வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 17

படித்தலும் படைத்தலும் எவருக்கும் பொது.. 

பொருளாதாரத்தில் வீழ்ந்தபோது இருந்ததைக் காட்டிலும் அது வளர்ந்தப்பொழுதில் எழுகிற போராட்டங்களே மனிதத்தைக் கொன்று மாடிவீடுகளைக் காப்பற்ற மட்டும் முந்திக்கொண்டு முன்நிற்கிறது. படிப்பு அறிவை வளர்க்க, அறியத்தர என்பதையும்தாண்டி பணத்தைக் குவிக்க பாதையை திசைதிருப்ப என்பதற்கான மூலதனமாகிப்போனது நமது வேகத்தின் விளைவோ என்னவோ, ஆனாலிது வளர்ச்சியின் குறையன்றி வேறில்லை.

மேல்படிப்பு படித்தவன் மேல், கீழ்வகுப்பில் கல்வி கற்றோர் சிறியவர் எனும் மனப்போக்கு எப்படி பணம் கொடுத்துவாங்கியச் சீட்டின் கணத்திலிருந்து வந்து தலையில் அமர்ந்துக்கொண்டதோ? தெரியவில்லை.

எங்கோ குணம் கெட்டுப்போய் எந்திரமாய் படிப்பதும் வளர்வதும் குடிப்பதும் குட்டிசுவராகிப்போய் வெறும் உயிர்த்திருக்கப் போராடுவதை மட்டுமே வெற்றி என்றுக் கொண்டாடிக்கொள்ளும் வேதனைக்குரிய மனநிலைக்கு ஆளாவதும், அதன்பின் வசூலிக்கும் பணக்கட்டுகளின் மீதேறி சுத்த சான்றிதழ் சுமக்கும் பிணங்களாக நின்றுகொண்டு நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவநென்று கர்ஜித்துக்கொள்வதும், கழனி உழுது களை எடுத்தவரை’ கல்லடுக்கி வீடு கட்டித் தந்தோரை’ நெஞ்சு நனைய நாற்றத்துள் இறங்கி நம் அறியாமையின் அடைப்பெடுத்து கூலி கேட்டு நிற்போரை’ சொல் கோர்த்து இசை கூட்டித் தந்தோரை‘ நமக்காய் உழைததோரையெல்லாம் பார்த்து அவர்களைக் கீழானவரென்று எண்ணுவதை எப்படித்தான் படிப்பினால் வந்த நற்பண்பென்றுக் கொள்வதோ?

திறமையை வளர்த்துக்கொண்டு திசை நோக்கியப் பக்கமெல்லாம் உறவைப் பெருக்கி உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனும் ஏற்றத்தாழ்வு மனப்போக்கு அற்று நாலுபேர் சிரிக்கும் வாழ்விற்கு நடுத்தரமாய் இசைந்துநிற்பதில் உள்ள நிம்மதியை’ நான் படித்தவன் என்பதால் நான் இழந்துவிடுவேனெனில்’ அது நான் இறந்துவிடுகிறேன் என்பதற்குச் சமமில்லையா?

ஒரு படிப்பென்பது தனது ஒழுக்கத்திலிருந்து துவங்குமெனில் நிச்சயம் அது பிறரின் கண்ணீரை துடைப்பதாகவே இருக்குமேயொழிய தனக்கு சீட்டு வாங்க தன் அப்பாவிடம் நாற்ப்பது லட்ச்சத்தையோ ஐம்பது லட்ச்சத்தையோ லஞ்சமாகக் கொடுக்க கையேந்தி நிற்கத் துணியாது.

பொருளியல் படிப்பதும், மருத்துவம் பார்ப்பதும், மேலாளர் ஆவதும் உடனிருப்போருக்கு ஒரு கை சோறு கொடுத்து பிறரின் பட்டினியைப் போக்குவதுமாகவே இருக்குமேயானால் சேற்றில் ஊனியக் கைகளும், சிம்மாடு சுமந்த தலையும் என்றோ ஏற்றத்தாழ்வுகளையும் அழுக்கோடு கழுவிப் போட்டுவிட்டிருக்கும்.. கிழிந்த கால்சட்டையும் ரவிக்கையும் இல்லாததொரு நடுத்தர வளர்ச்சியை என்றோ நமது மண் எல்லோருக்கும் பொதுவாய்க் கண்டிருக்கும்..

இப்போதும் ஒன்றும் குறையில்லை. பொது அக்கறையும் பிறர் குறித்த சிந்தனையும் தனது சுற்றத்திற்கு உதவும் மனப்பான்மையும் தற்போது இளைஞர்களிடத்தில் இயல்பாய் பெருகிவருவதை நம்மால் உணரவும் முடிகிறது. அத்தகைய மனநிலையை எல்லோருக்கும் பொதுவாய் எல்லோருமாய் நாம் பெருக்கிக்கொள்ளல் வேண்டும். அருகில் இருப்பவருக்கு பசிக்கும் எனில் தனக்கு துடிக்குமொரு துடிப்பே மனிதத்தைக் கொண்டது.

அத்தகைய மனிதத்தை உணர்வெங்கும் தேக்கிவைத்துக் கொண்டால், என்னதான் படித்தாலும் பெரிய ஆளானாலும் பிறர் பற்றிய அக்கறையும் அடுத்தவர் நலனுக்காக உதவும் மனப்போக்கும் தானாகவே வரும். அங்ஙனம் பிறர் பற்றிய அக்கறையைக் கொண்டுவிட்டால் எவர் பற்றியும் குறைசொல்லவோ குற்றமாக நினைக்கவோ தோணாது. பிறரை குறையாகப் பார்க்கும்போதும், குற்றப்படுத்தி எண்ணும்போதுமே அங்கே அன்னியம் பிறந்துவிடுகிறது.

எனவே யாரின் குற்றத்தையும் மன்னித்து, குறையை இயல்பென்று ஏற்று, அது தன்னால் மாறத்தக்கது என்பதைப் புரிந்து, எல்லோரின் நலனுக்கென்றும் வாழும் வாழ்க்கையை எல்லோரும் உசிதப்படுத்திக் கொண்டால், பிறரிடம் அன்னியம் பார்ப்பதற்கு மாறாக எல்லோருக்கும் உதவ நினைக்கும் மனசு படிப்பிலும் தொழிலிலும் கூட முன்வந்துவிடும்.

இருப்போர் இல்லாருக்கு உதவ, இல்லார் இருப்போரின் நன்றியை வேறு எளியோருக்குக் காட்ட, ஒருவருக்கு ஒருவரென உதவப்போய் கடைசியிலொரு சமதர்ம தேசம் எல்லோருக்கும் பொதுவாய் பிறந்துவிடும். அங்கே படிப்பும் பொருளும் வாழ்வும் லஞ்சம் கேட்டு நிற்காது. இருப்பதை கொடுப்பது இயல்பென்று புரியவந்த தேசத்தில் பசி இருக்கும் பட்டினி இருக்காது. தோழமையும் அன்பும் இருக்கும் பகையும் புரட்டுமிருக்காது.

நல்லதொரு தேசத்திற்கான விதையையும், நல்லதொரு வீட்டிற்கான விளக்கையும் நாமே வைத்திருக்கிறோம். நாம் சரியாக வாழ வாழ நம் வீடும், வீடுகளால் நாடுமென எல்லோரும் நலமாகவே வாழலாம். எல்லோரின் நலத்திலிருந்தும் வரும் முன்னேற்றம் மெல்லப் பெருகி நன்னிலம் சமைத்து, நன்னிலம் விரிந்தெங்கும் நன்மை பரப்ப, பின் அதன் இயல்பாகவே எங்கும் அமைதியும் ஆனந்தமும் பெருகி எல்லையில்லா புவியெங்கும் சுபீட்சம் நிறையும்.

வித்யாசாகர்

இந்தப்புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கி பேபால் மூலம் பணம் செலுத்தினால், உடனடியாக பி.டி.எப் காப்பியோ அல்லது அஞ்சல் வழியாகவோ படைப்புக்களை பெறலாம்.

பிடிஎப் வாங்க – ரூ – 50

அச்சுப்பிரதி அஞ்சல் வழியே வாங்க – 100 மற்றும் அஞ்சல் செலவு ஒன்றிலிருந்து இரண்டு புத்தகத்திற்கு வரை ரூ 15 paypal மூலம் செலுத்தி பெற்றுக் கொள்ளவும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வியல் கட்டுரைகள்! and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 17

  1. yarlpavanan சொல்கிறார்:

    “இருப்போர் இல்லாருக்கு உதவ, இல்லார் இருப்போரின் நன்றியை வேறு எளியோருக்குக் காட்ட, ஒருவருக்கு ஒருவரென உதவப்போய் கடைசியிலொரு சமதர்ம தேசம் எல்லோருக்கும் பொதுவாய் பிறந்துவிடும்.” என்பதும் உண்மையே!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s