1
அன்பில் –
உயிருருகி உயிருருகி போகிறது.
இதயங்களால்;
இதயம் நிறைவதேயில்லை!!
———————————————————
2
உனக்காக காத்திருக்கையில்
வீழும்
மணித்துளிகளை சேமித்தேன்
யுகம் பல அடங்கிப் போகிறது;
இன்னும் காத்துத் தான் இருக்கிறேன்
என் காத்திருப்பில் எப்படியோ
பிறந்து விடுகிறது –
உனக்கான இரக்கம்..
காலம் எனை கொள்ளும்
உனக்கான காத்திருப்பின் வேதனையில்
பிறக்கும் இரக்கமோ அல்லது
இரக்கத்தில் பிறக்கும் காதலோ
வேண்டாம் –
எனை நீ கடந்து செல்கையில்
உனை பார்க்கக் கிடைக்கும் இந்த ஒரு
தருணமேனும் போதும்;
உனை இன்று பார்துவிட்டதாய்
குறித்துக் கொண்ட இந்த நாளேனும்
போதும்;
நீ என்றேனும் எனை பார்த்து
உன் விருப்பத்தில் சிரிக்கும் நாளிற்காக
நீள்கிறதிந்த காத்திருப்பு!!
———————————————————
3
உனை எதிர்பார்த்திடாத
நேரத்தில் நீ எதிரே
வருவதும் –
உனக்காக காத்திராத
தருணத்தில் நீ
எதிரே கடந்து போவதும் –
சண்டை போட்டு கடைக்குப் போனால்
அங்கே மிளகாய் பேரம் நீ
பேசி நிற்பதும் –
கோவில் சுற்றி திரும்புகையில்
சாமி சுற்றி
நீ திரும்பியதும் –
உன் வீட்டு வாசலில் நடக்க
நான்கு தெரு சுத்தி
சந்தைக்குப் நான் போனதும் –
சந்தையிக்கு நீயும் வந்து
என் எதிரே நின்று
தலையில் பூவிருந்தும்
வெறுமனே பூ வாங்கியதும் –
பள்ளிக்கு தினமும் செல்கையில்
அப்பாவின் மிதிவண்டி
ஓரத்தில் –
எனக்கான பார்வையை
நிறைய நீ மிச்சம் வைத்திருந்ததும் –
எதேச்சையாய் உடுத்திய
ஒரே நிற ஆடையிலும்
பார்த்து பார்த்து உன் கண்கள் பூரித்துக் கொண்டதும் –
எபப்டியோ வந்துவிட்ட
திரைப்படக் கொட்டகையில்
படம் பார்க்காமல் நீ தவித்த தவிப்பும்
நான் பார்த்த பார்வையும்
அந்த கொட்டகையின் சுவரெல்லாம் பதிந்த
நம் நினைவுகளும் –
நான் வராத வகுப்பறையில்
எனை தேடி தேடி குவித்த
உன் மௌனமும் –
மறுநாள் எனை கண்டதும்
ஆச்சர்யத்தில் பூரித்த
உன் புன்சிரிப்பும்
மதிய உணவு நேரத்தில்
குடிக்க நீரின்றி நீ தவிக்கையில் –
நான் ஓடிச்சென்று வாங்கிக் கொடுத்த ஒரு குவளை தண்ணீரும்
அதற்கு நீ திருப்பித் தந்த பார்வையின் நன்றியும் –
படிக்க வாங்கி பிரிக்காமல்
கொடுத்த புத்தகமும்
அவ்வப்பொழுது வாங்கிப் படிக்கும்
என் மனசும் –
அந்த மனசெல்லாம் நீயும் –
எனக்காய் எனக்காய்
நீ சிரிக்காமல் சேர்த்து வைத்திருந்த
சிரிப்புமெல்லாம் –
வாழ்வெல்லாம் எனக்குள்
பொக்கிஷமாய் நிறைந்திருக்கும்
உயிர்வரை உனையே நினைத்திருக்கும்!!
———————————————————
வித்யாசாகர்