ஒரு ஜாமின்ரி பாக்சும்
பத்து நோட்டும்
ஆறு புத்தகமும்
ஒரு அரிச்சுவடியும்
வாய்ப்பாடும் வாங்கித் தந்தார்
என் அப்பா.
நான் படித்து
பட்டதாரியாகி
ஒரு அரசு வேலையில் கூட
சேர்ந்துவிட்டேன்;
என் பிள்ளைக்கு
கணினியும்
போக்குவரத்து கட்டணமும்
மாதமொருமுறை ரொக்க பணமும்
போகவர செலவுக்கும்
புதிது புதியதாய் ஆடைகளும்
வயதுக்கு காதலும் கொடுத்து
படிக்க வைக்கையில் –
அவன் படிப்பு
என் வருமானத்தை பார்த்து
சிரிக்கத்தான் செய்கிறது;
அவன் படித்து முடிக்கும் வரை
எங்கு என் வேலை இருக்குமோ? பறிபோகுமோ?
என்ற என் கவலை வேறு,
காசுகொடுத்து வர
சேர் ஆட்டோ கூட சுமையாக தெரிய
நடந்தே தேய்ந்த என் கால்களின்
வலி என் மனைவிக்கு கூட தெரியாது,
அலுவலில் சட்டை பிடிக்காமல்
சண்டையிடும்
அதிகாரிகளின் பயம்
வீட்டின் நான்கு சுவர்களாகவே
எனை சுற்றி நின்றும்
சிரிப்பது போல காட்டிக் கொள்வது
ஒரு கனமான வேதனை,
இரவு கூட எத்தனை
நரகத் தனமானது,
நாளை
என்ன எல்லாம் காத்திருக்குமோ
எப்பொழுது உறக்கம் வருமோ
கடனெல்லாம் அடைத்துவிடுவேனா
எல்லாம் கரைசேருமா… என நிறைய பாரம் – உள்ளே
யாருக்குமே தெரியாமல்
மிரட்டத் தான் செய்கிறது,
முன்பெல்லாம்
வயதில் பெரியவர்கள் இறந்தால்
இதயம் வேகவே இல்லை ‘என்னெல்லாம்
வைத்திருந்தாரோ’ என்பார்கள்;
என்னவெல்லாம் வைத்திருந்திருப்பார் அவர்?
எனக்குப் புரிந்தது – அவரின் வேகாத மனதின்
பாரம்;
அதலாம் மறந்து
ஏதோ ஒரு நம்பிக்கை என் பிள்ளைக்காகவும்
மிச்சமிருக்கத் தான் செய்தது;
அவன் அதைபற்றியெல்லாம்
கவலை பட்டிருக்கவேயில்லை,
காதலியை பார்க்க காத்திருக்கும்
காத்திருப்பை மட்டும்
எனக்கு தெரியாமல் நாட்குறிப்பில்
எழுதிக் கொண்டிருந்தான்;
தூர நிற்கும் நான்
அவன் கண்ணிற்கு கூட
தெரியவில்லை தான் !!!
—————————————————————–

























நிதர்சனம்
LikeLike
மிக்க நன்றி லல்லி. உங்களுக்கான காலை வணக்கம் முதலில் உரித்தாகட்டும். நிறைய பேர் தன் மனைவியிடம் கூட ‘எங்கு சொன்னால் வருந்துவாளோ என மறைத்தே தன்னை மட்டும் வருத்தி ‘குடும்பத்திற்காக வாழும் அப்பாக்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம் லல்லி!
LikeLike
உன் அப்பா ஏழை அதற்கு
நானென்ன செய்ய!
என் அப்பா பணம் என்னுடைய
இளமை எது முக்கியம்?
நானுந்தான் சொல்வேன் இதே கதை
என் பிள்ளை பறப்பான்
நேரமில்ல பை !பை!
LikeLike
அப்படி தான் அவர்கள் நினைப்பார்கள் என்கிறீர்களா ஜீ. அவர்களை சொல்லி குற்றமில்லை, அவர்களை யார் வளர்த்தது நாம் தானே. குற்றம் நம் மேல் தான். இக்கவிதைக்கான காரணமே அவர்களின் குறைபாடுகளை பேசவோ சொல்லவோ அல்ல.
அவர்கள் அவர்களாக சரி. அவர்களுக்கு தன் அப்பாவின் வலி இப்படியெல்லாம் என்பது அதிகபட்சம் புரிவதில்லை. நம் கவிதைகளை படிக்கும் சிலராது ஐயோ ‘என் அப்பா கூட பாவம் இப்படி தானோ என்று யோசிக்க மாட்டார்களா’ என்ற ஒரு நப்பாசை.
தெருவில் நடந்து போகையில் கைகாட்டி உதவி கேட்டு வண்டியில் ஏறிக் கொள்பவர் ஒரு விதம், கேட்காமல் திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து யாரேனும் ஏற்றிக் கொள்ள மாட்டார்களா என்று கால் வலிக்க வலிக்க நடைகொள்ளும் நிறைய அப்பாக்களின் மனதில் அசை போடும், எத்தனையோ உணர்வுகள் எண்ணங்கள் அவர்களின் மகன்களுக்கு தெரிவதில்லை.
எனக்குத் தெரிந்து இங்கு குவைத்தில், வெயிலிலும் குளிரிலும் நடுங்கி பணிசெய்தும் கூட, ஒரு குளிபானம் வாங்கவோ ஒரு தேனீர் அருந்தவோ யோசிக்கும் அப்பாக்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நிம்மதி அந்த பிள்ளைகள்; பிள்ளைகளின் முன்னேற்றம்; பிள்ளைகளின் வெற்றி தான் என்பதை சற்று பதிவு செய்யும் முகமாக இக்கவிதை ஜீ.
வெகு நாட்களுக்கு பின் மறுமொழி அளித்துள்ளீர்கள், வருகிறீர்கள், நினைக்கிறீர்கள் என்பதில் மகிழ்வு கொள்கிறேன் ஜீ. மிக்க நன்றி!
LikeLike
பட்டால் தான் புரியும் அது உண்மையான வார்த்தை அவரவர் அப்பவானால் புரியும்,
பெற்றவளுக்கு தானே பிரசவ வலி என்பது தந்தைக்கும் பொருந்தும் என்பதை உணர்த்துகிறது உங்கள் வரிகள்
LikeLike
ஆம் சரளா, ஈன்றெடுக்காதது தவிர ஒரு தந்தையின் வலி, தந்தையானால் தான் புரிகிறது. அது நம் இளைய சமுதாயத்திற்கு முன்னரே புரிதல் பெரிதென்று எண்ணுகிறேன். தன் நண்பனுக்கு ஒன்றேன்றாலே பொறுக்காத இளைய சமுதாயம் தந்தையின் வலி அறிந்திருக்குமானால் மருந்தாகவே இருக்கும் என்பது என் எண்ணம்.
அறியாதலிலும், அறிய இய்லாதலிலுமே, அறிய இயலாமையை நாம் வளர்த்ததன் காரணமே; வீழ்கிறது இளைய சமுதாயத்தின் கனவுகளும் காக்கப் பட வேண்டிய கடமைகளும்!
LikeLike
வணக்கம்,நீங்கள் எழுதும் ஒவ்வொரு கவிதைகளும் உண்மையில் இருக்கும் யதார்த்தங்களையும் நிஜங்களையும் நிழலாய் காண்பிக்கின்றன.ஒரு தாய் தன் குழந்தைகளை எப்படி எல்லாம் பெற்றேடுகிறார்கள் என்று அனைவராலும் புரிந்துகொள்ள முடியும் ஆனால் குழந்தையின் மீதுள்ள அப்பாவின் பாச தவிப்புகள் என்னவென்று குழந்தைகளை கண்டிக்கும்போதுதான் அப்பாவின் பாசம் அனைவராலும் புரிந்துகொள்ளமுடியும்,
அம்மாமீதுள்ள அன்பு,அரவணைப்பு மற்றும் நிறைய கவிதைகளை படித்திருக்கிறேன், ஆனால் அப்பாவின் பாசம்,தவிப்பு என்னவென்று உங்களின் இந்த படைப்புகளில்தான் பார்கிறேன்,உங்களின் படைப்புகள் மென்மேலும் உயர என் மனமுவர்த வாழ்த்துக்கள்,
நன்றி!!!
LikeLike
மிக்க நன்றி, பெரு அன்பிற்குரிய யமுனா வித்யாகரன்,
வணக்கம். அப்பாக்கள் எழுதிய காலத்தில் அம்மாவின் அன்பொன்றே நிறைய பதியப் பட்டுள்ளது. தற்போது அம்மாக்கள் நிறைய எழுத ஆரம்பித்து விட்டார்கள். பரவலாக பெண்கள் எழுத துணிந்தும் முயற்சித்தும் வருவது மகிழ்விற்குரிய ஒன்றும், தவிர வெளிவராத நிறைய நல்லுனர்வுகளும், வரவேண்டிய நல்ல எழுத்தின் அதிர்வுகளும் இனி நிச்சயம் ஏற்ப்படும் என்றும் எதிர்பார்ப்போம்.
தந்தையின் அன்பில் இருந்தவரை அவரின் அன்பு மட்டுமே தெரிந்தது, அவர் இல்லாத எக்காத்தில் அவரின் இருப்பு புரிந்தது, தந்தையான பிறகு தான்; அவரின் முழு அக்கறையும், கனவுகளும், கண்டிப்பு கூட அவரின் ‘கடமை’ என்றும் புரிகிறது யமுனா..
வெளியில் தெரியாத தியாகியாகவே நிறைய அப்பாக்கள் வாழ்கிறார்கள்; அக்கறையற்ற சில அப்பாக்களுக்கு மத்தியிலும்!
LikeLike