ஒரு கால தவம் பூண்டெழுந்த
வரலாறுகளை சுமந்துக் கொண்டு தான் செல்கின்றன
கடக்கும் பொழுதுகளெல்லாம்;
ஒரு போர் முடிவடைந்ததாய்
அறிவித்த புள்ளி –
பூகம்பம் மூச்சடக்கிக் கொண்டு
பூமி பிளவு நின்றுவிட்ட பொழுது –
கடல் கொந்தளிப்பு அடங்கி
கடல்கோல் நின்ற கணம் –
புயல் வெள்ளத்தால்
உயிர் கொன்று குவித்த காற்றழுத்தம்
தன்னை குறைத்துக் கொண்டு;
மழை விட்ட பகலோ இரவோ –
மாமனிதர்கள் பிறந்திட்ட அதிகாலை
உலக நாயர்களின் மரணம் குறிக்கப் பட்ட
இரங்கல் செய்தி –
வீட்டில் செல்லமாக வளர்த்த
நாய் குட்டியின் இறந்த பொழுதில்
சொட்டிய; சொட்டுக் கண்ணீர் –
கைமேல் வந்தமர்ந்து கடித்ததாய் நாம்
ஒரே அடியில்; அடித்துக் கொன்ற கொசு –
வாசலில் கோலம் போட இடைஞ்சலென
பிடுங்கி தூர எறிந்த; ஒரு அருகம் பில்லின்
வெய்யிலில் காய்ந்த உயிரென –
கண் முன்னரே காலம் தன்
ஒவ்வொரு நகர்விலும் –
ஒரு வரலாற்றினை விழுங்கித் தானே கொள்கிறது?
————————————————————————-
வித்யாசாகர்
























