நிறுவன ஒப்பந்தப் படி
என் – உறவுகள் தொலைந்த
பாலை நிலங்களில் இரண்டு வருடங்களை
தொலைத்தாகி விட்டது;
இன்று ஊருக்கு வர
என் கடவுச் சீட்டினை கூட
பெற்றுக் கொண்டேன்;
இன்னும் சற்று நேரத்தில்
என் இரண்டு வருட ஆசைகளும்
விமானமேறி –
நாளை தரையிறங்கும்;
வானம் விடிகையில்
வாசலில் நீ நிற்ப்பாய்,
ஓடி வருவாயோ –
நின்ற இடத்தில் எனை கட்டி
அழுவாயோ – தெரியாது;
நான் மட்டும் சாதாரணமாகக்
காட்டிக் கொள்வேன்,
ஆயினும்,
என் சட்டியின் அந்நிய தேசத்து
வாசனை திரவியத்தால்
என் அழையையும் –
மறைக்க இயலாது தான்!
சரி சரி.. அதோ பார்
நம் கட்டிலில் நனைந்தூரிய
உன் கண்ணீரையும்
தூசிகளையும்
தட்டி தூர எறி;
முடிந்தால்
நான் நாளை வரும் முன்
நாளைய இரவை மட்டும்
சற்று சீக்கிரம் –
இன்றே வரச் சொல்லேன்!
























