ஞானமடா நீயெனக்கு (41)

நீ வயிற்றிலிருக்கும்
ஐந்தாறு மாதத்தில்
உன்னம்மா வயிறு தொட்டு தொட்டுப்
பார்ப்பாள்,

அசையத் துவங்கிவிட்டாய்
என்பாள்,

எங்களின் அத்தனை வருடக்
காத்திருப்பும் பறக்க ரக்கையை
விரித்துக் கொண்ட கணமது,

நானும் எங்கே பார்கிறேனெனத்
தொட்டுப் பார்ப்பேன்,

உன் அசைவுகளை என் வாழ்வின்
அர்த்தமாய் அறிந்துக் கொண்ட
பொழுதுகளது.

இன்று –
இதோ எதிரே நிற்கிறாய்
கை கொட்டிச் சிரிக்கிறாய்
முத்தமிடுகிறாய்..

வாழ்க்கை அர்த்தம் பெற்றதாகவும்
ஒரு புதிய ஞானம் நீ கற்ப்பித்ததாகவும்
வாழ்வின் நெடுந்தூரத்திற்கான –
கனவுகளை உன் முகம் பார்த்து.. முகம் பார்த்து
பூரித்துக் கழிக்கிறேன்..

ஒரு கைத்தடி ஊன்றிய
கிழவர் எதிரே வருகிறார்.

நானும் இப்படித் தான் பிதற்றினேன் – இதோ
என் கதி பார்த்தாயா என்றார்.

நான் சிரித்துக் கொண்டேன்.
என் தனிமைக்கோ தோல்விக்கோ
நீ துணை நிற்க வேண்டுமெனும்
எதிர்பார்ப்பில்லா என் அன்பை
அந்த வயதான கிழவருக்கு
நான் திணிக்கவோ
புரியவைக்கவோ விரும்பவில்லை!!

இதோ.., இதை
உனக்காய் பதிகிறேன்;
உனக்கு கைகால் போல் –
உலகின் நீள அகலம் தொடும்
எண்ண சிறகு முளைத்த பின் – சற்று
வெளியே சென்று பார் –
உலகம் சுற்றிலும் பார் –
என்னை போல்
இன்னும் நிறைய அப்பாக்கள் –
ஆங்காங்கே இருக்கலாம்,
உன்னை போல் மகன் கிடைப்பானா???
————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள், ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to ஞானமடா நீயெனக்கு (41)

  1. Author!'s avatar vpmaravan சொல்கிறார்:

    ///நான் சிரித்துக் கொண்டேன்.
    என் தனிமைக்கோ தோல்விக்கோ
    நீ துணை நிற்க வேண்டுமெனும்
    எதிர்பார்ப்பில்லா என் அன்பை
    அந்த வயதான கிழவருக்கு
    நான் திணிக்கவோ
    புரியவைக்கவோ விரும்பவில்லை!!///

    எனை மறந்து இரசிக்கமட்டுமே தெரியும் எனக்கு…
    நல்ல இரசிகன் நான்!

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி மறவன், நல்ல பொறுமை உள்ளவர்களால் தான் ரசிக்கவும் முடியும். ரசிப்பதும் கலையில் ஒன்று. பொதுவாக சிலர், தன் குழந்தைகளிடம் நிறைய எதிர்பார்ப்புகளை கொண்டுவிடுகிறார்கள். நாம் இன்று வளர்த்தால் நாளை அது நம்மை காக்கும் என்று. இதுபோல் எதிர்பார்ப்பு இருந்து விடுவதால் தானே அவர்களை நம்பி, ‘தன்-னம்பிக்கை இழந்தும் அதே நேரம் அவர்களை இக்கட்டில் ஆழ்த்தும் நிலையும் வருகிறது. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கானது இல்லையா. நம் வாழ்க்கை குழந்தையை வளர்ப்பது ஆளாக்குவது. குழந்தைகளின் வாழ்க்கை அவர்களின் குடும்பத்தை பார்ப்பது என்னுமொரு எண்ணத்தை மனதில் கொண்டு எதிர்பார்ப்பை விட்டுவிட்டு நம் சுயமாகவே தன் வயோதிக காலத்தையும் அணுகும் பக்குவத்தை இப்பொழுதிலிருந்தே வைத்தும் வளர்த்தும் வந்தால் ‘அதிக முதியோர் இல்லங்களுக்கு அவசியமற்றுப் போகலாமில்லையா மறவன். அதை வலியுறுத்தும் நோக்கமே இவ்வரிகள்.

      தவிர குழந்தைகள் நம்மை பார்த்தே வளர்கிறார்கள், நாம் நம் அப்பா அம்மாக்களை நடத்தும் முறை அவர்களுக்குள் இயல்பாய் மனதில் பதிந்துவிடுகிறது. நாம் நம் பெற்றோர்களை நன்றாக பார்க்கும் விதத்தில் நம் குழந்தைகளும் நம்மை பார்க்க வேண்டிய கடமையை உணர்ந்து விடுகிறார்கள். அது நாளைக்கு அவர்களுக்கு ஒரு பாரமான நிலையை ஏற்படுத்துவதில்லை. அதற்க்கு மாறாக, நாமே நம் பெற்றோரை தவிக்க விட்டு உதாசினப் படுத்தி விட்டு, நாளை நம் பிள்ளைகளிடம் மட்டும் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்தால் அதை அவர்கள் சுமையாக நினைப்பதில் தவறில்லையே.

      அந்நிலையை நாம் அகற்ற விரும்பும் இக் கால கட்டத்தில், அதற்கான வாழ்வு முறையை இன்றிலிருந்தே நாம் அவர்களுக்கு வாழ்ந்து காண்பித்தல் வேண்டும். எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்து விட்டு நம் பெற்றோரையும் பிள்ளைகளையும் பேணி வளர்ப்பதில், நல்ல குடும்பத்தின் பாசம் நாளைய முதியோர் விடுதியை சப்த சலனமின்றி இழுத்து மூடி விடலாம்.

      நல்லது மறவன், தொடர்ந்து வாருங்கள், நிறைய பேசுவோம். மிக்க நன்றி மறவன்!

      Like

  2. munusjvasankaran's avatar munusjvasankaran சொல்கிறார்:

    \\நான் சிரித்துக் கொண்டேன்.
    என் தனிமைக்கோ தோல்விக்கோ
    நீ துணை நிற்க வேண்டுமெனும்
    எதிர்பார்ப்பில்லா என் அன்பை
    அந்த வயதான கிழவருக்கு
    நான் திணிக்கவோ
    புரியவைக்கவோ விரும்பவில்லை!!//
    கடந்த தலைமுறையின் காயங்கள் நமக்கு கற்றுகொடுத்த தெளிவு….
    வரும் தலைமுறைக்கு நாம் மலர்ப்பாதை இட்டுவைக்கிறோம்…!
    நன்றி…தெளியவைத்தமைக்கு..

    இதோ.., இதை

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம்; உதவி சார்ந்த வாழ்க்கை எதிர்பார்ப்பை வளர்த்துவிட்டது. சுயமாக-வும் வாழும் திடம் பதித்துவிட்டோமானால்; கொடுத்து வாழ(வும்) சொல்லிக் கொடுத்துவிட்டோமானால், வரும் தலைமுறைக்கு முதியோர் இல்லத்திற்கான செலவு மறைமுகமாக மிட்சப் பட்டு விடும் என்றே கருதுகிறேன் ஐயா. மிக்க நன்றி!

      செலவு மிட்சப் படுகிறதோ இல்லையோ; பெற்றோரின் பாசமாவது அவர்களுக்கு முழுதாய் முழுமை வரை கிடைக்கப் பெறட்டும், என எதிர்பார்ப்போம்! எண்ணம் கொள்வோம்!!

      Like

பின்னூட்டமொன்றை இடுக