54 திறந்த ஜன்னலோரம்; அவள்!!

நான் பார்த்த ஜன்னலில்
அன்று உலகம் –
மிகச் சிறியதாகவே தெரிந்தது.

மனிதர்கள் பெரியவர்களாய்
தெரிந்தார்கள்.

மரம் செடி கொடிகள்
வெகு சிநேகமாகவே அசைந்துக்
கொண்டிருந்தன.

சிட்டுக் குருவிகளெல்லாம்
அருகில் வந்து எனக்காகவே
எனை பார்த்து பார்த்து கத்திச் சென்றது..

நாயும் பூனையும்
வாலை குழைத்து முகத்தை வருடக்
காத்திருந்தன.

புல்மேல் விழுந்த பனித் துளிகள்
சில்லென்று மனதை நனைத்து
உள் புகுந்தது.

கத்தியோ கோடாரியோ
புரியவில்லை.

வெடிகுண்டு சப்தம் கூட
பயம் தரவில்லை.

நான் பார்த்த பெண்களெல்லாம்
எனை பார்த்து சிரித்தார்கள்,
நான் பார்க்காமல் போனால் கூட
அழைத்து –
பாரென்றார்கள்,
கொஞ்சினார்கள் –
முத்தமிட்டார்கள்.

அதே ஜன்னலில்
இன்று அவளுக்கு மட்டுமாய்
காத்திருக்கிறேன்.

உலகம் என்னவோ
வெகு தொலைவில் தெரிகிறது.
மனிதர்களையே காணவில்லை.
பனித்துளிகள் படிந்த புல்வெளிகளில்
எங்கேனும் கண்ணிவெடிகள்
புதைந்திருக்குமோ எனும் பயம்.

மனிதர்கள் தொலைத்த மனிதத்தில்
தன் காதலுக்கு எதிரி –
சாதியாகவோ மதமாகவோ வந்து
பிரித்துவிடுமோ எனும் பயம்.

அவள் வந்தால் –
அதோ தெரிகிறதே –
அந்த; உலகின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஓடி
எங்கேனும் உலகின் ஒரு நீண்ட பரப்பில் நாமும்
மனிதராய் கலந்து போகலாமெனக் காத்திருக்கிறேன்.

அதோ அவள் வெகு தூரத்தில்
என் மகிழ்ச்சியாய் பூத்து வருகிறாள்..

அருகே வர வர
பரவசமாய் என்னுள்ளே
பரவுகிறாள்..

நெருங்க நெருங்க ஒரு படபடப்பாய்
உள்ளே உயிர் வரை தொட்டு தட்டி
இதய சுவரினை உடைத்து உடலெங்கும் பரவி
என்னை அவளாக மாற்றிக் கொண்ட ஒரு
கணத்தில் –
என்னை நெருங்கி
நிழல் தொடும் இடைவெளிக்குள் விலகி
திரும்பிப் பார்க்கையில் சிரித்து
தூர சென்றதும் கைகாட்டி
வெறும் கனவினை என்னுள் விதைத்தவளாய்
அதோ போகிறாள்….

கனவோடும் உலகின் பயத்தோடும்
ஏனோ நானும்
அவளை காதலிப்பவனாய்
ஜன்னலோரம் அவள் மீண்டும் வரும் பொழுதிற்காகக்
காத்திருக்கிறேன்!!

அவள் வந்து
வெறும் சிரிப்போடு விடைபெற்ற
அதே தருணங்கள்
மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன
ஜன்னல் மூடி மூடி திறக்கிறது!!
———————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக