46, அதோ அது அப்பா நட்சத்திரம்..

M31489-22 001

நிறையப்பேரைப் போலவே
எனக்கும் அப்பாயில்லை..

அப்பா இல்லாத உலகம்
வெறும் இருட்டோடு மட்டுமே விடிகிறது..

அப்பாவோடு ஊர்சுற்றிய நாட்களை
விண்மீன்களோடு விளையாடிய நாட்களாக
வானத்துள்
புதைத்துக்கொண்டது வாழ்க்கை..

இறக்கை உடைவதற்குபதில்
பறப்பதை மறந்துவிட்ட
பறவைகளாகத் தான்
மனக்கண்ணிற்குள் பார்த்துக் கொள்கிறோம்
அப்பா இல்லாத எங்களை..

அப்பாவிற்கு வலிக்குமே என்று
காலழுத்தித் தூங்கியிராத இரவெல்லாம்
அப்பா போனப்பின்
நெஞ்சுக்குள் வலித்து வலித்து
நினைவாக மட்டுமே கனக்கிறது..

நீ ஓட்டு ராஜா’ நான் –
அப்பா இருக்கேன்னுச் சொல்லி
எனக்கு ஒரு மிதிவண்டி வாங்கித்தர
ஆறுமாத வேலைக்கு அன்றெல்லாம்
நடந்தே போனஅப்பாவை
எத்தனை விமானம் ஏறினாலும்
என்னால் மறக்கமுடிவதில்லை..

கருப்பு வெள்ளை படங்களோடுப் போன
சார்லிசாப்ளினைப் போலவே
வளர வளர
அப்பாவையும் மறக்கவேண்டுமென்றுத் தெரிந்திருந்தால்
அன்றே
கருவறைக்குள்கூட கலைந்துபோயிருப்பேன்..

பார்க்கையில்
ஒரு கண்ணைமூடிக்கொண்டுப் பார்ப்பதுபோல்
பார்க்கமுடிகிற
அப்பாயில்லாத உலகு
வெறுங்காலில் மிதிக்கும் முட்பாதையைக்கு ஈடென்று
எல்லோருக்கும் புரியாது..

அம்மாயெனும் வரத்தைப் போல
அப்பாயில்லாமலே வளர்ந்த
சாபத்தைப்பெற்ற பிறப்பும்
சபிக்கப்பட்ட பிறப்புதான்..

லுங்கிக்குள் மறைத்துத் தின்பண்டம்
கொண்டுவருவதும்,
படிக்க என்றால் பகலிரவு உழைப்பதும்
அடித்ததற்குக் கூட
அடுத்தகணம் அழுவதுமான அப்பாவை
எத்தனை இரவில் அழுது மறப்பது?

நான் போயிட்டேன்னா
நான் இல்லைன்னா
எனக்கு ஏதேனும் ஆனால் என்றெல்லாம்
சொல்கையில் பதறிய மனத்தைக்கூட
அப்பாவிற்குக் காட்டியதில்லை..

அப்பா போனதும்
அழுவோம் என்று அப்பாவிற்குத் தெரியும்
ஆனால்
அப்பா போனதும் அழுவோமே என்று நினைத்து
அப்பா எத்தனை அழுதிருப்பாரோ..

தெருவில் போகும் பிணத்தைக்கண்டு
நாலு தெரு தள்ளியடிக்கும் மேளத்திற்கு அஞ்சி
சாலையெல்லாம் வீசியப் பூக்களைப் பார்த்து
யாருக்கெல்லாம்
அப்பா அப்பான்னு மனசு அழுமோ..(?) தெரியவில்லை..

எனக்கு அழுகிறது..
———————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஒரு கண்ணாடி இரவில் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to 46, அதோ அது அப்பா நட்சத்திரம்..

  1. H. ஜோஸ்'s avatar H. ஜோஸ் சொல்கிறார்:

    அழகு சார் பதிவு

    Like

பின்னூட்டமொன்றை இடுக