(9) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்!

காலையில் எழுந்து காற்றை
உள்ளிழுக்கையில் –
உள் புகுகிறாய் நீயும்,

அண்ணாந்து வானம் பார்க்கையில்
வெளிச்சமாய் பார்வையுள்
நுழைகிறாய் நீயும்,

நுகரும் முதல் வாசத்தில்

நீ என்னை கடந்த பொது
உணர்ந்த வாசம் இன்னும் விடுபடாமலே
வாசம் கொள்கிறது,

யாரோ அழைக்கையில்
திரும்பி பார்த்தும் –
உனையே தேடுகிறேன் நான்;

உணர்தல் செவியுறுதல்
எண்ணுதல் பார்த்தல் என எல்லாமுமாய்
நீயே இருக்க –

மீண்டும் மீண்டும் உனக்கான
அத்தனை எதிர்பார்ப்புகளோடும் -நீ வரும்
அதே தெருவின் வளைவில்
இன்றும் நிற்கிறேன் நான். நீ வருகிறாய்..
மழை சோ…வென கொட்டுகிறது.

மழை உன்னை நனைக்காத குடையில்
நனையாமல் நீ என்னை கடக்கிறாய்..

திரும்பி என்னை பார்க்க கூட – உன்
தோழிகள் உனக்கு அவகாசம் தந்திடவில்லை..

தெருவின் கடை மூலையில்
சென்றாவது திரும்பிப் பார்ப்பாயோ என
மனசு துடிக்கிறது..

எங்கு பார்த்தாய் நீ
சிரித்து பேசி மழை ரசித்து
கூட்டமாய் கைதட்டி சென்றே விட்டாய்.

படபடக்கும் இதயத்தை
நிறுத்திக் கொள்ள கூட இயலாதவனாய்
நிற்கிறேன் நான்.

மழை எனை நனைத்து
பூமியில் நிறைகிறது.

மழையையும் சேர்த்து நனைத்து
கண்ணீராய் கரைகிறதென் காதல்!
———————————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக