நெடுந்தூரம்
நடந்துவந்து
நெடிய நேரத்தை
கால்கீழ் மிதித்து மிதித்தெரிந்து
விட்டுத் தான் –
உனக்காகக் காத்திருந்தேன்;
இதோ இமைக்கும் பொழுதில்
என்னைக் கடந்து –
அதோ செல்கிறாய்;
நீ போகும் வேகத்திற்கென்
கண்ணீர் மொத்தமும்
சாரை சாரையாய் –
தெருவை நனைக்கையில்
உனக்கென்ன குறைந்துவிடும் –
நீ போ.. போ..
உன் மிதிபடலில்
என் காத்திருப்பு
குறைந்தொன்றும்விடாதென
நான் சொல்லியா உனக்குத்
தெரியவேண்டும்?
உனக்கெல்லாம்
தெரியுமென்பதில் தானே
மீண்டும் மீண்டுமாய்
வலிகளின் மீதேறி –
உயிர் பெருகிறதென் காதல்!

























அருமையான கவிதை!! வலி.. ஏக்கம்… காதல்… எல்லாவற்றையும் அழகாக உணரச்செய்கிறது! 🙂
LikeLike
எல்லோருக்குள்ளுமிருக்கும் நெஞ்சிலூரிய ரணம் காதல் போல்; எழுதுவதை காட்டிலும், படிக்கையிலும் வலிக்கிறது. வலிகள் பதிவாகவே இக்கவிதைகள் பலராமன். உங்கள் வருகையில் எழுத்தும் நட்புமாய் இரட்டிப்பு மகிழ்ச்சி. மிக்க நன்றி ஜெகன்! (பலராமன் என்பதில் பழக்கமில்லாததால் ஏதோ சின்ன இடைவெளி இடை புகுகிறது)
LikeLike