ஏழு வண்ணத்தில் எண்ணிக் கோர்த்து
ஏழைகள் பார்வை உடுத்தும் – பட்டாடை;
வானவில்!
வளைந்த புருவத்தில் பூமிக் காதலிக்கு
வானம் காட்டும் வர்ண ஜாலம்;
வானவில்!
கல்வியறிவை கடன் வாங்காது
இயற்கை நெய்த கணினி வித்தை;
வானவில்!
ஏற்றத் தாழ்வுகளின் ஏணி மிதித்து
உலகின் பார்வைக்காய் பூட்டிவைத்த
வான தேவதையின் வண்ண மாலை;
வானவில்!
காற்றில் மழையில்
கரைந்திடாத கலைந்திடாத
மேகப் பூக்களின் விளம்பரப் பலகை;
வானவில்!
இயற்கையின் இயக்கத்திற்கு முகவரி கொடுத்த –
கடவுளின் பெயரெழுதிடாத மவுனத்தின்
வானம் தீட்டிய வண்ண மொழியாக்கம்;
வானவில்!
பூமிக்கு வரும் மழை விருந்தாளிக்கு
தன் மேக கழுத்தில் –
வானம் கட்டிய ஆபரணம்;
வானவில்!
திக்கிரண்டுமாய் நீண்டு வளைந்த
தென்றல் பெண்ணின் ஆடை அலங்காரம்;
வானவில்!
வானவில்லுக்காய்;
வார மாத தவம் போல் காத்திருந்து –
வெளிவராத மங்கை;
வானவில்!
என்றேனும் எட்டி வானம் பார்கையில்
அதிசயம் பூத்து போன – பூஞ்சரமாய்
சுட்டிக் காட்டும் விரல்நுனியில் – உதடு சுழித்து
முத்தமிட்ட வண்ணப் பெண்ணவள் வானவில்! வானவில்!
————————————————————
வித்யாசாகர்

























ஏற்றத் தாழ்வுகளின் ஏணி மிதித்து
உலகின் பார்வைக்காய் பூட்டிவைத்த
வான தேவதையின் வண்ண மாலை;
வானவில்!
அருமையான வரிகள்.நன்றி .
LikeLike
மிக்க நன்றிப்பா..
LikeLike