தவத்தைப் பற்றி சொல்கிறேன் வா..

தூக்கம் விரிச்சோடியக் கண்களுள் சுமக்கிறேன்
எனது கனவுகளை..

மாத்திரையில்லா முதிர்ச்சி
கண்ணாடியணியாத இளமை
காதல் சறுக்காத படிப்பு
தோல்வியில் அசராத அறிவு
காலத்தைக் குறைத்திடாத இயற்கை யென
எல்லாம் சேர்ந்ததொரு
மண்ணின் மீதான அக்கறையில்
விரிகிறதென் கனவுகள்..

ஆயினும் –
மின்சாரமில்லா தெருவில்
எரியும் லாந்தர் விளக்கின்
சிமினிச் சுற்றி சூடுபட்டு விழும்
ஈசல்களைப் போலவே
கால் உடைந்து ஊனமாகி
விழுமென்
கனவுகளை எழுத்துக்களாய்க் குலுக்கி
இங்கிரைக்கிறேன்;

மைக்செட் போட்டுவிட்டு
வெறும் வாயை அசைப்பவனாக
வரிகளுள் நீளும்
எனது கைகளின் அசைவிலும்
எப்படியோ –
ஏதோ வார்த்தைகள் சிக்கிக்கொள்கிறது,

சிக்கியதைச் சிக்கியவாறு
கிறுக்கிவைத்தாலும் படிப்பார்களெனும்
நம்பிக்கையைக் காட்டிலும் –
படிக்கிறார்கள் என்பதால் கிறுக்காத நாட்களையும்
சேர்த்துச்சுமந்து
சிலுவை பாரத்திற்கு மேல் விழுந்த
சாட்டையடியை வாங்கிக் கொண்டு
நடப்பவனைப் போலவே நடக்கிறேன்;

ஒரு சாட்டையடி
ஒரு கவிதையின்றி கடக்கும்
ஒரு நொடிக்குச் சமமெனில் –
ஒரு நாளைக்கு
ஒரு வாழ்க்கைக்கு –
எத்தனை நொடிகள்
எத்தனை அடிகள்…. (?)

சாட்டைகள் இன்றுவரை
சலிக்கவில்லை
கனவுகளும் –
கவிதையில்கூட முடிவதில்லை..

அதொரு மூடும் கண்களை
எதிர் நோக்கி
எங்கோ
இருட்டிலும் வெளிச்சத்திலுமாய்த்
திரிந்துகொண்டேயிருக்கிறது..

நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடும்
சிறுவனைப் போல –
அதன்பின்னே
ஓடிக்கொண்டே இருக்கிறேன்,

காலில் குத்தும் முற்களைப் போல
மனதைக் கிழிக்கும் சொற்களின் வழியே
ரத்தம் கசிந்துக் கொண்டே இருக்கிறது..

தவம் வலுக்க வலுக்க
கனவுகள் நீள்கிறது
கவிதைகள் ஆங்காங்கே முடிகின்றன..
——————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றாடி விட்ட காலம்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to தவத்தைப் பற்றி சொல்கிறேன் வா..

  1. முனு.சிவசங்கரன்'s avatar முனு.சிவசங்கரன் சொல்கிறார்:

    ”எனக்குத் தொழில் கவிதை ” அந்த வரகவியின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது..!

    Like

பின்னூட்டமொன்றை இடுக