கோவிலின் வெளி வாசலில்
வரிசையாய்
அமர்ந்திருக்கிறார்கள்
ஒவ்வொருவர் தட்டிலும்
சோம்பேறித்தனமும்
அதை மறைக்கும் கதைகளும்
நிரம்பிக் கிடந்தன;
வாழ்க்கையை தொலைத்தவர்களும்
தொலைப்பவர்களும்
ஒரு வேலை சோற்றிற்காய்
கை ஏந்தி அமர்ந்திருந்தார்கள்.
நன்றி மறந்த மானுடத்தால்
அவதியுறும் மனித தெய்வங்கள்
அப்பா அம்மா எனும் அன்பை
நினைவிலிருந்தே அகற்றி விட்டு
அரைகாசு கால் காசிற்குமாய்
வயோதிகம் கடந்து காத்திருந்தது;
போன பத்துபேரில்
ஒருவர் புதிது போல் கோவிலுக்கு
தர்மம் செய்வதாக எண்ணி
திரும்பி வந்து
ஒரு நாணயத்தை எடுத்து
கண்ணில் பட்ட ஒரு தட்டை பார்த்து எறிந்தார்,
தட்டில் விழுந்த
காசின் சப்தம்
எத்தனை பணம் என்பதை சொல்லவில்லை
அந்த சப்தம்;
சில்லறை என்பது மட்டும்
புரிந்தது அந்த
வரிசையில் அமர்ந்திருந்த ஒரு
குருட்டு அம்மா கிழவிக்கு!
—————————————————————————-
























