36, கைம்பெண் அவளின் காலம்..

சாப்பாடென்ன சாப்பாடு
அது வெறும் நெஞ்சுக் குழிவரை

விழுங்கி விழுங்கா உன் நினைவு
அதலாம் கடந்து
கடந்து நிற்கிறது மகளே..

ஏழையின் குடிசையில்
அன்று நான் பிறந்ததே பாவம்; மிச்சத்தில்
நீயும் பிறந்தாயே..

விதவை என்றாலே
வெற்று நெற்றியில் காமம் தடவி
வயிற்றுப் பசிக்கு உடம்பு விற்று
கட்டாந்தரையில் களவு போவாளென கதவோரமெட்டிப் பார்க்க
கண்ட கழுதையெல்லாம் வந்து நிற்க’
பின்; மனிதர்களை விரட்டி விரட்டி
ஓயாத கைகொண்டு
எந்த வீட்டில் நான் உனக்கான விளக்கேற்ற மகளே ?

உனக்கு சோறூட்டி பசிதீருமோ
ஆடைகட்டி அழகு கூடுமோ
அடுத்தவர் நாக்கில் பாடாது இவ்வெளியெங்கும் படர்வாயோ
ஒரு ஆறடிப் பள்ளத்துள் –
வாழ்க்கை அர்த்தமற்றுப் போகையில் நீ
வெறுங்கட்டையென வீழ்வாயோ என
அஞ்சிய காலத்தை எனைபோல் கடந்தவர் யாருமில்லை மகளே..

நீ ஆடிப்பாடி சிரிக்கையில்
வெம்பி உள்ளே முடங்குமென்
அழுகையின் தடந்தனை நீ கூட மிதித்துக் கடந்திருப்பாய்
மீண்டுமொரு சிரிப்பிலதைத் துடைத்திருப்பாய்,
அதலாம்விட்டு’ மிடுக்காய் இவளென் மகளென
துடிதுடிக்க கால்தூக்கி நிற்கும் முள்குத்தியவனைப் போல நான்
உனை தாங்கிநிற்பேன்;
பகலில் கொஞ்சம் தூங்கி
இரவில் விழித்திருப்பேன்..

விளங்கச் சொன்னால்
உன் சிரிப்பிலும் பயம் வரும்,
அதை மறைக்கும் வதைதனில்
தலைப்பின்னல் வகிடு தப்பும்,
பழைய ரிப்பன் உன் தலையிலேரும்
வாடிய பூ இருந்தால் வைத்தனுப்பிவிட்டு
வாய்ப்பொத்தி
அழுத கண்ணீர் பூத்து –
நீ வரும்வரைக் காத்திருப்பேன்..

உள்ளேக் கசப்பிருந்தும் உனை எண்ணி
இனித்துக் கொள்வேன்,
வீட்டுக்குள்ளே சிங்காரித்து – ஒரு
இரவெல்லாம் பார்த்துக் கிடப்பேன்,
விடிகாலையின் பனியில் நனைந்து
நீ பூக்குமழகில் நடுங்கிக் கிடப்பேன்,
கலைத்துப் போடும் உன் அழகில் உதிர
நீ திட்டும் வசவை சேகரிப்பேன்..

எதிரே மிதிபடும் பாதங்களுன் உடலை
கனவில் தின்னும் காலுடைப்பேன்,
வீடெல்லாம் ஒரு தீ கொளுத்தி
என் மனசெரியப் போட்டுவைப்பேன்,
எடுத்ததற்கு எல்லாம் நீ ஏச்சு என்பாய்
எழுதா விதியை
அழுது அழுது தீர்ப்பேன்..

எனக்கறுந்த தாலி முடிஞ்சி நீ வளமா
வாழ் மகளே;
கருவேல(ம்) முள்ளுதச்சி கடங்கார(ங்) கண்ணு வச்சி
உன் பதின்ம வயசைப் பறிக்காம
ஒரு கரஞ்சேர்க்கப் படும்பாடு
இந்த தனியாளு தாயிக்கு
பொட்டழிஞ்ச வலி மகளே..

சமைந்ததாய் சொல்லி சொல்லி
சுமக்கிறேன்னு தெரியாம
கடிச்சிதிண்ணும் பார்வையில கொடுநாகம் திரியுமூரு,
காசுபணம் காட்டி காட்டி
கழுத்தறுக்க பயத்தை மூட்டி
உன் கால்கொலுசின் கவிதைப் பாடி
உன் உடம்பைத் தின்னும் பய காடு..

உயிரறுக்கும் நொடிநொடிக்க
கருதரித்து வந்தவளே
கனவன் புல்லா(ய்) முளைத்தாலும்
என் மூச்சு தாங்கும் ஒருஉசிரே
பூவுபொட்டு இல்லாம இந்த வெள்ளை வாழ்க்கைப்
போனாபோது..

உன் நிறைந்தநெற்றி பொட்டுசிவக்க
மஞ்சள் முகமா பூத்து வாழு,
உன் புருஷன் பேரை முன்னபோட்டு
இந்த விதவைப் பேரை அழிக்கப் பாரு,
என் வெள்ளைப் புடவை கொஞ்சம் கிழித்து
நீ தொட்டுவிடா(த) தூரம் போடு..,
உன் மெட்டிஒலி சப்தத்துல –
என் மிச்ச வாழ்வில் வண்ணம் சேரு!!
—————————————————
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

35, குடிக்க கஞ்சும், கடிக்க அவ(ன்)படிப்பும்..

குளிக்கையில்
சோப்பிடுகையில்
கழுற்றில் சிக்கித் தான் கொள்கிறது;

நேற்று உன் படிப்பிற்கென
அடகுவைத்த
அந்த தாலிக் கொடியின் நினைவு..
———————————————————-

கால்கள் சுடுகின்றன
மீறி மிதிக்கிறேன்

எனக்குச் செருப்பு வாங்கும் பணம்
உனக்கு
உடுப்பு வாங்க மீறுமென..
———————————————————-

து –
குவளை குவளையாக
குடிக்காமல் சேமித்த
தேனீருக்குரிய பணமென்று
உனக்கெப்படித் தெரியும் ?

உன் தோல்வியுற்ற தேர்வின் பாடம்
என் நெஞ்சுக் குழியை
அடைத்ததை எங்கறிந்தாய் ?

வேறென்ன செய்ய
இனி தேனீர் நிறுத்தமே
உன் பாடந்தனைச் சுமக்கும்..
———————————————————-

மு
கம் துடைக்கும்
வியர்வையின் போது
உன்னையே நினைத்துக் கொள்வேன்..

கொளுத்தும் வெயிலும்
சுமக்கும் கூடையும் பெரிதல்ல
உனக்கான கனவு என் கண்களில் விரிகையில்
வலிக்கும் வலி பெரிது..
———————————————————-
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

31, நீயும் நானும் இருவேறு சமப்பொருள்..

1
வீ
ட்டிலிருந்து வெளிவருகிறாள்
காதலென்றான் அவன்,

காதலி என்றாள்
பைத்தியமானான் அவன்,

குழந்தை என்றாள்
பெண்ணெனில் தேவதை என்றானவன்,

தங்கை என்றாள்
உயிர்விட்டானவன்,

அக்கா என்றாள்
அம்மாவிற்கு ஈடென்றான் அவன்,

அம்மா என்றாள்
தெய்வமென்றான் அவன்,

மனைவி என்றாள்;
அடிப்போடி… என்றெண்ணிவிட்ட இடத்தில்
நெஞ்சு நனைக்கிறதந்த வேறுபாட்டு விஷம்..
————————————————————–

2
ப்பாம்ம்மா தான் எனக்கு முக்கியம்
காதலில்லை
சொன்னாள் பெண்

என் புருசன்
நான் போவேன்
போனாள் பெண்

பெண்ணா பெத்துட்டாளே
முண்டச்சி
முகத்தில் குத்தினாள் பெண்

முப்பது பவுனு பத்தாது
நாப்பது போடு
சட்டமாக கேட்கிறாள் பெண்

அவுங்களை கட்டிக்குனு அழ
நம்மால முடியாது
வெளியில் துரத்தினாள் பெண்

இனி ஒருநிமிஷம் கூட
இங்கிருக்கமாட்டேன்
தனிக்குடித்தனம் போனாள் பெண்

பெண் விடுதலை
பெண் விடுதலை
உரக்கக் கத்தினாள் பெண்

பெண்ணின்
சுதந்திர வாசல் திறக்கும் சாவி
பெண்ணிடமே இருந்தது –
எல்லாவற்றிற்கும் பின்னால் நின்றிருந்தான் அவன்..
————————————————————–

3
னிதர் மனிதராக
பதிக்கப்படுகையில்
ஆண் பெண் அவஸ்தை குறையும்..

பெண்ணும் ஆணும்
இருவேறு சமப்பொருள்..

இடையில் திரிந்த
நீ.. நான்..
பெண்.. ஆணாக.. மாறிய புள்ளியைத் தேடுங்கள்
அழித்துவிடுவோம் –
விடுபடட்டும் மனிதர்கள் மனிதர்களாக..
————————————————————–

4
னக்குள்
யார் யாரோ இருக்கிறார்கள்
‘நான்’ மட்டுமே
எங்கும் முந்திக்கொள்கிறது..

நான்’ கொல்லப்பட்டபின்
தெரியுமவர்கள் –
நிறைய மதிக்கப்படுகிறார்கள்..
————————————————————–

5
ப்படியோ உள்நுழைந்து விடுகிறது
யாரோ ஒருவரின்
பார்வையும்
வார்த்தைகளும்..

இப்படிக்கு –
நான் என்று மட்டுமே யெழுதி
கிழிபடுகின்றன தாள்கள்..
————————————————————–

6
ரே காற்று தான்
உள்நுழைந்து வெளிவருகையில் வரும்
வெவ்வேறு சப்தத்தின் ஆழத்தில்
அடைபட்டுள்ளது பிரபஞ்சத்தின் மூலம்..

காற்றில் கூட கலப்படம் நடக்க நாம்
காரணமாகி விட்டதில் –
மூலம்’ இருக்கு இல்லையாகவே நகர்கிறது காலம்..
———————————————————–

7
யா
ரின் கண்பார்த்துப் பேசுகையிலும் –
உள்ளே உருளும் அந்த உருண்டைக்குள்
நிறைய கேள்விகள்
கண்சிமிட்டிக் கிடக்கின்றன..

கேள்விகளைக் கேட்பதைவிட
தலைகுனிந்துக் கொண்டுப் பேச
தயாராகின்றன தலைகள்..
———————————————————–

8
சோ
று வடித்து
குழம்பு வைத்து
சாப்பிட்டு விட்டு படுத்ததும்
உறங்கிவிடுகிறோம்..

சோறு வடிக்காத
குழம்பு வைக்காத
சாப்பிடாத யாரைப் பற்றியும் ஏன் நமக்குக் கவலையில்லை.. ?

கவலை’ வேறு வேறு கால்பரப்பிக்கொண்டு
படர்கிறது உலகத்தின் கண்களில்;

உலகிற்கு வலிக்கையில்
நமக்கும் வலிக்கிறது..
————————————————————–

9
ர் நிறைய கிணறுகள்
நீச்சல் குளமுள்ள வீடுகள்
மண்தோண்டினால் தண்ணீர்
தாகத்தில் அலைந்தன பறவைகள்..

நெடுக நடக்கின்றன மாடுகள்
நெட்டி நிற்கின்றன அடுக்குமாடிகள்
குடிக்க பாலில்லை குழந்தைக்கு

அசையாமல் நிற்கின்றன கட்டிடங்களும் மாடுகளும்..
————————————————————

10
ல்லாவற்றிற்கும் காரணம் ஆணென்று
எழுகிறதொரு குரல்..

இல்லை இல்லை பெண்ணென்று
புலம்புகிறது மற்றொரு குரல்..

இரண்டையும் பார்த்துச் சிரிக்கிறது
எழுதுகோல் –
நானென்று ஒப்புக்கொள்ள யாருமில்லை..
————————————————————
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எழுச்சிக் கவிஞன் விருதைப் பாரிக்குத் திருமணம்..

மணமகள்: சங்கவி                                                    மணமகன்: விருதைப் பாரி

மணநாள் : 08.07.2012

வாழ்த்திலடங்கிய வார்த்தைகள்..

ன் தாய் சுமந்திடாத கர்ப்பம்
உடன்பிறவா உயிர் கரு
அன்பின் பெருநெருப்பு
அண்ணா அண்ணா என இதயம் சுற்றி
பாசத்தைப் பூஜிக்கும் நெறியாளன்
கோடு கிழித்தால் தாண்ட மறுக்கும் அன்புத் தம்பி
கோட்டை’யென்றாலுமதை தமிழ்கொண்டு தகர்க்கும் பேராயுதம்
தமிழ் தமிழென ஓடி இனம் இனமென பற்றுய்து; குவைத்தின்
தெருவெல்லாம் மண்ணின் மரபு பரப்ப உழைக்கும் அரிய பேச்சாளன்
புத்தகத்தின்வாசனை பூமியெங்கும் கமழ்ந்துவர
படிப்பினைக்கு தமிழ் பூசி –
பாமரனுக்கு அறிவுகூட்ட தெளிவுதேடி தவிக்கும் பற்றாளன்;

இன்று சங்கவியின் கைபிடித்து
வாழ்வின் சங்கெடுத்து குலமரபில் முழங்கி
கொட்டும் கெட்டிமேள சப்தங்களுக்கிடையே
சப்தமின்றியவள் பாதச் சுவடுமிதித்து – தாம்பத்திய வாசல் நுழைகிறான்..

அவள் கொஞ்சுந் தமிழ் பேச்சழகில் நனைந்தினி
பேச நாலும் நாளும் கற்று
வாழ்வின் பாடத்தை வார்த்தைப் பிசகாமல் போதிக்க

அவ்வை பாடிய பெருமைமிகு தமிழில்
அய்யன் தீட்டிய குறளின் தனிச் சிறப்பில்
அம்பிகையவளின் துதி பாடிப் பெறும் கீர்த்தியின் வழிநின்று
உலக நட்புறவுகளின் மன இனிமையோடு
வாழ்வாங்கு வாழ வாழ்த்துவமே!! வாழ்த்துவமே!!

ன்பிற்கினிய சகோதரி திருமதி சங்கவி பாரிக்கும்
அவளினிய மணவாளன் திரு. எழுச்சிக் கவிஞன் விருதைப் பாரிக்கும் எம் மனம் நிறைந்த திருமணநாள் நல்வாழ்த்துக்களும் நிறைய அன்பும் இறையாசியும்… உரித்தாக –

பேரன்புடன்…

வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

21, அம்மாவும் அவளும்.. கூட நானும்!

டப்போடா அது
பொம்பளைங்க சமாச்சாரமென்று
போட்டுவிட்ட வட்டத்தில் தான் ஆண்களின்
பார்வையே மாறிப் போனதோ (?)

அன்றொரு நாள் அவளுக்கு இடுப்பு வலி
அருகே இருந்துப் பார்த்துகொள்கிறேன்
உள்ளே வரும் அவள் அம்மா ‘நீங்க வெளியப் போங்க
என்று என்னை அனுப்பி விட
என்னம்மா நீ வருகிறாய்
நீ போய் ஆட்டோ கூட்டி வா என்கிறாய்,

நான் ஆட்டோ கூட்டி வந்ததும்
இருவருமேறி இரு புறம் உட்கார்ந்துக்கொண்டு
என்னைப் பார்த்து –
நீ வேறு ஆட்டோவில் வா என்கிறீர்கள்,

நான் ஓடி வேறு ஆட்டோ பிடித்து
மருத்துவமனைக்கு வந்தால் – நீ இங்கேயே இரு
நாங்கள் பார்த்துக் கொள்வோமென்று சொல்லி
என்னை வெளியே நிற்கவைத்துவிட்டு
நீங்கள் மட்டும் உள்ளேப் போனீர்கள்,

குழந்தை பிறந்ததும் அழைத்து காட்டிவிட்டு
பெண்ணோ ஆணோ சொல்லிவிட்டு
சரி போ
வெளிய நில்லு குழந்தைக்கு பால் தரனும்
என்பீர்கள்,
இடையிடையே எட்டிப் பார்த்தால்
ஆம்பள புத்தி பாரு.. போ போய் அந்த பக்கம் நில்லு
என்று வைவீர்கள்,

நான் இப்படித் தான் போல் இதலாமென்று நினைத்துக்கொண்டு
வீடு வந்து
ஏதோ ஒரு தவிப்பில்
பிரிவின் ஆற்றாமையில்
கண்ணீரின் வெப்பத்தில் தவித்துபோய் –
இரவுகளைக் கடத்திவிட்டு
அப்படியே நாளிரண்டும் கடந்து
பின் – அடுத்தடுத்து அவளைப் பார்க்கவருகையில்
அவளின் பார்வையையும் அழகையும் கண்டு பூரிப்பேன்
எட்டி எட்டி அவளை மீண்டும் பார்ப்பேன்
வலித்ததோ? அழுதிருப்பாளோ? பாவமவள் என்றெல்லாம் நினைப்பேன்
ஆனால் என் எல்லை குழந்தையைப் பார்ப்பது வரையுமேயிருக்கும்
அவளிடம் பேசிட யார்யாரிடமெனக்கு அனுமதி வேண்டுமோயெனும்
அச்சம் மேவி வெளியேறி நிற்கவேண்டியிருக்கும்,
அவளேனும் எனை அழைத்துப் பேசமாட்டாளா என்றுகூட
ஏக்கம் வரும்..

பின் –
குழந்தைக்கும் எனக்கும் அவளுக்குமான நாட்களின்
இடைவெளியில்
எல்லாம் மறந்துப் போகும்..

அடுத்த முறை பிரசவிக்கிறாள் அவள்
அருகே வந்து நிற்கிறேன் நான்,

அம்மா நீ எனைப் பார்த்து
நீ போ என்கிறாய்
நான் கெஞ்சுகிறேன்
அவளுடைய அம்மா உள்ளே நீங்கள் நின்றால்
நாங்கள் எப்படி நிற்பது என்றாள்
மருத்துவச்சி தெய்வம்; நீங்கள் வெளியே போயிடுங்கள்
கணவர் நிற்கட்டும் என்கிறார் உங்களைப் பார்த்து

எப்படியோ போவென
முனகிக் கொண்டே நீங்கள் வெளியேப் போக
நான் அவளின் வலி சகித்து
உயிர் தாங்கி நின்றேன் அவளுக்கருகிலேயே..

அறுத்த இடம் மருந்திட்டு
குளிக்க தோள் கொடுத்து தாங்கிநின்று
கால்கழுவ மனமுவந்து கழுவி
நான் பெறாத மகளைப் போல அவளைப்
பார்த்துக் கொண்டேன்..

அவள் பார்க்கும் பார்வையின் நன்றியுணர்வின்
நெடுகிலும்
எங்களின் ஆயுளுக்குமான வேர்கள்
நிரம்பிக் கிடந்தன..

இடுப்பு மடிந்து அவளுக்கு வலிக்கையில்
எங்களின் இரண்டுக் கண்களிலும்
செர்ந்தே
அவளுக்கான கண்ணீர் சொட்டின..

காம்பு வெடித்து மார்பு வலிக்கையில்
மருந்திட மட்டுமே
கைகள் ஏங்கின,

குருதி பொங்கி கால்வழி வழிய
ஐயோ செப்டிக் ஆச்சோ என மருத்துவச்சி தேடியே
கண்கள் அலைந்தன

எழுகையில் தடுமாறி
மெல்ல நிமிர்ந்து அமர்ந்து
காலூன்றி நடக்க எத்தனிக்க ‘தைய்யலிட்ட இடம் வலிக்குமா
சுருக்குனு குத்துமோ யென எனக்கே
முதலில் குத்தி மனசு வலித்தது..

உறவைப் புரிந்து
எங்களை உயிரில் புதைத்துக்கொண்ட அந்த நாட்கள்
இன்றும் எங்களுக்குப் பிரிந்தொரு நாளிருந்தாலும்
உள்ளே
வலிக்க வலிக்க அன்பை விளைத்தன

அவளோடு மட்டுமா நின்றுப் போனது
அந்த நாட்களின் அசைவுகள்?
இல்லையே;
குழந்தை அசைவை ரசித்து
அவளுக்கு அசைவில் வலிக்காமல் அமர்ந்து
வந்தோருக்கு வணக்கம் கூறி
ஒரு வாழ்க்கையின் தவத்தை
கணவனாய் மனைவியாய் நாங்கள் அனுபவித்ததே
அந்த பிரசவ நாட்களில் தானே..

உண்மையில் அது ஒரு போதிமரத்து நிழற்கூடம்
அங்கே ஆண்களே நிச்சயம் இருங்கள் – ஏனெனில்
அன்றெல்லாம் –
எங்களுக்கான காமம் எங்களிடம் இல்லவேயில்லை

நட்பில் நிர்வாணம் அடைகொண்டுவிட்டது
அவள் அவிழ்த்துப் போட்ட ஆடைகளை சுருட்டி
ஒரு தாயன்பு துவைத்துக் கொண்டது
அவள் கால் கை தெரிந்த இடமெல்லாம்
என்றோ சேர்ந்திருந்த நன்றிகளில் நீர்த்துப் போய் கிடந்தது
விலகிய புடவையின் ஓரமும்
அவிழ்ந்த பாவாடையின் நாடாக்களும்
பச்சை உதிர்த்து பூட்டிக்கொள்ள மட்டுமே கைகளை அழைத்தன

படுக்கையில் அவள் மேலே படுத்திருக்க
அவள் தூங்கும் நிம்மதியில் நான் கீழே தரையில் படுத்து
இரவுகளை வெளுத்திருந்தேன்

இருட்டில் அசந்து கண்மூடி படாரென
குழந்தை கத்துச்சோ
அவளுக்குத் தூக்கம் கெடுமோ என்றெண்ணி
விழிக்கையில்
அவள் என்னையே பார்த்துக் கொண்டு படுத்திருந்த தருணம்
தருணம்தான்,

உண்மையில்
அன்பில் அவள் அவன் அற்றுபோய்
நாங்கள் நாங்களாக இருந்தோமப்போது…

எங்கள் பிள்ளையின் பிரசவம்
அந்த நாட்களில் தான்
எங்களையும் எங்களுக்கே பெற்றுத்தந்தது என்பதை
நிச்சயம் மறுப்பதற்கில்லை!!
———————————————————————
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்