பெண்சிசு கொலை;செய்யலாம் செய்யலாம்!

ன் பத்துமாத சுமப்பில்
என் பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு – நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;

ஊர் தூற்றிய மலடிக்கு – உன்
ஒற்றை பிறப்பில் உயிர் வார்த்தவளே;
உயிர் பிரிந்து செல்கையில் – என்
கால்மாட்டை நனைத்து காலனை சபிப்பவளே;

என் இரவுபகல் வலி தின்று – என்
ரத்தத்தில் சமைந்தவளே;
வாந்தியெடுத்த வேதனைக்கெல்லாம் – அம்மா
அம்மாவென அழைப்பவளே;

கோவில்குளம் சுற்றிவர – என்
சாமியாட்டம் பிறந்தவளே;
நான் கண் திறந்துப் பார்க்கும் முன்னே
நீ கண்ணடஞ்சிப் போனதென்ன;

அருகம்புல் அறுப்பது போல்
உன் உயிரிங்கே அருந்ததென்ன;
நான் பெற்றபிள்ளை ஒற்றை பிள்ளை
பெண்ணென்பதால் கொன்றதென்ன;

உனக்கு ரத்தம் பாய்ச்சிய உடம்பெல்லாம்
வெடித்து உயிரற்று சிதறாதா;
உனக்கு பால் தராத மார்பிரண்டும்
அறுபட்டுத் துடிக்காதா;

பத்துமாதம் சுமந்த கணம்
நெஞ்சிலிருந்தே நீங்கலையே;
உன் உயிர் தின்று யொழிந்த – கொலை
என்னையும் சேர்த்து கொல்லலையே;

என் பத்துமாத சுமப்பில்
பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;

எனைப் பெற்ற தாயிற்கு
நான் மட்டுமென்ன ஆண்பிள்ளையா????
உன்னை கொன்ற பாவிக்கு
பிறந்த வழி ஆணுறுப்பா????

பெண் மட்டுமில்லாம
ஆண்பிள்ளை பிறப்பானா?????
ஆணுக்கு பெண்ணின்றி
துணையேது புரியாதா????

ஏய்…………. மனிதம் கொல்லும் மானுடமே
இன்னும் எத்தனை பெண்களை –
கொல்வாய்???
எத்தனை தலைமுறைக்குக் கொல்வாய்??????

ஒன்று புரி –
நீ பெண்சிசு கொல்கையில் –
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!
———————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே... Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக