தீப்பட்ட புண்ணுக்கு
எம் – தாய் போட்ட மருந்தேது
நீ செய்த சேவையெல்லாம்
தாய்- யன்பின்றி வேறேது!
ஈழம் காக்க இரவு பகலும்
உறக்கம் தொலைத்த தியாகமது
எம் உணர்வு புரிந்து பாசம் தந்த
வீரமகளின் ஈரமது!
கரும்புலிகள் பாசறையில்
அன்பு சொறிந்த பாரவையது;
சமர் புரியும் போர்முனையில்
வெற்றி – முழக்கமிட்ட வீரமது!
தாய்தந்தை இழந்தாலும்
ஈழம் மட்டுமே உன் மூச்சானது;
தம்பி தங்கை இரண்டு மட்டும்
என்றைக்குமே உன் பேச்சானது!
கண்ணியத்து மறைமொழியே
தாயன்பு மலர்விழியே –
ஓய்வில் கூட வீரர்களின்
உதவிக்கு வாழ்ந்த சேவகியே;
கரும்புலிகள் ஆடைகளை வெளுத்துத் தந்த
தோழமையே;
தேய்த்துத் தந்த ஆடைகளில்
பூத்து நின்ற சகோதரியே;
மறக்க இயலா உன் நினைவுகளும்
ஆற்றிய நின் சேவையின் சாதனையும்
மறைந்து போன வீரர்களின்
இதயத்தில் வாழ்கிறதே;
இன்றும் கூட உனை நினைவூட்டி
அவர் கல்லறைகளில் பூக்கிறதே;
நீ ஊடுருவி தகர்த்த தளங்களெல்லாம்
எதிரியை திகைக்க செய்தது வியப்பென்ன;
அவன் – இறுமாந்திருந்த ஆணையிரவில்
புகுந்து – தாமரை குளத்தை தகர்த்ததென்ன;
மேஜர் ஆந்திரா, கேப்டன் சத்தியாவோடு சேர்ந்து
இயக்கச்சிப் பகுதியையே உளுத்ததென்ன;
துணிச்சலோடு போர்புரிந்து –
பனிரெண்டு கொமாண்டோக்களை கொன்றும்
நீயுமங்கே மறைந்ததென்ன;
வெற்றி கொண்ட ரகசியத்தை
உன் மரணம் கொண்டுப் போனதென்ன;
ஈழத்தமிழர் வரலாற்றில் –
மலர்விழி;
அன்பின் மறுமொழியாய் கலந்ததென்ன;
விடுதலை காற்றும், சுதந்திரக் கொடியும் ஓர்தினம்
அசைந்து அசைந்து – ஈழத்தில் பறக்குமம்மா;
அன்று – தமிழர் பாடும் வெற்றிப் பாடலில்
வீரமாய்
தியாகமாய்
தாய்மையாய்
இசையாய்
உன்பெயரும் ஒலிக்குமம்மா!!
——————————————————–
வித்யாசாகர்