பலவருடங்களுக்கு முன்; இந்திய தேசத்தில் பிரபல ஆங்கில இதழொன்றில் வெளியான ஒரு சிறு அறிவிப்பு உலக பார்வையை திசை திருப்பி தன் மேல் போட்டுக் கொண்டதாய் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
அது வேறொன்றுமில்லை “ஒற்றை ரூபாய் நாணயம் அனுப்புங்கள்; நீங்களும் கோடீஸ்வரன் ஆகும் வித்தையை பெறுங்கள்” என்றிட்ட ஒரு குறுஞ்செய்தி தான் அந்த இதழ் வெளியிட்ட அத்தனை பரப்பான சமாச்சாரம்.
கோடிகளை அடுக்கிய மக்கள் தொகையும், கோடிகளின் மேல் மெத்தையிட்டு உறங்கும் ஒரு வளரும் தேசத்தின் ஜாம்பவான்களுமாயிற்றே நம் இந்திய தேசத்து மக்கள்; சும்மாயிருப்பார்களா? மூளை முடுக்கிலிருந்தெல்லாம் ஆளுக்கொரு ரூபாயை முண்டியடித்துக் கொண்டு அந்த இதழுக்கு அனுப்பிவைத்தார்கள்.
வந்துக் குவிந்த பணத்தை அடுக்கியவாறே மிக மிடுக்காக அந்த இதழ் தன் அடுத்த பிரதியில் இப்படியொரு பதிலை வெளியிட்டிருந்ததாம் “வேறொன்றுமில்லை அன்பர்களே, நீங்கள் எங்களுக்கு வெறும் ஒற்றை ரூபாய் தானே அனுப்பினீர்கள். அதனால் உங்களுக்கு பெருத்த நட்டமொன்றுமில்லையே, ஆனால் யாருக்குமே தீங்கின்றி நாங்கள் கோடிகளை பெற்றுவிட்டோம் பார்த்தீர்களா” என்றதாம்.
மீறி கேள்வி கேட்டவர்க்கு “இது தான் யுத்தி. பிறருக்கு வருத்தமின்றி எந்த நட்டமுமின்றி வெகு இலகுவாக கோடிகளை சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன; முயன்று பாருங்கள், நீங்களும் கோடீஸ்வரனாகலாம்” என்று நாமத்தை குழைத்து ஒற்றை ரூபாய் அளவிற்கு நெற்றியில் இட்டுத் தீட்டியதாம் அந்த முன்னணி இதழ்.
இதில் நாம் கற்க வேண்டிய பாடம் என்ன?
கோடிகளா என்றால் இல்லை; ஒற்றுமை என்பேன் நண்பர்களே!
ஒருத்தன் தட்டிக் கேட்கும் தவறை காவலாளியே வந்து உனக்கென்ன உன் வேலையை பாரென்று சொல்லும் சூழல் இன்றுண்டு. அதே, நூறு பேர் சேர்ந்து கேட்டா காவலாளியே ஓடிவந்து போலிஸ் பந்தோபஸ்த்துன்னு காவலுக்கு நிற்பதையும் நாம் பார்க்காமலில்லை. அது தான் ஒற்றுமையின் பலம். ஒற்றுமையாக நின்று எதையும் சாதிக்கலாம். நம் ஒற்றுமையின்மையால் மட்டுமே முதலில் முகலாயர்களும் பின்பு வெள்ளையரும் உள் புகுந்து கொள்ளை கொண்டது மட்டுமின்றி கவிழ்த்துப் போட்டனர் இந்திய தேசத்தையே எண்பது வரலாறு.
அதிக தூரம் ஏன்; நம் மனிதருக்குள் இல்லாத ஒற்றுமை தான் முதலில் இனத்தை உண்டாக்கியது. நம் இனத்திற்குள் இல்லாத ஒற்றுமை தான் கண்ணெதிரே லட்சாதி லட்ச உயிர்களை நம் ஈழ தேசத்தில் கொன்று குவிக்கிறது. ஒற்றுமை வெற்றியின் சுயரூபம். எதற்காக ஒன்று பட்டோம் என்பதில் தான் கவனம் கொள்ளல் வேண்டும்.
எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் நான்கு அண்ணன் தம்பிகள். நால்வரும் நான்கு திக்கினை போல எதிர்மறையானவர்கள். நேரில் கண்டால் ஒருவரை ஒருவர் கோபத்தில் எரித்து விடும் கொலைவெறி அவர்களுக்குள் உண்டு. என்றேனும் ஊருக்கு கெட்ட காலம் வருகையில் அவர்கள் ரெண்டுபடுவார்கள், ஊரே ரெண்டாகும். ஆனால் அந்த நான்குபேரில் ஒவ்வொருத்தன் திறமையும் உலகம் மெச்சும் திறமை எனலாம். நால்வரில் ஒருவருக்கு அந்த ஊரே அடக்கம் எனலாம். அப்படிப் பட்ட அண்ணன் தம்பிகளை ஊர் சேர விடுமா. உண்டுப் புழங்கும் வீட்டை ரெண்டு பட செய்வதென்பது ஊர் மக்களில் சிலருக்கு ஊறுகாய் சாப்பிட்ட மாதிரி தானே?
ரெண்டு பட செய்தது ஊர் அவர்களையும். ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் அலைந்து கொஞ்ச காலத்தை காலால் எட்டிஉதைத்து திரிந்தார்கள். காவலாளி வீட்டிற்கு வருவது தொடங்கி இவர்கள் நீதிமன்றத்திற்கு அலைவது முதல் அன்றாட நிகழ்வாகிப் போனது.
அந்த அன்றாட நிகழ்வில் ஓர்நாள்; ஒருவர் அவர்களுக்குப் போதித்த ஞானம் தான் ஒற்றுமை. ஒற்றுமை அவர்களுக்குக் கொடுத்த பரிசு தான் அவர்களுக்கான வாழ்க்கை. இன்று அதே நால்வரை ஊர் மெச்சுகிறது. அந்த நால்வர் ஊரை கட்டி ஆள்கிறார்கள். பழைய நடப்புகள் அத்தனையையும் இன்று அவர்கள் காட்டும் பரிவில் ஒற்றுமை உணர்வு ஒன்றுவிடாமல் விழுங்கிவிட்டது. இங்கு நாம் சிந்திக்க வேண்டியது பெரிதாக ஒன்றுமில்லை, குறைந்தளவு ஒற்றுமையை நம் வீட்டிற்குள்ளாவது கடை பிடிப்போம்.
ஒரு சமூகத்தின் மாற்றமென்பது ஒரு வீட்டிலிருந்தே நிகழ துவங்குகிறது. சமூகத்திற்கான அக்கறையை நாமும் வீட்டிலிருந்தே துவங்குவோம். தெருவில் நடக்கையில் இப்படி திரும்ப முனைந்து சற்று மாறி அப்படி திரும்பி விடுகிறோம், பின்னால் வந்த ஆட்டோ காரன் நாய் எப்படி தெருவுல ஆடிக்குனு போது பாருன்னு திட்டிட்டுப் போறான், அவனை நாமென்ன கொலையா செய்து விடுகிறோம்?
இயலும் இடத்தில் தான் செறிந்து நிற்கிறது நம் வீரம். பத்து பேரு கத்தியோட வந்து டேய் ஏன்டா இங்க நிக்கிறேன்னா உனக்கென்னடான்னு கேட்பவர்கள் நம்மில் வெகு குறைவு. ஒன்றுமில்லை எனச் சொல்லி ஒதுங்கித் தான் போகிறோம் நிறைய பேர். அப்படியிருக்க நம் வீரத்தை வீட்டில் காட்டி உறவுகளின் நிம்மதியை குலைப்பானேன்?
தெருவில் யாருக்கோ விட்டுத் தரும் தன் சுய கவுரவத்தை சற்று நம் உறவுகளுக்காய் விட்டுக் கொடுத்துப் பாருங்கள். உறவு உங்களை உயிரெனக் கொள்ளும். உயிருக்குயிரான பாசம் உறவுகளுக்குள் வளர்ந்து நிற்கையில்; அந்த மனசு நீண்டு ஊருக்குள்ளும் உலகத்திற்க்குள்ளும் பரவி ஒற்றுமை தழைத்தோங்கும். ஒற்றுமையில் உலகின் முன் நின்று எதையும் சாதிக்கலாம் ஒவ்வொரு உலகப் பிரஜையும். அந்த சாதனையில் கோடியென்ன கோடிகளே துச்சமாகலாம்.
எனவே ஒற்றுமையும் வாழ்வின் உயர்விற்குக் கடைபிடிக்க வேண்டிய ஒரு முதல் படியெனக் கொள்வோம்.
——————————————————————————————————-
வித்யாசாகர்
உங்கள் கட்டுரை மிக அருமை அனைவரையும் சிந்திக்க செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை வாழ்த்துகள் இன்னும் நிறைய சுவாரசியமான கட்டுரைகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம்!
நன்றி! வணக்கம்!!
LikeLike
உன் எதிர்பார்ப்புக்களில் என் எழுத்துக்கள் குவியும் செல்லம்மா..
மிக்க நன்றி!
LikeLike
சிந்திக்கத் தூண்டும் கட்டுரை. மிக அருமையாக விவரித்து இருக்குறீர்கள். வாழ்த்துகள்.
LikeLike
மிக்க நன்றி ரோஸ்விக். எழுதுகோல் எடுத்த காரணமே தன்னோடுள்ளவரை சிந்திக்கவைத்து பின்னால் வருபவர்க்கு தன்னாலியன்ற சிந்தனைகளை விட்டுச் செல்லத் தான். இயன்றதை செய்ய முயற்சிக்கையில் உங்களின் வாழ்த்தும் அதற்கு பலம் கூட்டுகிறது. மிக்க நன்றி தோழமையே!
LikeLike
//தெருவில் யாருக்கோ விட்டுத் தரும் தன் சுய கவுரவத்தை சற்று நம் உறவுகளுக்காய் விட்டுக் கொடுத்துப் பாருங்கள். உறவு உங்களை உயிரெனக் கொள்ளும்//
அருமையான கருத்து. நன்றி.
LikeLike
விட்டுக் கொடுத்தலில் பிறர் வாழும் இன்பமுண்டு. அதிலும் வீட்டுக்குள் விட்டுத் தரும் அத்தனைக்கும் அன்பே பரிசாக கிடைக்கிறது. இதில் விட்டுக் கொடுக்கிறேன் பேராழியென்று ஏமாளியாகி விடவும் கூடாது. எல்லாம் தெரிந்து உள்ளத்தில் விசாலம் கொண்டு விட்டுத் தருதலில் தான் பெருந்தன்மை கூட பிறருக்குப் பாடமாகிறது. வருகைக்கு மிக்க நன்றி!
LikeLike