இது காமம் சொன்ன கதை (சிறுகதை)

வானத்தை அந்நாந்துப் பார்த்து-எச்சில் உமிழும் இளமைப் பருவம்,

‘சரியென்று நினைத்துக் கொண்டே சின்னஞ்சிறு தவறுகளோடு வாழ்கையை நகர்த்தும் – சபலமான மனத் தோன்றல்.

‘சிரிப்பின் அடையாளம் இதுவென்று கண்டு கொண்டு- சகதிகளில் கால்பதிக்கும், நம் கதாநாயகன் காளமேகம் நடந்து போகிறான்..

காளமேகத்தை, கண்டவுடன் பிடித்துவிடும் அத்தனை அழகென்று யாரும் மெச்சிடமுடியாது, ஆனால் பழக பழக தன் நடத்தையினால் தன்னை அழகாக வெளிபடுத்திக் கொள்ளக் கூடிய திறமையானவன் காளமேகம்.

வாழ்கையை எப்படியேனும் ஒழுக்கமாகவே வாழ்ந்து விட வேண்டுமென்றுதான் அவனின் வெகுநாளைய லட்சியம். ஆனால் அவனையும் மீறி அவனை சபலபடுத்துவது எது? யார்? என்ன? என்று தன்னைத்தானே சிந்தித்தவாறு கடைத்தெருவிற்குள் நடக்கிறான். கடைத் தெரு முனையில் ஒரு வடஇந்திய உணவகம் இருக்கிறது. அதில் செக்கச் செவேலென்று ஐந்து பெண்கள் பணியாட்களாக பணிபுரிகிறார்கள்.

அவர்களிடம் சென்று ஒரேயொரு தேனிருக்கு ஆர்டர் கொடுத்தாலும் அதை குடித்து முடிப்பதற்குள் பத்து முறையேனும் அருகில் வந்து- பார்த்து-சிரித்து- உரசி- உபசரிப்பதை நம் காளமேகத்தாலும் நிராகரிக்க முடியவில்லை.

ன்னதான் துணிந்து சென்று ஒரு தேனீர் கூறிவிட்டு அமர்ந்துக் கொண்டாலும், மனசு ஏனோ குறுகுறுத்தது. ஏதோ தவறு செய்ய துணிந்துவிட்டோமோ எனும் அச்சம் இருந்ததவனுக்கு. அவைகளை மறக்கடிக்க அந்த பெண்களுக்கு அதிக நேரம் பிடித்திடவில்லை, அருகில் வந்து நின்று கொன்ன்டால் ஒரு பெண், ஒருத்தி தூரநின்று பார்த்து ம்ம் என்னவேண்டும் என்பது போல் புருவம் உயர்த்தினாள். அவர்களின் இருக்காமான உடை, கவர்ச்சியான சிரிப்பு, காமம் நிறைந்த பார்வையை எப்படி கணக்கிடுவதென்று புரிந்து கொள்ள முடியாமல் பரிதவித்தான் காளமேகம்.

எப்படியோ, மனதை முழுதுமாக கட்டுப் படுத்திக் கொள்ள முனையாமல், அடிக்கடி அந்த கடைக்கே வர ஆரம்பித்தான். இப்படி வருவது கூட தவறு தானோ என்றெல்லாம் யோசித்து ஒரு முடிவெடுப்பதற்குள் அந்த ஐந்து பேருமே அவனுக்கு மிக நெருக்காமான நட்பாகிறார்கள். நட்பில் வீசிய காமவாடை மெல்ல அவனின் நெஞ்சைக் கிள்ளுகிறது.

பகலில் அவர்களோடிருந்து பெற்ற நெருக்கத்தை இரவில் படுக்கையில் விரித்துக் கொள்ள ஆசைப்பட்டான். அந்த ஐந்து பேரில் யாராக இருந்தாலும் பரவாயில்லை, ஒருவரையாவது… ஒருநாளாவது… ஒருமுறையாவது… ‘மனசு மேலே பார்த்து, அவன்மீதே எச்சில் உமிழ்ந்துக் கொண்டது. எச்சிலின் ஈரம் கனவுகளாய் விரிந்தன. ஏதோ ஒரு பெண்ணின், ஒரு இரவிற்காக மட்டும் தயாராகி, நெஞ்சு நிமிர்த்தி நின்றுகொண்டான் காளமேகம்.

ஆனால், அவனின் போதாதகாலம், அந்த ஐந்து பேருமே அவனிடம் நீயா நானா என்று பழகுகிறார்கள். அவனிடம் ஒன்றி போய்விட்டார்கள். இவனும் கிடைக்கும் நேரம் பார்த்து அவர்களிடம் எதையோ உள்மறைத்து பொடிவைத்து பொடிவைத்துப் பேசுகிறான். அவர்களும் அதை சிரித்து ரசிக்கிறார்கள். காலநேரம் பார்க்காது அவர்களுடன் தங்க ஆரம்பிக்கிறான், அவர்களும் அனுமதிக்கிறார்கள். மெல்ல தொட்டுப் பேச முயல்கிறான், தாராளமாக இடம் தருகிறார்கள். தோள்மீது கைபோட்டுப் பார்கிறான். தயங்காது அணைத்துக் கொள்கிறார்கள். இதுதான் சமயமென்று தகாத இடத்தில் கை வைக்கிறான்-‘சடாரென விலகிக் கொண்டார்கள்.

‘ஏன்..ஏன்.. ஏனென்று கோபம் வந்தது காளமேகத்திற்கு. கோபத்தில் காமம் தலைக்கேறி பலவந்தமாக பிடித்திழுத்தான் கைக்கெட்டிய ஐந்து பேரில் ஒருவளை. சற்றும் யோசித்திடவில்லை, படாரென தூக்கி வெளியே வீசினார்கள் காளமேகத்தை. அந்த வீசலில்தான் சிந்திக்கத் துவங்கினான் காளமேகம்.

‘ஆம், இது தான் இவர்கள். இவர்கள் வியாபாரிகள். தந்திர வியாபாரிகள். இலவசமாக ஒரு சிரிப்பை கொடுத்து இரண்டு குவளை தேனீரை இலகுவாக விற்கத் தெரிந்தவர்கள். வெறும் தந்திரசாலிகள். தவறானவர்கள் அல்ல. தவறான வீட்டினர் அல்ல. தூர நின்று அவர்களின் வசீகரத்தை பார்க்க மட்டுமே பழகிக் கொண்டோம் நாம். நெருங்கிப் பார்த்து அவர்களின் வயிற்றுப் பசியை உணர முடிவத்ல்லை நம்மால். காளமேகம் அதை உணர்ந்துக் கொண்டான். தொட்டதும் சிரித்தவர்கள்; படுக்க என்றதும் காரி உமிழ்ந்ததில் புரிந்துக்கொண்டான்.

அவுமானம் வலித்தாலும், காமம் அவனை வெட்கப் படவைத்ததை சிந்திக்கும் தருணமாக இதை எடுத்துக் கொண்டான் காளமேகம். எங்கோ உண்டு திரிந்த வீட்டில் ரெண்டகம் செய்வதாய் யாரோ சொன்ன பழமொழி அவனருகே நின்று ‘அவனை பழிகாட்டிவிட்டுப் போனது.

நிதானமாக யோசித்தான் காளமேகம். மனதில், வெளிவரமுடியா ஒரு சஞ்சலம் அவனை குற்றவாளியாகவே நிறுத்திக் கொண்டிருப்பதை அவனால் எதிர்த்துவிட இயலாதவனாய் மெல்ல உறங்கிப் போனான். உறங்கியெழுந்த மறுநாளின் காலை வெளிச்சத்தில் ‘கண்ணாடியை பார்க்காமலே அவன் முகம் கருத்திருப்பதை அவனால் உணரமுடிந்தது.

ச்சே’ இப்படியாகிப் போச்சே!!! எப்படி நினைத்து அவ்வளவு இணக்கமாக பழகினார்களோ, இப்படி தரமின்றி நடந்துக் கொண்டோமே.., என்ன பண்ணலாம்’ மெல்ல நடந்து மீண்டும் அந்த கடைக்கே வந்தான். வெளியில்போடப் பட்டிருந்த மரப் பலகை மேசையிலமர்ந்து அமைதியாய் எதையோ யோசித்துக் கொண்டிருக்க,

“என்னடா காளமேகம்  ரொம்ப ஆழமா சிந்திக்கிறாப்ல இருக்கு”

“ச்ச..ச்ச.. இல்லடா, வா.. உட்காரு, என்ன; தேனீர் சொல்லவா??”

“எனக்கு தேனிரெல்லாம் வேணாம், சும்மா ரெண்டு பஜ்ஜி சொல்லு போதும்”

பஜ்ஜி சொன்னான். அந்த ஐந்து பெண்களில் ஒருத்தி கூட வெளியே வரவில்லை. காளமேகம் சற்று குரலை உயர்த்தி “என்னங்க… நான்-காளமேகம் வந்திருக்கிறேன், ரெண்டு பஜ்ஜி வேணும்” என்றான். அந்த பெண்களின் தகப்பனார் கல்லாவிலுருந்து எழுந்துச் சென்று பஜ்ஜி கொண்டு வந்தார்.

அவனை ஒரு சந்தேகத் தொனியில் பார்த்துவிட்டு அவனுக்கருகிலயே அமர்ந்துக் கொண்டார். ஒருவேளை, எங்கு இந்த நடத்தைகெட்டவன் உள்ளே சென்று நம் பெண்களிடம் தகாதவாறு நடந்துவிடுவானோ என்று பயந்திருக்கலாம் அவர். காலமேகத்திற்கு இந்த செய்கை வருத்தத்தை அளித்தது. அதற்குள் அவனுடைய கைப்பேசி ஒலிக்க, எடுத்து “வணக்கம் காளமேகம் பேசுகிறேன்.. யார் பேசுறீங்க” என்றான்.

“டேய் காளமேகம் நான் சௌந்தர் பேசுறேன்டா. சிங்கபூர்லேர்ந்து”

“சொல்லுடா சௌந்தர் நல்லாருக்கியா?”

“நான் நல்லாருக்கேன் -நீ எப்படியிருக்க?”

“ம்…இருக்கேன், சொல்லுடா..,நீ நல்லாருக்க தானே?”

“ஏதோ இருக்கேண்டா. ஏன்டா இருக்கோம்னு இருக்கு. செத்துடலமன்னு தோணுதுடா காளமேகம்”

“ஏண்டா.., என்னடா பிரச்சனை?”

“ஒரு பொண்ணுடா.”

“பொண்ணா?!”

“ம்.”

“பொண்ணா???!”

“ம்..”

“எந்த பொண்ணு?”

“பிலிப்பைனி”

“பிளிப்பைனின்னு ஒரு பேரா?”

“இல்லடா, பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்தவள்.

“என்ன காதலா?”

“இல்லை”

“பிரகென்ன பிரச்சனை?”

“உண்டாயிட்டா…”

“உண்டாயாட்டாளா? கர்ப்பமா? எப்படி!!?”

“இல்லைடா, பிரச்சனை ஒண்ணுமில்லை, கலைச்சிட சொல்லிட்டேன். கலைச்சிட்டா(ள்)”

“கலைச்சிட சொன்னியா?”

“ம்…”

“கர்ப்பமாக்கிட்டு கலைச்சிட சொன்னியா?”

“ம்..”

“ச்சே, என்னடா சௌந்தர் இவ்வளவு கீழ்த்தரமா நீ?”

“சிங்கப்பூர்ல (ஒருசிலருக்கு) இதலாம் சகஜம்டா காளமேகம்.”

“அப்ப ஏன் கவலைப் படற?”

“அவ கற்பமாயிட்டா(ள்)ன்றது அவளோட மேடத்துக்கு தெரிஞ்சி போச்சி”

“அப்புறம்”

“அவளை ஊருக்கு அனுபிட்டாங்கடா. பாவம், பிளிபையன்ல இருந்து போன் பண்ணினா. அழறா. என்னால அவளுக்கு வேலையும் போச்சி. பேரும் கேட்டுது, அவுங்க அம்மா அப்பவெல்லாம் என்னிடம் போன்ல அழைத்து பேசினாங்க. ரொம்ப வறுத்தப் பட்டாங்க, எனக்கு என்ன பண்றதுன்னு தெரிலடா. நான் தான் அவளை ஏமாத்திட்டனோன்னு தோணுது. அவ பாவம்டா உலகமே புரியாதவ!”

“அப்போ கல்யாணம் பண்ணிக்கோ”

“ஒத்துக்க மாட்டாளாம். கல்யாணம் வேணாமாம், நம்ம கலாச்சாரம் நம்ம நாடு எல்லாம் அவளுக்கு ஒத்துவராதாம், அவ வீடு அவளுக்கு முக்கியமாம், அதை விட்டு வரமாட்டாளாம். என்னை பிலிப்பையுனுக்கு கூப்பிடறா, அவளால என்னை பிரிஞ்சி வாழ முடியாதாம்”

“நீ என்ன சொன்ன?”

“என்ன சொல்றதுன்னு புரியலடா. இப்பகூட அவுங்கக்கா பேசுச்சி. நான் வேனும்னா வேற விசா எடுத்து அனுப்புறேன். மீண்டும் சிங்கப்பூருக்கே அனுப்பி வைங்கன்னு சொன்னேன்”

“ஏன், விசா அனுப்பி சிங்கப்பூருக்கு வரவெச்சி மீண்டும் கர்ப்பமாக்கி கலைக்கப் போறியா?”

“அப்படி இல்லடா?”

“வேற எப்படி?”

“பாவமில்லையா அவ?”

“அந்த புத்தி அன்னைக்கே இருந்தருக்கணும்”

“இப்போ என்னடா பண்றது?”

“உனக்கு சம்மதமா? அவ இஷ்டப்படி அவளோடு வாழ உன்னால முடியுமா?”

“அதுஎப்படி முடியும்? நம்ம வீட்ல அம்மா,அப்பா, யாருமே இதுக்கு சம்மதிக்க மாட்டாங்களே”

“பிறகு எப்படிடா உன்னால இப்படி ஒரு தவறை செய்ய முடிந்தது? உணர்ச்சியை அடக்க முடியாதவன் ஊருக்கு வந்து கல்யாணத்தை பண்ணி தொலைக்கிறது தானே? வாழ்கையை இவ்வளவு அசிங்கமா வாழ்ந்துட்டோமேன்னு, பின்னாடி உணர்ந்து வருந்துறது எவ்வளவு பெரிய வேதனை தெரியுமா? நீ ஒண்ணு பண்ணு, உடனே ஊருக்குப் புறப்பட்டு வந்துடு. எப்படியும் அந்தப் பொண்ணு உன்னால கஷ்டப்படத்தான் போகுது. எது எல்லையோ அதை மீறிட்ட. இனி மீறுவதற்கு என்ன இருக்கு. சீக்கிரம் அங்கிருந்து புறப்படுற வழியைப் பாரு. வரும்வரை அந்த பெண்ணிடம் எந்த தொடர்பும் வேண்டாம். தொலைபேசி எண்களை மாற்று. கடிதம் போடாதே. கொஞ்ச நாள் அழுதுட்டு; மறந்துடும். பெத்துக்க முடியாதுன்னு தெரிந்தும், கலந்துட்டு, கலைக்கத் துணிஞ்சவ மறக்கத் துணிய அதிக அவகாசம் எடுக்காது”

“ச்ச..ச்ச..நீ நினைக்கற மாதிரி இல்லடா அவ. பாவம். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவ, இங்க குறைந்த சம்பளத்துக்கு வந்துட்டா, அதான் கொஞ்சம் அப்படி.. இப்படி”

” ச்சீ வாய மூட்றா. அது நல்ல நடத்தையா?”

“நல்ல நடத்தைன்னு நான் சொல்லல மச்சி”

“இதப்பாருடா சௌந்தர். வாழ்க்கை உயர்வானது. தாம்பத்தியம் வெறும் உடல் கூடல் இல்லை. மனதின் சங்கமம், அன்பால் தன்னை அர்ப்பணிக்கிற ஆழமான இன்பம், நமக்குள் இனி எந்த பாகுபாடுமே, எந்த மறைவுமே இல்லை நாம் ஒன்றறக் கலந்தவர்களெனும் இரு மனதின் நெருக்கத்தின் ஒப்பந்தம். அதை வெறும் உணர்ச்சிக்கு மட்டும் விற்று விடக் கூடாது சௌந்தர். நாளைக்கு இன்னொரு பெண்கூட வாழும்போது இந்த குற்ற உணர்வு உனக்கு உருத்தாமையா போய்டும்?

“சரிடா. இப்போ என்ன பண்ணலாம் அதை சொல்லு, நான் ஊருக்கு வரேன், எனக்கு வரதுனால கஷ்டமில்லை, இதுவரையென்ன நடந்ததோ போகட்டும் இனி என்னால எந்த தவறும் நடக்கக் கூடாதுடா”

“ம்! நல்லது, முதல்ல அதை செய். ஊர்வந்து சேரு, பிறகு பேசிக்கலாம் மீதியை”

“அதுவரை இதை யாரிடமும் சொல்லிடாதே மச்சி”

“சொல்லமாட்டேன், சீக்கிரம் புறப்படு” என்று சொல்லிவிட்டு கைபேசியை அனைத்து சட்டைப்பையில் வைத்தான் காளமேகம். எதிரே அமர்ந்திருந்த நண்பன் அதிகபட்சம் புரிந்து கொண்டவனை போல “நம்ம சௌந்தர் தானே மச்சி?” என்றான்.

“ஆமாம்டா, சரி வா.. போலாம்..” இருவரும் எழுந்து பஜ்ஜிக்கு பணம் கொடுத்துவிட்டு வெளியே வர; வாசலில் அந்த ஐந்த பெண்களும் ஒளிந்தவாறு நின்று கொண்டிருந்தார்கள். அதிகபட்சம் காளமேகம் பேசியது அவர்களுக்கும் கேட்டிருக்கக் கூடும்

ஆனால் காளமேகத்திற்கு தான் வெட்கமாக இருந்தது. சற்று முன் சௌந்தரிடம் தான் பேசியதெல்லாம் தனக்காகவே சொல்லிகொண்டது போல அவனுக்கே மீண்டும் மீண்டுமாக நினைவில் வந்தது. அவனை நினைத்து அவனே வருத்தப் பட்டான். வாசலில் நின்று கொண்டிருந்த அந்த ஐந்து பெண்களிடமும் கையெடுத்து வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும் போலிருந்தது.

அதற்குள் அவர்களிலுருந்து ஒருத்தி வெளியே வந்து காளமேகத்திற்கு எதிரே நின்றாள். அவன் குற்ற உணர்வோடு அவளைப் பார்க்க, அவளே அவனிடம் ‘மன்னித்து விடுங்கள், நாங்கள் அந்த எண்ணத்தில் பழகவில்லை’ என்றாள்.

“நான் தவறு செய்து விட்டேன், நீங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும்”

“இல்லை, நாங்களும் தான் தவறு செய்கிறோம். அளவிற்கு மீறி உங்களிடம் சுதந்திரமாக இருந்ததும், உங்களை இருக்கவிட்டதும் தவறு தானே?”

“பிறகு, எல்லாமே தெரிந்து தான் செய்கிறீர்களா?”

‘தொழில் தர்மமென்று அம்மா சொல்கிறாள்”

அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ”சரி நான் வரேன்…..”

“எங்கப்பா ஏதாவது கேட்டாரா?”

“இல்லை”

“எங்க மேல ஏதேனும் கோபமா?”

“இல்லை”

“இனி இங்கு வரமாடீங்களா?”

“வருவேன்”

“எங்களிடம் பேச மாட்டீங்களா???”

“பேசுவேன்”

“தவறாக நினைத்தெல்லாம் தொட மாட்டீங்களே???”

“!!!!” சடாரென நிமிர்ந்து அவளைப் பார்த்தான். செவிட்டில் அறைந்தது மாதிரி இருந்தது காளமேகத்திற்கு. அவன் ஒன்றுமே பேசவில்லை. ஆயினும், சத்தியமாக மாட்டெனென்று ‘அவன் பார்வை அங்கே சபதம் செய்தது.

——————————————————————————————-

முற்றும்

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுகதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to இது காமம் சொன்ன கதை (சிறுகதை)

 1. மனோஜ் சொல்கிறார்:

  அருமையான கதை….விரசம் இல்லாமல் அளித்ததற்கு நன்றி!…மற்றும் ….அந்த தொலை பேசி உரையாடல் மிக மிக அருமை!….வாழ்த்துக்கள்!! தோழரே!!

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி மனோஜ். பொதுவாக நம்மூரிலிருந்து வெளிமாநிலங்களுக்கு வேலைக்கென்று போகும் சிலருக்கு ஏற்படும் உபாதைகளில் இதுவும் ஒன்று. மெஸ் வைத்திருப்பவர், உணவகம் நடத்துபவர், வீட்டிற்கு வியாபார நோக்கில் வருபவர்களை காமப் பார்வையில் பார்த்து வாடுவதும் அல்லது சில தவறான பெண்களிடம் பழகி தன்னை அழித்துக் கொள்பவரும் எண்ணற்றோருண்டு.

   இன்னொரு வகை, சகோதரத்துவமாகவோ அல்லது வியாபாரத்திற்காக வெளிப்படையாகப் பேசுவதை கூட தவறாகப் புரிந்து அந்த ஏழ்மைப் பெண்களை அவதூறாக பேசுவதும் கூட நடக்கிறது. எது எப்படியோ, எங்கிருந்தாலும் நாம் சரியாக இருக்கவேண்டும். பதின்மூன்று வருடமாக பல நாடுகளுக்கு சென்றும் வேலை புரிந்துமிருக்கிறேன், நம் நோக்கம் வேலை, வீடு, இடையே எழுத்து எழுத்து மட்டுமே என்றாலும், உடன், தவறான தன் பழக்கவழக்கங்களால் தன்னை சீர்கேடாக்கிக் கொண்ட நண்பர்களையும் கண்டு, காத்து வாழும், இந்த வீட்டை துறந்த வாழ்க்கையில், பாதி வயது கழிந்தேவிட்டது. பதினாறு வருடங்களாக மாநிலங்களில் துவங்கி நாடுகள் வரையில் நான் கண்ட காலமேகங்கள் மிக அதிகம்.

   இவை எல்லாவற்றைவிட இக்கதை எழுதியே ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்கும். இதை வெளியிட இப்படி ஒரு காலமே தேவையாய் இருந்தது போல். உண்மையில், விரசமாக எழுதுவது நம் நோக்கமல்ல மனோஜ், காமம் உடலெரிக்கும் நெருப்பல்ல; மனநெருப்பணைக்கும் விளக்கு, எரியும் சுடாது. ஆனால் சுடுகிறது சில இடத்தில். சுடுவதன் காரணமென்ன என்பதை சற்றேனும் சுட்டிக் காட்ட எழுதியது இக்கதை.

   காமத்தை இப்படியும் சொல்லலாம் ‘மனிதகுல விருட்சத்திற்கான விதை’ என்று. அதை, தவறான இடத்தில் தவறாக தூவப் படுவதால் மட்டுமே துன்பமாக முளைத்துவிடுகிறது!

   Like

 2. Ashwi Gova சொல்கிறார்:

  உங்களின் ஒவ்வொரு வரியும் மனிதனை சிந்திக்க வைக்கும் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்துகிறது மாமா..

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றிடா. உங்களைபோல விழிப்புள்ள இளைய சமுதாயத்தோடு வாழ்கிறேனில்லையா.. அதனால் தான்.

   நான் எழுத ஆரம்பித்ததே இளைய மனிதனுக்குள் இருக்கும் மனிதத்தை வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தின் சிந்தனையில் பதிந்து செல்லத் தான். அது உனை போன்றோர்களால் ஈர்க்கப் படுமெனில், போற்றப் படுமெனில், எடுத்துக் கொள்ளப் படுமெனில்…

   கொடுத்துவைத்தவன் நான்!

   Like

 3. saralafromkovai சொல்கிறார்:

  எப்படி சொல்ல, இந்த கதை நம் சமூகத்தின் சரித்திரத்தை திருப்பி போடும் ஒரு கல்லாக அமைந்திருக்கிறது. ஆண்களுக்கு கொடுக்கப்படும் அளவுக்கு மீறிய சுதந்திரம், பாலியல் பற்றிய சரியான அறிவின்மை, குழந்தைகளை வளர்கப்படுகையில் காட்டப்படும் பிரிவின்மைகள் என இவை எல்லாமே சமூகத்தில் ‘ஆண்களுக்குள் ஒரு வக்கிரத்தை வளர்த்துவிடுகிறது. அதை முளையிலேயே கிள்ளிப் போடாமல் வளர்ந்தபின் வெட்ட நினைக்கிறோம்.

  பெண்களை கவர்ச்சி பொருளாக பார்க்கும் எண்ணத்தை தவிர்த்தாலே, அவள் சாந்த சொரூபினியாக, தாய்மையின் இருப்பிடமாகத் தெரிவாள். எந்த நாட்டுக்கு சென்றாலும் நீ நீயாக இரு, ‘உன்னை அடக்கவோ உன்னை திருப்தி படுத்தவோ உன்னால் மட்டுமே முடியும்’ என்று மானிடத்தின் மகத்துவத்தை உளவியல் கூறுகளோடு உணர்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்த வார்த்தைகள் இல்லை வித்யா..

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி சரளா. ஆண்களுக்குக் கொடுக்கப்படும் சுதந்திரம் என்பதை விட, அவன் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத சுதந்திரத்தால் எனலாம், மூக்கின் நுனி வரை அணுகக் கொடுத்த சுதந்திரத்தின்பேரில் எட்டி உதடு தொட்ட மதப்பினால் எனலாம், பெண்களுக்குக் கொடுக்கப் படாத சுதந்திரத்தால் எனலாம்.

   ஒரு ஆண் யாராலாவது தொடவோ காமமுற்றுப் பார்க்கவோ இச்சைக்கு ஆட்படுத்தவோ செய்தால் திருப்பி அடிக்கலாம், எதிர்க்கலாமெனில்; அதை தற்காத்துக் கொள்ளும் முகமாக பெண்ணும் செய்யலாம் எனும் ‘வளர்ப்பு வேண்டும்.

   உனக்கான சுதந்திரம் இதுவரை தான். இதற்க்கு மேல் என்னை தொடாதே, அப்படி பார்க்காதே என பெண்ணும் எச்சரிக்கலாம் யெனும்போன்ற வேகம் ‘மொத்த பெண்களின் கையிலுமிருப்பின், மோகங்களுக்கு இசைபடும் மனதில் கூட, அதற்கு உரித்தான இடமா இது, உறவா இது என்று அலசிப்பார்த்து புரிதல் ஏற்ப்படுத்திக் கொள்ளுகையில், அதனால் ஏற்ப்படும் நாலவிலான அதிர்வலைகளினால் பின்னாளில் ‘இதுபோன்ற எண்ணக் கூறுகள் மாறலாம் சரளா.

   காமம் பற்றி, பாலியல் பற்றி, காதல் பற்றி, நட்பு பற்றி, பாசம் பற்றி, இயற்கையின் யதார்த்தத்தின் உணர்வுகள் பற்றி ‘எந்த சுயகருத்து திணிப்பும் சேராமல், கேட்டு அவர்கள் சிந்திக்கும் அளவிற்கு, வளரும் குழந்தைகளுக்கு இது பேருந்து, இது உலகம் ‘என்று கைகாட்டி சொல்லித் தருவது போல் ‘இடம் பார்த்து இவைகளையும் சொல்லித் தரலாம்.

   மிக்க நன்றிகள் கலந்த அன்பும் உரித்தாகட்டும், உங்களின் தோழமையும் மதிப்பும் கலந்த ‘ஆக்கப் பூர்வமான மறுமொழிகளுக்கு!

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s