32 பழைய வாடகை வீடு..

புதிதாக குடி வந்த
பழைய வாடகை வீட்டில்
இதற்க்கு முன்னிருந்த எல்லோரின்
அடையாளங்களும் பழமை
பூத்திருக்க –

சுற்றி சுற்றி தேடியதில்
மூடியற்ற –
எழுதாத எழுதுகோலும்
பழைய நாளிதழ்களும்
பயன்படாத துணி பிடிப்பானும்
எங்கோ மூலையில் கிடந்த
ஒரு துண்டு சிகரெட்டும்
இருந்து போனவர்களை பற்றி
என்னென்னவோ பேசியது.

இதற்கு முன்
யார்யாரெல்லாம் இருந்தார்களோ
எப்படி எப்படியெல்லாம் வாழ்ந்தார்களோ
இவ்வீட்டில்;

ஆடிப் பாடி சிரித்தவர்கள்
அழுதுகொண்டே போயிருப்பார்களோ?!

இனியும் இவ்வீட்டிலிருந்து
அழமுடியாதென்றோ
சிரிப்பு போதவில்லை என்றோ தேடி
வேறு வீட்டிற்கு சென்றிருப்பார்களோ?!

அந்த புது வீட்டில்
அவர்கள் – இங்கு விட்டுச் சென்ற
வாழ்தலை புதுப்பித்தோ –
கூட்டியோ பெற –
அவர்களுக்கு எத்தனை நாட்கள் பிடிக்குமோ;

நான் மட்டுமென்ன –
சொந்த வீட்டுக் காரனா….?
எனக்கும் அப்படித் தானே?
நான் விட்டுவந்த என்
பழைய வீட்டின் ஞாபகங்களும் –
என் குடும்பம் காட்டிய அன்பும்
அக்கறையும் வெறும் கல்லாகவும் மண்ணாகவும்
சுவராகவும் தானே தெரியும் அங்கு
புதியதாய் வருபவர்களுக்கு?

எத்தனையோ வீட்டில்
நான் தொலைத்த என் இருப்பை
திருப்பித் தர இயலாமல்
புதிய வெள்ளையை தானே
பூசிக் கொள்கிறது வீடுகள்.

சுவற்றில் சாய்ந்து அமர்ந்து..
தலை முட்டியழுது..
தொட்டு தொட்டு பார்த்து..
கல்லுக்குள் சேகரித்த என்
காலையும் மாலையும் –
மீண்டுமெனக்கு கிடைக்கவா போகிறது?!

வாடகை கொடுத்து வெளியேறியதும்
வெகு இலகுவாய்
வீட்டை கழுவி ஒரு
‘டூ-லெட்’ பலகையை மாட்டியதில்,
தன்னை வெறும்
வீடென்று காட்டிக் கொள்ளும்
கல் மணல் கட்டிடங்களுக்குள்
எத்தனை பேரின் வாசமும்
சுவாசமும்
நினைவும்
திருப்பிக் கிடைக்கப் பெறாத பொழுதுகளும் இருக்கிறதென
வாடகை விடுபவர்களுக்கு தெரிய
நியாயமில்லை தான்.

போகட்டும் –
தூக்கிவந்த அத்தனை பொருட்களுக்கு
இடையிலும் –
நிரந்தரமாக ஒரு வீடு தங்குமா எனும்
ஏக்கக் கனவுகளே கனக்கின்றன என்பதை
இந்த புது வீடு மட்டுமென்ன –
தெறிந்தா வைத்திருக்கப் போகிறது?!

அல்லாமல் –
இந்த வீடு எனக்காக
எத்தனை நாட்களை மாதங்களை
வருடங்களை தீர்மானித்து
வைத்திருக்கிறதோ; யாருக்குத் தெரியும்?!

போகட்டும் – எனும்
ஒற்றை வார்த்தையோடு சேர்த்து
வாசலில் செருப்பையும் கழற்றி விட்டுவிட்டு
இவ்வீட்டில் –
இதற்கு முன் வாழ்ந்தவர்கள்
இவ்வீட்டின் எங்கேனும் மூலையில்
விட்டுச் சென்ற –
அவர்களின் புன்னகைத்த சப்தங்களையும்
அழுத கண்ணீரின் ஈரத்தையும்
ஒவ்வொரு அறையாக சென்று
தேடுகிறேன் –

வீடு முழுவதும்
தேய்த்து தேய்த்துக் கழுவியதில்
வந்து போனவர்களின்
கணக்கில்லாவிட்டலும்
நிறைய பேரின் வாழ்க்கையையும்
நிறைய குடும்பத்தின் கதைகளையும்
சுவற்றின் பழைய கரைகளும்
ஆணியடித்த சுவடுகளும் –
சப்தம் குறைத்தாவது சொல்லாமலில்லை;

எனக்குத் தான் –
காது கொடுத்துக் கேட்க மனதில்லாமல்
காதுகளை மூடிக் கொள்கிறேன் நான்
உள்ளே –
விட்டுவந்த வீட்டின் நினைவுகள்
கண்ணீராய் சொட்டுகிறது;

வருடகாலமாக வாழ்ந்த
அந்த வீட்டின் வாழ்க்கையை
கண்ணீரோடு சேர்த்து துடைத்துவிட்டு –

புதிதாக கொண்டுவந்த வாழ்க்கையை
இவ்வீட்டின் மேலே பூசி –
பின்னாளில் வரும் எவருக்கேனும்
விட்டுசெல்ல தயாரானோம்.

அதோ; பால் பொங்கிவிட்டதாம்
மனைவியின் புதுவீட்டுச் சிரிப்பு
அப்பட்டமாய் மறைத்துத் தான் கொண்டது
பழைய வீட்டின் நினைவை!!
—————————————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே... Bookmark the permalink.

8 Responses to 32 பழைய வாடகை வீடு..

  1. soundar's avatar soundar சொல்கிறார்:

    பழைய வாடகை வீடு. நன்றாக இருக்கிறது

    Like

  2. chellama vidhyasagar's avatar chellama vidhyasagar சொல்கிறார்:

    வாடகை வீட்டினரின் உணர்வுகளை அழகாய் பதிவு செய்து இருக்கிறீர்கள். கவிதை அருமை.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      வீடு என்பதற்கே நமக்கு இப்படி வலி எனில் ஒரு நாடு எவ்வளவு பெரிய விசயமில்லையாடா செல்லம்மா?? ஈழம் பற்றி நாம் இங்கிருந்து கூட சிந்திக்கலாம். எல்லோருக்கும் ஒரு வீடும் தமிழர்களுக்குக்கான ஒரு நாடும் கனவாகவே கடக்கிறது காலம்… இயன்றவரை விரைவில் கனவுகள் மெய்ப்படட்டும்!! மிக்க நன்றிடா செல்லம்மா!!

      Like

  3. mohamedkamil's avatar mohamedkamil சொல்கிறார்:

    வீடு என்றாலே நமக்கு தோன்றும் அந்த மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை. நாம் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளங்கள் கடைசியில் தேடுவது அங்கேதான். ஆனால் அது கூட நமக்கு நிரந்தரமில்லை என தெரிந்தால்
    நாம் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தமென்ன? உங்கள் கவிதை அருமை.
    மேலாண்மை பொன்னுசாமி எழுத்தை படித்ததுன்டா வித்யாசாகர்?. அவரின் எழுத்தின் வலிமையை, அந்த வலியை நான் உங்கள் எழுத்தில் பார்க்கிறேன். தொடர்க உங்கள் எழுத்து

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி முஹம்மத். ஆம், ஒரு ஆனந்த விகடனில் வந்த சிறுகதை படித்துள்ளேன். மிக நல்ல எழுத்து அவருடையது என்பதை அந்த ஒரு கதையிலேயே தெரிந்தது. பிறகு அவர் சாஹித்ய அகாடமி விருது பெற்றது பின்னளித்த பேட்டிகள் பின் அவரின் விவரம் எல்லாமே அவரை மனதின் ஒரு நல்ல இடத்தில் அமர்த்தியுள்ளது. ஆனால் இதில் வருத்தம் என்னவென்றால், இத்தனை நல்ல படைப்பாளி எத்தனை வருடத்திற்கு பிறகு அங்கீகரிக்கப் பட்டுள்ளார் பாருங்கள். விருதுகள் ஒன்றும் பெரிய அங்கீகாரமில்லை என்று பேசலாம், ஆயினும் அந்த விருதிற்கு பிறகு தானே அத்தனை ஊடகத் துறையும் அவரை கொண்டாடியது. நானும் பதினைந்து புத்தகம் எழுதியுள்ளேன் என்று சொல்லிக் கொள்ளவே முடிகிறது, சாமானிய எத்தனை பேரை நம் எழுத்துக்கள் சென்றடைந்திருக்கும் என்பது வருத்தமான கேள்விக் குறி தானே.

      போகட்டும் தோழர், நம் கடனை நாம் செய்வோம். தங்களின் வருகைக்கும் விமர்சனத்திற்குமான மகிழ்வையும் நன்றியை இங்கே பதிவு செய்கிறேன். சந்திப்போம்!!

      Like

  4. uumm's avatar uumm சொல்கிறார்:

    உண்மைதான் வித்யாசாகர்.நேரமின்மை காரணமாக மறுமொழி இடமுடியாமல் போய்விடக்கூடாது என்பதற்க்காத்தன் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.என் தமிழில் அழகாக, கனிவாக கூறவேண்டியவை,ஆங்கிலத்தில் வெகு சாதாரனமாய் சொல்வதில் எனக்கும் வருத்தமே.முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன்.என்றாலும் பாராட்டுதல் நிஜமென்று நம்புங்கள் தோழரே..

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      அந்த நேரமின்மை என்ற ஒரு ஈடுகட்ட இயலாத அவஸ்த்தையை மீறித் தான் மறுமொழி இட வேண்டியுள்ளது, அறிவேன் உமா. தங்களின் அன்பான பாராட்டுக்களால் நிறைவுறுவேன். எனக்குப் புரிந்தது; எல்லோருக்கும் புரிய இப்பதிவு அவசியப் பட்டது, வேறொன்றுமில்லை. தங்களின் எழுத்துப் பணியை வருத்தமின்றி தொடருங்கள்.. உமா. உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!

      Like

mohamedkamil -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி