தடதடவென உயிர் துடித்தொரு
வீரதீர உணர்வெழுந்தொரு – மார்புகூடு
பதைபதைத்தொரு – மானம் காக்க
புயல்வரும் செயல் அதுபோல் – தமிழா;
நாடு காக்க முடிவெடு முதல்
மக்கள் காக்க துணிந்தெழு முதல்
மண்ணின் வீரம் நரம்புப் புடைக்க
திண்ணைப் பேச்சும் மண்ணை காக்க – தமிழா;
வீரமறவன் குடித்த பாலின்
வெற்றிக் கொண்ட பண்டைத் தோளின்
மானங் காக்க கிளர்தெழுமொரு புரட்சி
உன் தடை உடைத்தெழு – தமிழா;
நதியின் நீளம் கடலின் ஆழம்
உலகம் போற்றும் வாழ்வின் சாரம்
வாழ்க்கை நியதி பாதைச் சொல்ல
வாழ்ந்தவன் நீ – தமிழா;
நீ வீறு கொள்ளு தமிழா – தரணி
பேரு சொல்லும் தமிழா,
பறைமுழங்க பூமியதிர – உன் நடையின் வீச்சில்
சிங்கமொழிய, புலிக்கொடி யது வானில் பறக்க; புறப்படு தமிழா!
மண்ணும் பெண்ணும் பெரிது பெரிது
மொழியும் வளமும் பெரிது பெரிது
அடிமை யொழித்து நிமிர்ந்து நடக்க
பேத விலங்கு உடைத்து தகர்த்து ஒன்று ஒன்று ஒன்றுயென்று
ஒன்றுகூடிப் புறப்படு தமிழா; தமிழால்
தானுயர் தமிழா!!
வித்யாசாகர்