காதலின் மறக்காத பொழுதுகள் – 51

ந்தா –
உனக்கான ஒரு சொட்டுக்
கண்ணீர் பரிசு.

எதுவுமே எழுதிடாத
வெள்ளை தாளில்
நம் அத்தனை நினைவுகளையும்
ஒரு சொட்டுக் கண்ணீரால்
நனைத்து அனுப்புகிறேன்.

வாசலில் காத்திருந்து
வந்ததும் சிரிப்பில் வரவேற்று
சாப்பிட்டாயா என்பதை சைகையில் விசாரித்து
பேசினால் மேல் மாடியில் கேட்டு விடுமோயென
இதயம் துடிக்கும் சப்தங்களோடு
கட்டியனைத்திருந்த நாட்களை எல்லாம்
ஒரு சொட்டுக் கண்ணீராய் மட்டுமே
அனுப்ப முடிந்ததெனக்கு.

ஓடிப் பிடித்து விளையாடவில்லை
கதைகதையாய் பேசவில்லை
வருடங்களை ஒன்றாய் இரண்டாய்
பார்வையில் மட்டுமே குடித்துவிட்டது
நம் அந்தநேர மவுனம்.

தெருவெல்லாம் பெய்த மழையில்
நனைந்து கொண்டே
உனக்காய் –
வாசலில் நின்ற எனக்கு
உன் பார்வையில் குடை பிடித்த
நினைவுகளை எல்லாம் வெறும்
அந்த மழைநீர் மட்டுமே தெரிந்திருக்கும்.

மேல்வீட்டில் நீயும்
கீழ்வீட்டில் நானுமாக வாழ்ந்த
அந்த வீடு –
மாற்றிக் கட்டப் பட்டிருந்தால்
இன்னொரு தாஜ்மஹாலாக
கனத்து நின்று –
நம் காதல் பேசியிருக்கும்.

நீ அழுகையை மறைத்து
சிரித்து கடந்த பொழுதும்
நான் சிரித்துக் கொண்டே உள்ளே அழுத
பிரிவின் வலிகளும்
முட்டிமோதி உடைத்தெறிய முடியாத
அந்த சுவற்றின் ஈரத்தில்
உடையாமல் நிற்கிறது அந்த வீடு – நம்
ஒரேயொரு சாட்சியாக.

படிக்கட்டில் நீ இறங்கிவரும் சப்தம்
அடி குழாயில் –
நீ நீர் கொள்ளும் தருணம்
எங்கோ தூர நின்று நீ
கத்தி அழைக்காமல் பார்க்கும் பார்வை
தூக்கத்திலும் எனை துளைத்து எழுப்பிய
அந்த கணங்கள் –
எந்த பதிவிலும் இன்று இல்லாமல் போனதை
யாரிடம் நாம் சொல்லியழப் போகிறோமோ.

வீடெல்லாம் உனை தேடி
புறப்பட்டப் பிறகும் –
உன் ஒரு பார்வைக்காய் காத்திருந்து –
நீ இல்லைப் போலென நினைத்து
மனமில்லாமல் வெளியேறுகையில்
வெளியே நீ எனக்காய் காத்திருந்து
உயிரை குடித்த காதல் –
எந்த ஏட்டில் திரையில் வந்து
உன்னையும் என்னையும் பற்றி பேசி
நம்மை சேர்த்துவைத்துவிடும்???

யாருமில்லா வீட்டில்
எத்தனை தனிமையான பொழுதுகள்
நம்மிரண்டு பேரின்
உண்மையான அன்பை மட்டுமே
சுமந்துபோனதை;
காதலென்றால் காமம் மட்டுமென்று பேசும்
இவ்வுலகம் எப்படி புரிந்துக் கொள்ளும்???

காற்றிற்கும் வெளிச்சத்திற்கும்
இருட்டிற்க்கும் மட்டும் தானே தெரியும்
உனக்காக நானும்
எனக்காக நீயும் வாழ்ந்த
அந்த உன்னதமான வாழ்க்கையை.

தலைதெரித்து ஆடும்
மதவெறிக்கு முன் –
மவுனத்திலும்
பார்வையிலும்
முத்தத்திலும்
இறுக அனைத்து நின்ற அணைப்பிலும்
நாம் பேச இயலாத பொழுதுகளும்
திட்டமிட்டுக் கொள்ளாத காதலும்
விரும்பாத சுயநலமும் –
நம்மை சேர்க்கவில்லைதானேத் தவிர
எக்காலமும் நம்மை மனதால் பிரிக்க இயலாது.

வெறும் மதமும்
இனமும் வேறென்ற காரணம் தவிர்த்து
எப்பழியும் ஏற்காத நம் பிரிவு
உலகத்தின் சாபமென்பதை
இந்த ஒருசொட்டுக் கண்ணீர்
உனக்குமட்டும் சொல்லும்.

காலம் எத்தனை கடந்தாலும்
உன் கண்ணீரும் என் கண்ணீரும்
எந்த அல்லாவையும் ஏசுவையும் ஈஸ்வரனையும்
புத்தனையும் மீறி வந்து நம்மை சேர்த்த்துவிடாது.
கடவுளை தாண்டி
மதத்தை முட்களாக பதிந்துக் கொண்ட
இச்சமூகத்தில் –
நீயும் நானுமொரு ஊமை பதிவு;
அவ்வளவு தான்.

மனசு –
எல்லோருக்கும் புரிவதில்லையடி தோழி,
காதலித்து பிரிவது
எத்தனை வலிக்குமென்பதை
எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை.
போகட்டும்,
இவர்களுக்கு மத்தியில் –
நீயிருப்பாய்; நானுமிருக்கிறேன் என்றுசொல்லவே
இந்த வெள்ளை தாள்.
வெள்ளைத்தாளில் ஒருசொட்டுக் கண்ணீர்.
பிரித்துப் பார்த்துவிட்டு அழுவாய்
எதையெதையோ நினைத்தழுவாய்,
அதிக நேரம் அழாதே.
மீண்டும் மீண்டும் எடுத்துப் பார்க்காதே.
வெறும் காகிதமென்று கசக்கி
காற்றில் வீசி விடு.

காற்றில் அசைந்து அசைந்து
அந்த காகிதம் –
காற்றோடுப் பேசிக் கொண்டே
உன்னையும் என்னையும் வெறும்
பிணம் என்று பதிந்துக் கொள்ளட்டும்.

நம் இறக்காத உயிர்ப்பும்
யாருக்கும் தெரியாத நம் கதறலும்
எங்கோ ஒவ்வொரு மூலையில் நின்று
உலகின் தோல்விக்கு சாட்சியாகி
ஜாதியின் மதத்தின் வெறியை
மெல்ல மெல்ல கொல்லும்!
————————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

8 Responses to காதலின் மறக்காத பொழுதுகள் – 51

  1. VELU.G's avatar VELU.G சொல்கிறார்:

    யப்பா சாமி ஒன்னும் முடியலைங்க

    நல்லாருக்கு….

    Like

  2. Madhavan's avatar Madhavan சொல்கிறார்:

    உங்களின் முழு அனுபவமோ வித்யா..

    படிக்க படிக்க மனசு வலிக்கிறது. மிக அருமை. உணர்ந்து எழுதிய பாதிப்புகள் இது. வெறும் கவிதையில்லை. இருப்பினும் கூறிய விதம் மிக அருமை வித்யா, நெஞ்சை தொட்டுவிட்டீர்கள். நினைவுகள் எங்கோ எதையோ நினைத்து வருந்துகிறது மனம்.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      எனக்கும் வலித்தது மாதவன். இதுபோல் வெளியில் சொல்லாமல் எத்தனை இதயங்கள் உள்ளுக்குள்ளே இப்படி எல்லாம் அழுகிறதோ…

      ஜாதியும், மதமும் தேவையோ இல்லையோ என்பது அவரவர்க்கு அவசியம் புரிதல் பொருத்ததாகிப் போகட்டும். ஆனால் மனிதம் கொன்று, நெடுங்காலம் வரை இவர்கள் அழுவார்கள் எனத் தெரிந்தும் பிரிக்கும் அளவிற்கா அவைகள் அவசியம்?????????

      Like

  3. Poikaaran's avatar Poikaaran சொல்கிறார்:

    அருமை அண்ணா. பேச வார்த்தைகளே இல்லை. பேச இயலவில்லை. ஆனால் ஏதோ வலி மட்டுமே புரிகிறது. என்னாயிற்று அண்ணா பிறகு.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஒன்றும் ஆகவில்லை முரளி. இந்த சமூகத்தில் அந்த இரண்டு இதயங்கள் உயிரோடு தான் இருக்கின்றன. சாகத் துணிவதொன்றும் அத்தனை பெரிய வீரமல்ல என்பதயும், எது நிகழ்வினும் வாழ்ந்தேயாக வேண்டுமென்ற யதார்த்த திணிப்பையும் புரிந்த இதயங்கள் அது. ஏதோ வாழ்கிறதே விடுங்கள், வாழ்ந்து போகட்டுமென்று தானே நினைக்கிறதிந்த சமூகம். ஒருவர் இஸ்லாம் மதத்திலும், ஒருவர் இந்து மதத்திலும் பிறந்ததை குற்றமென்று கேட்டு பிரிந்ததை தவிர அவர்கள் வேறெந்த தவறையும் செய்துவிடவில்லை.

      Like

  4. padma's avatar padma சொல்கிறார்:

    நல்ல கவிதை .வலிக்கும் உணர்வுகளை வார்த்தையாகிய கவிதை .காதல் எப்போதும் வாழும் .சரிதானே

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம்; வாழ்கிறது நிம்மதியை தொலைத்து விட்டு அலையும் நிறைய பேரிடத்தில் காதல் வலியாகவும், குடும்பம் தவிர்த்தோ அல்லது பின் குடும்பத்தால் ஏற்றோ கொண்ட சில காதல் தம்பதியான அன்புள்ளங்கள் மத்தியில் மகிழ்வாகவும், இளைய ரத்தத்தின் சூட்டில் வெந்து அவர்கள் வாழ்வை குடித்தும், இளைஞர்களின் வெற்றிக்கு உந்துதல் சக்தியை தரும் உண்மை அன்பாகவும் காதல் இருந்துகொண்டு தான் இருக்கிறது போல்!

      Like

VELU.G -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி