இரவு நெருப்பின்
இன்னொரு காதலன்; காதலி;
மனசு பெறாத தூக்கத்தை
மெத்தெனக் கொடுக்கும் தலையணை!
வருடத்து வாசனைகளை
மிச்சம் வைத்திருக்கும்;
வந்தவர் போனவரையெல்லாம்
நினைவில் முடிந்திருக்கும்;
புதிய உறை மாற்றினாலும் –
பழசு மறக்காத தலையணை!
ஐம்பதிலிருந்து ஆயிரம் வரை விற்கிறது;
ஆயிரங்களை கடந்து
பழைய கந்தைதுணியில் கனக்கிறது;
கனவும் தூக்கமும் வரவு என்பதால் – பணம்
தலையனையிடம் தோற்று இரவை வெளுக்கிறது!
எச்சிலில் நனைந்து; குறட்டை பாரம் சுமக்கிறது –
கண்ணீர் கதை கேட்டு கனவுகளை கொடுக்கிறது;
வெளியில் தெரியாத விசும்பலையெல்லாம்
யாரிடம் சொல்லவும் மறுக்கிறது;
கணவன் மனைவி சண்டையென்றால்
வலிக்காமல் அடிக்க கிடைக்கிறது!
அம்மாவின் புடவையோ – அப்பாவின்
பழைய லுங்கியோ உரையாகிவிடுகிறது;
இறந்து போன தாத்தா பாட்டியின் மிச்சச் துணிகள்
உள்ளே உயிர் பெற்றுக் கொள்கிறது;
வீட்டின் பழைய அடையாளப் பொருள்களில் ஒன்றாகி
தலையணையும் வாழ்கிறது!
———————————————————————————–
வித்யாசாகர்

























மிகவும் அருமையான கவிதை அண்ணா. ஊர் மணம் கமழும் வார்த்தைகள். ஊரில் இருக்கும் பொழுது இப்படித் தானே தலையணைகள், வெளிநாட்டில் வந்து காசை கொடுத்து வெறும் துணியை மட்டும்தானே வாங்குகிறோம். அதனால் தான் தூக்கத்திலும் நிம்மதி இன்றி இருக்கிறோமோ தெரியவில்லை! அங்கு இருக்கும் தலையணைகளில், அண்ணன் சொன்னது போல் பல சந்ததிகள் வாழ்ந்து கொண்டே இருக்கின்றனர்.
‘என்ன ஒரு சிந்ததனை அண்ணா உங்களுக்கு!!! வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் தங்கள் புலமைக்கு.
LikeLike
மிக்க நன்றி ரூபா. அன்பில் மலையளவு உயர்ந்தவனே, எனக்கு அவனென்று உச்சரிக்க உரிமை தந்த உடன்பிறப்பே உங்கள் அன்பில் நான் இளையவனானேன், நீங்கள் உயர்ந்து வலியவனாநீர்கள், எனவே வாழ்த்தலாம்; தவறில்லை. இவ்வரிகளை அகற்றிவிட்டு பதிய நினைத்தேன், பிறகு வாழ்த்த வயதை தாண்டி மனது போதும் என பதிவிக்கவே சேர்த்துக் கொண்டேன்.
உண்மையில், ஊர் மனம் நிறைந்த மனது தான் எல்லோரிடமும் உள்ளது ரூபன், மேலே அயலான் தோட்டத்து மல்லிகையென நினைத்து; எதையோ பரப்பிக் கொண்டோம், வேறொன்றுமில்லை!
LikeLike