குழந்தைகள்
அன்பான மனைவி
நல்ல குடும்பமெனும் பெயருக்கு மத்தியில் மட்டும்
எப்படி மறப்பதோ உன் நினைவை,
இதயம் சுட்டு சுட்டு
வலிக்கும் உன் ஞாபாகமும் பார்வையும்
எனக்குள் மட்டுமே கனத்துக் கழியும்
இக்காலம் –
எப்படியேனும் தீர்ந்தேனும் போகாதா,
என்றோ காதலித்தோம்
இரண்டு வீட்டின் நன்மைக்காய்
பிரிந்தோம் –
பிரிந்திப்படி உயிர்தின்று வாழ
எப்படி சம்மதித்துக் கொண்டோமோ;
உலகமெலாம் சுற்றுகிறேன்
வருடங்கள் பலதை
வயதால் விழுங்கி விட்டேன்
நரை தட்டியும் போகலாம் – உன்
நினைவொழித்த பாடில்லையே;
நீ நடந்து வந்த சப்தம்
எனை அழைத்த ஜாடை
பேசிய விழிகள்
தொட்டுப் பார்த்த உணர்வு
எனக்காய் காத்திருந்த தவிப்பு
பிரிகையில் அழுத அழை; அழை; அழை….
எப்படி மறகுமோ என்; நெஞ்சே…????
வயதறியாத வேகம்
எதையோ தியாகம் செய்வது போன்ற எண்ணம்
வேறு வழி தெரியாத முடிவு
இப்பிரிவின் வலியை –
அன்றறிய சாத்தியமில்லாத தருணம்
இப்படித் தான் கொள்கிறதா உன்னையும்???
எனை உயிராய் சுவாசிக்கும் மனைவி
உனை பற்றி கேட்டு விமர்சிக்கும்
பிள்ளைகளுக்கு சொன்னளவு கூட
உன் மேல் வைத்திருந்த அன்பை –
உன்னிடம் சொல்ல முடியாமல் போனதே
வருட காலமாய் வலிக்கிறது போல்;
பாடல் கேட்க கொள்ளாத பொறுமை
ஒரு படம் பார்க்க ஒதுக்காத நேரம்
சிரித்துப் பேச கூட இல்லாத மனம்
அத்தனைக்கும் காரணம் –
நீயென்று சொல்லி
நான் யாருக்குப் புரிய வைத்து
வேறென்ன நிகழ்ந்துவிடும் இனி??
சோகமாய் அமர்ந்தால்
ஓரிரு வார்த்தையில் –
‘குடும்பம் ஆச்சி, குழந்தைகள் இருக்கு..,
மறந்துடு; அவ்வளவு தான்’ – என்று சொல்பவர்களுக்கு
நீயென்பதோ நானென்பதோ
புரியாத; ஒற்றை வார்த்தை ‘காதல்’ மட்டுமே!
காதலித்தால் மறுக்கும் சமூகம்
நினைத்து அழுதால் கண்தொடைக்க இயலாத மனிதர்கள்
பிரிக்க மட்டும் கொண்டு வரும் நியாயத்தில்
இனியாவது –
ஜாதியையும் மதத்தையும் ஏற்றத் தாழ்வையும்
நம்மை போன்றோரை பார்த்தாவது
அகற்றிக் கொள்ளட்டும்.
அன்றும் இன்றும்
மனதை மட்டும் அப்படியே
வைத்துக் கொண்டு
வெறும் மனிதர்களை கடந்து
நாட்களை கடந்து
வாழாத பொழுதுகளாய் வெற்றிடம் கொள்கிறதே
வாழ்க்கை; யார் காரணமாவார்???
இதோ, போகட்டும் பிதற்றல். என
முடித்துக் கொள்கிறேன்,
அழும் மனதோடு உதட்டை விரித்து
சிரித்துக் கொள்கிறேன்,
இன்னும் நூறு வருடம் வாழ
என் சுற்றத்திற்காய் – எல்லாவற்றையும்
தாங்கிக் கொள்கிறேன்,
யாரேனும் கேட்டால் நலம் என்றே
சொல்லிவிடுகிறேன்,
நீயும் அப்படியே சொல்; நம்பிக் கொள்ளட்டும் உலகம்!!
———————————————————————————–
வித்யாசாகர்

























குடும்பத்தைப் பற்றி நன்றாக சொன்னீர்கள்
LikeLike
குடும்பம் சிரிப்பை தருகிறது; காதலின் வலியையோ கண்ணீரையோ காலத்தால் கூட துடைத்திட இயலுவதில்லை. வேண்டுமெனில் மனைவியின் கணவரின் அன்பில் அதிகம் நினைக்காமல் இருக்கலாம், மரணம் வரை மறக்காத பொழுதினை, ஒலித்துக் கொள்ளலாம். வலித்துக் கொண்டிருக்கும் உணர்விற்கு கவிதையாவது எழுதலாம். பாவம் மனைவி என்ன செய்வாள், மறந்ததாய் பொய்யாவது சொல்லலாம்!!
LikeLike
it has been happened in my life also sir!!
என் வாழ்விலும் நடந்த உண்மை க(வி)தையிது ஐயா!!
LikeLike
உலகின் பார்வையில் உள்ள, மறைந்த, மொத்த உயிர்களின் மனதில் மறையாத உணர்வு காதல். காதலில் யாரோ ஒருவர் செய்யும் தவறால், அதாவது தகாத வயதில் வரும் காதலால் ஏற்ப்படும் பெற்றோரின் பயம் புரியாத தவறு, அல்லது வளர்ந்தும் எல்லாம் புரிந்தும் பிள்ளைகளின் அன்பை புரிந்துக் கொள்ளாத பெற்றோரின் கெளரவம் பெரிதான வக்ரம், ஜாதி மதம் தின்று துப்பும் வெறி செயல்களால் புண்படும் மனங்கள் ஏராளம், அவர்களின் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாகட்டுமென்பதே இக்கவிதைகளின் நோக்கம்.
இயன்றவரை குடும்பத்தில் அன்பாய் இருங்கள் தோழர். உறைவிடம் உண்மையாய் இருங்கள்.
ஒருநேரக் கட்டாயத்தால் பிரிந்த காதலின் உணர்வை சற்று தோழமையான பகிர்வுணர்வு இருப்பின் வாழ்க்கை துனையிடையோ அல்லது நல்ல நண்பர்களிடமோ பகிர்து மனசாருங்கள். ஏதேனும் காகிதங்களில் எழுதி கசக்கி குப்பையில் எறி உணர்வருங்கள். மனைவிக்கு பிடிக்குமெனில் கவிதையாய் எழுதி பதிவிடுங்கள். ஏதேனும் ஒரு வடிகாலில் பிரிந்த காதலின் வலியை குறைத்துக் கொள்ளுங்கள். பிரிவின் வலி கொடிது. அதிலும் வாழ்வின் முடிவில் நிற்கையில்; திரும்பி பார்க்கும் கணம், காதல் வலிக்கிறது தான். வேறென்ன சொல்ல.. நம் ஏதோ தவறுகள்; இப்படி கூட வலிகளாய் மிஞ்சும் போல்…
எல்லாம் நன்மைக்கே தோழர், அன்பு மறவா மனம் உயர்ந்த மணமாகும். உங்களின் உயர்ந்த மனதிற்கு வேறு மகிழச்சிகள் வந்து சேரும். சேரட்டும்…
வாழ்க வளமுடன்.. வலி மறந்து..
LikeLike