காற்றாடி விட்டக் காலம்..

நெருப்பைத் தொட்டால் சுடும்போல் வார்த்தை
காதல் அன்று,

ஜாதிக் கயிற்றில் கழுத்து நெறித்து
வெளியில் தொங்கும் நாக்கில்
வாஞ்சை தடவி
கவிதைகளோடு காதலுக்கென திரிந்தக் காலம்
எங்களின் அந்த காற்றாடி விட்ட காலம்;

தெருவில் ஐஸ்வண்டி வரும்
காய்கறி காரர் வருவார்
மாம்பழக்காரி வந்துபோவாள்
கீரை விற்கும்
மீன்வண்டி வரும் போகும்
நாங்கள் காதல் வாங்கமட்டுமே தேவதை தேடி
தெருவெங்கும் அலைவோம்..

புதுப்படம் பழசாகி
ஊர் கொட்டகைக்கு வரும்
கோவில் திருவிழா மின்வண்ண விளக்குகளில்
ஊரெங்கும் ஜொலிக்கும்
அக்கம்பக்கத்துச் சண்டை
கூசாமல் தெருவில் நடக்கும்
நாங்கள் காதலுக்காக இதயத்தைக் கூறுபோட்டு
இடையே பெண்தேடி அலைந்துக் கொண்டிருப்போம்..

பள்ளிக்கூட பாதினாட்களில்
நாங்க அடிவாங்காமல் கற்ற பாடம் கூட
காதல் தான்,
காதலென்றால் அத்தனை இனிப்பு,
வீட்டில் அடித்தாலும்
அம்மா அப்பா அழுதாலும்
ஊரே சேர்ந்து காரி முகத்தில் உமிழ்ந்தாலும்
எல்லாவற்றையுமே பெருமையோடு
காதலுக்கு அர்ப்பணித்த அந்த நாட்கள்தான்
நாங்கள் எங்களுக்காக வாழ்ந்த நாட்கள்..

தலைசீவிக்கொள்ள ஆசைப் பட்டதும்
பவுடர் மணக்கப் பூசிக்கொன்டதும்
வெள்ளையாய் உடுத்திக் கொண்டு
ஊரெல்லாம் எங்களையேப் பார்ப்பதைபோல்
எண்ணி
தலைகோதி நடந்த அந்த நாட்கள்
அவள் பேசிச் சிரித்த தருணத்தைப் போலவே
மனதுள் பத்திரமாகப் பதிந்துக்கொண்ட
பசுமை நாட்களாகும்..

தேசியக் கீதம் பாடுகையில் எட்டிப்பார்த்து
தாகம் எடுக்கையில் தண்ணீர் கொடுத்து
வீட்டிற்குப் போகையில் சைகை காட்டி
இரவுதோறும் தூங்கக் கிடக்கையில் மனதுள் மெச்சி
என்னவென்றே அறியமுயன்றிடாத அந்தக் காதலை
வாழ்வின் கடைதூரத்திற்கும்
நிரப்பிக்கொண்ட பொழுதுகளை
அன்றையப் பாடல்கள் இன்று ஒலிக்கையிலும்
ரகசியமாய் புதிப்பித்துக் கொண்டே நகர்கிறோம்..

மறைக்காமல் சொல்வதெனில்
புத்தகப் பையினுள் படித்த பாடத்தைக் காட்டிலும்
வீட்டிற்குத் தெரியாமல்
எழுதிவைத்த அவள் பெயரும்,
அவளுக்கே தெரியாமல் சேகரித்த அவளின்
கூந்தல் உதிர்த்தப் பூக்களும்,
அவள் திரும்பிப் பார்த்த பார்வையின்
நினைவுகளுமே’ இதோ இப்போதுவரை
இனிக்கிறது..

அது எப்போதைக்கும் தவறாமல் இனிக்கும்..
————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றாடி விட்ட காலம்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to காற்றாடி விட்டக் காலம்..

  1. yarlpavanan's avatar yarlpavanan சொல்கிறார்:

    இந்தக் காலத்தில
    அந்தக் காற்றாடி விட்ட காலம்
    மறக்க முடியல்ல
    அது போலக் காதலுந்தான்!

    தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.

    Like

  2. அந்த நாட்களின் இனிய நினைவுகள் மனதில் வந்து போயின… வாழ்த்துக்கள்…

    Like

  3. வணக்கம்
    அண்ணா

    இளமைக்கால நினைவுகள் கவிதையில் ஊஞ்சல்லாடுகிறது…நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    Like

திண்டுக்கல் தனபாலன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி