“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 2”

காகம்

ரு –
வயோதிக காகம்
இறந்து வீழ்கிறது
தரையில்;

அதைச்சுற்றி
கணக்கிலடங்கா காகங்கள்
வட்டமடித்து –
தன் சோகத்தையும் ஒற்றுமையையும்
பறைசாற்றிக் கொண்டிருக்க;

ஒரு –
மனிதன் கூட
உடனின்றி
வெறும் –
குப்பைகளாய்
அகற்றப் பட்டன
ஈழ தமிழர்களின்
உடல்கள்.

கேட்டால் –
பிணமாம்..

பலமுறை பிறக்க இறந்த
தமிழனின் –
ஒரு உடல் தான் மடிந்து போனதென
அறியமுடியா நரம்புள்ள
நாக்குகள் கூறிக் கொண்டன;

கூறட்டும் –
வெறும் உடல்கள் அழிந்து
என்ன ஆகும்???

அத்தனையும்
வடுக்கள் –
வடுக்கள் –
வடுக்கள் வலிப்பதில்லை தான்;

வலியை காலத்திற்கும்
நினைவு படுத்திக் கொண்டே
இருக்கும்; வடுக்கள்!

இப்படி –
காலத்தின் கைகளில்
மனிதனாய் பிறந்த
தமிழனென்ற –
ஒரே பிறப்பிற்கு
இங்கே ஆயரமாயிரம் காயங்கள்
வரலாறாகவும்
வடுக்கலாகவும்
நீண்டு கொண்டிருக்க..

வானத்தில் காகங்கள்
மீண்டும் –
வட்டமைடிககத் துவங்கின;

எட்டி பார்த்தேன்
கீழே – ஒரேயொரு
காகத்தின் குஞ்சு
சாகத் துடிக்கிறது;

காகம் –
மனிதருக்கும் மேல்!!
———————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக