது பிறந்த இடத்திற்கான மரியாதையல்ல. புதைந்த மனதிற்கான காணிக்கை. பெற்ற தாய் இருக்கிறார். உடனிருந்து வளர வளர பார்த்து ஆனந்தப் பட்டவள் இல்லை. இரண்டு மூன்று மாதத்திற்கு முன் எனது சிற்றன்னை திடீர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக செய்தி வர போட்டிருந்த செருப்பு காலோடு விமானமேறி குவைத்திலிருந்து சென்னை வந்திருந்தேன். வாழ்வில் அதிகம் அழுத நாள் அது தான். அன்றிலிருந்து அம்மாவைப் பற்றியும் ஒரு பெரிய பயம். அம்மாஇருக்கும்வரைமட்டுமே வாழ்க்கை என்றெண்ணிதான் வாழ்நாட்கள் கடக்கிறது. அம்மாவிற்குப் பின்னென்று ஒன்று இருக்குமா தெரியவில்லை. அன்று அந்த கண்ணாடிப் பெட்டிக்குள் பார்த்த சிற்றன்னையின் முகம் இன்றுவரை உயிரோடு எரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்னை. எனக்கே இப்படி எனில் என் தம்பிகள் தாயை இழந்த மனதோடு ஊரில் எப்படிக் கடக்கின்றனரோ தன் வலியான வாழ்க்கையை. இது அவர்களின் இடத்திலிருந்து அதுபோன்றவர்களின் இடத்திலிருந்து அவர்களுக்காய் எழுதியது..

    Like

பின்னூட்டமொன்றை இடுக