பல நூற்றாண்டுகளுக்குப் பின்..

ரு தேசம்
மலர்கிறது…

ஜாதி கொடுமைகளில்லை
மத வெறியில்லை
எந்த பிரிவின் பாகுபாடுமில்லை
பொறாமையில்லை
கொடும் மரணம் கொலைகள் இல்லை
எல்லாம் கடந்து இயற்கையாய்
இயல்பாய் விரியும் மலரினை போல்
ஒரு தேசம் பொதுநலங்களில்
பூத்து சிரிக்க மலர்கிறது;

இருப்பவர் இல்லார்க்கும் கொடுக்கும்
நேசம்,

அன்பை இயல்பாய் பொழியும்
மனசு,

விருப்பத்தை புரிந்து
அலசி
ஆராய்ந்து
நிவர்த்தி செய்ய துடிக்கும் உறவுகள்,

சுயநலம்
அறவே இன்றி
ஒருவரை ஒருவர் சார்ந்து
ஒருவற்கு இன்னொருவர்
வாழ்ந்து –
சிரத்தை பாராமல் பிறர் நலனை
தன் தலை மேல் சுமந்து
பரஸ்பரம் –
எல்லோரும் மகிழ்ந்து வாழும் ஒரு
தேசம்;

குண்டுகளில்லை
வெடி சப்தமில்லை
காவலாளிகள் அவசியப் படவில்லை
கேட்டால் கொடுக்கும் அழகிய நகரங்களில்
திருடும் எண்ணமேயில்லை,

லஞ்சம் வாங்காத ஊழியர்கள்
காமமில்லாத பார்வை
சகோதரத்துவமான நட்பு
சொன்னதை சொன்னதுபோல் செய்துமுடிக்கும்
இளைஞர் பட்டாளாம்
எழுச்சிக்குப் படிக்கும் பள்ளிக்கூடம்
தூக்கமில்லாத அலுவலகம்
வளர்ச்சியை மட்டுமே சிந்திக்கும்
அரசாட்சி –
வாழ்வெனில் இப்படி வாழ்வோமெனும்
பண்பு பூத்து குலுங்கிய ஒரு
பிரம்மாண்ட தேசம் மலர்கிறது;

பெண்கள் காயப் படவில்லை
படிப்பு இயல்பாகவே மறுக்கப் படவில்லை
காதல் ஏற்கப் படுகிறது பெற்றோர்களால்
காதல் மறுக்கப் படவில்லை சமூகத்தால்
சுதந்திரமாய் கொட்டும் மழையில்
கைகள் சுழற்றி
ஆடி வருகிறாள்
பாடி வருகிறாள்
அவசியமெனில் மார்தட்டி வாள் தூக்கவும்
துணிந்து நிற்கிறாள் பெண்; அப்படி ஒரு
தேசம்;

அழகாக் தமிழ் பேசுகிறார்கள்
என்றோ படித்த
எங்கோ கற்பனை செய்த தமிழர்கள்
உலா வருகிறார்கள்,
தமிழர் என்றால் மதிப்பு
பூரிக்கிறது உலகத்தார் மத்தியில்;
திரும்பிய திசையெலாம் தமிழ் ஒலிக்கிறது
பிற மொழி கலக்கவில்லை
ஆங்கிலம் எங்கோ யாரோ பேசுவதாக
சொல்லிக் கொள்கிறார்கள்,

என்னால் நம்பமுடியவில்லை
கண்களை கசக்கிப் பார்க்கிறேன் ஒரே
இருட்டு –
கனவா என ஆழ்ந்து கவனிக்கிறேன்
கனவில்லை. மெய்! மெய்!!
ஆம்; எல்லாம் உண்மை!!
எப்படி சாத்தியமிது??!!
ஆச்சர்யத்தில் திளைக்கிறேன் நான்;

ஆம்; அப்படி ஒரு தேசத்தில்தான்
இருக்கிறோம் நாம்;
அப்படிப் பட்ட பெருமைக்குரிய
மக்களோடு தான்
வாழ்கிறோம் நாம்;
தேவையெனில் –
அத்தேசத்தை
உருவாக்கிக் கொள் தமிழினமே என்றது
மனசாட்சி!!
————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.. and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to பல நூற்றாண்டுகளுக்குப் பின்..

  1. Ratha சொல்கிறார்:

    கற்பனை நன்று!!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      வெறும் கற்பனை தான் என்கிறீர்களா ராதா, ஏன் நம் ஈழம் மலர்ந்து விட்டால் அவ்வாறு அமைக்க மாட்டோமா? கர்ப்பனையாலாவது நல்ல சிந்தனைகளை தூண்டி, நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தி நல்ல ஒரு சமுதாயத்தை மெல்லவேனும் ஏற்படுத்துவோமேன்று நம்பிக்கை கொள்கிறேன். இத்தனையும் செய்யும் பலத்தை நாம் கொண்டுள்ளதை சற்று நினைவுறுத்த முனைந்தேன். கற்பனை தான், பகல் கனவு தான், கனவு மெய்ப்ப்படுமென்று எண்ணுவோமே…

      Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      இன்னொரு தகவல் ராதா.., சில கற்பனை தனமான கூறுகளை களையும் நோக்கில் தான் தலைப்பினை ”பல நூற்றாண்டுகளுக்குப் பின்” என்று வைத்திருக்கிறேன். பார்ப்போம்; நல்லதே நினைப்பின்; நல்லதே நடக்குமில்லையா..

      Like

  2. Ratha சொல்கிறார்:

    “இயல்பாய் விரியும் மலரினை போல்
    ஒரு தேசம் பொதுநலங்களில்
    பூத்து சிரிக்க மலர்கிறது”

    ஆவல் உண்டு அடைவதற்கு..

    ஆனாலும் இன்னொரு காலம், மாண்டாலே..பிறப்பரோ பூமியில்…?

    மனிதம் இழந்து, மாண்புகள் மறந்து, ஐந்தறிவு நான்கறிவு ஜீவனிலும் கீழோராய் இருபோர் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் திருந்துவரோ…????? ஆதங்கம்!!!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      உங்கள் ஆதங்கம் புரிகிறது ராதா. பல கவிதைகளில் நம் தேசத்தை திட்டி நம் சமூகத்தின் மீதான கோபத்தை காண்பிக்கிறோம், ஒரு கவிதையில், ‘அப்போ எப்படி தாண்டா இருக்கனும்னு கேட்பவர்களுக்கு’ ஒரு பதில் சொல்லலாமென்று தான் இக்கவிதை. எனக்கும் கொபமில்லாமலா, கோபம் உள்ளவனால் தான், மனதில் தீ எரிபவனால் தான் எழுதவே இயலுகிறது என்று எண்ணுகிறேன்.

      உங்களின் கோபம் நியாயம், மன நிலை நியாயம். அதற்கான பதிலை உரைக்கத் தக்க சாட்சி கூண்டில் நிற்கும் சமூகம்; காலத்தின் கைகொண்டு அழைத்து வந்து தங்களின் ஆதங்கத்தை தனிக்கட்டும்! அதற்கான என் விண்ணப்பமும் இங்கே… நிலைகொள்கிறது!

      Like

பின்னூட்டமொன்றை இடுக