அம்மா அம்மா எனும் ஓசையை
அண்ணா அண்ணா என்றழைப்பவளே..
எனை சுற்றி சுற்றி வளையவர
அன்பின் –
சாமி போல பிறந்தவளே..
மனசெல்லாம் பரவி
குழந்தை போல வளர்ந்தவளே..
வாழ்வின் அர்த்தங்களில்
முதலிடமாய் ஆனவளே..
ஏனழுதேனென்று கேட்காமலெ
எனக்காக அழுபவளே..
நான் பேசாத மௌனத்தில்
அழுகையாய் கரைபவளே..
கட்டளையிடும் முன்னாலே
செய்கையாய் சிரிப்பவளே..
சிரித்து சிரித்தே
எரிக்கும் கோபத்தையும் – தனிப்பவளே..
அண்ணா என்ற ஒரு அழைப்பில்
என் பிறந்த பயனை தீர்த்தவளே..
எத்தனையோ வாசத்தில்
என் தங்கையாய் பூத்தவளே –
உனை யாரென்று சொல்லி முடிக்கவே
நாட்கள்.. பொழுதுகள்.. போதாதேடி
திருமணமென்று சொல்கிறார்களே
வாழ்த்த எனக்கு வார்த்தையேதடி?
மகிழ்ந்துத் தீர்க்க மனதெங்கே
இருப்பதோ சின்ன – இதயமாச்சேடி;
இறைவனையே துதிக்கிறேன்
வாழி நீ; வாழி நீ பல்லாண்டு காலமடி!
விரும்பிய நல் வாழ்வோடு
நற்பேரும் பல புகழோடு
சீரும் நல் சிறப்பொடு
செல்வங்கள் பதினாறோடு
சீர் பெற்று ஊர் போற்ற –
பெற்ற வயிறும் உற்ற வாழ்வும் இன்புற
மனந்தவரும்; மாந்தர் தம் உலகமெலாம் மகிழ
வாழ்க வாழ்க நீ வாழ்கவே!
—————————————————————————————–
வரும் வைகாசி 12- இல் (26.05.2010) திருமணம் கொள்ளவிருக்கும் தங்கை ச.மீன லோஷினி மற்றும் மாப்பிள்ளை மா.பொ.செல்வக் குமார் அவர்களை அன்புத் தம்பி, அருமை கவிஞன் ‘விருதை பாரியின்’ இடம் நின்று நாமும் வாழ்த்துவோம் தோழர்களே!!
























