விழுகின்ற ஒரு சொட்டுக் கண்ணீருக்குத் தான்
வருடங்களிரண்டின் வருத்தம் புரியும்;
உன்னை காணமல் – பேசாமல் -தொடாமல் – தவிக்கும்
வாழ்க்கைக்கு தான் நொடியில் கூட நான் இறப்பது தெரியும்!
தொடத் தொட உன் தேகமினிப்பது – கனவிலும்
நினைவிலும் மட்டுமென யாருக்குத் தெரியும்;
பட படவென உடையும் இதயம் தானிங்கே..’கவிதையென்பது’
உனக்கும் எனக்கும் இடையே உள்ள பிரிவுக்குத் தெரியும்!
உனைவிட்டு பிரிந்து வாழ்ந்ததில் – இளமை..
அதோ.. எங்கோ போனது யாருக்குத் தெரியும்;
என் தொலைத்த இளமைக்கு- முதுமை –
வலியான பரிசென..எனக்குமட்டும்தானே தெரியும்!
வாழ்க்கையை எண்ணி எண்ணி வாழ்ந்ததில் –
மீந்த பணங்கள் பணக்கார பட்டத்துடன் சிரிக்கின்றன..
எல்லோருக்கும் தெரியும்;
பணத்தில் பொதிந்த வலிகள் ஆயிரமென
உனக்கும் எனக்கும் தானே புரியும்…!
கேட்குமொரு பாட்டில்கூட அழுத கணங்கள்
எத்தனை எத்தனையோ எல்லோருக்கும் தெரியும்;
பாட்டிற்கு ஏனழுதேனென – ஏக்கங்களை
சுமந்து சுமந்து வாழும் எனக்குத்தானே தெரியும்!
ஊரெல்லாம் சுற்றித்திரிந்தும்; காற்றாய் இங்கே
பறந்துவந்ததும் ஏதோ விதியென யாருக்குத்தெரியும்;
இரவின் நீளங்களில் நான் இறக்கும் கொடுமை
காலையில் பார்க்கும் கண்ணாடிக்குத் தெரியும்!
தொட்டதெற்கெல்லாம் ஆசைவந்தும்; பார்த்ததெல்லாம்
வாங்க நினைத்தும்; ஒரு தேனீரருந்தக்கூட
யோசித்த வாழ்க்கை யாருக்குத் தெரியும்;
இன்று ஆசைகளெல்லாம் மிச்சமாய்..மிச்சமாய்..மிச்சமாய்…
என் காலத்தை கடந்துவிட்டதென யாருக்குத் தெரியும்???
காலை பணிக்குச்செல்லும் பேருந்து நகர்வில்
ஜன்னலோரம் தொலைத்த கனவுகளாயிரம் யாருக்குத் தெரியும்;
தொலைபேசியில் கேட்ட உன் குரலை நினைத்து நினைத்தே
வருடங்களை இரண்டிரண்டாய் இழந்தோமென யாருக்குத்தெரியும்???
காதோரம் பிள்ளைகளின் சப்தமும்,
விழிமுழுதும் – பாசத்தை கடிதத்தில் மட்டும் கண்டு வளர்ந்த
பிள்ளைகளின் சோகமும்,
வாயார அழைக்கும் ஆசையில் கூட பஞ்சம் வைத்த இந்த வாழ்க்கை
கொடுமை – கொடுமையென்று யாருக்குத்தெரியும்;
ஊரில் விட்டுவந்த என் வீடு வாசல் மரம்கூட
வந்தென்னை ஏன்..? ஏன்..? ஏனிந்த பிரிவென்று
கேட்கும் கேள்விகளாகத் தான் வருடங்களிங்கே
நகர்கிறதென எனக்குமட்டும்தானே தெரியும்!!
————————————————————————–
வித்யாசாகர்

























“கேட்குமொரு பாட்டில்கூட அழுத கணங்கள்
எத்தனை எத்தனையோ எல்லோருக்கும் தெரியும்;
பாட்டிற்கு ஏனழுதேனென – ஏக்கங்களை
சுமந்து சுமந்து வாழும் எனக்குத்தானே தெரியும்!”
வரிகள் அழகு!
LikeLike
வலியின் ஆழத்தில் வரிகள் அழகு பெற்று விடுகிறது போல் ராதா. மிக்க நன்றி!
LikeLike