மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)

கடல் கரை ஓரம் சென்றால் துடிக்க துடிக்க மீன் வாங்கி வரலாமேயென கடலோரம் சென்று மீன் வாங்கி வந்து சட்டியிலிட்டேன், துடித்த மீன்களில் சங்கரா மீனொன்று ஏதோ முனங்கிக் கொண்டிருக்க கிளிச்சை மீன் துள்ளிக் குதித்து அருகில் சென்று
 
“என்ன முனகல்? அதான் சட்டியில் விழுந்துவிட்டோமே; சும்மா சாவு. இன்னும் சற்று நேரத்தில் நம் செவிள்கள்  வெட்டி செதில் பிய்த்து கழுத்தருப்பதற்குள் உலகை கடைசியாய் ஒரு முறை நன்றாக பார்த்துக் கொள்;
 
“சுயநல உலகமிது பார்த்து என்ன செய்ய சீக்கிரம் அறுக்க சொல்” சங்கரா சொன்னது
 
 “ஆஹா.. பிறகேன் புலம்பினாய்?” கிளிச்சை கேட்டது
 
 “என் புலம்பல் எனக்கானதல்ல” சங்கரா சொன்னது
 
“வேறு ?” கிளிச்சை கேட்டது
 
“அதொரு கவிதையின் காதில் கேளாத சப்தம்” சங்கரா சொன்னது
 
“கவிதையை பற்றியெல்லாம் உன்னால் பேச முடிகிறதா?” கிளிச்சை கேட்டது
 
“முடியுமா முடியாதா என்று எவர் அறிய முயற்சித்தார்?”
 
“ஆமாம் ஆமாம் நான் சுவையா நீ சுவையா என்பதே மனிதனின் கேள்வி? போகட்டும்
கவிதை சொல்..” கிளிச்சை கேட்டது
 
கவிதை: தொட்டில் மீன்கள்
 
எட்டி –
நான்கு கதம் வைத்தால்
இடிக்கும் தொட்டி;
 
எத்தனை முறை பார்த்துக் கொண்டாலும்
மூன்றோ நான்கோ பேர் மட்டுமே 
உறவும் நட்புமென்றானது 
தொட்டியின் தலையெழுத்து;
 
பசித்தாலும்
பசிக்காவிட்டாலும்
போடுவதை போடும் நேரத்தில்
உண்ணுமளவு மட்டுமே உணவின் சுதந்திரம்;
 
மனிதன் சுத்தம் செய்ய மறந்தாலும்
நினைத்தாலும் அவனுக்கு போக எஞ்சிய
ஏதோ ஒரு தண்ணீரில் தான்
வாழ்வின் பயணம்;
 
உண்பதும் உறங்குவதும்
தொட்டியில் முட்டி முட்டி
உழன்றுக்  கிடப்பதுமெனவே வளர்கிறது
என் காட்சி பொருளான உடல்;
 
பிள்ளைகளோ பூனையோ
விளையாட்டாய் கொன்றாலோ தின்றாலோ;
பெட்டி இடறி விழுந்தாலோ –
துடித்து துடித்தே இறப்போமோ எனும்
பயம் வேறு அவ்வப்போது;
 
இதில் வேறு –
வீட்டில் மனிதன் செய்யும்
அத்தனை அட்டகாசங்களையும்
சகித்துக் கொள்ளவெண்டுமென்பது விதி;
 
பிறகும் –
தொட்டியில் அடைத்தவன் சொன்னான்
வளர்க்கிறானாம்!!”
——————————————————————–
கவிதையை முடித்துக் கொண்டு சங்கரா கிளிச்சையை பார்க்க,
 
ஆஹா.. இப்படி உனக்கு கவிதை கூட சொல்லத் தோன்றுமா என ஆராய கிளிச்சை மீனென்ன எனக்கே கூட இயல வில்லை தானே?????
 
எப்படியோ கவிதை முடியும் தருவாயில்..
 
நானென்ன அறிந்தேன் மீன்களை பற்றி; எடுத்து அறுத்து கண்டம் துண்டமாக்கி குழம்பில் கொதிக்க ஆஹா வாசனை எத்தனை சுகமாக மூக்கை துளைத்ததென்றேன்; எத்தனை உயிர் தொலைத்ததை நினைக்க முடியாமல்!
 
அந்த சங்கராவின் உயிர் போன கடைசியில் ஏதோ கிசுகிசுப்பது
கிளிச்சையின் காதுகளில் விழாமலில்லை..
 
கிளிச்சை அடுத்ததாக வெட்டு பட இருக்கையில் சங்கராவை பார்த்து
“சாகக் கிடக்கிறாய் வலிக்க வில்லையா அங்கென்ன அப்படி பார்க்கிறாய் முனுமுனுக்கிறாய் என்றது”
 
“நாமாவது இன்னும் சில நொடிப் பொழுதுகளில் இறந்து விடுவோம்; 
சாகவும் முடியாமல் சுதந்திரமாக வாழவும் முடியாமல்; வாழ்வை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொண்ட அந்த மீன் தொட்டியின் மீன்களை பாரென்றது”
 
—————————*——————————–*——————————–
 
(பார்த்தென்ன செய்ய, சங்கராவும் கிளிச்சையும் சில மணிப் பொழுதிற்குள்  மீன் சட்டியில் கொதித்து வயிற்றில் செரித்து விட, தொட்டியிலிருந்த மீன்கள் தினம் அழுத சப்தமோ; வாணலியில் வரு பட்ட மீன்களின் வலியோ நமக்குப் புரியாமலே காலம் நகர்கின்றன தான், மீன்கள் கொள்ளப் படுகின்றன தான்)
 
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன... Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக