1
இரவு எனக்கு எதிரி
இரவு எனக்குத் தோழன்
இரவு எனக்கு எல்லாம்
இரவில்தான் எனக்கு வாழ்க்கை
படிக்கக் கிடைக்கிறது;
ஆனால்
பகலை தொலைக்கிறேன் என்பதே கவலை
பகலில் நான் தொலைந்துப் போகிறேன்
என்பதே கவலை;
பகல் தொலைவதால்
இரவு எனது மூடாவிழியில் கசிந்து
எல்லோருக்குமாய் விடிகையில்
மரணம் பற்றி எனக்கு
பயமெல்லாமிருப்பதில்லை
ஆனால் –
மரணத்தின் சொட்டு சொட்டான வலி
மாத்திரைகளின் உயிர்தின்னும் ரணம்
மருந்துக்கசப்பின் இனிக்காத வாழ்க்கை
என இதெல்லாம் வந்துவந்து போவதுதானோ (?) என்று
சிலநேரம் யோசிக்கிறேன்,
வேறு.. ?
வந்தவர்கள் செல்பவர்கள் தானே?
நான் மட்டுமென்ன (?)
வந்தவன் ஒரு நாள்
போவேன்,
அன்று எல்லாம் அற்றுப் போகும்..
மரணம் இனிக்கும் அந்தத் தருவாயிலும்
இரவு வரும்
பகல் வரும்
நான்… ?
நான் இரவாகவோ பகலாகவோ
இருப்பேன்;
எனது கவிதைகள் அன்று
யாராலோ எழுதவோ படிக்கவோப் படும்
இன்று மாத்திரை தின்னும் உடம்பை
அன்று மண் தின்று தீர்க்கலாம்
ஆயினும் நான் –
இந்தக் கவிதையாக உயிர்த்திருப்பேன்…
————————————————–
2
எனக்கு விடிகாலைச் சிட்டுக்குருவியின்
சப்தம் போல
உள்ளே குறுகுறுக்கும் வார்த்தைகளின்
உணர்வுகளும் பிடிக்கும்;
வலியோடு
வலியற்று விடியும் இரவு எனக்கு
ஒருநாள்
விடியாமலும் போகலாம்
முடியும் நாளின் துளியை மெல்லும்
எனது எழுத்துக்கள் முற்றுப்புள்ளியைப்
பெறலாம்;
ஆனாலும் நான் இரவினூடே
கவிதைத் தேடி
அன்றும்
அலைந்துக் கொண்டிருப்பேன்
நான் அலைந்துப் போன தடம்
அன்று யாருக்கும் தெரியப் போவதில்லை
ஏதோ காற்றடித்துவிட்டு நின்றதாய்
உணர்ந்தவர்கள்
நினைத்துக்கொள்வார்கள்;
அதனால் தான்
இப்போதே எழுதி வைக்கிறேன் – எனது
மரணத்தைக் குடிக்கும்
இரவுக் கோப்பையில் வழியும்
யாரோ சிலரின் சாபத்தோடு’ நான் சாகாத எனது
எழுத்தின் ரகசியத்தையும்..
————————————————–
3
வாழ்க்கை எத்தனை இனிப்பானது.. (?)
அன்பு
நட்பு
காதலென நீளும்
உறவுகளின் நேர்மையில்
வாழ்தல் ரசிப்பேறி விடுகிறது;
குழந்தை தரும் முத்தம்
தாய் கோதும் தலைமுடி
மனைவி காட்டும் நேசம்
நண்பர்களின் அரவணைப்பு
அண்ணன் தம்பிகளின் நட்பு
அக்காத் தங்கையின் கண்ணீர்
தெருவில் வரும் போகும் மனிதர்களின் நேயம்
இன்னப்பிற உயிர்களின் ஈர்ப்பு
என எல்லாமே –
இதயத்தை நிறைத்துக் கொண்டிருக்கையில்
அருகே வரும் மரணம் தான்
பிறந்ததன் காரணத்தை சாகும்வரை
தேடவைக்கிறது..
இயற்கையை அலசி அலசிப்
பார்க்கையில்
மிஞ்சுவது மரணத்தைத் தவிர
வேறில்லை;
மரணம்
நம் கையில் எரியும்
விளக்குப் போல
அது சட்டென ஒருநாள்
அணைந்துப் போகலாம்..
அணையும் முன்
வாழ்ந்துக் காட்டுங்கள்;
வாழ்வோரே
உணருங்கள்’
வாழ்க்கை மிகச் சிறிது
மரணத்தினுள் சிக்கிய ஒன்று
மரணத்திற்குப் பின் வாழ்வதன் உயிர்ப்பை
வாழும்நாளில் உண்டாக்குங்கள்;
வாழ்ந்துவிட்டுப் போகையில்
விழும் மலர்களாக
நம் நினைவுகளும் இம்மண்ணில்
விழுந்திருக்கட்டும்..
அந்த நினைவுகள்
வாழ்வோருக்கு நல்வழியை காட்டட்டும்…
————————————————–
வித்யாசாகர்
படைப்பிற்கு என்றும் மரணம் இல்லை ஐயா…
வாழ்த்துக்கள்…
படைப்பிற்கு என்றும் மரணம் இல்லை ஐயா…
வாழ்த்துக்கள்…
நன்றி ஐயா; உங்களின் வாக்கு பளிக்கட்டும்…
எனக்கு விடிகாலைச் சிட்டுக்குருவியின்
சப்தம் போல
உள்ளே குறுகுறுக்கும் வார்த்தைகளின்
உணர்வுகளும் பிடிக்கும்;
என்றென்றும் உயிர்த்திருப்பவர்…மட்டுமே இதுபோல உணர முடியும்…!
.ஒரு படைப்பாளி மட்டுமே மரணத்தை நேருக்குநேர் துணிவுடன் சந்திக்கிறான் .! வாளின் கூர்மையாக வார்த்தைகள் …! மற்றவர்கள் தன் நிழலாய்த் தொடரும் மரணத்தைக் கண்டு அஞ்சி… தப்பும் முயற்சியாக பின்னோக்கி ஓடி இடறி விழுகிறார்கள்…! ஆனால் படைப்பாளி அதைத் தன் ஏவலாளியாக வைத்துக்கொள்கிறான்…! அது சொற்களைப் பொறுக்கியெடுத்து கவிதை எழுத அச்சுக் கோர்த்துத் தருகிறது…! பிழையாக வாழ்வைத் திருத்தும்போது அவன் கையால் தலையில் குட்டு வாங்கிக்கொள்கிறது..! முற்றுகையிட்ட நோய்ப்படைகள் அவனின் நம்பிக்கை கோட்டையைத் தகர்க்க முடியாது பின்வாங்குவதைப் பார்த்து மரணம்… முகம் தொங்கிப்போகிறது..! வேறு வழியின்றி… தன் கைதவறி சிதறி உருண்டோடும் கால மாத்திரைகளைத் தேடி… எடுத்துக்கொடுத்து… வாழ்வின் தேன் சுவைகளை பக்கம் நிறுத்தி… விலகிச் செல்கிறது…! பாராட்டுக்கு ஏங்கிக்கிடக்கும் மரணம்..அவனிடம் மட்டுமே வாழ்த்தையும் பெறுகிறது…! அவனின் மீதமுள்ளக் கடமைகளாலும் பெருங்கனவுகளாலும் வெகு காலம் அவனிடம் இருந்து தனக்கு வரவேற்பு கிடைக்காது என்பதை அறிந்த மரணம்…கவிதை ஒன்றுக்கு தன் பெயரையேனும் சூட்டச் சொல்லி தனிமையையும் இரவுகளையும் கூடுதலாய்த் தமிழையும் அவனிடம் தூதனுப்பிக்கொண்டிருக்கிறது…..!
அப்பப்பாஆஆஆ………… உங்களுடைய ஆசைக்கு அளவே இல்லையா ஐயா.. ஏதோ நடப்பது நடக்கட்டும், நாம் நன்மைக்கு என்று மட்டும் கருதி முன்செல்வோம், காலம் பின் செல்லட்டும்..