35, அவனும் அம்மாவும் அந்த நாட்களும்..

1
ண்ணா அடித்தான் அம்மா
மேலே நீயும் அடித்தாய்

தம்பி அடித்தான் அம்மா
அதற்கும் நீ –
என்னைத்தான் அடித்தாய்

அடித்தது
அன்று வலித்தது,
நினைப்பது இன்றும் வலிக்கிறது!!
————————————————————-

2
ட்டு
தங்கம்
புஜ்ஜி
செல்லம்
வைரம் என்றெல்லாம்
அன்று நீ கொஞ்சியச் சொற்கள்
எனக்கானது  மட்டுமல்ல என்பதை
அறிய நான் –
வளராமலே இருந்திருக்கலாம்!!
————————————————————-

3
ன்
முந்தானையைப் பிடித்துக் கொண்டு
இங்கும் அங்கும்
சுத்திக் கொண்டே இருப்போம்
நானும் அவனும்,

நீ பெரியவங்க பேசுற
இடத்துல
உனக்கென்ன வேலைன்னு
என்னைமட்டும் விரட்டுவாய்..,

நான் தூரநின்று
அவன் பிடித்துக் கொண்டிருக்கும்
உனது முந்தானையையே
பார்த்துக் கொண்டிருப்பேன்..
————————————————————-

4
கு
ச்சைஸ் வண்டிவரும்
ஓடிப்போய்
ரெண்டுப்பேரும் நிற்போம்,

நீ எனக்கொன்று
வாங்கித் தருவாய்,

அவனுக்கொன்று
வாங்கித் தருவாய்..,

மூன்றாவதாய் ஒன்றை வாங்கி
முனையில் கொஞ்சம் கடித்துக் கொண்டு
நான் திரும்புகையில் –
அதையும் அவனிடம் நீட்டுவாய்;

நான் எனதையும்
கீழே போட்டுவிடுவேன்;

எனக்கு ஐஸை விட
நீ தரும் இடம்தான்
பெரிதாக இனிக்குமென்று உனக்குத் தெரியாது..
————————————————————-

5
ஞ்சு காசு
பத்து காசுன்னா
அன்னைக்கு அவ்வளோ பெருசு;

இன்று அஞ்சுரூபா
பத்துருபா எல்லாம் கிடைக்கிறது;

இதெல்லாம் அந்த
அஞ்சு காசு
பத்து காசு போலவேயில்லை..
————————————————————-

6
சி
ன்னவயசுல
மூக்கு சில்லு உடையறதுகூட
பெரிய ஆச்சர்யமில்லை,

அப்பல்லாம்
என்னென்னவோ நடக்கும்..

திடீர்னு ஜுரம் வரும்
சளி பிடிக்கும்
இருமல்ல நெஞ்சு தூக்கி தூக்கிப் போடும்,

கீழே விழுந்து
காலுடையும்
ரத்தம் வழியக் கண்டாலே
பயமாயிருக்கும்,

இரண்டுமூன்று நாட்கள்
வலியில் உயிரே போகும்..,

என்றாலும் –

நீ ‘பாவம் ஏம்புள்ள
இப்படி கஷ்டப்படுதேன்னு’ சொல்லும்
ஒரு வார்த்தைக்காக
மீண்டும் காலுடைய மனசு
காத்தேக் கிடக்கும்..
————————————————————-

7
து
வைக்கும் இடத்திலிருக்கும்
உன் துணியை எடுத்து
முகத்தில் பொத்தி
முகர்ந்துப் பார்ப்பேன்,

அய் அம்மா புடவை என்று
உள்ளே ஒரு
ஆனந்தம் எழும்,

அழுக்கின்
நாற்றமடிக்கும், ச்சே போடு போடு
என்பாய் நீ;
வேகமாய் போட்டுவிடுவேன்,

அதனுள்
எனது வாசனையும் இருந்ததென்பதை
அப்போதுன்னிடம்
சொல்ல முடிந்ததில்லை;

இப்போது சொல்லமுடியும்
ஆனால் சொல்வதில்லை!!
————————————————————-

8
லையில் எண்ணெய் தேய்க்க
வாரவாரம்
சண்டை போடுவாய்,

எண்ணெய் முடிந்ததும்
சீயக்காய் தேய்க்க வாவென்று
விரட்டிக் கொண்டிருப்பாய்.,

சீயக்காய் முடிந்ததும்
கால்சட்டை கழற்று
உடம்பெல்லாம் தேய்க்க என்பாய்..

அன்றெல்லாம் சனிக்கிழமை
வந்தால் சண்டைதான் மூளும்..

இன்றும் சனிக்கிழமை வருகிறது
என் பிள்ளைகள்
தலைதேய்த்துக் குளிக்கிறது,

நான் உன்னை நினைத்து
அமர்ந்திருப்பேன்,

அம்மா
அம்மா
அம்மா தான்…
————————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக