3 முள்ளிவாய்க்காலிலிருந்து…

ரு நூறு தெரு
தள்ளி தான்
கேட்கிறதந்த சப்தம்;

கண்ணீரால் யாரையோ
கூப்பாடு போட்டழைக்கும்
ஒரு ஓலம் அது;

சுலபமாய் சொன்னால்
மரணம் எனலாம்,

வாழ்பவன்
கற்றும் தெளியாத
அல்லது –
கற்காத பாடம்.

மரணம் என்றாலே
நெஞ்சை உலுக்கும் பயத்திற்கு
மரணமின்றியே இயங்குகிறது
நிறைய சதைகள்;

ஆம், ஜாதி பேசி
மதம் பேசி
இனம் பேசி
ஏற்றத் தாழ்வு பேசி
யாரை கொன்றேனும்
சுயநலம் காக்கும் சதைகளாக தானே
வாழ்கிறோமென சொன்னால்
எத்தனை பேர் ஏற்பீர்களோ
எத்தனை பேர் மறுப்பீர்களோ;

மறுக்க உங்களுக்கு
சுதந்திரமுண்டு –
ஏற்க எனக்கு மனமில்லை – நீங்கள்
சதைகளே;
சதை குவிந்த ஒரு பிண்டமே;
வேண்டுமெனில்
பிணமென்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

டேய்…….., யாரையடா
பிணமென்றாய்’ என
விரட்டி பின்னால் ஓடுகிறேன்..

என்னை விட வேகமாக ஓடி
முட்கம்பிகளை தாண்டி
முள்ளிவாய்க்காளின் ஒரு
ரத்தக் கரை படிந்த பாறைக்குள் சென்று
மறைகிறதந்த உருவம்!
————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 3 முள்ளிவாய்க்காலிலிருந்து…

  1. aruleesan's avatar aruleesan சொல்கிறார்:

    வணக்கம்
    நன்றி நன்றி உங்களை போன்ற சிறந்த படைப்பாளிகளின்
    வாழ்த்துக்கள் என்போன்றோரை வளரவைக்கும் நன்றி.

    உங்கள் கவிதைகள்; முடிந்ததாய் எண்ணும் தமிழரை கூட
    உருவேத்துகிறதுபோல் அமைந்து இருக்கிறது.

    வாழ்த்துக்கு உரியவர் நீங்கள் தான்; தொடரட்டும் உங்கள்பணி.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      நல்லது நினைக்கும், செய்யும் அனைவருமே வாழ்த்திற்குரியவர்கள் தான் அருள். மிக்க நல்லது நீங்களும் வளம் பெறத் தொடருங்கள் தங்களின் எழுத்துப் பணியை. எழுதுவதில் பாதியேனும் சமூகத்திற்கு பயன் படுமெனில், பயனுற எழுதியவர்கள் நல்ல படைப்பாளிகள்தானென கொள்வோம்.

      நல்ல படைப்பாளியாக திகழ முயற்சிப்போம். வாழ்த்துக்கள் உங்களுக்கும் அருள்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக