33 புகைப்படப் பெட்டியில் சிக்காத வரலாறு!!

லகத்தை –
தன் ரசனையில் காட்டி
உலகத்தின் பார்வையில்
தன்னை மறைத்துக் கொண்டவர்கள்;

வரலாற்று சுவடுகளை
தன் வியர்வையில் நனைத்தெடுத்து
வாங்கிய காசுக்கு வெறும்
பெயரை மட்டுமே போட்டுக் கொண்டவர்கள்;

இரவுபகல் அலைந்து திரிந்து
உறவுகளின் பிரிவை கூட
எடுக்கும் புகைப்படங்களில்
அலசிப் பார்த்தவர்கள்;

கழுத்தில் தொங்கும்
புகைப்படப் பெட்டியின் கண்களில்
தனை பார்க்கும் பொது மட்டும்
கறுப்புத் திரையை பூட்டிக் கொண்டவர்கள்;

சுனாமி, பூகம்பம், எரிமலை
கண்ணெதிரே வெட்டிக் கொள்ளும் சண்டை
எதுவாயினும் –
காலமே தீர்ப்பெழுதும் பராபரமேயென
புகைப்படத்தை சாட்சியாக்கியே; நீதிக்கு உயிர் தருபவர்கள்;

புயல் வெள்ளம் போர்
எது வந்தாலும் –
எங்கேனும் ஒரு மூலையில் ஒதுங்கியேனும்
உயிரையும் புகைப்படத்தையும்
ஒருங்கே மீட்டவர்கள்;

ஊருக்கெல்லாம் படம் காட்டி
மகிழ்வித்தும்
முடிவில் –
யாருக்கும் தெரியாமலே போனவர்கள்;

அழுவது சிரிப்பது
கோபம் கொள்வதில் கூட
அழகு பார்த்து –

கொட்டும் மழையில்
குடை விட்டு விலகி
அது நனையும் அழகை சேகரித்து –

சுடும் வெய்யிலில்
வியர்வை நுகர்ந்து
நிழலை படமெடுத்து –

இறக்கும் கால பொழுதுகளை
இறக்கா படங்களில் –
உயிர்ப்பித்து –
வருடங்களில் தொலைந்து போன
வரலாறுகள்; புகைப்படக் காரர்கள்!
————————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.. and tagged , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக