42 யதார்த்தம் கண்ணீராகவேனும் பதியட்டும்!

னதை –
சுட்டு சுட்டு பொசுக்கியதாய்
ஒரு கனாக் கண்டேன்;

வானம் தொடாத வாழ்க்கை
வான் நிறைந்து வழிந்ததாய் ஒரு
கனாக் கண்டேன்;

யார் கண் பட்டதை நம்பவில்லை
சுத்திப் போட்டதை ஏற்கவில்லை
தெய்வம் ஒன்றே போதுமென்றதில்
நான் – வீழ்ந்து துடித்த கனா கண்டேன்,

சொல்ல நா – எழவில்லை
சொல்லி சொல்லியும் மனதாரவில்லை
அப்படி –
நெஞ்சம் வெடித்ததொரு கனாக் கண்டேன்,

நொடியில் விழித்த
பயம் கொண்டேன்
நொந்து மாண்ட உணர்வுற்றேன்
தேகம் எங்கும் நெருப்பாய் நெருப்பாய் பரவி
மகனே மகனே என அழுது துடித்தேன்
ஏனிந்த கொடுமையென்று; கனவை கூட
சபிக்கத் துணிந்த –
தாங்கவொணா கனாக் கண்டேன்;

செய்த பாவம் சிந்தித்தழ
செய்யாத தர்மம் தலை கொட்டி சிரிக்க
இன்றொரு முறை மட்டும் மன்னிப்பாயா’ என
மனிதம் புரிந்தழும் கனாக் கண்டேன்;

வீடற்றுப் போனக் கனவுண்டு
நாடற்றுப் போனக் கனவுண்டு
வாழ்வற்றுப் போன கனவுண்டு
நாணற்றுப் போனக் கனவுண்டு
முற்றும் முதலாய் –
நீயற்றுப் போன கனவின்
கறுத்த பயத்தில் நினைவுற்றேன்
நீ –
அருகிலேயே எனை அணைத்துக் கிடந்தாய்!
———————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 42 யதார்த்தம் கண்ணீராகவேனும் பதியட்டும்!

  1. Yathavan's avatar Yathavan சொல்கிறார்:

    நன்றாக இருக்கு
    நன்றாக இருக்கு

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி யாதவன். ஒரு நாள் இரவு திடீரென எல்லாம் ஓடுகிறார்கள், எங்கே எனப் பார்த்தால் ஓரிடத்தில் சும்மா கூட்டமா நின்னு பேசின்ருக்காங்க. நானும் ஒருத்தர் கூட பேசிக் கொண்டு நிற்கிறேன், அவர் என்னை பார்த்து ‘இதோ இந்த பாம்பு தான் அது என்று அவர் காட்டுகிறார், அந்த பாம்பிற்கருகில் முகில் தலை குனிந்து அமர்ந்திருக்கிறான். என்னடா என்று பதறி தூக்கிப் பார்க்கிறேன், அவன் என்னிடம் பேச தயாராகவே இல்லை.

      பதறி கத்தி தூக்கம் களைந்து எழுந்து விட்டேன், அந்த கணம் ஒரு யாதார்த்த கணம் தானே. தாங்க முடியாதெனினும் ‘ஒரு மகனுக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள உறவுகளின் உணர்வுகளை இங்கே பதிவு செய்யும் இந்த “ஞானமடா நீயெனக்கு” படைப்பில் இதையும் பதிவு செய்ய நினைத்தே இதையும் இங்கே கவிதையாக்க எண்ணினேன். இறைவன் அருளால் முகில் மிக நன்றாக வளர்வான். நன்றாக வளர்ந்து நல்ல மனிதராக உலகத்தாரின் மனங்களில் நிறைவான் எனும் எங்களின் நம்பிக்கையை வேண்டுதலை இந்த கனவா சிதைத்துவிடும்.

      இறைவனின் கருணையால் எல்லாம் நன்றாகவே நடக்கும் என்ற துணிச்சலில், கனவை கவிதையோடு மறக்கத் துணிந்தோம்!

      Like

  2. soundar's avatar soundar சொல்கிறார்:

    யார் கண் பட்டதை நம்பவில்லை
    சுத்திப் போட்டதை ஏற்கவில்லை
    தெய்வம் ஒன்றே போதுமென்றதில்
    நான் – வீழ்ந்து துடித்த கனா கண்டேன்
    இந்த வரிகள் அருமை

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம்; சௌந்தர், கடவுள் நம்பிக்கை இன்றளவில் வேறு சில, அல்ல; நிறைய மூட பழக்க வழக்கங்களாலும், விற்பனையாளர்களின் சுயநல சீர்கேடுகளாலும் திரித்தோ அல்லது மறுத்தோ பேசவேண்டிய நிலையை ஏற்படுத்தி விட்டது. இதை இத் தலைமுறைகளாகிய நாம் உடைத்தெறிவோம். உதாரணத்திற்கு, சுத்தி போடுதல். எத்தனை வீண் செலவுகளையும், நேர விரயங்களையும், அதை சார்ந்து பல இதர அவசியமற்ற நம்பிக்கையிலும் ஆழ்த்தி, மோதிரக் கல், களவு ஜோதிட வியாபாரம், மந்திரம், போலி சாமியார் என எத்தனை விதமாய் நம் தமிழ் சமூகம் சீர்கெட்டு கலங்கி நிற்க, நம் நிரந்தர அடையாளங்கள் நம்மை விட்டு எங்கோ போய் கொண்டிருக்கிறது.

      சரி, அதொரு காலம் எல்லாம் பெரியோர் சொன்னார்கள் கேட்டோம். இப்போதும் கேட்போம், அதற்கான தெளிவான பதிலையும் காரணத்தையும் கூட சிந்திப்போம், தவறோ அல்லது இக்கால கட்டத்தின் படி அவசியமில்லை என்றோ கருதினால் உடனே அதை கைவிடுவோம்.

      இன்னொரு தகவலிங்கு சொல்லலாம்; பொதுவாக நேரம், கிழமை, மந்திரக் கல், மாயம், பேய் எதையுமே நம்புவதில்லை கடவுளை தவிர.

      தன்னை மீறிய ஒரு சக்தியிடம் நன்றி மறக்க இயலாத ஒரு பக்தி உண்டு. அதன் காரணம் போலிகளை நம்புவதில்லை. என்றுமே உயிர்களை துடிக்க துடிக்க (நமக்கென்று இத்தனை வேறு வகைகளிருக்க) கொன்று தின்று ஏப்பமிடுவதை சம்மதிப்பதில்லை. முகில் (மகன்) இங்கு எல்லோருக்குமே முதன்மையான அன்பானவன், நன்றாக வளருபவன் இதுவரை சுத்திப் போட்டதில்லை. எல்லாம் நலமாக நகர்வதில், நம்பிக்கைகள் உருதியாவதில், கடவுள் நம்பிக்கை மற்றும் அரை அரை மணிநேர தியானம், எதை நோக்கா காத்திருக்கும் அந்த அமைதியான உணர்வு தவிர அவசியமற்ற மன உலைச்சல்களில் எதிலும் கவனத்தை செலுத்துவதுமில்லை.

      எனவே நம்பிக்கையோடு இன்னும் சில காலம் வாழ்ந்து காட்டிவிட்டு, பிறகு இதுபோல் வாருங்களென உடன் வருவோரிடம் சொல்லும் நோக்கில் நகர்கிறது வாழ்க்கை சௌந்தர்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக